Friday, June 20, 2014

நான் கேட்டவை - என் விருப்பம்

எழுது என்கிறது ஒரு மனம் . வேண்டாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று தடுக்கிறது ஒரு எண்ணம். எழுதி என்னதான் ஆகப் போகிறது என்ற கேள்வி எழுகிறது மறு புறம். ஆனாலும் எழுது என்கிற உந்துதலே மேலோங்கி நிற்கிறது.

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை என்ற பெயருக்கே பெரிய வரவேற்பிருந்த காலம் அது. அந்தக் கால கட்டத்தில் வானொலியை விட்டால் வேறு கதியே இல்லை. வீட்டில் வானொலிப் பெட்டி இல்லாதவர்களுக்கு அப்பொழுது எல்லாம் தேனீர்க்கடைகள் ஒரு வரப்பிரசாதம். காலையில் கடையைத் திறக்கும் போது போடப்படும் வானொலிப் பெட்டி இரவில் கடை மூடும் போதுதான் நிறுத்தப் படும். வானொலியில் நல்ல இனிமையான பாடல்கள் ஒலிக்கும் பொழுதுகளிலும், நல்ல நிகழ்ச்சிகள் வரும் பொழுதுகளிலும் பலர் தேனீர் கடைகளின் ஓரம் நின்று கேட்பதை அல்லது உள்ளே இருந்து தேனீரோடு அவற்றை இரசிப்பதை நான் பல தடவைகள் அவதானித்திருக்கிறேன். வீட்டில் அதிக நேரம் வானொலியை ஒலிக்க விட்டால், „வர வர எங்கடை வீடும் தேத்தண்ணிக் கடையாப் போச்சு' என்று பெரிசுகள் அங்கலாய்ப்பதும் இருந்திருக்கிறது.

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை இலங்கையைத் தாண்டி இந்தியாவிலும் ரசிகர்களைக் கொண்டிருந்தது. நான் கண்ட சொர்க்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் கே.ஏ. தங்கவேலு, மரணம் அடைந்து சொர்க்கத்திற்குச் செல்கிறார். சொர்க்கத்தில் அவர் நுழையும் பொழுது அங்கு வானொலி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் அன்றைய ஒலிபரப்பாளர் மயில்வாகனம் அவர்களது குரல் கேட்கிறது. „இங்கேயும் வந்திட்டானா?' என தங்கவேலு கேட்பதாக அந்தக் காட்சி இருக்கும். இந்த ஒரு விடயமே போதும். அன்றைய இலங்கை வானொலியின் வர்த்தக சேவையின் தரத்தையும் அறிவிப்பாளர்களின் புகழையும் சொல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட, தான் அப்துல் ஹமீத்தின் இரசிகன் எனப் பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறார். அந்தளவுக்கு சினிமா சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளைக் கூட இலங்கை தமிழ் வர்த்தகசேவை கட்டிப் போட்டிருந்தது.

அன்றைய முன்னணி இளம் கதாநாயகர்கள் நடித்த, சிறீப்பிரியாவின் சொந்தத் தயாரிப்பான „நீயா' திரைப்படம் தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற வில்லை. கே.எஸ். ராஜா அவர்கள், அப்படத்திற்கான திரைவிருந்து நிகழ்ச்சியை அற்புதமாகத் தயாரித்தும் அதற்கு மேலாக தனது குரல் வளத்தாலும், அதை இலங்கையில் பெரும் வெற்றிப் படமாக்கியது தனிப் பதிவு.

அன்றைய காலத்தில் பல தமிழ்ப் படங்கள் தமிழகத்தில் வெளியாகும் பொழுது, அவற்றிற்கான விளம்பரங்கள் இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவையின் ஊடாகவும் விளம்பரப் படுத்தப்பட்டன. இத்தனைக்கும் தமிழகத்தில் தமிழ் வானொலி இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.

திரைப்படப் பாடல்களை முன் நிறுத்தி, பாட்டுக்குப் பாட்டு, பாட்டும் பதமும், இன்றைய நேயர், இசையும் கதையும், பொங்கும் பூம்புனல், பூவும் பொட்டும், ஒலி மஞ்சரி, மலர்ந்தும் மலராதவை, புது வெள்ளம், அன்றும் இன்றும், இரவின் மடியில், இசைத் தேர்வு, நேயர் விருப்பம் என்று பலவகையான நிகழ்ச்சிகளைத் திறம்பட மிகச்சுவையாக நடாத்தி இரசிகர்களை ஈர்த்து வைத்திருந்தார்கள். விடுமுறை நாட்கள் என்றால் நேயர்களுக்காக விடுமுறை விருப்பம் என்றும் விவசாயிகளை ஊக்குவிக்க விவசாய நேயர் விருப்பம் என்றும் பாடல்களில் துள்ளிசை மெல்லிசை என வகை பிரித்தும் நிறையவே வெற்றி கண்டார்கள். ஒரு பாடலை ஒலிபரப்பினார்கள் என்றால் அதே பாடலை எக்காரணம் கொண்டும் அன்று மீண்டும் ஒலிபரப்ப மாட்டார்கள். அடுத்த நாள் அல்லது வேறு ஒரு நாளில்தான் மீண்டும் கேட்கலாம். இவ்வாறு சின்னச் சின்ன விடயங்களில் எல்லாம் மிகக் கவனமாக இருந்தார்கள். நிகழ்ச்சிகளைத் தயாரித்து வேண்டாதவற்றை தணிக்கை செய்து தேவையானதை இணைத்து தரமாகத் தந்தார்கள்.

எனது கால கட்டத்தில் அப்துல் ஹமீத், விமல் சொக்கநாதன், கே.எஸ்.ராஜா, கே.பரராஜசிங்கம், சில்லையூர் செல்வராஜன், திருமதி இராஜேஸ்வரி சண்முகம், திருமதி விசாலாட்சி ஹமீத், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் என்று பல வானொலி அறிவிப்பாளர்கள் இருந்திருந்தாலும், பெரும்பான்மையான வானொலி இரசிகர்களின் விருப்பத்துக்குரியவர்களாக இரண்டு முக்கிய அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் அப்துல் ஹமீத். மற்றையவர் கே.எஸ்.ராஜா. இதில் முன்னையவரின் தமிழ் உச்சரிப்பும் நேர்த்தியான தடங்கலின்றிய அமைதியான பேச்சும், ஒழுங்கான முறையில் தயாரிக்கப்படும் அவரது நிகழ்ச்சிகளும் அவரைப் பெரிய உச்சத்துக்கே கொண்டு போயின. இலங்கைக் கலைஞருக்கு அதுவும் ஒரு ஒலிபரப்பாளருக்கே கடல் தாண்டி ரசிகர்கள் பெருமளவு இருந்தார்கள் என்றால் அந்தப் பெருமை அப்துல் ஹமீத் அவர்களையே சாரும். அதிலும் „பாட்டுக்குப் பாட்டு' போட்டி நிகழ்ச்சியில் யாராவது வார்த்தைகளை மாற்றிப் பாடினாலோ, இராகங்களை விட்டு விட்டாலோ உடனடியாகக் கண்டு பிடிக்கும் அவரது ஆற்றலும், பாடகர்களைப் பாட வைக்கும் முன் அவர்களை உற்சாகப் படுத்தி தயார் படுத்தும் பாணியும் தோற்றவர்களைத் தட்டிக் கொடுத்து விடை கொடுக்கும் பாங்கும் அவரது தனித் தன்மை. அதேபோல் வேகமான உச்சரிப்புடன் நல்ல குரல் வளத்தால் பலரை ஈர்ந்து வைத்திருந்தவர் கே.எஸ்.ராஜா. நானும் அவர் இரசிகனாகவே இருந்தேன்.

ஒரு தடவை அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் தமிழர்களுக்கு எதிரான ஒரு தகவலை வெளியிட்டார். அன்றைய செய்தியின் முக்கிய தலைப்பாக அது வாசிக்கப் பட்டது. செய்தி முடிந்தபின் கே.எஸ்.ராஜா ஒலிபரப்பியது செல்வம் திரைப் படத்தில் வந்த „அவளா சொன்னாள் இருக்காது அப்படி ஒன்றும் நடக்காது நடக்கவும் கூடாது..' என்ற பாடல். இந்தப் பாடலை அவர் ஒலிபரப்பிய பின்னர் அவரை சிறிது காலம் வானொலியில் காணவில்லை. மேலிடத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

மீண்டும் கே.எஸ்.ராஜா வானொலியில் வந்தார். எம்ஜிஆர் திமுக வில் இருந்து நீக்கப் பட்ட செய்தி வந்தது. செய்திக்குப் பிறகு கே.எஸ்.ராஜா. „போனால் போகட்டும் போடா.. என்ற சிவாஜி கணேசன் படப் பாடலை அதுவும் கண்ணதாசன் எழுதிய பாடலை ஒலிபரப்பி எம்ஜிஆருக்கும் அவரது இரசிகர்களுக்கும் ஆறுதல் சொன்னார். „இது கோர்ட்டுக்குச் போனால் ஜெயிக்காது அந்தக் கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது போனால் போகட்டும் போடா.' என்ற அந்தப் பாடல் வரிகள் எம்ஜிஆரின் அந்த நிலைக்கு கச்சிதமாகப் பொருந்தி இருந்தன்.

கொழும்பில் கலவரம் தமிழர்கள் தாக்கப் பட்டார்கள். அன்று கே.எஸ்.ராஜா ஒலிபரப்பிய பாடல்களெல்லாம் எம்ஜிஆர் படங்களில் இடம் பெற்ற புரட்சிப் பாடல்களே. அதிலும் „என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே..' பணத்தோட்டத்துப் பாடல் முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பாடலில் வரும் கடைசி வரிகள் „..கலகத்தில் பிறப்பதுதான் நீதி மனம் கலங்காதே. மதி மயங்காதே' என்று வரும். யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். அந்தப் பாடலை ஒலிபரப்பியதற்காக நாலாவது மாடிக்கு கே.எஸ்.ராஜா அழைக்கப் பட்டதாக செய்தி பின்னர் வந்தது.

இவைகளை எல்லாம் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பாடல் வரிகள் இடம் பெற்ற திரைப்படம், இசை அமைப்பாளர், கவிஞர், பாடல்கள் ஒலிபரப்ப வேண்டிய காலம் என்று எல்லா விபரங்களையும்; தெரிந்து கொண்டே அன்று தளத்துக்குள் நுழைந்தார்கள். தங்களது அதி மேதாவித் தனங்களைக் காட்டாமல் எது இரசிகனுக்குத் தேவையோ அவற்றை திறம்படத் தயாரித்துத் தந்தார்கள். இப்படி அன்றைய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எனது ஆதங்கம் என்னவென்றால், அன்றைய தரத்துக்கு… அதாவது மூன்று நான்கு தசாப்தங்களுக்குப் பின்னால் தமிழர்களது வானொலித் துறை எப்படி இப்படி ஆயிற்று என்பதே.

இங்கே நான் முன்னர் சொல்லியது எல்லாம், இலங்கை தமிழ் வர்த்தக சேவையின் அன்றைய பெருமைகளைப் பற்றியதே. இன்றைய அவர்களது தரத்தை உரசிப் பார்க்கும் நோக்கம் எனக்கு இங்கே இல்லை. நான் புலம் பெயர்ந்து வந்து நிறைய வருடங்கள் ஆயிற்று. அவர்களது நிகழ்ச்சியைக் கேட்க எனக்கு இப்பொழுது வாய்ப்பு இல்லை. நான் சொல்ல வருவது புலம் பெயர் நாடுகளில் நான் கேட்கும் சில வானொலிகள் பற்றியே.

வலைத்தளத்துக்குள் நுழைந்தால் இணையத்தள வானொலிகள் சிதறிக் கிடக்கின்றன. என்னைக் கேள் உன்னைக் கேள் என்று வலைத்தளங்களில் அவை மின்னிக் கொண்டிருக்கின்றன. தனியாளாக, நண்பர்களாக, குடும்பமாக, அமைப்புகள் ரீதியாக, வர்த்தக நிறுவனங்களாக என ஏகப் பட்ட வானொலிகள். எங்கே போவது எதைக் கேட்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க வேண்டிய நிலையாக இருக்கிறது. இதில் பலர் தங்களது பகுதிநேர வேலையாகவே வானொலியில் பணியாற்றுகிறார்கள். ஈழத்துக் கலைஞன் கலைகளில் சம்பாதிக்க வாய்ப்பில்லை. ஆகவே அவனால் பகுதி நேரமாகத்தான் வேலை செய்ய முடியும். அப்படியும் சிரமப்பட்டு வானொலி நடாத்துகிறானே அதைப் பாராட்ட உனக்குத் தெரியவில்லையா? என்று பலர் எரிக்கும் விழிகளுடன் என்னை நோக்குவது தெரிகிறது. அப்படிக் கேட்பவர்களில் ஒரு சில அறிவிப்பாளர்களின் பொருளாதார நிலையும் எனக்குப் புரிகிறது. ஆனால் நான் பேச வருவது வானொலிகளின் தரத்தைப் பற்றி மட்டுமே. பொருளாதாரத்தைப் பற்றி அல்ல.

சிலர் வானொலிகளை கணணியில் இணைத்து விட்டு தங்கள் வேலைகளைக் கவனிக்கப் போய் விடுகிறார்கள். அந்த வானொலிகள் தங்கள் விருப்பத்துக்கு பழையது, புதியது, இடைப்பட்டது எனப் பாடல்களைக் கலந்து ஆட்டோ ரிக்சா மாதிரி தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. இல்லை ஒலிபரப்பிக் கொண்டிருக்கின்றன. கணணியில் ஏதாவது தடங்கல்கள் வந்தால் அவை நின்று போய் பின் ஏதோ நினைத்து விட்டு „எந்திரன் எந்திரன்..' என்று பாடத் தொடங்குகின்றன. ஆக „விரும்பினால் கேள் இல்லை என்றால் போ' என்ற நிலைதான் அங்கே பலமாக நிற்கிறது.

சரி வானொலி நிலையங்களாக முத்திரை குத்திக் கொண்டு இயங்குவனவற்றைப் பற்றி சொல்ல வேண்டுமானால்......, அதற்குத்தான் கட்டுரையின் ஆரம்பத்திலே இப்படி ஆதங்கப் பட்டிருக்கிறேன். „எழுது என்கிறது ஒரு மனம் . வேண்டாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று தடுக்கிறது ஒரு எண்ணம். எழுதி என்னதான் ஆகப் போகிறது என்ற கேள்வி எழுகிறது மறு புறம். ஆனாலும் எழுது என்கிற உந்துதலே மேலோங்கி நிற்கிறது.'

ஆகவே தொடர்ந்து எழுகிறேன்.

இதை எழுதுவதற்காக - சர்வதேச தமிழ் வானொலி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்னர் ஒலிபரப்பப் பட்ட ஒரு நிகழ்ச்சியை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்கிறேன்.

´பாதகாணிக்கை´ என்ற ஒரு திரைப் படம். அதில் இடம் பெற்ற ஆழமாக மனதில் பதிந்திருக்கும் ஒரு அற்புதமான பாடல் „பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா...'



கண்ணதாசன் வரிகள் தர, விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் பி.பி. சிறிநிவாஸ், ஜானகி இணைந்து பாட ஜெமினி கணேசன் விஜயகுமாரி அந்தப் பாடலுக்காக நடித்திருந்தார்கள்.

திருமணம் முடிந்து ஒரு முதலிரவில் இந்தப் பாடல் வருவதாகக் காட்சி அமைத்திருந்தார்கள். இருக்கட்டும். பாடல் நன்றாகத்தானே இருக்கிறது. காட்சியும் அழகாகத்தானே இருக்கிறது. பிரச்சினை உனக்கு எங்கே இருக்கிறது என்கிறீர்களா?

பிரச்சினை என்று ஒன்றும் பெரிதாக இல்லை ஒரு ஆதங்கம். அவ்வளவுதான்.

அன்று ஒரு நாள் இந்தப் பாடலை சர்வதேச தமிழ் வானொலி ஒன்றில் ஒலிபரப்பி அதற்கு விளக்கம் கேட்டார் அந்த அறிவிப்பாளர். விளக்கத்தை எழுதி அனுப்புங்கள் அடுத்த வாரம் சந்திப்போம் என்றார். எனக்குப் பிடித்தமான பாடல். விளக்கத்துடன் கேட்க அடுத்த வாரம் வரை காத்திருந்தேன். அடுத்த வாரம் வந்தார். தொலைநகலில் வந்த ஒரு ரசிகையின் விளக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

'பூஜைக்கு வந்த மலரே வா. பூமிக்கு வந்த நிலவே வா என்று ஒரு கருத்தையும், பூஜைக்கு உவந்த மலரே வா. பூமிக்கு உவந்த நிலவே வா என்று இன்னும் ஒரு கருத்தையும் இந்தப் பாடல் கொண்டிருக்கிறது. எனவே சரியான விடையை எழுதி அனுப்பிய இன்னாருக்கு பாராட்டுக்கள். அவருக்கான பரிசுத் தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும்' எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

பி.பி. சிறிநிவாஸ், ஜானகி இருவரும் தமிழர்களாக இல்லாவிட்டாலும். தமிழ் உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்திப் பாடுபவர்கள். அவர்கள் பாடும் போது 'வந்த' என்ற சொல்லே மேல் ஓங்கி நிற்கிறது. 'உவந்த' என்று காதில் ஆழமாக விழவில்லையே. கண்ணதாசன் இரண்டு பொருள் பட எழுதுவதில் வல்லவர். ஆகவே அவர் இரு பொருள் பட இந்தப் பாடலையும் எழுதி இருப்பாரோ என்று அன்று முழுவதும் குழப்பமாகவே இருந்தது.

  • 'கட்டான கட்டழகுக் கண்ணா - உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா...' 'வேலை வணங்காமல் வேறென்ன வேலை..' 
  • 'வக்கீலாத்து வசந்தா –உன் மனதை எந்தன் வசந்தா' 
  • 'குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி –எங்கள் குடும்பம் இருப்பது உன்னை நம்பி'
இவை போன்று இன்னும் பல பாடல்களில் கவிஞர் ஒரு சொல்லை பெயராகவும், வினையாகவும் வைத்து விளையாடி இருப்பார் அந்த வகையில் இதுவும் அடங்குமா?

'உள்ளமெல்லாம் இளகாயோ ஒவ்வொரு தேன் சுரக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ..' என்று பலே பாண்டியாவில் வரும் 'காய்' பாடல் போன்று இதுவும் ஒன்றா?

அப்படியாயின், அறிவிப்பாளர் ஒப்புவித்த கருத்தைப் பார்த்தால்,
பூஜைக்கு உவந்த மலர் சரி. அதென்ன பூமிக்கு உவந்த நிலவு? கூட்டிக் கழிச்சு ஏன் பெருக்கியும் பார்த்தால், உகந்ததோ இல்லையோ பூமிக்கு ஒரு நிலவுதான் இருக்கப் போகிறது. ஆக கவிதையில் பொருட் குற்றம் வந்து விடுமே? கண்ணதாசனின் பாடல்களில் பொருட் குற்றம் சொன்ன நக்கீரர்கள் இருக்கிறார்கள்.

பச்சரிசிப் பல் ஆட பம்பரத்து நாவாடா..'
உச்சி மரக் கிளையில் நின்று உயிர் வேரை அறுத்தவன் நான்..' 'பூஜ்ஜியத்துக்குள் ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு...'
என்று பாடல் வரிகளைச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பாடல்கள் எல்லாம் நேரடியாகப் பொருள் தருபவை. பூஜைக்கு வந்த மலரே வா பாடலில் நேரடியாகப் பார்த்தால் பொருட் குற்றம் எதுவும் இல்லை. பிரித்துப் பார்த்தால்தான் பிரச்சினையாகிறது.

தேவர் மகன் திரைப் படத்தில் வரும் 'இஞ்சி இடுப் பழகி..' பாடலில் எஸ். ஜானகி பாடும் வரிகளைப் பார்த்தால்,
'இஞ்சி இடுப்பழகா... மஞ்ச சிவப்பழகா... கள்ளச் சிரிப்பழகா...மறக்க மனம் கூடுதில்லையே... ' வரிகளை பிரித்து மேய வெளிக்கிட்டால், இஞ்சி இடுப்பு அழகா? மஞ்ச சிவப்பு அழகா? கள்ளச் சிரிப்பு அழகா? என்று கேட்க வேண்டி வரும்.

நிறத்தைப் பற்றிச் சொல்லும் போது இன்னும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
'என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை...'
என்ற பாடலில் உள்ள வரிகளை உற்றுப் பார்த்தால்;

மஞ்சள் நிறத் தவளை – என்
நெஞ்சில் நிலத் தவளை
என்றெல்லாம் காதலியை காதலன் தவளையாக வர்ணிக்கிறான் என்று கருத்தக் கொள்ள வேண்டி வரும்.

திருக்குறளுக்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள். தாங்கள் இருக்கும் சூழல், தங்களது வாழ்வியல் அனுபவங்கள், அறிவுகள் எல்லாவற்றையும் இணைத்து பொருள் எழுதுவார்கள். அது போல்தான் கண்ணதாசனின் பாடலுக்கு அறிவிப்பாளர் விளக்கம் தந்திருக்கிறார் என்று எண்ணிக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் பூமிக்கு உவந்த நிலவு என்று சொன்னவருக்குப் பரிசு தந்து, நேரடியாக விளக்கம் தந்தவரை கண்டு கொள்ளாமல் விட்டது அறிவிப்பாளரின் அதிகப் பிரசங்கித் தனம் என்பதுதான் எனது கருத்து. இது நடந்து பல வருடங்களாயிற்று என்றாலும், என்னுள் அமர்ந்திருந்த ஒரு உறுத்தலை இன்று உலா வர விட்டிருக்கிறேன்.

நாங்கள் மீண்டும் வந்து விட்டோம். வாருங்கள் வந்து பாருங்கள, கேளுங்கள்; என்று அறிவிப்பு வந்திருந்தது. சரி என்னதான் சொல்கிறார்கள் போய்த்தான் பார்ப்போம் என்று அந்த வானொலிக்குக் காது கொடுத்துக் கேட்டேன்.

நான் அந்த வானொலியில் கேட்டதற்கு முன்னால், இந்த விடயத்தை முதலில் சொல்லி விடுகிறேன்.

60களின் பிற்பகுதியில் வந்த செல்வம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு அற்புதமான பாடல். அது பட்டி தொட்டிகள் எல்லாம் அன்று ஒலித்துக் கொண்டிருந்தது. ஜமுனாராணி, தாராபுரம் சுந்தரராஜன் இணைந்து பாடிய பாடல். அப்பொழுது எல்லாம் திருவிழாக் காலங்களில் அதிகம் சுழன்ற இசைத் தட்டுக்களில் இதுவும் ஒன்று. கே.வி மகாதேவன் இசைக்கு வாலி கவிதை எழுதி இருந்தார்.

எனக்காகவா நான் உனக்கானவா என்னைக் காணவா என்னில் உன்னைக் காணவா

இந்தப் பாடலில் பலருக்கு அன்று ஒரு மயக்கம் இருந்தது. அந்த மயக்கத்தைத் தரும் குரலாக ஜமுனாராணி இருந்தார். அவர் குரலில் வந்த சில பாடல்களில் எனக்கு இன்றும் மயக்கம் உண்டு.

  • 'என் ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா' 'செந்தமிழ் தேன் மொழியாள்' 
  • 'காமுகர் நெஞ்சில் நீதியில்லை' 
  • 'அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு' 
  • 'காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு' 
  • 'சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா 
  • 'பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதைப் பாடவில்லை 'மாமா,மாமா மாமா' 
  • 'குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே'
  • 'நான் சிரித்தால் தீபாவளி'
போன்ற பாடல்களை இங்கே உதாரணத்திற்குத் தருகிறேன்.

தாராபுரம் சுந்தரராஜன் சினிமாவுக்காக அதிக பாடல்கள் பாடவில்லை. ஆனால் ஜமுனாராணியுடன் இணைந்து அவர் பாடிய 'எனக்காகவா நான் உனக்காகவா' பாடல் மிகப் பிரபலமானது. அறுபதுகளில் வாழ்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, அதன் பின்னரும் கூட இந்தப் பாடல் பலருக்குத் தெரிந்திருக்கும்.

அதிலும்,
இளவேனில் வெயிலே காய இளம் மீன்கள் கண்ணில் மேய
இளமேனி தோளில் சாய இதழோரம் தேனும் ஊற..
என ஜமுனாராணியின் குரலில் குழைந்து வரும் பாடலின் ஆரம்பம் நிச்சயமாகப் பலரை கிறங்கடித்திருக்கும்.

இப்பொழுது நான் காது கொடுத்து வானொலியில் கேட்டதைச் சொல்லி விடுகிறேன்.

'உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் ஒரு நேயர் என்னிடம் 'எனக்காகவா நான் உனக்காகவா...' என்ற பாடலைக் கேட்டிருந்தார். அந்தப் பாடலில் ஏதாவது ஏடாகூடமாக இருக்குமோ என்ற பயத்தில் அது எங்களிடம் இல்லை என்று சொல்லி விட்டேன். ஆனால் கலையகத்தில் அந்தப் பாடல் இருந்தது. பிறகு நான் தனியாக அந்தப் பாடலைக் கேட்டு, அதில் அப்படி ஒன்றும் இல்லாததால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்தப் பாடலை அந்த நேயருக்காக ஒலிபரப்பினேன்...' என்று வானொலியில் சொன்னார் ஒரு அறிவிப்பாளர். இந்த ஒரு சம்பவத்தில் அந்த அறிவிப்பாளரின் ஞானத்தைப் புரிந்து கொண்டேன்.

எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு தளத்துக்குள் நுழையும் பொழுது குறைந்த பட்சம் அது சம்பந்தமான விடயங்களையாவது தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இத்தனைக்கும் `நெஞ்சில் நிறைந்தவை´ நிகழ்ச்சியில் நான் கேட்டிராத பல பழைய பாடல்களை தேடி எடுத்து வந்து தூசி தட்டி தன் விளக்கம் தந்து ஒலிபரப்பும் ஒரு அறிவிப்பாளர் அவர்.

அவருக்கு ஏன் இந்தப் பாடல் தெரியாமல் போனது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சரி அவருக்குத் தெரியாமலே போகட்டும். அன்றைய கால கட்டத்தில் நாங்கள் விரும்பிய பாடல்களைக் கேட்க வானொலிப் பெட்டி முன் தவமாய் இருந்தோம். வானொலி நிலையத்துக்கு எழுதிப் போட்டு ஒலிபரப்புவார்கள் என்று காத்திருந்தோம். ஆனால் இன்று நிலமை அப்படி இல்லை. வேண்டிய பாடலை இணையத்தில் தேடினால் உடனேயே வந்து விடப் போகிறது. விரும்பிய பாடல்களை வேண்டிய தடவைகள் கேட்டு விட முடிகிறது. இப்படியான நிலையில் ஒரு நேயர் ஏன் வானொலிக்கு தொலைபேசி எடுத்து, காத்து நின்று ஒரு பாடலைக் கேட்க விரும்புகிறார்? தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற அவர் விரும்புகிறார் என்ற பரந்த நோக்கமா? இல்லை தனது குரலும் வானொலியில் ஒலித்தது என்கிற பெருமையா? எதுவாகவேனும் இருந்து விட்டுப் போகட்டும்.

'மடல் வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க..'
'தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும்..

பாடல்கள் எல்லாம் அந்த வானொலியில் ஒலிக்கிறது.

'வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது..'
என்ற இரு கருத்துப் பாடல்களை அவர்களால் தர முடிகிறது.

தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடல்களேயே ஒலிபரப்ப முடிகிறது.

எனக்காகவா பாடல்களில்தான் வில்லங்கம் இருக்கிறதா எனப் பார்க்கிறார்கள்.

இதேபோல் இன்னும் ஒரு விடயம்,

தங்களுக்குப் பிடித்த பாடல்களை இரண்டு அறிவிப்பாளர்கள் இணைந்து வானொலியில் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பிடித்திருந்த பாடல்கள் எனக்கும் பிடித்திருந்தது. பாடல்களுக்கான விளக்கங்களையும் மேலதிகமாகத் தந்து கொண்டிருந்தார்கள்.

'உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது..'



`நான் ஏன் பிறந்தேன்´ திரைப் படத்தில் இடம் பெற்ற மனதை விட்டகலாத ஒரு பாடல். இரண்டு அறிவிப்பாளர்களும் இந்தப் பாடல் பற்றி ஆளாளுக்கு விளக்கம் தந்து கொண்டிருந்தார்கள்.

'இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஸ். எம்ஜிஆர் படம். கேஆர்.விஜயா நடித்திருந்தார். படத்தில் பாடல் இடம் பெறும் பொழுது அசோகன் ஒழித்து நின்று எட்டி எட்டிப் பார்ப்பார்...' என்று ஒரு அறிவிப்பாளர் விளக்கம் தந்தார்.

நான் ஏன் பிறந்தேன் திரைப் படத்தில் அசோகன் நடித்திருந்தாரா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. பிறகு புரிந்து கொண்டேன் அந்த அறிவிப்பாளர் தேங்காய் சீனிவாசனைத்தான் அசோகன் என்று சொல்கிறார் என்று.

இவை எல்லாம் அறிவிப்பாளர்களின் அறிவு ஞானங்கள். அறிந்ததைத் தரலாம். தெரியாததைத் தவிர்க்கலாம். அல்லது தேடுதலில் பெற்றுக் கொண்டு அழகாகத் தொகுத்துத் தரலாம். ஒன்றும் அவசரம் இல்லை. எனக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டு தவறானவற்றை தந்து விடக் கூடாது. பின்னாளில் யாராவது சுட்டிக் காட்டினால், 'அப்படியா? தகவலுக்கு நன்றி..' என்று சமாளிக்கக் கூடாது.

இசைத்தட்டுக்களை மட்டும் வைத்துக் கொண்டு அன்றைய காலத்தில் வானொலி அறிவிப்பாளர்கள் தந்த தகவல்கள், அவர்கள் சுவை படத் தந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் அன்று செய்த நிகழ்ச்சிகளை இணையத்தில் தேடி எடுத்து திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். தடங்கல் இன்றி அவர்கள் தெளிவாகப் பேசிய தமிழைப் பயிற்சி செய்து பெற வேண்டும்.

அவசரமும் அதிகப் பிரசங்கித் தனமும் அறிவிப்பாளருக்கு ஆகாது. எழுது என்கிற உந்தலே மேலாக நின்றதனால்தான் இதை எழுதியிருக்கிறேன்.

ஆழ்வாப்பிள்ளை
Mai 2014

Friday, June 13, 2014

மொய்

சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாகப் பார்த்து தொலைபேசி அலறுகிறது.

"இந்தச் சனங்களுக்கு வேறை வேலையில்லை. சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாப் பார்த்துத்தான் ரெலிபோன் பண்ணுங்கள். நேற்றும் வெங்காயம் எரிஞ்சு போட்டுது." புறுபுறுத்த படி சமையலறையிலிருந்து வெளியில் வந்த செண்பகக்காவின் மனசு ஏதும் தொல்லைபேசியாக இருக்குமோ என்று தயக்கம் காட்டினாலும், கால்கள் விரைய கைகள் தொலைபேசியைத் தூக்க...

"வணக்கம் அக்கா. நான் சாந்தன் கதைக்கிறன்."

"எந்தச் சாந்தன்..? கறுத்தச் சாந்தனோ..?"

"இல்லையக்கா"

"அப்ப... எரிமலை சாந்தனோ..?

"இல்லை...யக்கா. நான் அண்டைக்கு.. மைக்டொனால்ட்ஸ் சிறீயின்ரை கலியாணவீட்டிலை உங்களோடை கதைச்சன்.."

"அட நீங்களே..? சொல்லுங்கோ தம்பி என்ன விசயம்..?"

"உங்கடை வீட்டுக்கு எப்பிடியக்கா வாறது? ஒருக்கால் வழியைச் சொல்லுவிங்களோ..?"

இவன் ஏன் இப்ப இங்கை..! சொந்தமும் இல்லை. நட்பும் இல்லை. எப்பவோ ஏதோ ஒரு கலியாண வீட்டிலை சந்திச்சது. அவ்வளவுதான். என்ரை கணவரை முந்தியே இடைக்கிடை றோட்டு வழியே கண்டு கதைச்சிருக்கிறானாம். அண்டைக்கும் கலியாண வீட்டிலை மொய் எழுதிற வரிசையிலை நிண்டு மைக்கை விழுங்கினவன் மாதிரி பெரிய சத்தமாகக் கதைச்சுக் கொண்டு நிண்டவன். எங்கடை இடத்திலையிருந்து 100கி.மீற் தள்ளியிருக்கிறான்.

"தம்பி..! என்ன விசயம்? இவ்வளவு தூரம் எங்களைத் தேடி வர..?"

"அது வந்து... மகள் சாமத்தியப் பட்டிட்டா. வாற சனிக்குத் தண்ணி வார்க்கிறம். அதுதான் கார்ட்டைக் கொண்டு வந்து நேரேயே தந்திட்டுப் போவமெண்டு.."

உந்தக் கார்ட் தாறதுக்கு பெற்றோல் செலவழிச்சு 150கி.மீற் கார் ஓடி வரப் போறிங்களே..? ஏன் தம்பி உங்களுக்கு வீண் அலைச்சல்? தபாலிலை அனுப்பி விடுங்கோ.

செண்பகக்கா ஏதோ அவன் அலைஞ்சு கஸ்டப்படுறதைப் பார்க்க தனக்கு விருப்பமில்லை என்பது போலக் கதைத்தாலும், உள்ளுக்குள் 150கி.மீற் தூரத்திலையிருந்து வாறவனைச் சும்மா அனுப்பேலுமே! சமைச்சுமெல்லோ கொடுக்கோணும்.. என்ற பயம்தான் இருந்தது.

"பிறகு நீங்கள் குறை பிடிக்க மாட்டிங்களே..?"

"இதிலை குறை பிடிக்க என்ன தம்பி இருக்குது? நான் ஒண்டும் குறை நினைக்க மாட்டன். நீங்கள் தபாலிலை அனுப்புங்கோ.

ம்… திரும்ப இண்டைக்கும்.. அடுப்பிலை வெங்காயம் எரிஞ்சு போட்டுது. நேற்றும் இந்த மனிசன் முகத்தைக் கோணி வைச்சுக் கொண்டு சாப்பிட்டது.

சனத்துக்கு வேறை வேலையில்லை. மகள் சாமத்தியப் பட்டிட்டுதாம். மகளையே நான் ஒரு நாளும் கண்ணாலை காணேல்லை. இப்ப உதுக்குப் போய் மொய் எழுதோணுமே!

சா... யேர்மனியை விட்டிட்டு பேசாமல் செட்டி நாட்டிலை போய் இருக்கலாம் போலை இருக்கு. அங்கை கலியாணத்துக்கே மொய் 25பைசாதானாம்.

சந்திரவதனா
3.8.2004

பிரசுரம் - எரிமலை (Aug-2004)

Online னாலை எல்லாம் செய்யலாம்

பேரன் தீரன் விளையாடிக் கொண்டிருந்தான்.

எனது மருமகள் அவனிடம்
"தீரன் அந்த காற்சட்டையை ஒருக்கால் அப்பம்மாவுக்குப் போட்டுக் காட்டு"

விளையாடுவதை விட்டு வந்து காற்சட்டையைப் போட்டுக் காட்டுவதா..?
"பிறகு போட்டுக் காட்டுகிறேன்" என்றான்.

"இல்லை, இப்பவே போட்டுக் காட்டு. அப்பம்மா போகோணும்"

"அது பிரச்சனையில்லை. பிறகு Online னாலை எல்லாம் செய்யலாம்" என்றான்.

Sunday, June 08, 2014

வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள்

ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முதல் இன ஒடுக்குமுறைக்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பெற்ற கூ-குளுக்ஸ்-கிளான் என்ற அமைப்பு  சட்டரீதியாகத் தடைசெய்யப் பட்டதாயினும் திரை மறைவில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த அமைப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல யேர்மனியிலும் தனது செயற்பாட்டை வைத்திருப்பது இப்பொழுது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. வெளிநாட்டவர்களை வெறுக்கும் யேர்மனிய இனவாதிகள் சிலர் இந்த அமைப்பைப் புதுப்பித்து யேர்மனியில் செயற்பட்ட செய்தியானது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த அமைப்புக்குள் யேர்மனிய காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தது கண்டு பிடிக்கப் பட்ட பொழுது அது அதிர்ச்சிக்குள் இன்னும் அதிர்ச்சியாகிப் போனது.

யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான பல தாக்குதல்கள் துலக்கப்படாமலே இருந்து வந்தது. அதிலும் 2000 இல் இருந்து 2006ம் ஆண்டுவரை சிறிய வர்த்தக நிலையங்களை வைத்திருந்த எட்டு துருக்கி இனத்தவர்களதும், ஒரு கிரீக் நாட்டவரதும் கொலைகள் மர்மமாகவும் வெளிநாட்டவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்தன. 25.04.2007 இல் கைல்புறோன் என்ற நகரத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்டதும் அவருடன் கடமையில் இருந்த மற்றைய ஆண் பொலிஸ் படுகாயப் படுத்தப் பட்டதும் யேர்மனியின் பொலிஸ் துறையையே புரட்டிப் போட்டது. எவ்வளவுதான் புலனாய்வுகள் செய்தும் கொலையாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்த முடியவில்லை. இது யேர்மனிய பொலிஸின் கையாகாலாத தன்மையா? அல்லது குற்றவாளிகளின் தடயங்கள்  திட்டமிட்டே அழிக்கப் படுகின்றனவா? என்ற கேள்விகளும், கருத்தாடல்களும் மக்கள் மத்தியில் மேலோங்கத் தொடங்கின. பொலிஸைச் சேர்ந்த ஒருவர் பட்டப் பகலில் அதுவும் கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவரது வாகனத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப் பட்டதும், மற்றையவர் படுகாயப் படுத்தப் பட்டதும், தாக்குதலின் பின்னர்  அவர்களது ஆயுதங்கள் களவாடப் பட்டதும் சாதாரண விடயங்கள் அல்ல. பொலிசுக்கே நிலமை மோசம் என்றால், சாதாரண பொதுமக்களுக்கு, அதுவும் வெளிநாட்டவருக்கு என்ன பாதுகாப்பு என்று யேர்மனிய ஊடகங்கள் கேள்வி எழுப்பின. 

Haller Tagblatt என்ற பத்திரிகையின்  ஆசிரியரும், எடிட்டரும், எழுத்தாளருமான துமிலன் என்பவர், யேர்மனியில் இயங்கும் கூ-குளுக்ஸ்-கிளான் பற்றி தான் சேகரித்த தகவல்களை பத்திரிகையில் எழுதத் தொடங்க மறைந்திருந்த பல தகவல்கள் மக்களைச் சென்றடைந்தன. அதிலும் முக்கியமாக, நியோநாசி என்று அழைக்கப் படும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான அமைப்புக்கும்  கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்புக்குமான தொடர்புகளை அவர் வெளிச்சம் போட்டுக் காட்ட, அது பொலிஸ் துறைக்கு ஒரு சவாலாகப் போய் விட்டது. அரசியல்வாதிகளும் தங்கள் பங்குக்கு பாராளுமன்றத்தில், சட்டம், பாதுகாப்பு, ஒழுங்கு பற்றி விவாதத்தைத் தொடங்கி விட்டனர். 

04.11.2011 இல் Mundlos, Boehnhardt ஆகிய இரு யேர்மனியர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலை செய்யும் முன் Eisenach என்ற நகரத்தில் உள்ள வங்கியில் 70,000 யூரோக்களைக் கொள்ளை அடித்திருந்தார்கள். பொலிஸார் Eisenach நகரத்தைச் சுற்றி வளைத்து கொள்ளையர்களைத் தேடத் தொடங்கினார்கள்.  அநாதையாக நின்ற வெள்ளை நிற கரவன் வாகனம் ஒன்றை  பொலிஸ் நெருங்கும் பொழுது, அதற்குள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. தொடர்ந்து கரும் புகையுடன் வாகனம் தீப்பற்றிக் கொண்டது. தீயை அணைத்து பொலிஸ்  வாகனத்துக்குள் நுளைந்த பொழுது வாகனத்துக்குள் Mundlos, Boehnhardt  இருவரும் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு இறந்திருந்தார்கள். இறப்பதற்கு முன்னால் வாகனத்தை உள்ளிருந்தே அவர்கள் தீயிட்டு இருந்தது புலனாய்வில் தெரிய வந்தது. வாகனத்துக்குள் இருந்து 110,000 யூரோக்கள், கொலைக்குப் பயன் படுத்திய ஆயுதங்கள், கைல்புறோன் நகர பொலிஸிடம் இருந்து கைப்பற்றப் பட்ட துப்பாக்கிகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர். இதேநாள் மாலை 3மணிக்கு Weissenborn என்ற நகரத்தில் ஒரு வீடு குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. இந்த வீட்டில்தான் தற்கொலை செய்து கொண்ட Mundlos, Boehnhardt  இருவரும்  வாழ்ந்து வந்தார்கள் என்பது பொலிசுக்குத் தெரிய வந்தது. இவர்களுடன் வாழ்ந்து வந்த இன்னும்  ஒருவரான Beate Zschaepe என்ற பெண்ணே குண்டு வைத்து வீட்டைத் தகர்த்து விட்டுத் தப்பி ஒடியதும் தெரிய வந்தது. 

பின்னர்  அவரை பொலிஸ் கைது செய்தது. இதன் பின்னர் பல தகவல்கள் வெளிவரத் தொடங்கின. வெளிநாட்டவர்களின் கொலைகளைச் செய்தவர்கள் இவர்கள்தான் என்றும், 14 தடவைகள் வங்கிகளைக் கொள்ளையடித்து அந்தப் பணத்தில்தான் தங்கள் செலவுகளைப் பார்த்துக் கொண்டார்கள் என்றும் தற்கொலை செய்த ஆண்களுடன் செயற்பட்ட ஒரு பெண்ணை கைது செய்திருக்கிறோம் என்றும் பொலிஸ் அறிக்கையை வெளியிட்டது.
„சரி. அப்படியாயின் கைல்புறோன் நகரத்தில் பெண் பொலிஸை ஏன் கொன்றார்கள்? பொலிஸ் துறைக்குள்ளும் நியோநாசியா?' என்ற கேள்விகளை ஊடகங்கள் கேட்கத் தொடங்கின. இவை சம்பந்தமாகப் பல கட்டுரைகளை அவை எழுதத் தொடங்கின.

பல கேள்விகளுக்குப் பதில்கள்; இன்னும் தெளிவாக இல்லை. நியோநாசி என்ற இனவாத அமைப்பு தேசிய சோசலிய திரைமறைவு அமைப்பாக (Nationalsozialistischer Untergrund (NSU)) தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு செய்த குற்றச் செயல்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் போன்ற பல விடயங்களைத் திரட்டி யேர்மனியில் பத்து எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய ´என்எஸ்யு வின் இரகசிய விடயங்கள்` (Geheimsache NSU)  என்ற புத்தகம் மே 26 இல் வெளிவந்துள்ளது.

இந்தப் பத்து எழுத்தாளர்களில் ஒருவராகத் துமிலன் இருக்கின்றார். தமிழரான இவர் 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். இன்று யேர்மன் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகவும், எடிட்டராகவும், எழுத்தாளராகவும் இருக்கின்றார். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் பல சிக்கலான பிரச்சனைகளையும் ஆபத்து நிறைந்த விடயங்களையுமே தொட்டு நிற்கின்றன.
துமிலன், தேசிய சோசலிய அமைப்பின் திரைமறைவுச் சம்பவங்களைப் பத்திரிகையில் வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர்களில் முதன்மையாக இருக்கிறார். அவர்கள் சம்பந்தமான விடயங்களைச் சேகரிப்பதற்காக பல ஆபத்து நிறைந்த இடங்களுக்குச் சென்று தகவல்களைத் திரட்டி இருக்கிறார்.
இன்றும் என்எஸ்யூ வின் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில், என்எஸ்யூ விற்கு எதிராக நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல வர இருந்த ஒருவர் வழக்குக்கு முதல் நாள் மர்மமான முறையில் இறந்திருந்தார். இந்த சம்பவம் இன்னமும் நாங்கள் இருக்கிறோம் என்று அவர்கள் கட்டியம் கூறுவதாக இருக்கிறது.

துமிலன் ஒரு தமிழனாக இருந்து யேர்மனிய மொழியில் நூல் வெளியிடுவதில் பெருமை இருக்கிறது. அதை விட வெளிநாட்டவர்களையே கொலை செய்யும் ஒரு நியோநாசி அமைப்பைப் பற்றியும் அவர்களின் திரைமறைவுச் செயற்பாடுகளையும் எழுதும் ஒரு வெளிநாட்டவர் என்றளவில் மிகப் பெருமையாக இருக்கிறது.

ஆழ்வாப்பிள்ளை
26.5.2014





Tuesday, June 03, 2014

நானும் என் தலைமுடியும்


முடி உதிருது என்று ஜேர்மனிக்கு வந்த தொடக்கத்தில் (1986-1987) ஒரு மருத்துவரிடம் போனேன். அவர் பெண் மருத்துவர். . கதவு வாசலில் நின்ற படியே என்னை அவர் பார்த்த பார்வை..... இப்பவும் மறக்க மாட்டேன். அப்படியே தூரத்திலேயே நின்றபடி -  'தலை இழுக்கும்போது உதிரும் முடியையும் அதே போல் முழுகிப்போட்டு தலை இழுக்கும்போது உதிரும் முடியையம் எண்ணிக்கொண்டு வா பார்ப்போம்' என்றார்.

இவ்வளவு தலைமுடியை வைத்துக் கொண்டு வேலைமெனக்கெட்டு அங்கு வந்திருக்கிறேன் என்பது போன்ற பாவனை அவரிடம். அவருக்கென்ன தெரியும்..! செவ்விளனியும். கொப்பறா தேங்காயும் போட்டுக் காய்ச்சி அதைத் தினமும் தவறாமல் என் தலையில் தேய்த்துத் தேய்த்து அம்மா வளர்த்து விட்ட முடியில் அரைவாசிக்கு மேல் கொட்டி விட்டிருப்பது. எனது நீண்ட கூந்தல் நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே போய்க் கொண்டிருப்பது. இரட்டைப்பின்னலுக்குள்ளேயே அடங்க மறுத்த முடி இப்போது பஞ்சத்தில் வாடியவன் போல் ஒற்றைப் பின்னாலாகி நலிந்து நிற்பது.

இந்த டொக்டர் சரியில்லையென்று சொல்லி இன்னொருவரிடம் போனேன். அவர் என்னைப் பார்த்ததும் அதிர்ந்து போனார். இவ்வளவு முடி வைத்திருக்கிறாய்... என்று வாயைப் பிளந்தார். பிறகு சாட்டுக்கு என் தலைமுடியைத் தொட்டுப் பார்த்து விட்டு 'கொட்டும் முடியை எண்ணிக் கொண்டு வா' என்றார்.
அன்றிலிருந்து இன்று வரை தலைமுடி கொட்டிக் கொண்டுதான் இருக்கிறது. எடுத்துக் குப்பைக் கூடையில் போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறேன். அதன்பின் எந்தத் தோல் வைத்தியரையும் நான் நாடியதில்லை.

சந்திரவதனா
3.6.2014

Tuesday, March 18, 2014

யாருக்கும் பெருமைப்படத் தோன்றவில்லையா?

எங்களை நாங்களே தூற்றிக் கொள்வதில் எமக்கு நிகர் நாமே என்ற நிலையில்தான் தமிழர் நாம் இன்னும் இருக்கிறோம். ஒரு ஜேர்மனியப் பெண் தமிழை அதுவும் எமது பேச்சுத்தமிழைக் கதைக்கும் போது ஆச்சரியமாகவும், மகிழ்வாகவும்தான் இருக்கிறது. அதற்காக எம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டுமா?

12வயதில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த எங்கள் குழந்தைகள் அந்தந்த நாட்டு மொழிகளுடன் எந்தளவு தூரம் போராடியிருப்பார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு புலம்பெயர்ந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஓரளவேனும் அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க்... போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பெற்றோருக்கு அந்நாட்டு மொழியில் இருந்து ஒரு சொல்லுக் கூடத் தெரியாமலே இருந்தது. வீட்டில் அவர்கள் தனித்தமிழே கதைத்தார்கள். அவர்கள் குழந்தைகள் எல்லோருமே வெளியில் அந்நாட்டு மொழியைப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்தில் மிகவும் கஸ்டப்பட்டார்கள். பேசுவது மட்டுமல்ல மொழியையும் படித்து அதனூடு கல்வியையும் கற்க வேண்டிய ஒரு கடினமான சூழல் அவர்களுக்கு இருந்தது.

ஆனாலும் சாதித்தார்கள். வீட்டில் தனித்தமிழ். மிஞ்சினால் ஆங்கிலக் கலப்புடனான சில சொற்கள். வெளியில் டொச், டெனிஸ், இத்தாலி, பிரெஞ்... இந்த நிலையிலும் அந்தந்த நாட்டுப் பிள்ளைகளை விட நல்ல மார்க்குகள் அந்தந்த நாட்டு மொழிகளுக்கே எங்கள் பிள்ளைகள் பெற்று இன்று நல்ல பதவிகளில் கூட இருக்கிறார்கள். அனேகமான புலம்பெயர்ந்த தமிழ்பிள்ளைகள் எல்லோருமே பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள். இதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதின் பின் புலம்பெயர்ந்த எங்கள் பிள்ளைகளால் நாம் வாழும் நாட்டின் மொழியை மிகச்சரளமாகப் பேசமுடியும், கூடவே ஆங்கிலமும் நன்கு தெரியும். அதை விட இன்னும் ஏதாவது ஒரு மொழி - உதாரணமாக ஜேர்மனியில் வாழ்பவருக்கு பிரெஞ் அல்லது ஸ்பானிஷ் தெரியும். இவ்வளவோடு தமிழைச் சரளமாகப் பேசவும் தெரியும்.

அதே நேரம் இங்கு மிகக்குழந்தைகளாக வந்த பிள்ளைகளுக்கோ அன்றி இங்கு பிறந்ந பிள்ளைகளுக்கோ வேறு பிரச்சனைகள் உள்ளன. வீட்டில் தமிழ். வெளியில் அந்த நாட்டுமொழி. அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்றில்லை. எப்படித்தான் வீட்டில் தமிழ் கதைத்தாலும் வெளியில் முழுக்க முழுக்க வேற்றுமொழி. கல்வி வேற்றுமொழியில்.

தமிழா அந்நாட்டு மொழியா சிறந்தது என்பதில் அவர்களுக்குத் தடுமாற்றம். அவர்கள் தமது நண்பர்களுடன் தமிழில் பேசமுடியாது. அவர்களது உச்சரிப்பில் தமிழ் கலந்திருந்தால் பாடசாலையில் அவர்களுக்குச் சில பின்னடைவுகள் வரும். நாள் முழுக்க அந்நாட்டு மொழியுடன் ஊடாடி விட்டு வீட்டுக்கு வந்ததும் தமிழுக்கு அவர்கள் மாறுகிறார்கள். சில பிள்ளைகளால் அது முடிவதில்லை. எப்படித்தான் தமிழ் முக்கியம் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தாலும் அந்நாட்டு மொழி அக்குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானதாக இருக்கிறது. அவர்கள் கதைக்க, விளையாட, படிக்க, வேலை செய்ய.. என்று, அம்மொழி இல்லாமல் அவர்களுக்கு அவர்களது எதிர்காலம் இல்லை.

ஆனால் அவர்களும் அந்த ஜேர்மனியப் பெண் சொல்வது போல தேவை வரும் போது கதைப்பார்கள். அவர்களுக்குத் தமிழே விளங்காது என்றில்லை. எங்காவது விதிவிலக்காக யாராவது இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்தத் தமிழரையுமே கேலி செய்ய வேண்டியதில்லை.

நான் எப்போதுமே எங்கள் பிள்ளைகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது பிள்ளைகள் தமிழையும் பேசிக்கொண்டு வேற்றுநாட்டு மொழியொன்றில் படித்து, நல்ல முறையில் சித்தியடைந்து, நல்ல நல்ல பதவிகளில் அந்நாட்டவகளையும் விட மேலானநிலைகளில் கூட இருக்கிறார்கள்.

அந்த ஜேர்மனியப் பெண்ணை நான் பாராட்டுகிறேன். எமது நாட்டு மொழியைப் பேசுகிறார் என்பதால் மகிழ்கிறேன். அதையும் விட எங்கள் பிள்ளைகளை நினைத்து மிகமிகப் பெருமைப் படுகிறேன்.

ஏன் நாங்களே எத்தனை வயதுகளின் பின் புலம் பெயர்ந்தோம். தமிழோடு அடி நுனி கூடத் தெரியாத ஒரு மொழியைப் பேசுகிறோம். எழுதுகிறோம். அந்நாட்டு மக்களோடு வாழ்கிறோம். யாருக்கும் பெருமைப் படத் தோன்றவில்லையா?

சந்திரவதனா
18.3.2014


White Lady Speaks Jaffna Tamil - யாழ்ப்பாணத் தமிழ் பேசு

Monday, March 17, 2014

அஞ்சல்தலைகளும் நானும்

நினைவுகளோடான பயணங்கள் தவிர்க்க முடியாதவை. நாம் விரும்பியோ விரும்பாமலோ அவை எம்மைத் துரத்திக் கொண்டும், பற்றிக் கொண்டும் எம்மோடு பயணித்துக் கொண்டே இருக்கின்றன. எந்தெந்த நேரத்தில் எவை எம்மைத் தொற்றிக் கொள்ளும் என்றோ அவை எப்படியெல்லாம் எம்மை ஆட்டிப்படைக்கும் என்றோ, அல்லது அடித்துப் போடுமென்றோ எமக்குத் தெரிவதில்லை. 
 
சிறுதுரும்பு போதும் ஏதோ ஒரு நினைவு எம்மை ஆட்கொள்ளவும், அது சங்கிலித் தொடராய் எம்மை எங்கெல்லாமோ அழைத்துச் செல்லவும்.

அஞ்சல்தலைகள், அவைகள் கூட என் வாழ்வில் மறக்கமுடியாமல் சிலரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எனது 12வது வயதில் நான் அஞ்சல்தலைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் அதுவே எனது தியானமாக இருந்தது என்று சொல்லுமளவுக்கு மிகவும் ஈடுபாட்டுடன் அச்சேகரிப்பில் நான் ஒன்றியிருந்தேன். 

ஆரம்பகாலத்தில் அஞ்சல் சேகரிப்புக்கான அல்பங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் அதாவது இற்றைக்கு 42வருடங்களின் முன்னர் 1972இல் அப்படியான அல்பங்கள் கடைகளில் இருந்தனவா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. எனது சேகரிப்புக்காக அம்மாவிடம் கேட்டு கறுப்புதாள்களிலாலான ஒரு கொப்பி(வரைதல்கொப்பி) வாங்கி அதிலேதான் எனது முத்திரைகளை ஒதியம்பிசின் போட்டு ஒட்டினேன். 

இலங்கை அஞ்சல்தலைகள் மிகவும் அழகானவை. கூடவே மாலைதீவு, நிப்பன்.. போன்ற இடங்களிலிருந்து வருகின்ற அஞ்சல்தலைகளும் மிகஅழகானவை. இந்த அஞ்சல்தலைகளுக்காகவே தபால்காரனின் மணிச்சத்தம் கேட்டதும் விரைந்து முன்கேற்றுக்கு ஓடுவேன். வரும் கடிதத்தில் ஒட்டப்பட்டிருக்கும் முத்திரையே குழந்தைத்தனம் இன்னும் ஒட்டியிருந்த எனது பால்யபருவத்து நினைவுகளில் முட்டியிருக்கும். ஆனால் எனது பால்யபருவம் மட்டுமே தெரிகின்ற பெரியோர்க்கு எனது ஓட்டம் அசாதாரணமானதாய்தான் தெரியும். அதனால் குதிக்காதே.. குமர்ப்பிள்ளை நீ.. என்று குறிப்பாக எனது பாட்டாவிடம்(அம்மாவின் தந்தை) அடிக்கடி பேச்சு வாங்கிக் கொள்வேன். 

இப்போதைய 10 - 12 வயதுப் பெண்பிள்ளைகளைப் பார்க்கும் போதெல்லாம், ஓடுவதற்கும், வாய் விட்டுச் சிரிப்பதற்குமே யோசிக்க வேண்டிய எனது அந்தவயதுப் பருவம் நினைவில் வராமல் போவதில்லை. நல்லவேளையாக எனது அம்மாவும், அப்பாவும் எனக்கு அவ்வளவான கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. ஆனாலும் சுற்றியிருந்த எல்லாப் பெரியவர்களுமே நெருப்பை மடியில் கட்டிக்கொண்டிருப்பவர்களைப் போல் என் அசைவுகள் ஒவ்வொன்றையும் அவதானித்துக் கொண்டேயிருந்தார்கள்.
 
பாட்டா எம்மில் மிகவும் அன்பானவர். அதனால் அவரது அன்பான கண்டிப்புகளை உதாசீனப்படுத்த என்னால் முடிவதில்லை. கலங்கி வழிகின்ற கண்ணீரோடு என் சின்னச்சின்னக் கனவுகளில் சிலதையும் தொலைத்து விட்டு அவர் விருப்பம் போலவே நடந்து கொள்வேன். அவர் முன்னிலையில் ஓடுவது, வாய்விட்டுச் சத்தமாகச் சிரிப்பது, துள்ளுவது.. போன்றவைகளைத் தவிர்த்துக் கொள்வேன்.

மாலையில் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தால் அம்மா தரும் ஆட்டுப்பால் தேநீரைக் குடித்து விட்டு, தம்பியையும் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பாட்டா வீட்டுக்குப் போய் விடுவது எனது வழக்கம். கூடவே அப்பா அனுப்பும் தினபதி, சிந்தாமணி.. போன்ற பத்திரிகைகளையும் எடுத்துக் கொண்டு போவேன். 

பாட்டாவும், பெத்தம்மாவும் எப்போதும் எனக்காக ஏதாவது வைத்திருப்பார்கள். அவர்கள் வீட்டு முன்றலில் உயர்ந்து, நெடுத்து நின்றிருந்த ஒற்றைப்பனையின் சலசலப்போடு நுங்கோ, பூரானோ இல்லையென்றால் மள்ளாக்கொட்டை சுவீற்றோ ஏதோ ஒன்று எனக்காகக் காத்திருக்கும்.. பாட்டாவும் சரி, பெத்தம்மாவும் சரி இருவருமே மேனை, மேனை என்றுதான் அன்பாகக் கதைப்பார்கள். ஆனால் ஒழுக்கம் என்பது பாட்டாவுக்கு மிகவும் முக்கியம். அதனால் அவரது அன்போடு கண்டிப்பும் கண்டிப்பாகக் கலந்தே இருக்கும். 

அவர்களது வீட்டின் முன்விறாந்தையில் நான் தம்பியுடன் இருந்த பொழுதுகள் அவர்களுக்கும் இனிமையான பொழுதுகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். அப்பொழுதுகளில் பாட்டாவிடம் அன்புதான் மேலோங்கியிருக்கும். மிகவும் இதமாகக் கதைப்பார். அப்படியான ஒரு பொழுதில்தான் எனது முத்திரை சேகரிப்பு பற்றி அவரிடம் சொல்லி கோர்ட்டில் உறுதி எழுதும் பொழுதுகளில் முத்திரைகள் கிடைத்தால் எனக்குத் தரும்படி கேட்டேன். உடனேயே அவர் மலர்ந்த முகத்துடன் என்னைத் தனது அறைக்குள் அழைத்து, அவரது மேசை லாச்சிக்குள் இருந்து ஒரு கட்டுக்கடிதங்களை எடுத்துப் போட்டார். முழுவதும் ஜேர்மனியில் இருந்து வந்த கடிதங்கள். அவற்றைப் பொக்கிஷம் போலத்தான் வைத்திருந்தார் போல் ஞாபகம். அக்கடித உறைகள் ஒவ்வொன்றிலுமே ஒன்றோ, இரண்டோ ஜேர்மனிய முத்திரைகள் ஒட்டப்பட்டிருந்தன. எல்லா உறைகளையுமே எனக்குத் தந்து விட்டார்.

அப்போது எனது சிந்தனைகள் முத்திரைகளின் மேலேயே இருந்ததால், அக்கடிதங்கள் என்னவாக இருக்குமென நான் ஆராயவில்லை.  அந்த முத்திரைகளை ஆவியில் பிடித்தும், தண்ணீரில் போட்டும் உறையில் இருந்து கழற்றி எடுத்துக் காயவைத்து, புத்தகங்களுக்குள் வைத்து நேராக்கி எனது அல்பத்தில்(கொப்பியில்) ஒட்டினேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்த முத்திரைகளையெல்லாம் அக்கொப்பியில் இருந்து கவனமாகக் கழற்றி எடுத்து இப்போது சரியாக ஒரு அல்பத்தில் போட்டு வைத்திருக்கிறேன். 

அந்த அஞ்சல்தலைகள் வெறும் அஞ்சல்தலைகள் மட்டுமல்ல. எனது பாட்டாவையும், பாட்டா, பெத்தம்மாவுடனான அந்தச் சிறிய வீட்டின் ஞாபகங்களையும் அவர்களது அன்பையும் சுமந்து நிற்பவை.

சந்திரவதனா
17.3.2014

Wednesday, December 11, 2013

இன்றைய என் நினைவுகளில்...

அனேகமான பொழுதுகளில் காலையில் கண் விழிக்கும் போதே, அன்றைய நாளில் செய்ய வேண்டியவைகளின் பட்டியலும் நினைவுக்குள் வந்து விடும். அந்தப் பட்டியலின் நீள அகலங்களையும், கனத்தையும் பொறுத்தே இன்னும் சற்று அப்படியே படுத்திருக்கலாமா அல்லது எழுந்து விட வேண்டுமா என்று மூளை தீர்மானிக்கும். சில சமயங்களில் எந்த அவசரமும் இன்றி மனசு வலு றிலாக்சாக இருக்கும். திடீரென்றுதான் அன்று செய்ய வேண்டிய  ஏதாவது ஒரு முக்கிய வேலை நினைவில் வந்து அவசரப்படுத்தும்.

ஆனால் எந்த நிலையிலும், எந்த அவசரத்திலும் ஏதாவது ஒரு பாடலின் சில வரிகள் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்பாடலைக் கண்டிப்பாகக் கேட்டே ஆக வேண்டும் போல மனசு அந்தரிக்கும். அவ்வரிகள் பாடலின் தொடக்க வரிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. இடைவரிகளாகக் கூட இருக்கலாம்.

முன்னர் என்றால் அப்பாடல்களை எல்லாம் நம்மால் கேட்க முடிவதில்லை. வீட்டில் இருக்கும் ஒலி, ஒளி நாடாக்களில் அவை இருந்தால்தான் மனதின் அந்த அவா நிவர்த்தியாகும். இப்போது என்றால் அப்படியில்லை. நினைத்தவுடன் நினைத்ததைக் கேட்கலாம்.

அப்படி என் நினைவுகளில் வந்து அவ்வப்போது என்னை அருட்டும் வரிகளைக் கொண்ட 

பாடல்களில் ஒன்று 
எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா
தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா...




இன்னொன்று
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
...

 


இன்னுமொன்று
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்...




இப்படி எத்தனையோ பாடல்கள். ஏன் எதற்கு என்றே தெரியாமல் எனக்குள்ளே மாறி மாறி இசைத்துக் கொண்டே இருக்கின்றன.

நேற்றைய என் நினைவுகளில் வந்த பாடல் வரிகள்  
இதழோடு இதழ் சேரும் காரணமென்ன
அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன
சொல்லில் தோன்றுமோ மன்மதக் கலை அள்ளிப்பார்க்க வேண்டும்
உன் முல்லைப்பூவிதழ் மெல்ல என்னிடம் முத்தம் சிந்த வேண்டும்


 

இன்றைய என் நினைவுகளில்
அலையாய் மோதிக் கொண்டே இருக்கும் பாடல்
அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப்பழத்தைக் குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்


மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்


சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினைக் காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்...

 

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite