Monday, August 02, 2004

வலைவலம் - 2.8.2004


வாலிப வயதும் பாலியலும்


பிள்ளைகள் ரீன்ஏஜ்ஜைத் தொட்டு விட்டாலே போதும்.
பருவவயதுக்கேயுரிய தவறுகளிலிருந்து அவர்களை எப்படிக் காப்பற்றலாம் என்று பெற்றொர்களின் மனதில் தோன்றும் பெருங்கவலையில் - பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளை விதித்து சும்மா இருக்கும் பிள்ளைகளிடம் கூட
விசனத்தை ஏற்படுத்துமளவுக்கு நடந்து கொள்கிறார்கள்.

நான் இப்ப அவனை வெளியிலையே விடுறதில்லை. தெரியும்தானே... யேர்மன் பெடியள் எப்பிடியெண்டு. அதுகளோடை சேர்ந்து இவனும் சிகரெட் குடிக்கப் பழகினால் என்ன செய்யிறது.?"
12 வயது மகனை பாடசாலை தவிர வேறெங்கும் செல்ல அனுமதியாது.. விளையாடக் கூட விடாது தடுத்து வைத்திருக்கும் ஒரு தாய் இவர். இந்தக் கட்டுப்பாடு இந்த 12 வயதுப் பையனை எந்தளவுக்கு மனமுடைய வைத்து குரோதமான பிழைகளைச் செய்ய வைக்குமென அந்தப் பெண்ணுக்குப் புரிய வைக்க முடியவில்லை.

"எனக்குப் பாருங்கோ. இப்ப எல்லாம் காலைமை எழும்பினால் வீட்டிலை ஒரே சண்டைதான். இவன் என்னடா எண்டால் தலைக்கு Gel பூசுறான். ரவுசரை தொழதொழா எண்டு போடுறான். பார்க்கச் சகிக்கேல்லை. இந்த ரவுசராலேயே எனக்கும் அவனுக்கும் சதா சண்டை. தலையிடி தாங்க முடியேல்லை."
இது பாடசாலையில் மிகுந்த கெட்டிக்காரனாக இருக்கும் 20 வயது மகனின் தாயார். ஊரிலே தலைக்கு எண்ணெய் பூசித் தலையைப் படிய வைக்கவில்லையா?
பெல்பொட்டம் வந்த காலத்தில் எம்மவர்கள் எல்லாம் பெல்பொட்டம் போடவில்லையா.
அது போலத்தான் இதுவும் ஒரு ஸ்ரைல். இது விடயங்களில் அளவுக்கதிகமான கட்டுப்பாடு அவசியம் இல்லை என்பதை அவளுக்குப் புரிய வைப்பது கஸ்டமாகத்தான் இருக்கிறது.

இதே போலத்தான் பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள், கேள்விகள், விளக்கங்களிலும் அனேகமான பெற்றோர் புரிந்துணர்வின்றி பிள்ளைகளுடன் நடந்து கொள்கிறார்கள்.

எடுத்ததற்கெல்லாம் அடி.. பிடி.. என்று அதிகாரமாக நடந்து கொண்டால் பிள்ளைகள் மனதில் ஒரு வெறுப்புணர்வே தோன்றும். இதைப் பெற்றோர்கள் கருத்தில் கொண்டு பிள்ளைகளுடன் ஆற அமர இருந்து நட்போடு பேச வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளுக்கு பெற்றோரின் மேல் இது சம்பந்தமாகப் பேசுதற்குரிய நம்பிக்கை பிறக்கும்.

இது வியடமாக இர.அருள் குமரன் சொல்கிறார்
பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணுக்கு, அந்நிய ஆண் வழிமறித்து சாதாரணமாக பேசத்துவங்கினாலே அநியாயத்துக்கு நடுக்கம் வருகிறது, அவளின் பயம் அவனுக்கு ஊக்கம் தருகிறது. இயல்பாக பதிலளித்து சென்றால் அவனே அவளின் நண்பனாக மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதும், அவனுடைய நோக்கம் சரியானதல்ல என்றால் அவனிடமிருந்து எப்படி தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவளுக்கு தெரிவதில்லை
இர.அருள் குமரன் இது விடயமாக இன்னும் பலவற்றை வாலிப வயதும் பாலியலும் என்ற தலைப்பில் தனது பதிவில் விளக்கமாகவும் அழகாகவும் பதித்துள்ளார். பெற்றோர்கள் கண்டிப்பாக வாசித்துப் பயன் பெறுங்கள்.

Thursday, July 29, 2004

சினிமாப் பாடல்கள் - 12




தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

பாடியவர்கள் - இளையராஜா ஜானகி
இசை - இளையராஜா
படம் - அவதாரம்


கண் இல்லாமல் காதலே இல்லையென்பது இன்னும் பல பேரின் வாதமாயுள்ளது.
ஆனால் தினமும் கண்களால் எத்தனையோ பேரைக் காண்கிறோம். எத்தனையோ கண்களை நேருக்கு நேர் சந்திக்கிறோம். அத்தனை கண்களும் காதல் வயப் பட்டு விடுகின்றனவா? இல்லையே! காரணம் அங்கு மனங்கள் இணையவில்லை.

மனங்கள் இணையும் போதுதான் அங்கு நியமான காதல் மலர்கிறது. பார்த்த மாத்திரத்தில் சிலரின் அழகில் மயங்கிப் போவதுண்டுதான். ஆனால் அது வெறும் அழகின் கவர்ச்சி. பழகும் போது மனம் இணையவில்லையானால் அந்த அழகின் கவர்ச்சி மெதுமெதுவாகக் குறைந்து விடும்.

அத்தோடு கண்களின் கலப்பில் மட்டுந்தான் காதல் மலரும் என்றால் இந்த உலகில் அழகில்லாத எவருமே காதலைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.
சேர்ந்து பழகும் போது மனங்களின் சங்கமிப்பில் அழகில்லாதவர்கள் கூட அழகாகத்தான் தெரிவார்கள். எல்லாமே மனங்களில்தான் தங்கியிருக்கிறது.

அதைத்தான் இப்பாடலும் சொல்கிறது.

இப்பாடல் இடம் பெற்ற அவதாரம் படத்தை நினைத்தாலே ரேவதியினதும் நாசரினதும் அருமையான நடிப்புத்தான் நினைவில் வருகிறது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் மிக நல்ல திரைப்படங்களில் இவ் அவதாரம் படமும் ஒன்றாக உள்ளது.

இதில் கண்பார்வையற்ற ரேவதிக்கும், நாசருக்கும் இடையில் ஒருவர் மீதொருவர் காதல் வருகிறது. இந்தக் காதல் கூட மனங்களின் இணைவில்தான் வருகிறது.

ரேவதிக்கு வெளியுலகம் எப்படியிருக்கும், வர்ணங்கள் எப்படியிருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம். எல்லாம் மனம்தான். மனங்களின் எண்ணம்தான் வண்ணம் என்பதை நாசர் பாடலினாலேயே சொல்லி, ரேவதியை ஆறுதல் படுத்துவது அருமையாக உள்ளது.

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா


உண்மையிலேயே எப்படித்தான் வண்ணம் வண்ணமாக எங்கள் முன் எல்லாம் கொட்டிக் கிடந்தாலும், எமது மனதுக்குள் சந்தோசம் இல்லையென்றால், எந்த வண்ணமும் எங்களை அவ்வளவாகக் கவராது. அதே நேரம் எமது மனது சுத்தமாய், சந்தோசமாய் இருக்கும் போது எல்லாமே அழகாய் வண்ணம் வண்ணமாய்த் தெரியும்.

தென்றல் வந்து தீண்டுவதைக் கண்களால் பார்க்க முடியாது. திங்களின் குளிர்ச்சியையும் கூடப் பார்க்க முடியாது. இவைகளை உணரத்தான் முடியும்.
உணர்தலின் போது மனசுக்குள் தோன்றும் உவகைக்கு இணையாக உலகில் வேறெந்த சந்தோசங்களும் இருக்க முடியாது. எங்கள் எண்ணங்கள்தான், எங்கள் மனசின் பார்வையில் தோன்றுபவைதான் நியமான சந்தோசங்கள். அந்த சந்தோசங்களின் வர்ணங்களை தீட்ட முடியாது.

அதைக் கவிஞர் அழகாகச் சொல்லியுள்ளார். இளையராஜாவினதும், ஜானகியினதும் குரல்கள் பொருத்தமாக இணைய, ரேவதியும் நாசரும் காட்சியுடன் கலந்து நடிக்க, இசையுடன் இணைந்து இனிமையாகிவிட்ட அருமையான பாடல்.

பாடலைக் கேட்கும் போதும், வர்ணம் வர்ணமாய் ஊற்றிய படியுள்ள அந்தப் பாடல் காட்சியில் ரேவதியையும் நாசரையும் பார்க்கும் போதும் மனதுக்குள் ஏற்படும் அந்த சிலிர்ப்பான உணர்வை வார்த்தையில் வடிக்க முடியவில்லை.
வார்த்தையில் வடிக்க முடியாத ஏதோ ஒன்று மனசுக்குள் ஒரு நியத்தை உணர்த்துவதை மட்டும் நன்கு உணர முடிகிறது.

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை


3.9.1999

Wednesday, July 21, 2004

எங்கள் வீட்டில் ஒரு புதிய பூ பூத்திருக்கிறது.




நானும் எனது கணவரும் எமது பேரக்குழந்தை நதியுடன்.
Nathi born on 20.07.2004 at 12.30AM in Schwaebisch Hall, Germany

அவர்கள் எப்போதும் குழந்தைகள்தான்.

செல்வராஜின் பதிவை வாசித்த போது கண்கள் கலங்கி விட்டன.

எனது பிள்ளைகள் அவர்களே பெற்றோராகுமளவுக்கு வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். ஆனாலும் பல சமயங்களில் என் சிந்தனை ஓட்டத்தில்
- அவர்கள் சிறியவர்களாக இருக்கும் போது
நான் அந்த விடயத்தில் பிழை விட்டு விட்டேன்.
அந்த சந்தர்ப்பத்தில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. –
போன்றதான குற்ற உணர்வுகள் தோன்றும்.

ஆனால் என் மகள் கர்ப்பமாக இருந்த போது
"அம்மா நான் உங்களைப் போல ஒரு நல்ல அம்மாவாக என் குழந்தைக்கு இருப்பேனோ என்று சந்தேகமாக இருக்கிறது." - என்று அடிக்கடி சொல்லுவாள்.

நேற்று என் மகனுக்குக் குழந்தை பிறந்து விட்டது.
அவன் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது நியூ படத்துக்காக உன்னி கிருஸ்ணன் பாடிய அம்மா சம்பந்தமான ஒரு பாடலைப் போட்டுக் கொண்டு வந்தான்.
இப்படியான சமயங்களில் குற்ற உணர்வுகள் பறந்து மனசு இலேசாகி விடுகிறது.

ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால்..
குழந்தைகளும் வளர்ந்த பின் பெற்றோர்களது சின்னச் சின்னத் தவறுகளைப் பெரிதாக நினைத்துக் கொண்டிராமல் பசிக்குதுப்பா என்ற போது பால் வார்த்துக் கொடுத்த அப்பாவின் அன்பு போன்ற, அம்மா அப்பாவின் அன்பு தோய்ந்த சின்னச் சின்ன விடயங்களையெல்லாம் நினைத்து நினைத்துத்தான் நெக்குருகுவார்கள்.

சிந்து


Tuesday, July 20, 2004

எவ்வளவு பணம் கொடுக்கிறாய்?


முன்னர் தாயகத்தில் இருந்த காலத்தில் எனது பெயர் ஏதாவது சில ஆக்கங்களின் மூலம் தினமும் குறைந்தது மூன்று நான்கு தடவைகளாவது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிக்கும்.

இதை வைத்து எனக்கு வரும் கடிதங்கள் ஏராளம். இவைகளில் பாராட்டுக்கள் ஒரு புறம் இருக்க, மிகவும் அநாகரீகமாகத் திட்டித் தீர்ப்பவையும் இருக்கும்.

அனேகமானோர் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு
இலங்கை ஒவிபரப்புக் கூட்டுத்தான அறிவிப்பாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்து உங்கள் பெயரை வானொலிலியில் வர வைக்கிறீர்கள் என்பதாகவே இருக்கும்.

அவர்கள்தான் முகம் தெரியாதவர்கள். பரவாயில்லை என்று விட்டு விட்டேன். ஒரு தரம் என்னோடு க.பொ.த உயர்தரம் வரை படித்த ஒரு நண்பியிடம் இருந்து வந்தது. அவள் அப்போது கொழும்பில் கடமையில் இருந்தாள். எத்தனையோ ஆக்கங்களை எழுதிப் போட்டாளாம். ஒன்றுமே ஒலிபரப்பாகவில்லையாம். அவளும் இப்படியான சில
எவ்வளவு பணம் கொடுக்கிறாய்?
எந்த அறிவிப்பாளர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாய்?

போன்ற கேள்விகளுடன் கடிதமெழுதினாள்.
நான் இன்றுவரை அவளுக்குப் பதில் எழுதவே இல்லை.
ஆனாலும் அடிக்கடி இந்தக் கேள்விகள் என் நினைவுகளில் வந்து போகும்.

இன்று சத்யராஜ்குமார் வலைப்பூக்களில்,...
எழுத்துலகத்துடனான இப்படியான மூட நம்பிக்கைகளைத் தொட்டிருக்கிறார்.
எனக்குத் திருப்தியாக இருக்கிறது.

Monday, July 19, 2004

வலைவலம் 19.7.2004


Description ஐ எப்படி எழுதுவது என்று யோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம். பேசாமல் இந்தப் பக்கத்துக்குப் போங்கள். குசும்புவதற்கென்றே இருக்கிறாரே ஒருவர். அவர் இலவசமாக உங்களுக்கு எழுதித் தருவார். நல்ல Description எழுதித் தந்து விட்டார் என்ற சந்தோசத்தில் இந்த தினத்துக்கு அவருக்கு வாழ்த்து அனுப்பி விடாதீர்கள். தனக்கு வேண்டாமென அவர் ஏற்கெனவே அறிவித்து விட்டார்.

அத்தோடு தேடியில் தேடும் போது உங்கள் பெயருக்கான சுட்டிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்ற சின்னச்சின்ன ஆசையேதாவது உங்களுக்கு இருக்கிறதா? அதற்கும் இணைய குசும்பன் தருகிறார் ஐடியா. இதைச்சுட்டிப் பயன் பெறுங்கள்.

துகள்கள் சத்யராஜ்குமாரின் என்னை எழுதியவர்கள் எட்டாவது அங்கமும் தமிழ்ஓவியத்தில் வந்து விட்டது.
நாவலை நான் அனுப்பி வைக்க - நாலைந்து வாரங்கள் கழித்து கோயமுத்தூர் பூராவும் என்னுடைய பெயரைத் தாங்கி போஸ்டர்கள். பெட்டிக் கடைகளில் பெயர் தொங்குகிறது. கூடப் படிக்கும் நண்பர்கள், " என்னங்க நீங்க கதை எழுதுவிங்களா? சொல்லவே இல்லை? பெரிய ஆளா நீங்க? " என்று சூழ்ந்து கொண்டார்கள். உடன் படிப்பவர்களும், ப்ரொ·பஸர்களும் எனக்குப் பாராட்டு விழா நடத்தியே தீருவது என்று முடிவெடுத்தார்கள். குன்னூருக்கு அப்புறம் மாலை போட்டு மறுபடி ஒரு பாராட்டு விழா.
வாசிக்கும் போது எனக்கே தலைக்குள் ஒரு சந்தோசக் கிறுகிறுப்பு. சத்யராஜ்குமாருக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்?

இம் முறை இவரது சிறுகதை ஒன்றும் தமிழ்ஓவியத்தை அலங்கரித்துள்ளது. இன்னும் வாசிக்கவில்லை. கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

கும்பகோணம் விபத்தை இங்கிருந்தே தொலைக்காட்சியில் பார்த்து வெந்தோம். இதையிட்டு மனம் புழுங்கியவர்களில் மாயவரத்தானும் ஒருவர்.
குழந்தைகள் பாடசாலைகள் என்னும் போது அவை எந்தளவுக்குப் பாதுகாப்புடன் அமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு இத்தனை அசிரத்தையாக இருந்திருக்கிறதே! இங்கு யேர்மனியில் இப்படியான விடயங்களில் மிகுந்த அக்கறை செலுத்தி, மிகுந்த பாதுகாப்புகளுடனேயே ஒவ்வொரு பொதுக் கட்டிடங்களையும் கட்டுவார்கள். கட்டுவதோடு விட்டு விடாமல் அடிக்கடி அதன் பாதுகாப்புத்தன்மையைப் பரிசோதித்துக் கொள்வார்கள். இந்த விதமான தன்மை, இந்தியா போன்ற நாடுகளிலும் வரவேண்டும். பணமில்லையென்ற சாட்டுக்கள் தவிர்க்கப் படவேண்டும். மக்களில்.. நாட்டின் நலனில்.. நாட்டின் முன்னேற்றத்தில்... என்று ஒவ்வொரு விடயத்திலும் அக்கறை கொள்ளும் படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட வேண்டும். இப்படியான இடங்களில் வேலைக்கமர்த்தப் படுபவர்கள் சமூகப்பிரக்ஞை உள்ளவர்களாக, இருக்க வேண்டும்.

Friday, July 16, 2004

மூக்குத்தி


நிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை. ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன்.

உண்மையில் என்ன?
ஆதிகாலத்தில் இவையெல்லாம் காரணத்தோடுதான் செய்யப் பட்டன. இடையிலே எப்படியோ அடிமைச் சின்னங்களாகி விட்டன.

உதாரணமாக,
 பூக்களுக்கு பஞ்சினைப் போல ஈரத்தை உறிஞ்சும் இயற்கையான தன்மை உண்டு. அதனால் Hair drier இல்லாத அந்தக் காலத்தில் கூந்தலில் நிறையப் பூக்களைச் சூடி தலையைக் காய வைத்தனர். ஆனால் கணவனை இழந்த பின் தலை ஈரத்தோடே இருக்கலாம் என்பது போல, கணவனை இழந்த பெண்கள் பூச்சூட மறுக்கப் பட்டது எப்போது வந்தது? ஏன் வந்தது என்பது கேள்விக்குறியே.  
 
மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.   
 உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.  மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். 
 
மூக்குக் குத்துவற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. மூக்குத்தி அணிவதால் பல நன்மைகள் உண்டு. ஆனால் கணவனை இழந்ததும் பெண் மூக்குத்தியைக் கழற்ற வேண்டுமென்பது  எப்படி வந்தது என்பது  தெரியவில்லை. அப்படிக் கழற்றும்  போதுதான் மூக்குத்தி அடிமைச்சின்னமாக மாறுகிறது. 
 
இத்தனை நன்மைகள் இருந்தும் நான் மூக்குக் குத்தவில்லை.
மூக்கைக் குத்தும் போது வலிக்கும் அல்லவா! 

Thursday, July 15, 2004

வலைவலம் - 15.7.2004


A 5-year-old boy cries as his father is pulled from Leonard Pond yesterday afternoon. Framingham Police Officer Mike Degnan, right, and the boy's grandfather try to console him. (Staff photo by Bill Thompson)
மரணத்தை வென்ற துயரத்தை
இந்த மானுடர் சந்தித்திருப்பாரோ...?
வாழ்வை முடித்து விட்ட ஒரு இனியவனின் கதை
இவன் குடும்பத்தில் துயரம் இனி ஒரு தொடர்கதை

பூவினால் பூத்தது. நாங்கள் புலத்தில் தமிழர்கள் ஏன் தமிழர்கள் இல்லாத இடம் தேடி ஓடுகிறார்கள் என்று ஆராயும் போது, பொறாமைப் பட வைக்கிற மாதிரி வலைப்பூ நண்பர்கள் புது அப்பா மெய்யப்பன், கீழக்கரைக்குப் புதுசா வந்த இரமணீதரன், பதிவுப் புயல் (காசா பணமா ஒரு பட்டத்தை நீங்களும் வச்சுக்கங்க பாலா) பாஸ்டன் பாலாஜி, வம்புணி சித்தர் கார்த்திக்ராமாஸ், அப்புறம் அமைதியான சுந்தரவடிவேல் எல்லாரும் சந்தித்திருக்கிறார்கள்.
கூடித்தான் வாழ வேண்டும் என்று சொல்லி கிட்டக் கிட்ட இருந்து கிண்டுப் படுவதை விட, கிட்ட இருந்தால் முட்டப் பகை என்பதற்கமைய தள்ளித் தள்ளி இருந்து கொண்டு, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எங்கோ ஒரு இடத்தில் இப்படிக் கூடிச் சந்தித்துக் கொள்வது உண்மையிலேயே இன்பமான பொழுது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite