Thursday, January 13, 2005

தேடல்




அலை கொண்டு போனவர்களை
அல்பத்தில் தேடுகிறான் இவன்

Wednesday, January 12, 2005

தேடல்




உறைவிடத்தையும்
உடைமைகளையும் மட்டுமல்ல
கடல் கொண்டு போன
உறவுகளையும் தேடுகிறான் இவன்

Tuesday, January 04, 2005

TRO

Pls visit http://www.tsunami-trocsc.com/home/

இப்படியம் சிலர்

இன்று ஒரு தொலைபேசி அழைப்பு இந்தப் பத்திரிகையில் இருந்து வந்தது.
இந்தச் செய்தியை அவர்களது பத்திரிகையில் பார்த்து விட்டு ஒரு தமிழன் தொலைபேசியில் அழைத்து
"நீங்கள் எப்படி இந்தச் செய்தியை உங்கள் பத்திரிகையில் போடலாம்.
TROவும் Tigerம் ஒன்றுதானே. நீங்கள் கொடுக்கும் காசெல்லாம் Tigerக்குத்தானே போகுது...." என்று சண்டை போட்டாராம்.

இப்படி ஒரு தமிழனே சொன்ன பின் தாம் என்ன செய்யலாம் என்று கேட்டார்கள். ஒரு தமிழனே சொன்ன பின் தாம் அந்தச் செய்தியைப் போட்டதற்காக வருந்துகிறோம் என்றார்கள்.

எவ்வளவோ கதைத்தும் அவர்கள் திருப்தி அடையவில்லை.
ஒருவேளை நாளைய அவர்கள் பத்திரிகையில் TROவுக்கு உதவி செய்ய வேண்டாமென்ற செய்தி வரலாம்.

நாடு நலிந்து கிடக்கிறது. உதவி தேவைப்படுகிறது. அதை TRO செய்கிறது. அதைக் கெடுக்க எப்படி இவர்கள் துணிகிறார்கள். மனிதநேயத்தை மறந்து போனார்களோ? கோபதாபங்களைப் பார்க்கும் நேரமா இது? எல்லோரும் ஒன்று கூடி உதவ வேண்டாமா?

Saturday, January 01, 2005

இயற்கையின் சீற்றம் இத்தனை கொடியதா..?

எதை எழுதுவது? எப்படி எழுதுவது?
புதுவருடம் இத்தனை சோகத்தைச் சுமந்து வரப்போகிறதென யாராவது நினைத்தோமா..?
போரின் வடுக்கள் ஆறுமுன்னே எங்கள் சந்தோசங்களைக் கடல் கொண்டு போகுமென துளியாவது உணர்ந்தோமா?
அலை வந்து தழுவும்... தாலாட்டும்.. என்றுதான் எண்ணியிருந்தோம். இத்தனை கோரமாய் உயிர் பறித்துப் போகுமென்று எண்ணினோமா?
கண்மூடி முழிக்க முன் எம்முன்னே இத்தனை அழிவுகள் நடக்கும் என்று கனவிலாவது கண்டோமா?
போர்க்காலங்களில் போலக் கூட இம்முறை வருடத்தை வரவேற்க முடியவில்லை.
யாருக்கும் வாழ்த்துச் சொல்லவும் ஒப்பவில்லை. மனசு மலைத்துப் போய் நிற்கிறது.

உறவுகளைப் பறிகொடுத்த எங்கள் உறவுகளின் ஓலங்கள் மனதைப் பிசைகின்றன. கண்கள் பனிக்கின்றன.

இயற்கையின் சீற்றம் இத்தனை கொடியதா..?

கடலே எழுந்தே வீழ்ந்ததே...!

Wednesday, December 22, 2004

பர்தா

1986 இல் யேர்மனிக்கு வந்து சேர்ந்த போது எனக்கு லெபனானைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பி ஒருத்தி கிடைத்தாள். இருவருக்குமே பாஷை தெரியாது. அதாவது யேர்மனிய மொழி தெரியாது. அவளுக்கு ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக் கூடத் தெரியாது. இருவரும் சைகைகளாலேயே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

அவள் எனது வீட்டுக்கு அடிக்கடி வருவாள். நான் அவள் வீட்டுக்குப் பல நாட்களாகப் போகவில்லை. ஒரு நாள் அவள் மிகவும் வருந்தி அழைத்ததால் போனேன். அவள் வீட்டில் அவளோடு இருந்து கதைக்கத் தொடங்கும் போது அவள் தனது தலையைச் சுற்றிக் கட்டியிருந்த பர்தாவைக் கழற்றினாள். என்ன ஆச்சரியம்! இதுவரை என்கண்ணுக்குத் தெரியாத அழகு. நீண்ட சுருண்ட கேசத்துடன் அவள் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாள். அன்றுதான் முதன் முதலாக பர்தா அணியும் பெண்ணின் மீது எனக்கு அனுதாபம் ஏற்பட்டது. அதுவரை பாடசாலையில் இஸ்லாமியப் பெண்கள் முக்காடு போடுவதைப் பற்றிப் படித்த போதோ அல்லது எனது தாயகத்தில் முக்காடிட்ட முஸ்லிம் பெண்களைப் பார்த்த போதோ ஏற்படாத வருத்தம் அன்று எனக்குள் எழுந்தது. "ஏன் சூரியனையே காட்டாமல் அந்தத் தலைமயிரை ஒளித்து வைக்க வேண்டும்" என்ற ஆதங்கம் தோன்றியது.

அவளிடமும் அது பற்றிப் பேசினேன். எனது ஆதங்கத்தைச் சொன்னேன்.
"உனது தலைமயிரில் காற்றே படுவதில்லையா?" என்று கேட்டேன்.

அவள் எந்த வித உணர்வுகளையும் காட்டாது
"வெளியில் போகும் போதும், வீட்டுக்கு பிற ஆண்கள் வரும்போதும் கண்டிப்பாகப் பர்தா அணிய வேண்டும்" என்றாள்.

இது அவர்கள் முறை. இதில் தலையிட எனக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஆனாலும் மனசு விடாமல் என்னைத் தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தது. பிற ஆண்கள் பார்க்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக சூரியஒளி கூடப் படாமல் அந்தக் கூந்தலை மறைத்துக் கொண்டு திரிய வேண்டுமா? இது ஒரு அடக்கு முறை போலவே எனக்குப் பட்டது. ஆண்கள் பார்க்கக் கூடாது என்பதைத் தவிர வேறேதும் நன்மை அந்தப் பர்தாவில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்கு அவளின் அந்த நிலை வருத்தத்தையே தந்தது.

பின்னர் எனது மகளின் பாடசாலை நண்பி சல்மா. சல்மா துருக்கிய நாட்டைச் சேர்ந்தவள். அவளது ஒன்பதாவது வயதில்தான் அவளைச் சந்தித்தேன். எனது மகளோடு விளையாட வீட்டுக்கு வருவாள். பர்தா அணிந்திருப்பாள். எட்டு வயதிலேயே அணியத் தொடங்கி விட்டாளாம். ஒரு நாள் எனது மகளுக்கு தலை இழுத்து விடும் போது அவளுக்கும் இழுத்துப் பின்னினேன். பின்னும் போது இன்னதென்று சொல்ல முடியாத வேதனை என்னை ஆட்கொண்டது. மிக நீண்ட அழகிய கூந்தல். அதற்கு இனிச் சூரியஒளி கிடைப்பதே கடினம். ஆனாலும் நான் எதுவுமே சொல்லவில்லை. நான் சொல்வது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் மௌனித்து விட்டேன்.

இன்றும் கூட எனக்குள் கேள்வி இருக்கிறதுதான். பிற ஆண்கள் அவர்களின் அழகைக் கண்டு விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஏதாவது நன்மை அதாவது மருத்துவ ரீதியான.. உடல் ரீதியான நன்மைகள் பர்தாவால் உண்டா...?

உஷா தோழியர் பகுதியில் பெண்கள் எங்கும் அடக்கப் படுகிறார்கள் என்பதை மனதில் கொண்டு முஸ்லீம் அல்லாதவர்கள் பார்வையில் இஸ்லாம்- ஏன் இந்த துரியோதனப் பார்வை? என்று எழுதப் போக அது ஒரு சிறிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இப்படியான வாதங்கள் சில தெளிவுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும். ஆனாலும் நான் நேசகுமாரினதோ நாகூர்ரூமியினதோ இது சம்பந்தமான எழுத்துக்களை வாசிக்கவில்லை. அதனால் எந்தக் கருத்தையும் என்னால் இந்தச் சர்ச்சை சம்பந்தமாகச் சொல்ல முடியவில்லை.

அதே நேரம் யாரோ ஒருவரின் பின்னூட்டம் பொட்டு பற்றி எழுதியிருந்தது. இந்துக்கள் பொட்டு வைப்பது மருத்துவரீதியான நன்மைகளைக் கொண்டிருந்தது. இதே போன்று மருத்துவரீதியான நன்மை பர்தாவில் இல்லாத பட்சத்தில் பொட்டையும் பர்தாவையும் ஒப்பிட முடியாது.

இது விடயத்தில் எனது கருத்து என்று பார்த்தால் ஒரு இஸ்லாமியப் பெண்ணை பர்தா அணி என்றோ அல்லது அணியாதே என்றோ சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அது அவளாக முடிவெடுக்க வேண்டிய விடயம்.

எந்த ஒரு விடயம் சம்பந்தமாகவும் யாரும் யாருக்கேனும் விழிப்புணர்ச்சியை மட்டுமே கொடுக்கலாம். அதனாலான நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து சொல்லலாம். ஆனால் "செய்" என்றோ "செய்யாதே" என்றோ சொல்வது அவர்களது சுதந்திரத்தில் கை போடுவதற்குச் சமனானது.

உஷாவின் இது சம்பந்தமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடும் உண்டு. முரண்பாடும் உண்டு. உதாரணமாக உஷா கூறிய பர்தா அணிவதைப் பற்றி முடிவெடுக்க வேண்டியது சம்மந்தப்பட்ட பெண்ணே தவிர மற்றவர்களுக்கு (அதிலும் பிற மதத்தினருக்கு) என்ன கவலை? இதோடு நானும் உடன் படுகிறேன். உஷா கூறிய எந்த இந்து பெண்ணையும் பார்த்தாலே இந்து என்று நெற்றியில் இருக்கும் குங்குமமும், தாலியும், வகிடில் இட்ட குங்குமமும், காலில் மிஞ்சியும் சொல்லும். அது மூட நம்பிக்கை என்று பீட்டரும், அமீதும் சொல்லலாமா? என்ற இந்தக் கருத்தில் முரண்படுகிறேன். மூலிகைகளில் செய்யப்பட்ட குங்குமத்திலும், பனைஓலையில் செய்யப் பட்ட மஞ்சள் பூசிய தாலத்திலும், கால்பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணியப் படும் மிஞ்சியிலும் மருத்துவ ரீதியான நன்மைகள் இருந்தன. இன்றைய மருத்துவ வளர்ச்சிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இவைகள் அவசியப் பட்டன. அதனால் பொட்டையும் பூவையும் பொன்னையும் பர்தாவுடன் ஒப்பிட முடியாது. (இதே போல ஏதாவது நன்மைகள் பர்தாவில் இருந்தால் சம்பந்தப் பட்டவர்கள் தெரியப் படுத்துங்கள்.)

மற்றும் உஷா தான் தோழியரில் தொடர்ந்து எழுதலாமா என்றொரு கேள்வியையும் வைத்திருக்கிறார்.

ஏன் எழுதக் கூடாது? என்பது எனது கேள்வியாகிறது.

அங்கு எழுதக் கூடாத எதையும் உஷா எழுதவில்லை. தனது கருத்தை எழுதியிருக்கிறார். அதற்கான மற்றவர்களின் கருத்துக்கள் அவரவர் கருத்துக்கள். அதற்காக உஷா ஒதுங்க வேண்டிய அவசியமெதுவுமே இல்லை.
நான் உஷாவுக்குப் பதில் சொல்வதானால்
உஷா தொடர்ந்தும் எழுதுங்கள். உங்கள் கருத்துக்களைத் தயங்காமல் முன் வையுங்கள். உங்களுக்குத் தோழியரில் எழுதுவதுதான் வசதி என்றால் அங்கேயே தொடருங்கள்
.

Wednesday, December 15, 2004

இன்று முகுந்தின் திருமணம்


எனது நகரம் குளிரில் உறைந்து கிடக்கிறது. ஆனாலும் யேர்மனிய மக்கள் நத்தாரை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

நானும் அவர்களில் ஒருத்தியாய் தெருவிலும், வேலையிடத்திலும் பின்னர் குழுந்தைகள் பேரக்குழந்தைகளுடன் வீட்டிலும்.. என்று விரைந்து கொண்டிருக்கிறேன். இந்த அவசரத்துள் கணினிப் பக்கம் எட்டிப் பார்த்தாலும் எதையும் உருப்படியாகப் பதிக்க முடியவில்லை.

நிறைய விடயங்கள் எழுத உள்ளன. நிறையப்பேரின் மின்னஞ்சல்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. பின்னூட்டம் என்பது ஒன்று கிடைத்தாலே பெரிய விடயம். அவைகளுக்குக் கூட பதில் எழுதவில்லை.

இன்று முகுந்தின் திருமணம். இந்த அவசரத்திலும் முகுந் சரஸ்வதி தம்பதியினரை வாழ்த்த முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

http://mugunth.tamilblogs.com/files/Invitation_English.jpg

Thursday, December 09, 2004

KG பேனா

அப்போதெல்லாம் ஊற்றெழுத்துப் பேனாக்களில் ஒன்றான Ciel பேனாவைத்தான் பாடசாலைகளில் பாவிக்கத் தொடங்குவோம். அதுவும் ஆறாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான். அதுவரை பென்சில்தான். தற்போது நாங்கள் பாவிக்கும் குமிழ்முனைப் பேனாவைத் தொடவே விடமாட்டார்கள்.

Ciel பேனாதான் உறுப்பெழுத்துக்கு நல்லது என அந்த நேரத்தில் எல்லோருமாகத் தீர்மானித்திருந்தார்கள். அதற்கு முன்னர் அதாவது எங்கள் அப்பா, அம்மா படித்த காலங்களில் தொட்டெழுதும் பேனாவைத்தான் பாவித்தார்களாம். அதனால் எழுதும்போது எழுத்து இன்னும் உறுப்பாக அமையும் என ஆசிரியர்கள் கருதியதால் தமிழ்வகுப்பில் உறுப்பெழுத்துப் பாடம் வரும் போது தொட்டெழுதும் பேனாவையும் பாவிக்க நிர்ப்பந்தப் படுத்தப் பட்டோம்.

Ciel பேனா மிகவும் மலிவானதாக இருந்தது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை. வேண்டி ஒரு வாரத்துக்குள்ளேயே அதன் கழுத்து வெடித்து மை கசியத் தொடங்கி விடும். இதனால் பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் மூன்றிலுமே மை பிரண்டு விடும். அசிரத்தையாக இருந்தால் அது வெள்ளைச் சட்டையிலும் பட்டு விடும். எல்லோரும் மை பூசிக் கொண்டு திரிவதைப் பார்த்து விட்டு ஒரு நாள் எங்கள் தமிழ்ரீச்சர் சொன்னா "KG பேனை நல்லது" என்று.

KG பேனையின் விலை 6 ரூபா. Ciel என்றால் 2ரூபாதான். இதனால் தமிழ்ரீச்சரின் ஆலோசனையை அவ்வளவாக ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் வீட்டில் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன்.

பின்னொருநாள் ரீச்சர் KG பேனா ஒன்றைக் கொண்டு வந்து எழுதிப் பார்க்கத் தந்தா. உண்மையிலேயே அதன் வடிவமும் எழுத்தும் எனக்குப் பிடித்திருந்தது. வாங்கி விட வேண்டுமென்ற ஆசையும் என்னுள் எழுந்தது.

எனது அப்பா அப்போது(1970) கொடிகாமம் புகையிரதநிலையத்தில் கடமையில் இருந்தார். அதனால் தினமும் வேலை முடிய பேரூந்திலோ, துவிச்சக்கர வண்டியிலோ வீட்டுக்கு வந்து விடுவார். அன்றும் இரவு வேலை முடித்து அதிகாலையிலும் சில மணித்தியாலங்குள் Overtime செய்து, வரும் வழியில் நெல்லியடிச் சந்தையில் சாமான்களும் வாங்கிக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் வீடு வந்து சேர்ந்தார்.

அப்போது பாடசாலையின் மதிய இடைவேளைப் பொழுது. நான் வந்து மதிய உணவையும் முடித்திருந்தேன். ஏற்கெனவே அப்பாவிடம் இந்தக் KG பற்றிச் சொல்லியிருந்ததால், மீண்டும் சுலபமாக அது பற்றிச் சொல்லி வாங்கி விட வேண்டுமென்ற ஆசையையும் சொன்னேன். அன்று மதியம் உறுப்பெழுத்து வகுப்பு இருப்பது பற்றியும் சொன்னேன்.

அப்பா வேலை முடிந்து, சந்தைக்கு அலைந்து வந்த களைப்போடு, என்னைச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ரவுணை நோக்கிச் சைக்கிளை உழக்கினார். அப்போது எனக்கு அப்பாவின் கஷ்டம் பற்றிய எந்த சிந்தனையும் எழவில்லை. காலை எழும்பியதும் அடுப்புச் சாம்பலை அள்ளிக் கொட்டுவது எப்படி அம்மாவின் நித்திய வேலையாக உள்ளதோ அது போல வேலைக்குப் போய் வருவது அப்பாவின் நித்திய வேலை என்பதே எனது மூளையில் பதிந்திருக்க வேண்டும். அதனாலான களைப்பு, அலுப்பு போன்றவை பற்றிய பிரக்ஞைகள் எதுவும் என்னிடம் அவ்வளவாக இல்லை.

அப்பா எனக்குக் கரும்பச்சை நிறத்தில் KG பேனா வாங்கித் தந்தார். Ciel பேனாவுக்கு மைவிடுவதாயின் அதன் நிப்பை மைப்போத்தலுக்குள் விட்டு அதன் கழுத்துப் பகுதியோடு சேர்ந்த ரீயுப்பை அழுத்த மை வந்து விடும். KG பேனாவுக்கு அப்படியில்லை. கழுத்தைக் கழற்றி விட்டு இன்னொரு ரியூப்பால் மையை உறிஞ்சி கீழ் உடம்பினுள் விட வேண்டும். எனக்குப் பாடசாலைக்கு நேரமாகி விட்டதால் அப்பா கடையிலேயே கேட்டு மையை விடுவித்துத் தந்தார்.

எனக்கு சந்தோசமும் பெருமையும். அன்றைய உறுப்பெழுத்து வகுப்பில் ரீச்சர் எனது பேனையையும், எனது எழுத்தையும் மற்றப் பிள்ளைகளுக்கும் காட்டியது எனக்கு இன்னும் அதிகப் படியான பெருமையைச் சேர்த்தது.

எனக்குப் பேனா கிடைத்து மூன்று நாளுக்குள் நான் நிறையவே எழுதி விட்டேன். எனது டயறியின் பக்கங்களை நிரப்பினேன். வெளியிடங்களில் இருக்கும் மாமாமார், சித்தப்பாமார் என்று எல்லோருக்கும் கடிதங்களாக எழுதி அனுப்பினேன். முடிந்தவரைக்கும் எழுதிக் கொண்டே இருந்தேன். அந்தளவுக்கு அந்தப் பேனா எனக்குப் பிடித்திருந்தது.

மூன்றாம் நாள் ஸ்போர்ட்ஸ் வகுப்பு. புத்தகங்கள் கொப்பிகள் என்று எல்லாவற்றையும் வகுப்பிலேயே வைத்து விட்டு விளையாட்டு மைதானம் வரை சென்று 45நிமிட வகுப்பை முடித்துத் திரும்பிய போது எனது கொம்பாஸ் சரியாக மூடப் படாமல் மெலிதாகத் திறந்திருந்தது. அவசரமாகத் திறந்து பார்த்தேன். பேனையைக் காணவில்லை. வகுப்பில் உள்ள எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன். ஒருவரும் தமக்குத் தெரியாது என்று விட்டார்கள். விளையாட்டுப் பாடம் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு மாணவி தனக்கு தண்ணீர் விடாய்க்குது என்று சொல்லி தண்ணீர்ப் போத்தலை எடுக்க வகுப்புக்கு வந்தது எனக்குத் தெரியும். ஆனால் அவளும் கண்கள் கலங்க தான் எடுக்கவில்லையென்று மறுத்து விட்டாள்.

என் பேனா களவு போய் விட்டது. அப்போதுதான் அப்பா வேலையால் வந்து களைப்போடு கொளுத்தும் வெயிலில் சைக்கிளை உழக்கிச் சென்று பேனாவை வாங்கித் தந்தார் என்பது உறைத்தது. அதனால் பேனா தொலைந்த விடயத்தை அப்பாவிடம் சொல்ல எனக்கு மனம் ஒப்பவில்லை. பழையபடி கையில் மையைப் பிரட்டிக் கொண்டு Ciel பேனாவால் எழுதிக் கொண்டிருந்தேன்.

அப்பாவுக்கு அந்தப் பேனா தொலைந்த விடயம் இன்றைவரைக்கும் தெரியாது. இனித் தெரியவும் மாட்டாது. ஆனால் இந்த நிகழ்வு எனக்குள் அவ்வப்போது தோன்றி நான் கேட்டதும் களைப்பையும் பொருட்படுத்தாது, என்னையும் அழைத்துச் சென்று, பேனா வாங்கித் தந்த அப்பாவின் அன்பை நினைக்க வைத்து ஒருவித நெகிழ்வை ஏற்படுத்தும்.

Tuesday, December 07, 2004

முல்லை நானில்லை.


முல்லை எனக்கு வேண்டியவர். அவரது படைப்புக்களை நான் ரசிப்பேன்.
அதனால் அவரது படைப்புக்களில் சிலதை திண்ணைக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் நான்தான் முல்லையென நினைத்து எனது பெயரில் முல்லையின் ஆக்கங்களைப் போட்டு விட்டார்கள். தற்போது பலரும் நான்தான் முல்லை என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் முல்லை நானில்லை.

Friday, December 03, 2004

சாதனை


ஜெயேந்திரர் என்ற சொல்லுக்கு உள்ள மவுசை நேற்றுத்தான் பார்த்தேன். எனது பதிவில் எத்தனையோ விடயங்களை ஒரு வருடங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நேற்று இந்த ஜெயேந்திரர் பற்றி எழுதிய பின் எனது தளத்துக்கு வந்து போனவர் தொகை நான் எதிர்பாராதது. எனது பதிவைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதனையே.

இன்றைய திண்ணையில் நேசகுமார் சக இந்துக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அச்சமும் அதனாலான வேண்டுகோளும் நியாயமானதுதான். சில புல்லுருவிகளால் ஒட்டுமொத்த சாமியார்களையும், துறவிகளையும் நாம் தப்பாக எடை போட்டு விடக் கூடாதுதான்.

ஆனால் புல்லுருவிகளை இனங்காண்பது எப்படி?
அதற்கிடையில் அவர்களிடம் ஏமாந்து போபவர்கள் எத்தனை பேர்?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite