கற்பகதரு பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
அப்படித்தான் இப்போ ஒரு பேப்பரும். அது தன் உச்சப் பயன்பாடு வரை சென்றிருக்கிறது. பொரித்த மீனை வைக்கவும், மாவரிக்கவும் கூட அது உதவுகிறது. நீங்களும் தாராளமாகப் பயன் படுத்தலாம். அச்சடிக்கப் பட்ட மை பொரித்த மீனிலோ மாவிலோ ஒட்டிக் கொண்டு உங்களுக்குத் தெரியாமலே உங்கள் உடலுக்குள் நச்சுத் தன்மை காவப் பட்டால்.. அதற்கு நான் பொறுப்பல்ல.
சரி இனி விடயத்துக்குள் வருகிறேன்.
வழமையான விடயங்கள்தான். அவற்றுள் சிலவற்றைத் தொட்டுள்ளேன்.
மெல்லத் தமிழ் இனிச் சாகும்.எல்லாளன் சபித்திருக்கிறாரா..! அல்லது சாபமிட்டிருக்கிறாரா...! புரியவில்லை.
நான் ஜேர்மனியில் ஒரு ரெனிஸ் ஆட்டத்தைப் பார்க்கிறேன் என்று வைப்போம். அங்கு ஒரு அமெரிக்கரும் ஒரு ஜேர்மனியரும் போட்டியிடுகிறார்கள் என்றால் நான் ஜேர்மனியர் வெல்ல வேண்டுமென்றுதான் நினைப்பேன். ஏனெனில் நான் ஜேர்மனியில் வாழ்கிறேன். அது எனக்குத் தஞ்சம் தந்த நாடு. என்னவானாலும் ஜேர்மனிக்கு அடுத்தபடிதான் அமெரிக்கா. அதனால் ஜேர்மனியர்தான் வெல்ல வேண்டும். மனசு ஜேர்மனியரையே சப்போர்ட் பண்ணிக் கொண்டு இருக்கும்.
இதே ஜேர்மனியருடன் ஒரு இந்தியர் விளையாடுகிறார் என்று வைப்போம். என்ன இருந்தாலும் இந்தியர் ஒரு ஆசியன் அல்லவா. நானும் ஆசியன்தானே. இத்தனை வசதி படைத்த ஜேர்மனிக்கு வந்து எனது ஆசிய இனத்தைச் சேர்ந்த ஒரு இந்தியர் தோற்பதா? ம்கும்.. ஒரு நாளும் கூடாது. இப்போ எனது மனம் முற்று முழுதாகச் சப்போர்ட் பண்ணுவது அந்த இந்தியருக்குத்தான்.
இதே இந்தியரும் ஒரு இலங்கையரும் விளையாடுகிறார்கள் என வைப்போம். இப்போ எனது மனம் கண்டிப்பாக இலங்கையருக்குத்தான். எனது நாட்டவரல்லவா...! சும்மா இருக்குமா மனம். அவர் வெல்ல வேண்டும் என்பதற்காக தன்னையறியாமலே பிரார்த்தனை கூடச் செய்யும்.
இதே இலங்கையர் கொழும்பைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு யாழ்ப்பாணத்தவரோடு விளையாடினால் எனது மனம் யாருக்கு என்பதை நான் சொல்லத் தேவையில்லை. கண்டிப்பாக யாழ்ப்பாணத்தவருக்குத்தான்.
அதே யாழ்ப்பாணத்தவர் எனது ஊரான பருத்தித்துறையோடு விளையாடினால்... அப்போது சிறிதேனும் சந்தேகமின்றி என் மனம் பருத்தித்துறையோடுதான்.
இதே பருத்தித்துறை ஆள் எனது வீட்டுக்குள் உள்ள எனது உறவு ஒன்றோடு விளையாடினால்... சொல்ல வேண்டுமா என் மனம் பற்றி.
இப்போது இதையேன் சொன்னேன் என்றால்...
இந்த மனம் இருக்கிறதே அதைப் போலச் சுதந்திரவாதி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அதே அளவுக்கு சுயநலவாதியும் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அது அப்படித்தான் நினைக்கும். தன் சார்ந்துதான் எதையும் சிந்திக்கும்.
அப்படியிருக்க
கொஞ்சம் யோசியுங்க.. என்று சொல்லி எல்லாளன் எழுதியிருக்கும் "எமது பூநகரி மொட்டைக் கருப்பன் அரிசிக்கு ஒரு இந்திய நடிகையை வைத்துத்தான் விளம்பரம் செய்ய வேண்டுமா..?" என்ற கேள்வி சரிதான். அவரது அந்தக் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். அந்த விளம்பரத்தை பூநகரிப் பெண்ணையே வைத்தோ, அல்லது புலம் பெயர்ந்த இலங்கைப் பெண்ணையே வைத்தோ செய்திருக்கலாம்.
அதுக்காக "அமெரிக்க நடிகர் Tom Cruise ஐ அமெரிக்கர் என்பதால் தள்ளி வைத்து, சாருகான் இந்திய நடிகர் என்பதால் தலையில் தூக்கி வைப்பது ஏன்...?" என்று கேட்கிறார். இதில் எந்த சூட்சுமமும் இல்லை. மேலே குறிப்பிட்ட ரெனிஸ் தத்துவம்தான் இதற்கும் பதிலாய் அமையும்.
ஊடகங்கள் இந்தியப் படைப்புக்களுக்கும், இந்திய நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் திறமைகள் காட்டில் எறித்த நிலவாய் வீணாகிப் போவதை மறுப்பதற்கில்லை. TTNஇல் போகும்
படலைக்குப் படலை போன்ற யதார்த்தமான நிகழ்ச்சிகளை எம்மவர்களால் தர முடியும். இருந்தும் ஊடகங்கள் பெண்களை அடிமைப் படுத்தும் விதமாகவும், பெண்களை கேவலப் படுத்தும் விதமாகவும் தயாரிக்கப் படும் இந்தியத் தொடர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவைகள் எம்மவருக்கான வாய்ப்புக்களை எந்தளவுக்குப் பின்னுக்குத் தள்ளுகின்றன என்பதையும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்.
அதற்காக எல்லாளன் கொடுத்த உதாரணங்களும் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற வாய்ப்பாடும் ஏற்புடையதாய் இல்லை.
இங்கு ஊடகங்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. எங்கள் புலம் பெயர்ந்த பெண்களும் இவைகளை விழுந்து விழுந்து பார்க்கிறார்களே... அவர்களை என்ன சொல்ல...!
ஆன்மீகம்செல்வநாயகியின் எது ஆன்மீகம் என்றொரு கட்டுரை தொடராக வருகிறது. ஆன்மீகம் என்றால் மற்றப் பக்கமாய் ஓடுபவர்களை இழுத்து நிறுத்தி, இதுதான் ஆன்மீகம் என்று சொல்லும் விதம் அருமை. கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுபவன்தான் ஆன்மீகவாதி என்றில்லை... அன்பால்... என்ற கருத்துப் பட எழுதப் படும் அக்கட்டுரை உண்மையிலேயே என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
ஒளியின் பதிவுகள் பற்றிய
கமரா பயனுள்ள கட்டுரையாகத் தொடரும் என்றே நம்புகிறேன்.
பெற்ற(து) சுமை.நல்லதொரு கதை. கனடாவிலிருந்து தம்பிதாசன் எழுதியிருக்கிறார்.
புலம்பெயர்ந்த நாமல்ல. எம்மைப் பெற்று வளர்த்து, தாலாட்டிச் சீராட்டித் தலைநிமிர வைத்தவர்கள். அவர்கள் புலம்பெயர்ந்த மண்ணில் படும் அவலங்கள். எவனோ ஒருவனின் துப்பாக்கிக்கு இரையாகியிருந்தால் கூட அவர்களின் மனங்கள் இத்தனை துயரைச் சுமந்திருக்க மாட்டா. பெற்றவர்களிடமே சுமை போலான நிலையில்.. நல்ல கருவொன்றைக் கதையாக்கியிருக்கிறார் தம்பிதாசன்.
அறுவைப்பக்கத்தில்யாருக்காவது தலையில் குட்டு வேண்ட ஆசையென்றால் தலையைச்சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாக
அல்வாசிட்டி விஜய் இடம் போங்கள்.
கொதிகிழப்பல்இலங்கை வானொலியின் பாரபட்சமனா தன்மையில் வன்னியன் கொதிப்படைந்திருக்கிறார்.
இன்னும் பல......