Tuesday, September 22, 2009

பசுமை நிறைந்த பள்ளி நினைவுகள் - 2

கல்லூரிச்சாலையின் பசுமை நினைவுகளோடு சம்பந்தம் உள்ள ஒரு பதிவு இது என்பதால் இதை மீள்பதிவு செய்கிறேன்.

எமது வாழ்வில் நல்ல விதமாகவோ அன்றிக் கெட்ட விதமாகவோ மனதில் தடம் பதித்துப் போனவர்கள் பலர் இருப்பார்கள். இவர்கள் அடிக்கடியோ அன்றி எப்போதாவதோ எமது நினைவுக்குள் முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் லxxxம் ஒருவன்.

லxxல்
அவன் பற்றிய பூர்வீகம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் Tuitoryக்குப் போகும் ஒவ்வொரு பொழுதிலும், அவன் வகுப்பு நடக்கும் அறையின் வாசலில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பான். அந்த வாசல் Tuitoryயின் வாசலைப் பார்த்த படியே இருப்பதால் உள்ளே நுழைவது யாராக இருந்தாலும் அவனைத் தரிசிக்காது செல்ல முடியாது. நான் வரும் நேரங்களில் மட்டுந்தான் அதில் அவன் நிற்கிறானா என்பது எனக்குத் தெரியாத விடயம்.

இப்போதென்றால் ஒரு தெரிந்தவரைக் கண்டால் ஒரு "ஹலோ"வோ அல்லது ஒரு "வணக்கமோ" அதையும் விட்டால் ஒரு புன்னகை சிந்தலோ இல்லாமல் நகர மாட்டோம். அப்போது (31வருடங்களுக்கு முன்) அதுவும் ஒரு பதின்னான்கு வயதுப் பெண் ஒரு ஆணைக்கண்டு தெரிந்தது போல் பாவனை பண்ணிக் கொள்வது விபரீதமான விளைவுகளையே தரும். இதற்கு மேலால் அவன் மீது எனக்கு எந்த விதமான ஈடுபாடும் இருக்கவும் இல்லை. அதனால் எந்தவித பாவனையுமின்றி நான் அவனைத் தாண்டி விடுவேன்.

நிட்சயம் அவன் என்னை விட வயதானவனாக இருப்பான். ஆனாலும் ஆங்கில வகுப்புக்கு மட்டும் எனது வகுப்பில் வந்தமர்வான்.

அவனது பெயர் லxxல் என்பதை ஆங்கில வகுப்பில் ஆங்கில ஆசிரியர் கூப்பிடும் போதுதான் நான் அறிந்து கொண்டேன். அவனது பிறப்பிடம் மட்டக்களப்போ அல்லது திருகோணமலையோ அல்லது வேறு இடமோ தெரியவில்லை. ஆனால் எங்கோயோ இருந்து பருத்தித்துறைக்கு வந்து அந்த ரியூற்றரியிலேயே ஒரு அறையில் தங்கியிருந்து படிக்கிறான் என்பது மட்டும் அரசல் புரசலாக என் காதிலும் வந்து விழுந்திருந்தது.

Tuitoryயில் ஒரு பாடம் முடிந்து வரும் இடைவேளையின் போது பெண்கள் Toilet பக்கம் செல்வதாயின் அவனது அறையைக் கடந்துதான் செல்ல வேண்டும். நான் அந்த அறையைக் கடக்க வேண்டிய ஒவ்வொரு பொழுதிலும் அவன் ஓடி வந்து அறை வாசலில் நின்று என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான். ஒரு நாளேனும் அவன் என்னுடன் கதைக்க முயற்சித்ததாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்போதுமே அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை கவிந்திருக்கும்.

இது ஒரு புறம் இருக்க எங்களுக்கு பத்தாம் வகுப்புப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. பிரியப் போகிறோம் என்ற நினைப்பில் எனது சக மாணவிகள் Autograph களுடன் திரிந்தார்கள்.

"ஆழக்கடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றக் கூடாது." என்பதில் தொடங்கி எத்தனையோ சினிமாப் பாடல்களின் வரிகளால், பழமொழிகளால்... என்று தொடர்ந்து "என்னை மறந்து விடாதே..." என்பது வரை எழுதி எழுதி Autographஐ நிறைத்தார்கள்.

நானும் என் பங்குக்கு எனது Autographஐ ஒவ்வொருவரிடமும் நீட்டி வாழ்த்துக்களையும், கையெழுத்துக்களையும் வாங்கிக் கொண்டேன். இத்தனையும் சக மாணவிகளிடந்தான். மருந்துக்குக் கூட சக மாணவர்களிடம் கையெழுத்தை வாங்கும் பழக்கம் அப்போது இல்லை.

அன்று Chemistry வகுப்பு முடிய 5நிமிட இடைவேளை. அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியில் எமக்கான அறைக்குச் சென்று தண்ணீர் குடித்து... மீண்டும் ஆங்கில வகுப்புக்குத் திரும்பிய போது எனது மேசையில் எனது புத்தகங்களுடன் இருந்த எனது Autographஐக் காணவில்லை.

எல்லாமாணவிகளையும் மட்டுமல்லாது, Tuitory பொறுப்பாளரையும் கேட்டு விட்டேன். `ம் கூம்...` அது எங்கே யார் கைக்குப் போயிருக்குமென்று யாருக்குமே தெரியவில்லை. "பெடியன்களில் யாரோ எடுத்து விட்டாங்கள் போலை." சில மாணவியர் கருத்துத் தெரிவித்தனர். பார்த்துப் பார்த்து வேண்டிய கையெழுத்துக்களும், வாழ்த்துக்களும் தொலைந்து போய் விட்டதில் எனக்கு வருத்தந்தான். என்ன செய்வது...?

ஒரு வாரத்துக்குள் அம்மாவிடம் கேட்டு இன்னொரு Autograph வாங்கி, மீண்டும் ஒவ்வொருவரிடமாக நீட்டிக் கொண்டிருந்தேன். இப்படியே Tuitoryயின் இறுதிவாரமும் வந்து விட்டது. அந்த வாரத்தில் ஒருநாள், இடைவேளைக்கு வெளியில் போய் வந்த போது, தொலைந்த எனது Autograph எனது புத்தகங்களின் மேல் வைக்கப் பட்டிருந்தது. எனக்கு அளவிலா மகிழ்ச்சி. கூடவே பயமும், யார் யார் என்ன கிறுக்கியிருப்பார்கள் என்ற குழப்பமும் இருந்தது.

ஆங்கில வகுப்பு முடிந்து வீடு சென்றதும் Autographஇன் பக்கங்களைப் புரட்டினேன். எனது எண்ணம் சரியாகவே இருந்தது. மூன்று பக்கங்களில் ஒரே கையெழுத்தில் யாரோ ஒருவர் அழகாக எழுதியிருந்தார்.

அவற்றில் ஒரு பக்கத்தில்
கோட்டையிலே பெண் பிறந்தாலும்
தலையில் கொட்டியபடியேதான் நடக்கும்
என்ற வாக்கியங்கள் இருந்தன.

அந்த ஒரு வாரத்துக்குள் எனது நண்பிகள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் அதை எழுதியது லxxல் ஆக இருக்கலாம் என்ற பதில் எனக்குக் கிடைத்தது. அவர்கள் தந்த தகவல்களின்படி அவனது கையெழுத்துத்தான் அது என என்னால் ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் முடிந்தது.

ஆனால் எனது பத்தாம்வகுப்புப் பரீட்சை முடிந்து, முடிவுகளுக்காகக் காத்திருந்து, மீண்டும் நான் பதினோராம் வகுப்பில் அதே Tuitoryயில் போய்ச் சேர்ந்த போது அவன் அங்கு இல்லை. "நீயா எழுதினாய்?" என்றோ, அல்லது "ஏன் அந்த வாக்கியங்களை எனக்கு எழுதினாய்?" என்றோ கேட்பதற்குக் கூட எனக்கு ஒரு வாய்ப்புத் தராமல் அவன் தனது சொந்த ஊருக்குப் போய்விட்டான் என்பது தெரிந்தது.

அந்த Autographம் இந்திய இராணுவத்தின் அத்துமீறலில் எனது வீட்டுக்குள்ளிருந்து வீசி எறியப்பட்டு விட்டது. ஆனால் இரக்கமா, விருப்பமா என்று தரம் பிரித்தறிய முடியாத அவனது பார்வையையும், அவன் எழுதிய அந்த வசனங்களையும் என் மனதுள் இருந்து தூக்கியெறிய முடியவில்லை.

சந்திரவதனா
7.11.2005
http://www.manaosai.com/

Friday, September 18, 2009

பசுமை நிறைந்த பள்ளி நினைவுகள்

எனது வீடு, எனது ஊர்... எனது நாடு.. என்னும் போது தோன்றக்கூடிய பரவசநிலையைத் தரக்கூடியதே எனது பாடசாலை என்பதும். 32வருடங்களுக்கு முன் முடிந்து போய்விட்ட எனது பாடசாலை வாழ்க்கை பற்றிய நினைவுகள் இன்னும் எனக்குள்ளே புதைந்து கிடக்கின்றன. அவ்வப்போது ஒவ்வொன்றாக மனசுக்குள் மிதக்கும் அந்த நினைவுகள் வந்தி என்னை அழைத்த இந்த சில நாட்களுக்குள் இன்னும் அதிகமாகவே கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன.

மற்றவர்களைப் போல ஒரே மூச்சில் அத்தனையையும் என்னால் எழுதி முடித்து விட முடியும் போல் தெரியவில்லை. கண்டிப்பாக எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்த எனது தூயகணித ஆசிரியையோடான நினைவுகளோடு தொடங்குகிறேன். அழைத்த வந்திக்கு நன்றி.

அந்த ரீச்சரை எல்லோரும் பொல்லாத ரீச்சர் என்றுதான் சொல்வார்கள். ஒன்பதாம் வகுப்புக்கு அவதான் எங்களுக்கு வகுப்பு ரீச்சராக வந்தா.

எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்து வந்த நாம் எட்டாம் வகுப்பு பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் Arts, Science எனப் பிரிக்கப் பட்டோம். அப்போதெல்லாம் சயன்ஸ் மாணவர்களுக்குத்தான் மதிப்பு. ஆர்ட்ஸ் மாணவர்கள்தான் பிற்காலத்தில் சட்டத்தரணியாகவோ,  அன்றி இன்ன பல நல்ல வேலைகளிலோ அமரப் போகிறார்கள் என்ற சிந்தனை அந்த நேரத்தில் யாருக்கும் எழுந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆர்ட்ஸ்க்குப் போகும் மாணவர்களைக் கொஞ்சம் மட்டமாக நினைப்பது இயல்பாக இருந்தது. இதற்கு, சயன்ஸ்க்குப் போனால்தான் ஒரு டொக்டராகவோ அன்றி என்ஜினராகவோ வரலாம் என்ற அந்தக் காலப் பெற்றோரின் கனவு காரணமாக இருக்கலாம்.

சயன்ஸ் பிரிவினருக்கான 9ம் வகுப்புக்குத்தான் அந்தப் பொல்லாத ரீச்சர் வகுப்பாசிரியையாகினா. அவ எங்களுக்கு வகுப்பாசிரியை மட்டுமல்ல தூயகணிதத்துக்கும் அவதான் ஆசிரியர் எனத் தெரிய வந்தது. இது எங்கள் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் பல மூலைமுடுக்குகளிலும் பேசப்படும் ஒரு விடயமாக எல்லோரையும் கலக்கியது.

'பெரிய மாணவிகளுக்குக் கூட அடிப்பாவாம். உலுப்பி எடுத்து விடுவாவாம்...` பலரும் சொன்னார்கள்.

ஆனால் அந்த ரீச்சரைப் பார்த்த போது எனக்கு அப்படி ஒன்றும் பொல்லாத்தனமாய் தெரியவில்லை. வெள்ளையாக, அழகாக, ஆனால் என்னைப் போலக் கட்டையாக இருந்தா. சுருட்டைத் தலைமயிரை மடித்துச் சின்னதாகக் கொண்டை போட்டிருந்தா. முதல் நாள் பார்வையிலே நட்பாகச் சிரித்தா. எப்போதுமே ஒரு முறுவல் அவவின் முகத்தில் ஒட்டியிருப்பது போலத்தான் எனக்குத் தெரிந்தது.

முதல் நாளைய தூயகணிதத்தில் அல்ஜிபிராவில் பிளஸ்(+), மைனஸ்(-) என்று வந்த போது எல்லோருமே சற்றுத் தடுமாறினோம். நாம் குழம்பும் போதுதான் ரீச்சர் பொறுமையிழப்பது தெரிந்தது.

சின்ன வகுப்பிலிருந்து சாதாரணமாகப் படித்துக் கொண்டு வந்த கணிதத்தை விடுத்து எட்டாம் வகுப்பில் New Maths என்று எதையோ போட்டுக் குழப்பி விட்டு ஒன்பதாம் வகுப்புக்கு வந்த போது அங்கு PureMaths, AppliedMaths என்று வேறு வடிவங்களைக் காட்டினார்கள். எங்கள் சயன்ஸ் பிரிவிலேயே டொக்டர் கனவோடு இருந்தவர்கள் Chemistry, Physics உடன் Biologyயையும் Zoologyயையும் தமக்கான பாடங்களாக எடுக்க, நான் ஆர்க்கிரெக் கனவுடன் தூயகணிதத்தையும்(Pure Maths), பிரயோககணிதத்தையும்(Applied Maths) எனக்கான பாடங்களாகத் தேர்ந்தெடுத்திருந்தேன். பிளஸ்(+), மைனஸ்(-) கொஞ்சம் குழப்பியது..

அன்றிரவே எனது அண்ணனிடம் பிளஸ்(+), மைனஸ்(-) பற்றிய குழப்பத்தைச் சொன்னேன். பொல்லாத ரீச்சர் பற்றியும் சொன்னேன்.

அவன்
பிளஸ் + பிளஸ் = பிளஸ்
மைனஸ் + மைனஸ் = மைனஸ்
மைனஸ் x மைனஸ் = பிளஸ்
“இதை சரியான படி ஞாபகம் வைத்திரு. தூயகணிதத்தில் எந்தக் குழப்பமும் வராது” என்றான். இன்னும் சில அடிப்படை நுணுப்பங்களைச் சொல்லித் தந்தான். அந்த ஒரு நாள் அதுவும் வெறுமனே அரைமணி நேர அண்ணனின் விளக்கம் எனக்கு கணிதத்தை மிக்சுலபமாக்கி விட்டது. என்னை மிஞ்ச யாருமில்லை என்ற அளவுக்கு கணிதம் என்னோடு மிகவும் இசைந்தது. பரீட்சைகளில் தூயகணிதத்தின் Algebraவுக்கும் சரி Geomatryக்கும் சரி 100 புள்ளிகளே எப்போதும் கிடைத்தன. பிரயோககணித ஆசிரியரிடமிருந்து Computer என்ற பட்டம் கிடைத்தது.

பொல்லாத ரீச்சர் என்று மற்றவர்களால் வர்ணிக்கப்பட்ட அந்த ரீச்சர் என்னோடு மட்டும் எப்போதுமே அன்பாகவும், நட்பாகவும்  நடந்து கொண்டா.

ஒருநாள் றிலே நடக்கும் என்பதால் அன்றைய எல்லாப் பாடங்களும் ரத்து என்ற நினைப்பில் முதல் நாள் தந்து விட்ட தூயகணித homeworkஐ வகுப்பில் யாருமே செய்யவில்லை. ஆனால் தூயகணிதம் முடியத்தான் றிலே ஆரம்பமாகும் என்ற போது எல்லோரும் விழித்தோம். ஒட்டு மொத்த வகுப்பே செய்யவில்லை. ரீச்சர் ஒவ்வொருவராகப் பார்த்து கொப்பிகளைத் தூக்கி எறிந்து கொண்டும், அடித்துக் கொண்டும் வந்தா. மிகவும் மரியாதையான இன்னொரு ரீச்சரின் மகளை ஒரு உலுப்பு உலுப்பி வகுப்புக்கு வெளியில் போய் நிற்கும் படி பணித்தா. அந்த மாணவி மிகவும் கெட்டிக்காரி. எல்லோராலும் மதிக்கப்படும் மாணவி. அவளுக்கே இந்நிலை என்றால் என் நிலை என்ன? பயம் என்னைத் தின்றது. மற்றவர்கள் எல்லோரும் Homework கொப்பியாவது வைத்திருந்தார்கள். நான் கொப்பியைக் கூடக் கொண்டு செல்லவில்லை.

ரீச்சர் என்னை நெருங்க நெருங்க பயமும் அதிகரித்தது. ரீச்சர் எனக்கு முதல் பிள்ளையின் கொப்பியைப் பார்த்து விட்டு அந்தப் பிள்ளைக்கு அடித்தா. எனக்கு உடலும் மனதும் பயத்தில் பரபரத்தது. அடுத்தது நான். ´என்ன நடக்கப் போகிறது. அடிப்பாவா? கொப்பியைத் தூக்கி எறிவாவா?` கைகளைப் பிசைந்தேன். கோபாவேசத்துடன் சுழலும் ரீச்சரின் முகத்தைப் பார்த்தேன். சட்டென மாறிய அவவின் முகத்தில் சாந்தம் நிலைக்க மெல்லிய முறுவலுடன் என்னைத் தாண்டிப் போய் எனக்கு அடுத்த பிள்ளையின் கொப்பியைத் தூக்கி எறிந்து விட்டு அடுத்த லைனுக்குப் போனா.

என்னை Homework செய்தாயா? கொப்பி கொணர்ந்தாயா என்ற எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஒரு வகையில் அது நியாயமற்றதுதான். வகுப்பில் அத்தனை பேரும் தண்டனை பெறும் போது எனக்கு மட்டும் தண்டனை தராதது பிழையே. அந்த நேரத்தில் எனக்கு அது பிழையென்று தெரியவில்லை. தப்பினேன் பிழைத்தேன் என்ற நிம்மதியும், ஒரு மனதார்ந்த நன்றியுமே இருந்தது. இன்றைக்கும் அந்த ரீச்சரின் நினைவு என்னோடு இருக்கிறது.

சந்திரவதனா
17.09.2009

Sunday, September 13, 2009

மடமையைக் கொளுத்துவோம்!

- சந்திரா ரவீந்திரன்

வீட்டினருடனான சம்பாஷணையை முடித்துக் கொண்ட மாமா என் மேசைக்கருகில் வந்தார்.

"இது என்ன பேப்பேஸ்?"

"அது... நான் எழுதின கதை மாமா, வாசித்துப் பாருங்கோ"
அந்தப் பேப்பர் தாள்களைத் தூக்கிய மாமா நான் கூறியதும் சந்தோசமாக வாசிக்க ஆரம்பித்தார்.

நேரத்தைப் பார்த்த நான் அவசரமாக வீதியில் இறங்கினேன்.

"எங்கை.... பயணம்?"
வழியில் வந்த பக்கத்து வீட்டு மாமி விசாரித்ததும் தயங்கிய நான்,

"கூட்டமொண்டு யாழ்ப்பாணத்திலை, அங்கைதான் போறன்"
கூறி முடிக்கமுன்,

"கூட்டமோ? யாழ்ப்பாணத்திலையோ? அதுக்கு... நீ இங்கையிருந்து... தனியா... அடியாத்தை நல்லாயிருக்கடி"
மாமி வாயைப் பிளந்தாள். எனக்குப் பொத்துக் கொண்டு கோபம் வந்தது.

"ஏன் மாமி? யாழ்ப்பாணத்துக்குத் தனியாத்தானே படிக்கப் போறன். பிறகு இதுக்கு மட்டும் ஒரு ஆள் தேவையோ?"

"சுஜா, நீ யாழ்ப்பாணம் படிக்கப் போறனி எண்டு நல்லாவே தெரியுது. இங்கையிருந்து யாழ்ப்பாணம் போற அளவு தூரத்துக்கு வாயும் நீண்டிருக்கடி! குமர்ப்பிள்ளை... தனியா, ஏதோ ஒரு கூட்டத்துக்குப் போகத்தான் அவசியமோ, எண்டுதான் கேக்க வந்தனான். பரவாயில்லை. கேட்டது என் தப்பு. நீ போயிட்டுவாம்மா"
மாமியின் கிண்டல் பேச்சு ஆற்றாமையை மேலும் வளர்த்தது.

"அது... ஏதோ ஒரு கூட்டம் இல்லை மாமி. ஒரு இலக்கியப் புத்தக வெளியீட்டு விழா."
நான் நறுக்கென்று கூறினேன்.

"இலக்கியம். பெரிய இலக்கியம். எங்களுக்குத் தெரியாத இலக்கியம்!... காலம் கெட்டுப் போச்சடி"
மாமி தனக்குள் முணுமுணுத்தவாறே என்னைக் கடந்து வேகமாக நடந்து, ஒரு வீட்டினுள் நுழைந்து மறைந்தாள்.

"சரியா...ன லூஸ் மாமி!" எனது கோபத்தை அந்த வரிகளில் அழுத்தமாகக் காட்டி முணுமுணுத்து விட்டு, நான் பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

சிறிது தூரம் நடந்ததும், ஒரு ரியூட்டரி வாசலில் நின்ற ஒரு ஆசிரிய இளைஞனும், சில மாணவிகளும் எதைப் பற்றியோ கதைத்துச் சிரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

"பாரடி! அந்தக் குமரியளை! யாரோடை கதைக்கிறது, எவடத்திலை நிண்டு கதைக்கிறதெண்டு விவஸ்தையே இல்லாமல்... வாசலுக்கை...! காலம் கெட்டுப் போச்சடி..."

நான் திடுக்குற்றுத் திரும்பினேன். ஒரு வயதான பெண் அருகிலொரு இளம் பெண்ணுடன் என்னைக் கடந்து முன்னேறினாள்.

அவளது அந்தக் கீழ்த்தரமான கணிப்பீடு என்னை என்னவோ செய்திருந்தது. அந்த ஆசிரிய இளைஞனும் தான், சிரித்துச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அந்த உரையாடல்களில் கறுப்புப் புள்ளி இடப்பட்டது அந்தப் பெண்களுக்குத்தான்! இந்த நியாயம் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்காக நியாயம் கதைக்கப் போனாலும் ´வாய் நீண்டு போச்சுது" எண்டு சண்டைக்கு வருகிறார்களே! மனம் புழுங்கியது. நான் எனக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

நான் சந்திக்கு வந்து, அடுத்த வீதிக்குத் திரும்பிய பொழுது சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், வீதியின் ஓரமாக வந்து கொண்டிருந்த ஒரு அழகிய இளம்பெண்ணின் அருகில் சென்று ஏதோ சொல்ல, "ஸ்டுப்பிட்... ராஸ்கல்" என்று திட்டிக் கொட்டி விட்டு அவள் நடந்தாள். நான் அவர்களைக் கடந்து சென்றேன்.

சிறிது தூரம் சென்றதும் எதிரில் வந்த ஊர்ப் பெரியவர் ஒருவரைக் கண்டதும் மெல்லத் தலையைக் குனிந்து கொண்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன்.

"யாழ்ப்பாணத்துக்குப் போறேன் அங்கிள்"

'எதுக்கு?' என்று கேட்க விரும்பாமல் நெற்றியைச் சுழித்துக் கொண்டே அவர் விடைபெற்றார்.

'அப்பப்பா!' பார்வைகளைப் பர்த்தால் திரும்பி வீட்டிற்கே ஓடிவிடலாம் போலிருந்தது.

´என்ன மனிதர்கள் இவர்கள்? இந்த வீதியாலை எத்தனை ஆண்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மட்டும் தான் அனைவரது அவதானிப்புகளுக்கும், சிந்தனைக்கும் ஆளாக வேண்டுமோ? இவர்களுக்கு வேறு சிந்தனையே இல்லையோ?'

என் மனம் என்னுள் அல்லாடியது.

நான் பஸ் ஸ்ராண்டை அடைந்த பொழுது, யாழ்ப்பாண பஸ் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஒரு இளைஞனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தில் அமர்ந்த பொழுது அவர்,

"ஹலோ" என்றார். திடுக்குற்ற நான் நிமிர்ந்த பொழுது, அருகிலிருந்தவரைக் கண்டு ஆச்சரியமடைந்தவாறே,

"ஆ... ஹலோ" என்றேன். பிரபல எழுத்தாளர் சதுரா புன்னகை சிந்திக் கொண்டிருந்தார்.

"எங்கை... வெளியீட்டு விழாவுக்கோ?" நான் கேட்டதும்,

"ஓமோம், நீங்களும அங்கைதானே?" அவர் நம்பிக்கையோடு விசாரிக்க, நான் ´ஆம்` என்று தலையாட்டினேன்.

"இன்விற்ரேசன் வந்ததோ... அல்லது பேப்பரில பார்த்தனிங்களோ?"

"இன்விற்ரேசன் காட் வந்தது" நான் கூறிவிட்டு "விழாவிலை நீங்களும் பேசுவீங்களா?" - அவருடைய அருமையான மேடைப்பேச்சுக்களை மனதில் வைத்தவாறே ஆவலுடன் கேட்டேன்.

'ம்... பேசச் சொல்லிக் கேட்டால் பேசுவன்.'

'ஆயத்தப்படுத்தாமல்... எப்பிடி உங்களாலை சட்டென்று பேசமுடியுது?'

அவர் மெதுவாகச் சிரித்து விட்டு என்னைப் பார்த்தார்.

"நீங்கள்... ஒரு கதையை எழுதிறதுக்கு முதல் கொஞ்சம் யோசிக்கிறிங்கள். பிறகு எழுதத் தொடங்க, எழுத வேண்டியதெல்லாம் சரளமாய் வந்து அமைஞ்சிடுது இல்லையா?... அது மாதிரித்தான் இதுவும். ஆரம்பத்தில கொஞ்சம் நிதானமாக வார்த்தைகளை விடவேணும். பிறகு மனசிலை தோன்றுகிறதெல்லாம் சரளமாய் வாயிலை வந்திடும்."

"எனக்கெண்டால், மனசில தோன்றுவதுகூடப் பலருக்கு மத்தியில பேச வராமல் மறைஞ்சு போயிடும்" நான் ஏக்கத்துடன் கூறினேன்.

"சுஜா, அது ஒரு தாழ்வு மனப்பான்மையால வாறது. நாங்கள் பலருக்கு முன்னால பேசுகிற போது பிழையாக எதையாவது பேசிவிடுவோமோ என்கிற பயம்! அந்தப் பயம் இருக்கக் கூடாது. எடுத்த எடுப்பில நிறையப் பேசவேணுமெண்டு நினைக்காமல், மனசில படுகிறதை சுருக்கமாய் நாலு வார்த்தையிலை பேசி முடிச்சிட்டால், அடுத்தடுத்த தடவைகள் பேசுகிறபோது, பயம் தெளிஞ்சு, அதிகம் பேசக்கூடிய துணிச்சல் வந்திடும். அந்த விசயத்தை ஒரு பயங்கரமாய் நினைச்சு, மனசைப் பாராமாக்கக் கூடாது. அதைச் சிம்பிளாக நினைக்க வேணும்." அவர் ஒரு ஆசிரியர் போல் புத்திமதி கூறினார்.

எனக்கு அது புரிந்தது. நான் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

"சுஜா, அப்போ நீங்கள் இந்த விழாவிலை சின்னதாக ஒரு வாழ்த்துரை வழங்குங்களேன் பார்க்கலாம்."

"ஐயையோ, எவ்வளவு பெரிய ஆட்களுக்கு முன்னால.. நான்... நான்..." நான் தயங்க,

"பார்த்தீங்களா, பார்த்தீங்களா, இன்னமும் அந்தத் தாழ்வு மனப்பான்மை உங்களுக்குப் போகவில்லை! நீங்கள் பேனையாலை வெளிப்படுத்திற துணிவை, வார்த்தையாலை வெளிப்படுத்துங்கோ." அவர் மீண்டும் மென்மையாக என் மனதைத் திருத்த முற்பட்டார்.

"சரி, இண்டைக்கு நான் முயற்சி பண்ணுறன்." கூறிய பொழுது அவர் மகிழ்ச்சியோடு சிரித்தார்.

"ஏன் சிரிக்கிறீங்கள்?" நான் புரியாமல் கேட்டேன்.

"இல்லை, என்ரை மனுசி சொல்லுவாள் ´நீங்கள் ஒரு ரீச்சரா இல்லா விட்டாலும், போற இடமெல்லாம் ரீச்சர் வேலை பார்ப்பீங்கள்!` எண்டு. இப்ப இந்த... பஸ்சுக்குள்ளையே தொடங்கி விட்டன். இல்லையா?" அவர் கூறியதும் சிரிப்பு வந்தது.

நான் சிரித்து விட்டுத் திரும்பிய பொழுது, எனக்கு நேரே மறு புறத்து ஆசனத்தில் இருந்த இளைஞன் முறைத்துப் பார்ப்பது தெரிந்தது. ´யார் அது?` உற்றுப் பார்த்தேன். ஞாபகம் வந்தது. அவன் எங்கள் ஊர்க்காரன்தான். எப்பவோ ஒருநாள் அண்ணாவுடன் கதைத்துக் கொண்டு நின்றபோது நான் கண்டிருக்கிறேன்.

´ஏன் இப்படி முறைக்கிறான்?´ எனக்குப் புரியவில்லை. நான் தலையைக் குனிந்து கொண்டேன்.

பஸ், யாழ்ப்பாணத்தை அடைந்த பதினைந்து நிமிடங்களில் நானும் எழுத்தாளர் சதுராவுமாக விழா மண்டபத்தை அடைந்தோம். நாம் போகும்போது விழா ஆரம்பமாகியிருந்தது. ஒரு இலக்கியவாதி, மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து பலரது கருத்துக்கள், சர்ச்சச்சைக்குரிய விடயங்கள் நகைச்சுவைச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் எழுத்தாளர் சதுராவை விழாத்தலைவர் பேச அழைத்தார். அவர் மேடைக்கு ஏறும் போழுதே பலர் ஆர்வமாக அவரது பேச்சைக் கேட்கத் தயாராகிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கணீரென்ற கவர்ச்சியான குரலில், ரசமான வார்த்தைகளால் நூலின் குறை நிறைகளை அள்ளி வீசினார். என் அவதானம், பிசகாமல் அவர் பேச்சிலேயே நிலைத்திருந்தது! அவர் பேசி முடித்து மேடையிலிருந்து இறங்கிய போதும் என் வியப்பு மாறாமலே இருந்தது.

இறுதியாக, "விரும்பியவர்கள் பேசலாம்" என்று தலைவர் கூறிய பொழுது, என்னைப் பேசும்படி சதுரா ஜாடை காட்டினார். நான் தயங்கினேன். அவர் கட்டாயப்படுத்தினார். நான் எழுந்து சென்று நான்கு வரிகளில் வாழ்த்துரை வழங்கி விட்டு வந்தமர்ந்த பொழுது வியர்த்துக் கொட்டியது. சதுரா வாயை மூடிக்கொண்டு மெலிதாகச் சிரித்தார்.

விழா முடிவடைந்து வெளியில் வந்தபொழுது,

"பரவாயில்லை, நாலு வசனம் எண்டாலும் நல்லாத்தான் இருந்தது" அவர் புன்னகையுடன் கூறி விட்டுத் தனக்கு அறிமுகமானவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது நான் விடைபெற்றுக் கொண்டு பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

பஸ் வீடு வந்து சேர்ந்த பொழுது வீட்டு வாசலில் அண்ணா நின்றிருந்தார். அவர் முகம் அசாதரணமாக இருந்தது.

"இப்ப... என்ன நேரம்?"
அவரின் கேள்வியில் கடுமை தெரிந்தது கண்டு நான் திடுக்குற்றேன். நேரத்தைப் பார்த்தேன்.

"ஆ... ஆறரை"
அந்தச் சூழ்நிலை ஏற்படுத்திய பயத்தில் நாக்குளறியது.

"விழா எத்தினை மணிக்கு முடிஞ்சது?"
குரலில் அதே கடுமை.

"ஐந்தே காலுக்கு"
நான் உள்ளே போக எத்தனித்தேன்.

"நில்லடி, போகும்போது தனியாத்தான் போனியா?"
குரலில் சீற்றம் மிகுந்திருந்தது.

"தனியாத்தான் போனனான்..."
புரியாமல் விழித்தேன்.

"பஸ்சுக்குள்ளை... பக்கத்திலையிருந்து சிரிச்சுச் சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு வந்தவன் ஆரடி?"

"அண்ணா, அவர்... அவர்... எழுத்தாளர் சதுரா. எதிர்பாராமல் பஸ்சுக்குள்ளை சந்திச்சோம்."

´பளார்` என்ற ஓசையுடன் அவர் கைவிரல்கள் என் கன்னத்தில் பதிந்து மீண்டன. நிலை தடுமாறினேன்! கன்னம் ´பக பக` வென்று எரிந்தது. கண்ணீர் வரவில்லை. பதிலாக கோபம் பீறியது!

"செய்யிறதை நியாயத்தோடை செய்யுங்கோ"
நான் கத்தினேன்.

"எனக்கு... நீ நியாயம் சொல்லுறியா?"
மீண்டும் ´பளார்` என்ற ஓசையுடன் கன்னம் அதிர்ந்தது! இப்போ ஆற்றாமையில், வலியில் அழுகை வந்தது.

"எல்லாரும் திரும்பிப் பார்க்கிற அளவுக்குச் சிரிப்பு வாற மாதிரி... அப்பிடி யென்ன கதைச்சனிங்கள்?"
அண்ணா மீண்டும் முறைத்தார். பதில் சொல்ல மனம் வரவில்லை. ஆத்திரத்தில் என் உதடுகள் துடித்தன. காறித்துப்ப வேண்டும் போல் மனம் துடித்தது. பஸ்சிற்குள் என்னை முறைத்துப் பார்த்த, எங்கள் ஊர் இளைஞனின் உருவம் என் மனக்கண்ணில் விகாரமாகத் தெரிந்தது.

"மிக மிக எளியவன்" என் வாய் அவனை எண்ணி முணுமுணுத்தது.

"என்னடி கதைச்சனிங்கள்?"
அண்ணா மீண்டும் வெடித்தார்.

"ம்... என்ன... கதைச்சோமோ? ரெண்டு பேரும் எப்போ மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் எண்டதைப் பற்றிக் கதைச்சோம்" சட்டென்று ஆடிப்போன அவர் விழி பிதுங்க விசித்திரமாக என்னைப் பார்த்தார். நான் தலை குனிந்து நின்றேன்.

"என்ன துணிச்சலடி உனக்கு...?"
அவர் மீண்டும் வெறி பிடித்த சிங்கமாகப் பாய்ந்த பொழுது, சட்டென்று நான் விலகிக் கொண்டேன்.

... "யாரோ ஒருத்தன் சொன்னதை வைச்சு, ஏதோவிதமாய்க் கற்பனை பண்ணிக் கொண்டு என்னை நாயாய் அடிக்கிறீங்களே! உங்களுக்கு வெட்கமாயில்லை? உங்களுக்கு உங்கட தங்கச்சியைப் பற்றித் தெரியேல்லையே? என்னைப் பற்றி அப்பிடித் தப்பாய் நினைத்துச் சொன்னவனுக்கு நல்ல பதிலடி கொடுக்க உங்களுக்குத் தெரியேல்லையே? என்னைத்தான் அடிக்கத் தெரியுது. பெண்களுக்கெண்டு தெரிந்தவர்கள், சிநேகிதர்கள் யாருமே இருக்கக் கூடாது. அவையள் இந்த உலகை, மனுசரை சுதந்திரமாகப் பார்க்கக் கூடாது. அப்பிடித்தானே? இப்ப நான், பெண்ணாய்ப் பிறந்திட்டேனே எண்டு மட்டுமில்லை, உங்கட தங்கச்சியாய்ப் பிறந்திட்டேனே எண்டும் வேதனைப்படுறன்"

நான் என்னையும் மீறி விம்மி விம்மி அழுதேன். சிறிது நேரம் உணர்ச்சிகளற்று அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவர், சட்டென்று தலையைக் குனிந்தவாறே கேற்றைத் திறந்து கொண்டு வெளியில் எங்கேயோ போய்க் கொண்டிருந்தார்.

இவ்வளவு நிகழ்ச்சிகளையும் அவதானித்துக் கொண்டு வாசற்படியில் படுத்திருந்த எங்கள் வீட்டு நாய், இப்போ மெல்ல எழுந்து ஆசுவாசமாக உடலைக் குலுக்கி, வாலை அசைத்துக் கொண்டு என் கால்களிற்குள் வந்து நின்றபோது, அதன் தலையைத் தொட்டுத் தடவி விட்டேன். மனம் இலேசாகிக் கொண்டு வந்தது.

§§§§§

மாமா வாசித்து முடித்த அந்தச் சிறுகதையை மேசையில் வைத்து விட்டு, "சுஜா, கதை நல்லாயிருக்கு, ஆனால் உன்ரை பெயரையே இந்தக் கதாநாயகிக்கும் போட்டிருக்கிறியே?" என்றார்.

"ஏன் மாமா? பெயர் நல்லாயில்லையா? அப்ப... வேற ஒரு பெயரை மாத்திட்டால் போச்சு." நான் கூறியதும் அவர் சிரித்தார்.

"அது சரி, இப்ப எங்கேயோ போறாய் போல கிடக்குது" மாமா விடய தேவையோடு விசாரித்தார்.

"யாழ்ப்பாணத்தில ஒரு இலக்கியக் கூட்டம் மாமா... அதுதான்..." நான் கூறிவிட்டுப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்.

"சுஜா, நீ இப்பிடி இலக்கியக் கூட்டம்... இலக்கியக் கூட்டம் எண்டு அடிக்கடி யாழ்ப்பாணம் போறது எனக்கென்னவோ நல்லதாப் படயில்லை. நீ... வயசுக்கு வந்த பிள்ளை! ஊர் உலகம் ஒவ்வொண்டு சொல்லப் பிந்தாது. என்னவோ மனசில பட்டதைச் சொல்லிட்டன். நான் வாறன்." மாமா போய்விட்டார்.

நான் சிலையாக நின்றேன்.

சந்திரா ரவீந்திரன்
1986


ஈழநாடு - 1986

Friday, September 11, 2009

நூல் அறிமுகமும், ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியும்


காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில்
'நூல் அறிமுகமும், ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியும்'

காலம்: 07-11-2009
சனிக்கிழமை
பி.ப. 3.00 மணி.

இடம்:
Trinity Centre.
East Avenue,
Eastham.
London,
E12 6SG.
Eastham tube station இற்கு அருகாமை)

* சிறப்புரைகள்
* நூல் அறிமுக உரைகள்
* ஈழத்து நூல்களின் கண்காட்சி

-அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
-பிரவேசம் இலவசம்.

தொடர்புகட்கு:
முல்லை அமுதன்
34.RED RIFFE ROAD
PLAISTOW
LONDON
E13 0JX
Tel: 0208 5867783
e.mail: mullaiamuthan_03@hotmail.co.uk

Wednesday, September 09, 2009

தொப்புள்கொடி (நாவல்)

மனஓசையின் 3வது வெளியீடாக தொப்புள் கொடி நாவல்

தொப்புள்கொடி - நாவல்
ஆசிரியர்: தெ.நித்தியகீர்த்தி (Australia)
முதற்பதிப்பு: சித்திரை 2009
அட்டை வடிவமைப்பு:மூனா
தயாரிப்பு: சுவடி பதிப்பகம்
வெளியீடு: மனஓசை பதிப்பகம்

தொடர்புகளுக்கு:
Chandravathanaa
Nithyakeerthy

ISBN - "978-3-9813002-2-2"

Monday, August 31, 2009

நானும் இணையமும்

முன்கதை:
இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் உரையாடப்பட்டதற்கு அமைவாக இந்த விளையாட்டினை மு.மயூரன் தொடக்கி வைத்துள்ளார். வெறும் விளையாட்டு என்றில்லாமல் இந்த விளையாட்டுக்கு ஓர் ஆழமான நோக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் வலைபதிய வந்த கதையைச் சொல்வதன் ஊடாக வெவ்வேறு கோணத்தில் தமிழ் இணையத்தின் வரலாற்றுத் தகவல்களோடு அதற்கும் தமக்குமான உறவையும் சொல்லத் தொடங்குவார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்தக்கதைகள் தகவல்களாக ஆவணமாகப் போய்ச்சேரும்.

விதிமுறை:
1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.
2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் மூவருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்ல வேண்டும்.
மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

வலைபதிய வந்த கதை:
தினமும் இரவில் அன்றைய நாளின் நிகழ்வுகளை டயறியில் எழுதி விட வேண்டுமென்பது எனது அப்பா எனக்குக் கற்றுத் தந்த பாடங்களில் ஒன்று. அதனால் நான் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். தாயகத்தில் வாழ்ந்த போது எனது எழுத்துக்களில் சிலதை அங்கு வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி.. என்று எல்லாவற்றிற்கும் அனுப்புவேன். நான் அனுப்பிய எதுவும் பிரசுரமாகால் போனதில்லை. அந்த உற்சாகத்தில் நான் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருந்தேன்.

புலம் பெயர்ந்த பின்னும் எழுதினேன். ஆனால் புலத்தில் ஆரம்ப காலத்தில் எனது எழுத்துக்களுக்கான தளங்கள் இருக்கவில்லை. எழுதி எழுதி எனது லாச்சிகளையும், அலுமாரிகளையும் நிரப்பிக் கொண்டேன்.


1990 இலேயே எனது வீட்டுக்குள் கணினி வந்து விட்டாலும், 1993-1994 களில்தான் எனக்கு கணினியோடு பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது அதனைப் பயன்படுத்தும் முறை அவ்வளவாகத் தெரியாதிருந்தது. 1996 வரை என் பிள்ளைகளோடு சேர்ந்து தூர தேசத்தில் வாழும் எனது உறவுகளுடன் அரட்டை அடிப்பது, விளையாடுவது என்ற ரீதியில்தான் கணினியைப் பயன் படுத்தினேன்.

1997 இல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊடகங்களின் பற்றாக் குறையைக் கவனத்தில் கொண்ட எனது மகன் திலீபன், தான் ஒரு மாதாந்த சஞ்சிகையை வெளியிட விரும்புவதாகச் சொன்னான். அவனது அந்த எண்ணம் நல்லதாகவே பட்டதால் அதைச் செயற்படுத்த உதவும் முகமாக கணினியில் சில விடயங்களைப் பழக ஆரம்பித்தேன். எனது கணவர் கீறுவது, வடிவமைப்பது சம்பந்தமான விடயங்களைக் கவனிக்க நான் எழுதுவது எப்படி என்பதைக் கவனிக்கத் தொடங்கினேன். திலீபனின் முழு முயற்சியுடன் எனதும், கணவரதும் பங்களிப்புடன் "இளங்காற்று" என்ற பெயரில் அழகிய சஞ்சிகை உருவானது.

அதோடு ஆங்கில எழுத்துக்களை மட்டும் எழுதப் பழகியிருந்த நான் தமிழ் எழுத்துக்களையும் கணினியில் தட்டத் தொடங்கினேன். ஆனாலும் இப்போது போல அப்போது அது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பதுவும், வேகமாகத் தட்டுவதும் மிகச் சிரமமாகவே எனக்குத் தெரிந்தன. நான் படும் சிரமத்தைப் பார்த்த எனது கணவரிடம் ஒரு உத்தி தோன்றியது. அவர் கீபோர்ட்டின் மாதிரி ஒன்றை வரைந்து அதில் எங்கெங்கே என்னென்ன தமிழ் எழுத்துக்கள் வரும் என்பதையும் குறித்து எனது கணினிக்குப் பின்னுள்ள சுவரில் ஒட்டி விட்டார். ஏற்கேனவே ஆங்கிலத்தில் தட்டச்சத் தெரிந்த எனக்கு அதை வைத்து தமிழ் எழுத்துக்களைப் பழகுவது வெகு சுலபமாக இருந்தது. ஒரு வாரத்தில் எந்தெந்த விரல்களுக்கு என்னென்ன எழுத்துக்கள் என்பதை நான் நினைவு படுத்தி எழுதத் தொடங்கி விட்டேன். அப்போது எனக்கு பாமினி அறிமுகமாகவில்லை. Ravi A என்ற எழுத்துருவையும், நல்லூர் என்ற எழுத்துருவையும் தான் பாவித்தேன். இளங்காற்று சஞ்சிகைகளும் முழுக்க முழுக்க இந்த எழுத்துருக்களை வைத்தே உருவாகின.

அதன் பின், அதாவது 1997இன் நடுப்பகுதியிலிருந்து மெது மெதுவாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ் ஊடகங்கள் முகம் காட்டத் தொடங்கின. எனது எழுத்துக்களுக்கு அவைகள் தளமாகின. சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்ல எனக்கு ஒரு வழி கிடைத்தது.

எனது எழுத்துக்கள், பெண்களிடையே புதிய மாற்றங்களை ஏற்படுத்துமளவுக்கு பல புலம் பெயர்ந்த வீடுகளிலும் எனது கருத்துக்கள் ஒலிக்கத் தொடங்கின. சில வீடுகளில் இந்த மாற்றங்களை ஏற்க முடியாத ஆண்களால் வானொலிகள் உடைத்தெறியப் பட்டன. அப்போதுதான் கத்திக் கூறுவதை விட, எழுத்து வலிமையாக இருப்பதை உணர்ந்தேன். எனது சமூகத்தின் பல தவறான கொள்கைகளையும், செய்கைகளையும் சுட்டிக் காட்டவும், அதில் உள்ள பாதிப்புகளை அவர்களை உணர வைக்கவும் எனக்கு என் எழுத்துக்கள் உதவின.

அந்த எழுத்துக்களைச் சேமித்து எப்போதும் எவர் விரும்பிய நேரமும் பார்க்கக் கூடிய வகையில் செய்து வைக்க இணையம் என்ற ஒன்று சாத்தியமானது என்பதை 2001, 2002 களில் உணர்ந்து கொண்டேன். எனக்கென ஒரு தளத்தை உருவாக்குவது உடனடியாக எனக்குச் சுலபமானதாக இருக்கவில்லை. HTML என்றாலே என்னவென்று எனக்கு அப்போது தெரியாது.

என்னால் எனக்கென ஒரு இணையத்தளத்தை உருவாக்க முடியவில்லையே என நான் ஆதங்கப் பட்ட போது எனது மகன் துமிலன் ஒரு HTML புத்தகத்தை என்னிடம் தந்து "அம்மா இதைப் படித்துப் பாருங்கள்" என்றான்.

மெதுமெதுவாக எனக்குத் தெரிந்தளவு ஜேர்மன் மொழியோடு அவைகளைப் பார்த்தும், படித்தும், கிரகித்தும்… எனக்கென ஒரு தளத்தை உருவாக்கினேன். அது http://www.selvakumaran.com/

எனக்கென ஒரு தளத்தை உருவாக்குவதற்கு முன்னரே 2001அளவில் மோகன் அவர்களின் யாழ் இணையம் எனக்கு அறிமுகமானது. அந்த சமயத்தில் யாழ்கருத்துக்களத்தில் ஒரு சிலரே எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் காரசாரமான விவாதங்கள், சண்டைகள், கருத்து மோதல்கள்... என்று இணையத்தினூடான ஊடாடல்களுக்கும், கருத்துப்பகிர்வுகளுக்கும் அது ஒரு பெரும்தளமாக விளங்கியது. எழுதவும், வாசிக்கவும், பலவிடயங்களை அறிந்து கொள்ளவும் அது உதவியது. ஆனாலும் காலப்போக்கில் அது மோகன் என்பவரின் தனிப்பட்ட மேலாண்மையிலிருந்து விலகி பலரும் உரிமை கொண்டாடும் ஒரு தளமாக மாறியது. கருத்துமோதல்களை விட தனிமனித மோதல்களே அதிகமாயின. இந்த நிலையில் ஆரோக்கியமான விவாதங்களையோ, கருத்தாடல்களையோ அங்கு தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அதிலிருந்து மெதுமெதுவாக விலக வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. ஆனாலும் அந்த நேரத்தில் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகளின் களமாகவும், பெரிய விவாதக்களமாகவும் யாழ்கருத்துக்களம் இருந்ததை யாரும் மறந்து விடவோ, மறுத்து விடவோ முடியாது.

யாழ்கருத்துக்களத்தில் எழுதத் தொடங்கிய போதுதான் எனக்கு பாமினி அறிமுகமானது என்ற ஞாபகம். ரவியிலிருந்து பாமினிக்கு மாறிய போது சில எழுத்துக்களை எனது விரல்களுக்கு மாற்றிப்பழக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் எனது இணையத்தளத்தையும் முழுக்க முழுக்க பாமினி எழுத்துருவுடன்தான் உருவாக்கினேன். அப்போதெல்லாம் எனது இணையத்தளத்தை அலுவலகத்திலிருந்தோ, வேறு இடங்களிலிருந்தோ பார்க்கும் போது ஒன்றையுமே வாசிக்க முடியாத நிலைதான் இருந்தது. இதே போல மற்றவர்களின் தளங்களை என்னால் சரியாக வாசிக்க முடியாதிருந்தது. இது எனக்குள் எப்போதும் ஒரு எரிச்சலையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. `ஏன் எல்லோருமே ஒரு எழுத்துருவைப் பாவிக்கக் கூடாது?` என்று எனக்குள்ளே கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. நிவாரணம் தேடுமளவுக்கு என்னிடம் கணினித்துறையிலான அனுபவமோ, அறிவோ இல்லாதிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில்தான் அதாவது 2003 ஜூலை மாதத் திசைகளில் ´உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில்...` என்று காசி அவர்களின் கட்டுரை வெளியானது. அப்போது ´இது எப்படிச் சாத்தியமாகும்!` என்று ஆச்சரியப் பட்டேன்.

காசி அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு ´வலைப்பூ` என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.

வலைப்பூவில் எழுதுவதாயின் கண்டிப்பாக யூனிக்கோட் தேவைப்பட்டது. சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது. எனது வலைப்பூவிற்கு மனஓசை என்ற பெயரிட்டுக் கொண்டேன்.

யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரத்துடன் எதை விரும்பினாலும் அதை என்னால் வலைப்பூவில் பதிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது. இவைகளோடு இலவசம், சுலபமாக எதையும் இணைக்கக் கூடிய தன்மை... என்று எல்லாம் சாதகமாகவே இருந்தன. கூடவே பல விடயங்களை உடனுக்குடன் பலரின் பார்வைக்குக் கொண்டு வரவும், சந்தோசங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிந்தவைகள்.. படித்தவைகள்... என்று பல விடயங்களை தனித்தனிப் பதிவுகளாகப் பதிந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் எண்ணங்கள், கருத்துக்களை அறிந்து கொள்ளவும் ஏதுவாக இருந்தது. உலகத்தின் எங்கோ ஒரு மூலையை ஆறுதலாக வீட்டில் இருந்து தரிசிக்க முடிந்தது.

அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலைபதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் மதி கந்தசாமியின் வலைப்பதிவுகளின் தொகுப்பு http://tamilblogs.blogspot.com/ இன் உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது.

தமிழ்மணத்தின் வரவின் பின் http://tamilblogs.blogspot.com/ இன் தேவை இல்லாமற் போனது.

நான் Blogspot இல் தான் எனது முதல் வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதன் பின் வேறு பலதளங்கள் அறிமுகமாயின. ஆயினும் நான் Blogspot இலேயே இருக்கிறேன்.

அதே போல பாமினியில் எழுதி யூனிக்கோட்டுக்கு மாற்றுவது எனது வழக்கம். எனது விரல்கள் பாமினி எழுத்துருவுடன் நன்கு பரிச்சயமாகி விட்டன. மீண்டும் இன்னொரு எழுத்துக்கு மாறுவது பற்றிய எண்ணம் எனக்கு இதுவரை வரவில்லை. சில சமயங்களில் வேறு எழுத்துருக்களில் ஏதாவது தேவைப்படும் போது அதைக் கூட பாமினியில் எழுதி விட்டு சுரதாவின் புதுவையிலோ அன்றி இஸ்லாம்கல்வியிலோ மாற்றிக் கொள்வதே எனக்கு மிகுந்த வசதியாகத் தெரிகிறது.

எனது கீபோர்ட் சாதாரணமான ஜேர்மனியக் கீபோர்ட். ஆங்கிலக் கீபோர்ட்டுகளுடன் பார்க்கும் போது இதில் Ä Ü Ö என்ற எழுத்துக்கள் கூடுதலாக இருக்கின்றன. அதை விட ´ல` வும், ´ண` வும் இடம் மாறியுள்ளன. , . - போன்றவைகளும் மாறித்தான் உள்ளன. லண்டனுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கோ போகும் போது கீபோர்ட்டை பழக்கப்படுத்த எனக்கு ஒரு சில நாட்கள் தேவைப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.

வலையுலகப் பிரவேச அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்:
டிசே த‌மிழ‌ன்
சயந்தன் - சாரல்
மலைநாடான் -Kurinchimalar
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Tuesday, August 25, 2009

அமானுஸ்யங்கள்

விழிப்பு வந்து சில நிமிடங்களாகும் வரை அந்தக் கனவு நினைவில் வரவில்லை. வெளியில் இருந்து வந்த மண்வெட்டியால் வறுகி வறுகி இழுக்கும் ஓசை இரவிரவாக பனி கொட்டியிருப்பதை உணர்த்தியது. உறுமிக் கொண்டு செல்லும் கார்களின் ஓசைகள் நான் விழித்தேனோ இல்லையோ ஊர் விழித்து விட்டது என்பதைத் தெளிவு படுத்தியது. வீட்டுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் மெலிதான சத்தமும், மணிக்கூட்டின் டிக், டிக் சத்தமும், இன்னும் மின்சார இணைப்புடனான கருவிகளும் ஒருவித ஒழுங்குடனான ரிதத்துடன் ஒலித்துக் கொண்டே இருந்தன.

எட்டுமணி வரை கட்டிலில் இப்படிப் போர்த்திக் கொண்டு படுத்திருப்பது என்பது, அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை, ஐரோப்பிய வாழ்க்கையில் என்றேனும் அபூர்வமாகத்தான் நடக்கும். ஊரெல்லாம் ஒரு வைரஸ் காய்ச்சல். காய்ச்சல் என்று மட்டும் சொல்லி விட முடியாத படியான உடல் உபாதைகள். சில மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த இந்த வைரஸ் தொல்லையிலிருந்து நான் தப்பி விட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் அது என்னையும் கெட்டியாகப் பிடித்து விட்டது. கை வைத்தியத்தோடு சமாளித்து விடலாம் எனப் பார்த்து, இயலாத நிலையில் மருத்துவரை நாட வேண்டியதாகி விட்டது.

அதன் பலன் கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு நான் மீண்டும் போர்த்திக் கொண்டு படுத்து விட்டேன். நித்திரையை விட கனவுகள்தான் அந்த மூன்று மணித்தியாலங்களிலும் என்னை ஆட்கொண்டிருந்தன. இன்றைய அந்த அதிகாலைக் கனவுகளை விட அர்த்தராத்தியிரியில் கண்ட கனவு ஒன்று என்னை இன்னும் மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்தது. நன்கு நினைவு படுத்திப் பார்த்தேன்.

அது எனது அண்ணன்தான். கனவிலே அவன் என்னை இறுகக் கட்டியணைத்தான். அதுவும் மூன்று தடவைகள் போல ஞாபகம். இறந்து போனவர்கள் பேயாக அலைவார்கள் என்று பயந்த காலங்கள் ஓடி ஏதாவது ஒரு வடிவிலாவது என்னிடம் வரமாட்டார்களா என்ற ஏக்கம் நிறைந்த காலங்களோடேயே வாழ்க்கை நகர்ந்தும், ஓடியும் கொண்டிருக்கிறது. 2000இல் மரணித்து விட்ட எனது அண்ணன் என் நினைவுகளில் எப்போதுமே இருப்பது போலில்லாமல் கனவுகளில் அவ்வப்போது மட்டும்தான் வருவான். அனேகமான கனவுகளில் மௌனமாக இருந்து விட்டுப் போய் விடுவான். எப்போதாவது கனவில் பேசியிருப்பானா என்பது இன்று வரை ஞாபகத்தில் இல்லை. எமது ஊர் வீட்டின் ஏதாவது ஒரு பகுதியிலோ அன்றி ஊரின் ஏதாவது ஒரு தெருவிலோ அவனோடு நானும் இருப்பது போலவும், நடப்பது போலவும் பல கனவுகள் பல முறை வந்துள்ளன. ஆனால் இப்படியொரு கனவு இதுதான் முதல் முறை. அதுவும் என்னை மிகுந்த வாஞ்சையோடு கட்டியணைத்தான். எனக்குள் இன்னும் ஆனந்தமாகவே இருந்தது.

யாரிடமாவது இந்தக் கனவு பற்றிச் சொல்ல வேண்டும் போல இருந்தது. அம்மாவைத் தொலைபேசியில் அழைத்துப் பார்த்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. விட்டு விட்டேன். நினைவில் அந்தக் கனவு இனித்துக் கொண்டே இருந்தது. கூடவே நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

மாலையில் எனது வேலைத்தோழி தொலைபேசியில் அழைத்தாள். எனது உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு தான் ஒரு கனவு சம்பந்தமான புத்தகம் வாங்கியிருக்கிறேன் என்றாள். உடனேயே நான் எனது கனவு பற்றிச் சொன்னேன். 'பொறு பொறு. உனது கனவின் அர்த்தத்தை நான் சொல்கிறேன்' என்றவள் புத்கத்தின் சில பக்கங்களைப் புரட்டி, ஏதோ ஒரு பக்கத்தில் நிலைத்து, 'உனது சகோதரனைக் கனவில் கண்டிருக்கிறாய். மிகவும் நல்ல சைகை அது...' என்றாள். இன்னும் தொடர்ந்து சொன்னாள்.

எந்த மூடநம்பிக்கைகளையும் தூக்கி எறிந்து விடும் என் மனதும் சில சமயங்களில் ஏதேதோ நம்பிக்கைகளில் சலனப் படத் தொடங்கியது என் வீட்டில் நடந்த முதல் மரணத்தின் பின்தான். இன்னும் கூட எதையும் நம்புவதில்லை என்றாலும் சில சைகைகளை நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை. அவ்வப்போது சில உணர்த்தல்கள் என்னையறியாமலே எனக்குக் கிடைத்திருக்கின்றன. அதை எக்காரணம் கொண்டும் மறுக்கவும் முடிவதில்லை.
என்ன.. அப்படி நல்லது நடந்து விடப் போகிறது..? தமிழீழம் கிடைத்து விடப் போகிறதோ..!

ஓரிரு நாட்கள் நகர்ந்தன. அந்தக் கனவு மட்டும் மறக்காமல் எனக்குள் தித்தித்துக் கொண்டே இருந்தது. நினைவுகள் மனதுக்குள் விரிந்து விரிந்து நான் எனது கற்பனை உலகில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன். ஜேர்மனி எனக்கு மறந்து போயிருந்தது. நான் எனது அண்ணனுடனும் மற்றைய உறவுகளுடனும் ஆத்தியடி வீட்டில்;, பருத்தித்துறையின் காற்றில் மிதந்து வரும் அதற்கேயுரிய வாசனைகளுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். இடையிலே தேநீர் தேவைப்பட்டது போலும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து விட்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து பாலை எடுக்கும் போது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. எப்படியோ தடுக்கி, கைகள் மேற்தட்டுடன் மோதி பாற்பெட்டி நிலத்தில் வீழ்ந்தது. நினைவுச் சிறகுகள் பட்டென்று அறுபட நான் சட்டென்று நியத்துக்கு வந்தேன். சமையலறை நிலத்தில் கிட்டத்தட்ட ஒரு லீற்றர் அளவுள்ள பால் ஓடிக்கொண்டிருந்தது. மனசுக்குள் சுருக்கென்றது.

பயமாக இருந்தது. நெஞ்சுக்குள் குளிர்வது போல இருந்தது. மீண்டும் மனதுக்கு எட்டாத ஏதோ ஒரு உணர்த்தல். இப்படித்தான், இதே மாதிரித்தான் அன்றும் ஒரு நாள் நடந்தது. அது 1997 இல் பழைய வீட்டில் நடந்தது. அன்றும் சமையலறைக்குள் பால் ஆறாய் ஓடியது. பின்னர் ஊரிலிருந்து அம்மாவின் தொலைபேசி அழைப்பு வந்தது. எண்ணிப் பதினைந்து நாட்களுக்குள் அப்பாவின் மரணம்.

சே... என்ன... நானா இப்படி... எனக்குள் கேள்வி எழுந்தது. அப்படியொன்றும் நடக்காது. ´காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது போல...` மனதைச் சமாதானப்படுத்த முயன்றேன்.

சமையலறையைச் சுத்தம் செய்து முடித்த பின் தேநீருக்கான ஆர்வம் இருக்கவில்லை. அப்போதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணனின் மகன் பரதன் அந்த வெள்ளிக்கிழமை வன்னிக்குள் நடந்த போரில் வீரமரணம் அடைந்து விட்டான் என்று.

சந்திரவதனா
25.8.2009

Tuesday, August 11, 2009

சிதைவுகள்

நேற்று அவளைச் சந்தித்த போது அவள் கவலையாக இருப்பது போலவே தெரிந்தது. எனக்கு 9.30க்கு அப்பொயின்ற்மென்ற். அவசரமாக நடந்து கொண்டிருந்த போதே அவள் தனது 7வயது மகனுடன் என் எதிரில் வந்தாள். அதே வேகத்தில் நடந்தால்தான் குறித்த நேரத்தில் போகவேண்டிய இடத்தை நான் அடைவேன்.

ஆனாலும் அந்த முகத்தைப் பார்த்த பின் ஒரு ´ஹலோ´வுடன் சாதாரணமாகத் தாண்டிவிட என்னால் முடியவில்லை.

“எப்பிடி இருக்கிறிங்கள்?”

“பரவாயில்லை அக்கா”

சொன்ன விதத்திலேயே ஏதோ ஒரு சோகத்தின் அழுத்தம்.

“வேலை செய்யிறிங்கள்தானே?”

“அந்தச் சீனா ரெஸ்ரோறன்ற் வேலையை விட்டிட்டனக்கா? ஆனால் உதிலை இருக்கிற ரெஸ்ரோறன்றிலை இப்ப வேலை செய்யிறன். சலாட் கழுவுற வேலைதான். 8யூரோ சம்பளம் தாறான். பரவாயில்லை. மக்டொனால்ஸ், சீனாக்கடை இரண்டிலையும் எண்டால் நாள் முழுக்க வேலை சேய்யோணும். இதெண்டால் 5மணித்தியாலம்தான். அதுதான் இது எனக்கு வசதியா இருக்கு. கொஞ்சநேரமெண்டாலும் வீட்டிலை பிள்ளையளோடை நிற்கலாம்.”

கடைசியாக என்னைச் சந்தித்த போது ஏதாவது வேலை எடுத்துத் தரும்படி கேட்டிருந்தாள். இப்ப அந்த வேலையும் இருக்கிறது. ஆனாலும் அவளிடத்தில் ஏதோ ஒரு சோர்வு.

“சரி, சந்தோசமாயிருங்கோ. நான் போகோணும்.”

“அக்கா, நான் இந்தியாவுக்குப் போப்போறன்.”

“ஊருலாவா?”

“இல்லை, இல்லை. இவன் சின்னவனையும், மகளையும் அங்கை கொண்டு போய் விடப்போறன். இங்கையிருந்து கெட்டுப் போடுவினம்.”

“எந்த மகளை?”

“இரண்டாவதை”.

அவளுக்குப் 12வயது என்பது எனக்குத் தெரியும்.

“என்ன? 12வயது மகளை அங்கை கொண்டு போய் விடப் போறிங்களே. இவருக்கும் 7 வயதுதானே. அம்மா இல்லாமல்...”

“ஓ.. கொஞ்சநாளைக்கு நிண்டு எல்லாம் பழக்கிப் போட்டு வரப்போறன். அங்கை என்ரை தங்கச்சி குடும்பமா இருக்கிறாள். அவளோடைதான் விடப்போறன்.”

“ஏன்?”

“இங்கையிருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். மூத்தவன் சிகரெட் எல்லாம் குடிக்கத் தொடங்கீட்டான். பெடியளோடை பார்ட்டி, டிஸ்கோ எண்டு போயிட்டு குடிச்சிட்டும் வாறான்.”

எனக்கு அவனையும் தெரியும் 19வயது மகன்.

"அதுக்காண்டி இந்தப் பிள்ளையளைத் தனியா யாரையும் நம்பி இந்தியாவிலை கொண்டு போய் விடப் போறிங்களே? அங்கை இந்தியாவிலை ஒருதரும் சிகரெட் குடிக்கிறேல்லையே? அங்கையுள்ள பிள்ளையளும் இதுகளைப் பழகித்தானே வைச்சிருக்குதுகள்."

“இல்லையக்கா, இங்கை கூட.”

இன்னும் சொல்லிப் பார்த்தேன் அவள் ஏற்பதாய் இல்லை. நடுரோட்டில் அழுது விடுவாள் போலிருந்தது..

“என்ன இருந்தாலும் யோசிச்சுச் சேய்யுங்கோ. பொம்பிளைப்பிள்ளை. அதுவும் 12வயசு. அம்மா இல்லாமல் தனிய இன்னாரு இடத்திலை... அதோடை உங்கடை கணவரும் மற்ற இரண்டு பிள்ளையளும் இங்கை, நீங்கள் இந்த இரண்டு பேரோடையும் அங்கேயும் இங்கேயும் எண்டு...”

நான் என்ன சொன்னாலும் அவள் மாற மாட்டாள் போலத் தெரிந்தது. எனக்கு நேரமாகியது. நான் விடைபெற்றேன்.

Friday, June 26, 2009

கவிதைகளால் என்னோடு பேசியவன்



அன்பையும், பாசத்தையும் பொழியும் ஒரு சில கவிதைகளோடு, பல போர்க்காலக் கவிதைகளையும், மாவீரர் சம்பந்தமான கவிதைகளையும் கொண்டு,
92 கவிதைகளுடன் வெளிவருகிறது தீட்சண்யம் கவிதைத் தொகுப்பு.
எழுத முனையும் போதெல்லாம் வார்த்தைகளுக்கு முன் முந்திக் கொண்டு பொலபொலவென்று கொட்டி விடுவது கண்ணீர்த்துளிகள்தான். அந்தத் துளிகளில் பிரிய உறவொன்று இந்த உலகத்திலேயே இல்லை என்ற சோகம் நிறைந்திருக்கிறது. மரணத்தின் வலி ஒட்டியிருக்கிறது. எத்தனை தரந்தான் கண்ணீராகக் கொட்டி விட்டாலும் விட்டுப் போகாது மனதின் ஒரு ஓரமாக ஒட்டியிருக்கும் சோகத்தின் வலி அது.
அண்ணன்..
கூடப் பிறந்தவன். என்னோடு மிகப்பிரியமாக இருந்தவன். இனி அவன் இல்லை என்று ஆன பின்னும் நினைவுகளோடு எனக்குள்ளே வாழ்பவன். இன்று இந்த உலகத்தின் எந்த அந்தத்திலும் அவன் இல்லை என்ற உண்மை ஒரு வலியாக விவரிக்க முடியாத வேதனையாக அடிமனதின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது. அதை எந்தப் பொழுதிலும் தூக்கி எறிந்து விட முடியவில்லை. இறந்து விட்டான். போய் விட்டான். இனிக் கிடைக்க மாட்டான்... என்ற பல ஏமாற்றங்களையும் தாண்டி அவனோடான நினைவுகள் மீண்டும் மீண்டுமாய் மனதுள் விரிந்து கொண்டிருக்கின்றன. இன்று மட்டும் என்றில்லை. இந்த ஒன்பது வருடங்களில் பல பொழுதுகளில் அவனுடனான சின்னச் சின்ன சம்பவங்கள் கூட மனசுக்குள் எட்டிப் பார்த்து கண் சிமிட்டியிருக்கின்றன. சில சிறியதாகத் தொடங்கி பெரிய படமாக விரிந்தும் இருக்கின்றன. அவைகளில் சில சுகமானதாகவும், சில தாங்க முடியாத சோகத்தின் கனமானதாகவும் முடிந்திருக்கின்றன.

இப்போதும் அப்படித்தான்.
அவனது கவிதைகளைத் தொகுக்கும் போதெல்லாம் நான் எனக்குள் மருகி, அவன் நினைவால் உருகி நொய்ந்து போயிருந்தேன். அதனால்தானோ என்னவோ 2002இல் பதிவாக்க நினைத்த இந்தத் தொகுப்பு பதிவாவதற்கு 2009 வரை சென்று விட்டது.

2002இல் நினைத்தது 2009இல் நிறைவேறுகிறது.

அப்போது 2002 இலேயே இதில் பல கவிதைகளைத் தொகுத்து மாதிரி வடிவமாக்கி வன்னி வரை கொண்டு சென்றேன். அதன் பிரதிகளை வன்னியில் மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன், அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலிகளின் குரல் ஜவான், மறைந்த கவிஞர் நாட்டுப்பற்றாளர் நாவண்ணன், செஞ்சோலை ஜனனி ஆகியோருக்குக் கொடுத்தேன். எல்லோருமே இது புத்கமாக வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டினார்கள்.
அங்கு கிடைத்த மேலதிக கவிதைகளையும் இத்தொகுப்பில் இணைத்து, மீண்டுமாகச் செய்து விட்டு அனுப்புவதாகக் கூறி ஜேர்மனி திரும்பிய பின்னும் கவிஞர் நாவண்ணன் இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு முனைப்போடு செயற்பட்டார். இலக்கியச் செல்வர் முல்லைமணி (வே.சுப்பிரமணியம் S.l.E.A.S), ஆசிரியர் திரு.க.ஜெயவீரசிங்கம் (BA) வற்றாப்பளை போன்றோரிடம் அணிந்துரை, முகவுரை எல்லாம் எழுதுவித்து வாங்கி எனக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அந்த நேரத்தில் கவிஞர் நாவண்ணன் அவர்கள் வாழும் போது இந்தப் புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதற்கான பொசிப்புகள் ஏனோ இல்லாமற் போய் விட்டன.
இந்தத் தொகுப்பை மீண்டும் மீண்டுமாய் பல தடவைகள் படித்து, தொகுத்து, மீண்டும் வடிவமைத்து பொங்கி வரும் சோகத்தோடும், அணை உடைக்கும் கண்ணீரோடும் பதிப்பாக்குகிறேன்.

சுவடி பதிப்பகத்தாரின் தயாரிப்பில்,
´மனஓசை` வெளியீடாக
வெளிவருகிறது ´தீட்சண்யம்` கவிதைத் தொகுப்பு


THEEDCHANYAM (Poems)
Author: S.T.Premarajan (Theedchanyan)
(Thiyagarajah Premarajan)

First Edition: May 2009
© by Manaosai Verlag
© Chandravathanaa Selvakumaran
Email: chandra1200@gmail.com
Compilation: Chandravathanaa Selvakumaran
Illustrations & Cover design: Muunaa
Production: Chuvadi, Chennai - 600 005, India
Printed by:
Chennai Micro Print (P) Ltd, Chennai – 29

ISBN- 978-3-9813002-1-5

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite