Sunday, October 08, 2006
ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்.
இசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடியது. காற்றில் அதிர்வுகளை உண்டாக்கி, அதனூடு செவிப்பறைகளைத் தாக்கி, கொஹ்லியா (cochlea) குழியிலுள்ள செல்களில் மின்னழுத்த வேறுபாடுகளை உண்டாக்கி தண்டுவடம் மூலம் மூளையின் தலாமஸ் பகுதிக்கு விரைந்து, அங்கு வரும் உணர்வு அலைகளுக்கு ஏற்ப கட்டளை மின்னலைகளை உருவாக்கி, உடலின் வலிகளையும், நோய்களையும் நீக்க வல்லது.
என்னை ஒரு சிலர் கேட்பார்கள் "எத்தனையோ பிரச்சனைகள் நாட்டில், உலகில் என்று இருக்கின்றன. நீயென்ன சும்மா உந்தச் சினிமாப் பாடல்களை ரசிக்கிறாய்" என்று. அவர்களுக்கு நான் சொல்லும் பதில்கள் அவர்களைத் திருப்திப் படுத்துகின்றனவோ, இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இசை என்பது எனது உயிரை அசைக்கிறது என்பது உண்மை. எனது உணர்வுகளைத் தாலாட்டுகிறது என்பது உண்மை. எனது ஞாபகங்களை மென்மையாகவும், தன்மையாகவும் மீட்டுகின்றது என்பது உண்மை.
எந்த இசையையும் நான் ரசிப்பேன். அது சினிமாப் பாடல்தான் என்று முத்திரை குத்தி வைக்க வேண்டியதில்லை. எனது ஈழத்தின் மெல்லிசைப் பாடல்கள், பொப்பிசைப் பாடல்களில் தொடங்கி மேற்கத்திய இசை வரை நான் ரசிக்கிறேன். இந்த இசைகள் என் உயிரைச் சீண்டுகின்றன. எந்த ஒரு சோர்ந்த பொழுதிலும் எங்கோ ஒலிக்கும் ஒரு இசையில் நான் மெய் சிலிர்க்கிறேன்.
காதலின் இனிமையை, அன்பின் தழுவலை, சோகத்தின் போதான ஆதரவான அணைப்பை, குலுங்கி அழ வேண்டும் போன்ற உணர்வைத் தோற்றுவிக்கக் கூடிய இழப்பின் போதான வலிக்கான ஒத்தடத்தை... என்று ஒவ்வொரு உணர்வின் போதும் இந்த இசை என்னை அணைக்கிறது. தழுவுகிறது. தாலாட்டுகிறது. என் மனதை நீவி விடுகிறது.
இசைகளில், பாடல்களில் மயங்காதார் உண்டோ? பாம்புகள் கூட இசையில் மயங்குகின்றன. புன்னாகவராளி இராகம் இசைக்கும் போது அவை காற்றில் ஏற்படுத்தும் அதிர்வில் பாம்புகள் மயங்குகின்றன. இந்த இராகத்துக்கு கொடூர எண்ணம் உள்ளவர்களையும், கொலைவெறி கொண்டவர்களையும் அமைதிப் படுத்தும் சக்தி இருக்கிறதாம். இப்படி ஒவ்வொரு இராகத்துக்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கிறது.
பாட்டுக்கு பாலைவனப் பூக் கூடப் பூப் பூக்குமாம். மெட்டுக்கு வெண்ணிலவு கூடத் தலையசைக்குமாம். இது ஒரு கவிஞரின் அதீத கற்பனை கலந்த வரிகளாயினும் பாடல்களுக்கும் இசைக்கும் எம்மை அசைக்கும் சக்தி இருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களாலும் மருத்துவர்களாலும் உண்மை என நிரூபிக்கப் பட்ட கருத்து.
இன்பம், துன்பம், கோபம், அமைதி... என்று மனம் துள்ளுகின்ற அல்லது துவள்கின்ற எந்த விதமான நேரத்திலும், மகிழ்கின்ற எமது மனதுக்கு மகிழ்வு சேர்க்கவோ, அல்லது துவள்கின்ற எமது மனதுக்கு ஆறுதல் கூறவோ இந்தப் பாடல்களால் முடியும்.
நாம் நாளாந்தம் செய்யும் ஒவ்வொரு வேலையுடனும், செயற்பாட்டுடனும் பாடல்களும் இணைந்து நிற்கின்றன. கருவறையில் இருந்து வெளிவந்த, உலகத்தைத் தெரியாத அந்தப் பச்சைக் குழந்தைப் பருவத்தில் கூட நாம் அம்மாவின் தாலட்டுப் பாடலில் மயங்கி அழுவதை மறந்து, அமைதியாக உறங்கி விடுகிறோம். தொடரும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையான பாடல்களில் நாம் மயங்கி, மகிழ்ந்து, அமைதியாகிப் போகிறோம். அல்லது துள்ளிக் குதிக்கிறோம். அல்லது ஆறாத சோகத்தையும் அழுகையாக வடிக்கிறோம். இன்னும் எத்தனையோ வகையான உணர்வுகளை அனுபவிக்கிறோம்.
வேலைகள் என்று பார்க்கும் போது, நாற்று நடுபவருக்கு ஒரு பாட்டு, மீன் பிடிப்பவருக்கு ஒரு பாட்டு... என்று ஒவ்வொரு வேலைக்கும் அதனோடு இசையக் கூடிய, இசையுடன் கூடிய பாட்டு இருக்கும். போராட்டம் என்று பார்க்கும் போது அதற்கும் ஒரு பாட்டு(பரணி) இருக்கிறது. அந்தப் பாடல்களுக்கு துணிவையும், வீரத்தையும் மட்டுமல்லாமல் விடுதலை உணர்வையும் உற்சாகத்தையும் சேர்த்துத் தரக்கூடிய சக்கி இருக்கிறது. இதே போல ஒப்பாரிப் பாடல்களுக்கு மனதில் இருக்கும் சோகத்தை வடித்துக் கொட்ட ஏதுவான சக்தி இருக்கிறது. இவைகளில் இருந்தே இசையும் பாடல்களும் எம் வாழ்வோடு எந்தளவுக்கு ஒன்றியிருக்கின்றன என்பதையும் அவை எத்தகைய அவசியமானவை என்பதையும் எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
எனக்கு அனேகமான பாடல்களைக் கேட்கும் போது, எனது சின்ன வயதுடன் கூடிய, அப்பாவுடனான, அம்மாவுடனான, அண்ணாவுடனான, சொந்தங்களுடனான, நண்பர்களுடனான... என்று பல ஞாபகங்கள் அந்தந்தப் பாட்டுக்கு ஏற்ப வந்து போகின்றன. அந்த ஞாபகங்கள் சந்தோசமாய், சந்தோசம் கலந்த துன்பமாய், ஏக்கமாய், ஏக்கம் கலந்த இனிமையாய்... பல்வேறு வடிவங்களில் என் மனசை வருடுகின்றன. இந்த வருடலுடன் எனக்குப் பிடித்தமான ஒருவரையோ, இருவரையோ, பலரையோ அல்லது ஒரு சம்பவத்தையோ என் முன் கொண்டு வந்து நிறுத்தி என் கண்களைப் பனிக்க வைக்கின்றன.
உதாரணமாக, 70களில் நாம் பாடசாலைக்கு அவசரமாக வெளிக்கிடும் காலைப் பொழுதுகளில் துலாவைப் பதித்து கிணற்றில் நீர் மொண்டு குளிக்கும் போது, இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் ஒலித்த எமது மெல்லிசைப் பாடல்களில் குறிப்பாக கே.எஸ்.பாலச்சந்திரனின் பெற்ற மனம் பித்து என்பார்... என்ற பாடலை இப்போது கேட்டாலும், துலாவும் என் வீட்டுக் கிணறும், மெல்லிய இதமான சூடும், குளிரும் கலந்த தண்ணீரில் நான் குளித்த அந்தப் பொழுதுகளும் என் நினைவைக் குளிர வைக்கும். இதே போல எம்.பி.கோணேஸ் பாடிய பரமேசின் உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது, எனக்குத் தெரியுமா நீ என்னை நினைப்பது..., எஸ்.கே.பரராஜசிங்கம் பாடிய அழகான ஒரு ஜோடி கண்கள்... இன்னும் யாரோ ஒருவர் பாடிய முகத்தைப் பார்த்துக் குணத்தை அறிய அறிவை இறைவன் கொடுக்கவில்லை...
எம்.பாக்கியராஜா பாடிய புது ரோஜா மலரே.... என்று பாடல்களின் வரிசைகளும் அதனுடனான நினைவுகளும், உணர்வுகளும் நீண்டு கொண்டே போகும்.
வார இறுதியில் மதியப் பொழுதுகளில் ஒலிக்கும் கள்ளுக் கடைப் பக்கம் போகாதே.. சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே.. போன்ற பொப் இசைப் பாடல்களைக் கேட்கும் போது, அம்மா சமைக்கும் போது, கொதிக்கும் எண்ணெயில் வெங்காயத்தைப் போடும் கலகலத்த சத்தம் காதுக்குள் கேட்கும். கமகமக்கும் பொரியலின் வாசம் மூக்கினுள் வரும். கறுவாப் பட்டையின் இனிமை கலந்த நறுமணத்தை மூளை உணரும்.
1993இல் பூநகரித் தாக்குதலில் எனது தம்பி மரணித்த செய்தியில் நான் வாடிக் கிடந்த ஒரு பொழுதில் ஒரு ஒலிப்பேழை என் கரம் கிட்டியது. அதில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றான,
ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.
சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!.... என்ற பாடலைக் கேட்கும் போது மனதை ஒரு தரம் வேதனை பிழிந்தெடுக்கும். தம்பியின் ஞாபகம் வாட்டும். இந்தப் பாடலும் அந்த சோகமும் என்னுள் ஒன்றாகப் பதிந்திருக்கின்றன. இது சோக உணர்வே ஆனாலும் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று மனது ஆவல் கொள்ளும்.
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.... என்ற வரிகளை மனசு மானசீகமாக மீண்டும் மீண்டுமாய் மீட்டிக் கொண்டே இருக்கும்.
இப்படியே ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போதும் ஏதோ ஒரு நினைவு வந்து மனசை ஆக்கிரமித்துக் கொள்கிறது.
இந்த உணர்வுகளையே கவிதையாக்கிப் பாடலாக்கி ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும், கேட்கும் பொழுதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்.... என உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்ற திரைப்படத்துக்காக ஒரு கவிஞர் எழுதினார். அப் பாடல் வெளி வந்த காலத்தில் பாடல்களை ரசிக்கும் அனேகமானோர் இது தமக்காகவே எழுதப் பட்ட பாடல் என்ற பிரமையோடு அதைப் பாடிக் கொண்டும், ரசித்துக் கொண்டும் திரிந்தார்கள். இந்த நினைப்பு எனக்குள்ளும் வந்தது. இப்பாடல் என்னுள்ளும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றுமே என் சின்ன வயசுக்கும் பொருந்தி என் மனதை மீட்டக் கூடியதாக இருந்தது.
ரெயிலின் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே... என்ற வரியில் மரம் நகர்ந்ததுக்கும் மேலாக இன்னும் நிறைய ஞாபகங்கள். ரெயினில் பயணம்... இது எனக்கு எப்போதுமே இனிய சந்தோச உணர்வைத் தருவது. இப்போது கூட ரெயின் ஓடும் சத்தம் கேட்டால், ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் எனது குடும்பத்துடன் புகையிரதத்தில் பயணித்ததும், அப்பாவின் ரெயில்வே குவர்ட்டர்ஸில் புகையிரதத்தின் சத்தங்களுடனேயே தூங்கிப் போனதும், ஞாபகத்தில் வந்து, இனம் புரியாதவொரு குதூகலம் கலந்த ஏக்கம் என்னுள் குடிகொள்ளும்.
மருதானை புகையிரதநிலையத்தில் கீழே தண்டவாளங்களில் புகையிரதங்கள் அடுக்கடுக்காய் ஊர, மேலே கடமையில் இருக்கும் அப்பாவின் அருகில் கதிரையில் அமர்ந்து, கதையளந்தபடி மருதானைக்கே உரிய மசாலாவடை, பொரித்த கஜூ, பொரித்த கச்சான்... என்று சுவைத்தவைகளையும் இன்னும் பல புகையிரத நிலையத்துடனான சம்பவங்களையும் இப்பாடல் மீட்டிப் பார்க்க வைக்கும்.
கட்டப் பொம்மன் கதையைக் கேட்ட ஞாபகம்... என்ற வரி பாடப் படும் போது, முழுக்க முழுக்க அப்பாவின் ஞாபகம். அப்பா கதை சொல்வதில் வல்லவர். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலம், அங்கிருந்து அஞ்சலில் பத்திரிகைகளை எமக்கு அனுப்புவது மட்டுமல்லாது, வீட்டுக்கு வரும் போது எங்கள் வயதுக்கு ஏற்ப பல கதைப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்து வாசித்தும் காட்டுவார். வாசித்துக் காட்டும் போது அதற்கேற்ப நடித்தும் காட்டுவார். அவர் ஒரு முறை கட்டப்பொம்மன் கதையைச் சொன்ன போது, மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு தானே கட்டப் பொம்மன் ஆனது இன்னும் மனக்கண்ணில் தோன்றி சிலிர்ப்பைத் தரும்.
பாடல்களைக் கேட்கும் போது எனக்குள் ஊற்றெடுக்கும் நினைவுகள் ஒவ்வொன்றையும் நான் சொல்வதானால் எனக்கு இன்னும் நிறையப் பக்கங்கள் தேவை.
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்,
கேட்கும் பொழுதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்.
மிகவும் நிதர்சனமான வரிகள். ஒவ்வொரு பாடலின் போதும், ஏதேதோ நினைவுகள் ஊற்றாய் கசிந்து, நதியாய் விரிந்து... மனசை நனைக்கின்றன.
சந்திரவதனா
7.10.2006
Thursday, October 05, 2006
அலை பாடும் பரணி
தாயகம்FM இணையத் தளத்தில் புதிய இறுவட்டு இணைக்கப் பட்டுள்ளது.
அலை பாடும் பரணி
விரைவில் இணைக்கப்பட உள்ளமை
வெல்லும் வரை செல்வோம்,
வரலாறு வந்த வல்லமை,
அன்னைத் தமிழ்
Wednesday, October 04, 2006
தமிழ் அகராதி
புதிய இணைப்பு
தமிழ் அகராதி
Online Tamil-English-German dictionaries
http://www.selvakumaran.de/index2/links.html
Monday, October 02, 2006
பயமுறுத்தும் பாடல்
நதி - 11.5.2006
சிலவாரங்களுக்கு முன் ஒரு நாள் நான் சமைத்துக் கொண்டிருந்த போது வரவேற்பறையில் பேப்பரையும் பென்சிலையும் வைத்து கிறுக்கிக் கொண்டிருந்த என் பேத்தி விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். வந்த வேகத்தில் எனது கால்களைக் கட்டிப் பிடித்து "அப்பம்மா..!" என்றாள். அவள் விழிகளில் பயம் குடி கொண்டிருந்தது.
எதையோ கண்டு பயந்து விட்டாள் என்பது எனக்குத் தெரிந்தது. எதுவாக இருக்கும் என்பதுதான் தெரியவில்லை. ஏதாவது சிறு பூச்சி வந்திருக்குமோ? யோசனையுடன் அடுப்பில் இருந்த எண்ணெய்ச் சட்டியைத் தூக்கித் தள்ளி வைத்து விட்டு, அவளையும் தூக்கிக் கொண்டு சமையலறையை விட்டு வெளியேறி வரவேற்பறையில் புகுந்து பார்த்தேன். ம்.. நான் தொலைக்காட்சியை கிண்டர் சணலுக்கு மாற்ற மறந்திருந்தேன்.
அவள் கண்களை இன்னும் பயத்துடன் விரித்து தொலைக்காட்சியைப் பார்த்த படி எனக்குக் காட்டினாள். சந்திரமுகி படத்துக்காக, ஜோதிகா கண்களை முழுசிய படி ஆடிக் கொண்டிருந்தாள். ராரா, சரசக்கு ராரா... பாடல் போய்க் கொண்டிருந்தது.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் பாடலா இவளைப் பயமுறுத்தியது? இந்தப் பாடலை தமது பிள்ளைகளின் விருப்பமாகப் பல பெற்றோர் உங்கள் விருப்பத்தில் வந்து கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். இவளுக்கு இரண்டு வயதுதானே.! அதுதான் பயந்தாளோ என்ற கேள்வி என்னுள் எழுந்தாலும் என்னால் அந்தப் பாடல்தான் அவளைப் பயமுறுத்தியிருக்கும் என்று முழுமையாக நம்ப முடியவில்லை. ஆனால் அன்று அதற்கு மேல் அவளை தாக்காட்டி விட்டு விட்டு தொடர்ந்து சமைக்க முடியவில்லை. அவளது அம்மா வரும்வரை அவள் எனது இடுப்பை விட்டு இறங்கவில்லை.
அதன் பின், எதற்காக அப்படிப் பயந்திருப்பாள் என்ற கேள்வியோடு, இடையிடையே கவனித்துப் பார்த்துக் கொண்டே வந்தேன். மீண்டும் அந்தப் பாடல் கடந்த வாரம் வந்தது. அதே மாதிரி அவள் விழுந்தடித்து ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். "ரீவீயை நிப்பாட்டுங்கோ "என்று பயத்துடன் சிணுங்கினாள்.
இப்போது திடப் படுத்திக் கொண்டேன், அவளது பயத்துக்குக் காரணம் அப்பாடல்தான் என்பதை.
பாடல் காட்சியை விடுத்து அப்பாடலைக் கேட்கும் போது எனக்கு அந்தப் பாடல் ரசிக்கக் கூடிய வகையில் பிடித்தே இருந்தது.
சந்திரவதனா
2.10.2006
Wednesday, September 27, 2006
ஏகாந்தக் கனவுகள்
வார்த்தைகளுக்குள்
பிடிபடாத உணர்வுகள்
வந்து விழ முடியாமல்
அந்தரிக்கின்றன
வந்து போகும் காலங்களில்
லயிக்க மறந்து
வரப் போகும் காலத்துக்காய்
தவம் கிடக்கிறது மனசு... more
பிடிபடாத உணர்வுகள்
வந்து விழ முடியாமல்
அந்தரிக்கின்றன
வந்து போகும் காலங்களில்
லயிக்க மறந்து
வரப் போகும் காலத்துக்காய்
தவம் கிடக்கிறது மனசு... more
மனதை மிகவும் பாதித்த பதிவு
மீண்டும் மீண்டுமாய் வந்து மனதை வாட்டுகிறது.
யாழ்பாணத்தில் பட்டினி சாவு
பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.... more
Tuesday, September 26, 2006
உவருக்கு வேறை வேலை இல்லை.
உவருக்கு வேறை வேலை இல்லை.
உதைச் செய்யிற நேரத்துக்கு உவர் வேறை வேலையைச் செய்யலாந்தானே!
உது என்ன பிரயோசனம் எண்டு இவர் எழுதிக் கொண்டிருக்கிறார்?
உந்த நேரத்துக்கு வேறையேதும் பிரயோசனமா எழுதலாந்தானே!
இப்படிக் கதைப்பவர்கள் பலர் எம் மத்தியில் இருக்கிறார்கள்.
இப்படிக் கதைப்பதிலேயே அவர்களது பாதி நேரங்களும் போய் விடுகின்றன.
மற்றவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதிலும் அதைக் குறைந்தது பத்துப் பேருக்காவது சொல்வதிலும் தாம் செய்ய வேண்டிய பிரயோசனமான வேலைகளை அவர்கள் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
ஒருவருக்கு அவருக்கான நேரத்தில் என்ன செய்யப் பிடிக்கிறதோ, அதை அவர் செய்யலாம். அது யாரையும் பாதிக்காத வரை... அதனால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராதவரை... அவர் அப்படிச் செய்வதில் எந்தப் பிரச்சனையும் யாருக்கும் இல்லை. அவருக்குப் பாட்டுக் கேட்கப் பிடித்தால் கேட்கலாம். வாசிக்க விருப்பமாக இருந்தால் வாசிக்கலாம். இல்லை இவை ஒன்றுமே இல்லாமல் நித்திரை கொள்ள விருப்பமாக இருந்தால் நித்திரை கொள்ளலாம். இது ஒரு மனிதனுக்கான சுதந்திரங்களில் ஒன்று. இந்த மனித சுதந்திரத்துக்குள் யாராவது மூக்கை நுழைத்து ஏன் நீ நித்திரை கொண்டாய்? இந்த நேரம் முழிச்சிருந்திருக்கலாமே! என்று கேட்பதோ அல்லது ஏன் இதை எழுதுகிறாய்? அதை எழுதலாமே! என்று கேட்பதோ அர்த்தமற்ற அநாகரீகமான செயல்.
இந்த அர்த்தமற்ற செயலைப் பலரும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாடல்களிலிருந்து சில வரிகள் - 9
மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்
மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!
கேணல் சங்கர்

வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் - யாழ்
வீரமரணம்-26.9.2001
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற் றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.
26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாPகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது.
பதின்நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை. ஆனால், காக்கவந்தவர்கள் தம்மைத் தாக்கத் தயாரானபோது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீருமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்து, பாரத அரசின் உண்மை முகத்தை உலகறியச் செய்து காவியமானான் தியாகி திலீபன். அவனது உயிர்பிரிந்தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு, நெஞ்சில் அனல் பற்றியெழ பொங்கி எழுந்தது ஈழத் தமிழினம். அங்கே பிரகாசிக்கத் தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி.
14 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அதே தினத்தில் தான் மேற்கொண்ட அநாகாPகச் செயலால் தமக்கெதிராகப் போராடும் ஈழமக்களது உணர்வுகளையும், போரிடும் வீரியத்தையும் இன்னும் இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன சிங்களப் படைகள்.
தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.
வல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.
ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி 'கடற்புறா' என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர். இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.
இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது.
1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக 'சயனைட்' அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். 2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.
தேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா வெகு விரைவில் பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும்.
Quelle: எரிமலை(2004-செப்ரெம்பர் மாத இதழ்)
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )

