Monday, June 13, 2005

புத்தகங்களோடு...2


ரா.சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் கல்கியில் தொடராக வந்தது. அம்மா சேர்த்து புத்தகமாகக் கட்டி வைத்திருந்தா. அக்கதையை நான் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்.. கதைகள் போல இருதடவைகள் வாசித்தேன்.

இந்தப் பெரிய பெரிய அரச கதைகளை நான் வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னமே 60வதுகளின் இறுதிப் பகுதியிலோ, அல்லது 70வதுகளின் ஆரம்பத்திலோ தெரியவில்லை. எங்கள் வீட்டில் தமிழ்வாணனின் கல்கண்டு அறிமுகமாகியது. அப்போதுதான் அது வெளிவரத் தொடங்கியதோ அல்லது அம்மாவுக்கு அப்படியொரு சஞ்சிகை வெளிவருவது அப்போதுதான் தெரிய வந்ததோ என்பது எனக்குத் தெரியாத விடயம்.

கல்கண்டு எங்கள் வீட்டில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதில் வரும் தொடர்கதைகளை வாசித்து விட்டு, அடுத்த கிழமைக்காகக் காத்திருப்பது சிறுவர்களான எங்களுக்கு யுகங்களைக் கடப்பது போலிருந்தது. அண்ணன், நான், பெரியதம்பி மூவருமே போட்டி போட்டு வாசித்தோம். யார் முதலில் என்று சண்டை பிடித்தோம். விலக்குத் தீர்ப்பதே அம்மாவுக்குப் பெரும் பாடாய் இருந்தது. துப்பறியும் சங்கர்லால், நம்பூதிரி.. போன்ற கல்கண்டுக் கதைகளின் நாயகர்கள், வில்லர்கள் எல்லோருமே எங்களுடன் மிகவும் ஐக்கியமாகி விட்டார்கள். குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் அவர்கள் பற்றிப் பேசினோம். கதைகளை அலசினோம். வில்லன் வெளிக்கேற்றில் வரும் போதே, உள்ளிருக்கும் அறையிலிருந்து சங்கர்லால் அவர் வருகையைக் கண்டு பிடிப்பதைப் பற்றி நிறையக் கதைத்தோம். வியந்தோம். அப்போது தமிழ்வாணன் எங்கள் வீட்டில் பிரியமாகப் பேசப்படும் ஒருவராக இருந்தார். கல்கண்டில் வரும் துணுக்குச் செய்திகளைக் கூட நாங்கள் விட்டு வைப்பதில்லை. நாங்கள் மட்டுமென்ன அம்மாவும் கல்கண்டுக்காய் காத்திருப்பா.

அப்பாச்சி வீட்டுக்குப் போனால், அங்கே எனது சித்தப்பாமாரின் கேத்திரகணிதம், தூயகணிதப் புத்தகங்களுக்கிடையே பொம்மை அம்புலிமாமா.. போன்ற புத்தகங்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். எனக்கு அம்புலிமாமாக் கதைகளில் அவ்வளவான ஈடுபாடு இல்லாவிட்டாலும் "தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான்" என்ற சித்தப்பாவின் வாய்ப்பாட்டைக் கேட்டுக் கொண்டு அவைகளை வாசித்து முடித்து விடுவேன். குட்டிச்சித்தப்பா ஒரு எம்.ஜி.ஆர் பைத்தியம். வீடு முழுக்க அது முத்திரை குத்தப் பட்டிருக்கும். ஆனாலும் சினிமாப் படங்களைப் பார்த்த அளவுக்கு சினிமாச்செய்திகளை வாசிப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. பொம்மையில் உள்ள படங்களைப் பார்த்து விட்டு, ஏதாவது சினிமாப்பாடல்கள் இருந்தால் அவைகளையும் மனப்பாடம் செய்து விடுவேன். மேற்கொண்டு சினிமா சம்பந்தமாக நான் வாசிப்பதில்லை.

இதை விட எங்கள் வீட்டிலும் சரி, அப்பாச்சி வீட்டிலும் சரி ரொபின்சன் குரூசோ சிந்துபாத்.. போன்ற ஆங்கிலக் கதைப்புத்தகங்கள் நிறைய இருக்கும்.

சுந்தரியும் ஏழு சித்திரக்குள்ளர்களும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மாயவிளக்கு, சிந்திரில்லா... போன்ற கதைப்புத்தகங்கள் முதலில் ஆங்கிலத்திலேயே கிடைத்தன. பின்னர் அவை பாடசாலையிலும் தமிழில் சொல்லப் பட்டன.

பஞ்சதந்திரக்கதைகள் பெரிய புத்தகமாக வீட்டில் இருந்தது. அக்கதைகளை நான் வாசிக்க முன்னரே அப்பா ஒரு புறமும், அம்மா இன்னொரு புறமுமாகச் சொல்லி விட்டார்கள். ஆனாலும் மீண்டும் அவைகளை வாசித்தேன்.

ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் திருக்குறள் மனனப்போட்டி, எழுத்துப் போட்டி இரணடிலுமே பரிசில்களைப் பெற்றுக் கொள்ளுமளவுக்கு திருக்குறளை முழுமையாக மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.

மகாபாரதம், இராமாயணம் இரண்டையுமே எனது அப்பாவிடம்தான் வாசித்தேன். அவ்வப்போது துண்டுதுண்டுகளாக எங்காவது தட்டுப் பட்டவைகளை புத்தகம் வழியே வாசித்திருந்தாலும், முழுமையாக அக்கதைகளை அப்பாதான் கொஞ்சங் கொஞ்சமாகச் சொல்லி முடித்தார். கூடவே ஊரில் நடைபெறும் சப்பறத் திருவிழாவிலோ, அல்லது சிவராத்திரி இரவுகளிலோ நடைபெறும் கதாகலாட்சேபம், வில்லுப்பாட்டு போன்றவைகளுக்கு என்னையும் எனது சகோதரர்களையும் அழைத்துச் சென்று மகாபாரத, இராமாயணக் கதைகளை மனதில் பதிய வைத்தார். அப்பா எப்போதுமே இராவணன் பக்கம்தான்.

இது ஒரு புறம் தன்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறத்தில் பாடசாலை வாழ்க்கையோடு கதைப்புத்தகங்களும் உலாவின. பாடசாலையில் கதைப் புத்தகங்கள் வாசிப்பதற்கு ஆசிரியர்களின் அனுமதி என்பது இருந்ததில்லை. அளவுக்கதிகமான எந்தக் கட்டுப்பாடுகளும் யாரையும் கட்டிப் போடுவதில்லைத்தானே! எல்லா மாணவர்களையும் போலவே நானும் களவாகக் கதைப்புத்தகங்களைத் தாராளமாக வாசித்தேன்.

பண்டமாற்றுப் போல மாணவிகள் மாற்றி மாற்றிப் படித்த புத்தகங்களில் அதிகப் படியான எண்ணிக்கைக்குரியவை இந்தியாவிலிருந்து வரும் இந்திய எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட ராணிமுத்து வெளியீடுகளும் எமது தாய்மண்ணில் வெளியாகும் தாயக எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட வீரகேசரி மித்ரன், வெளியீடுகளுமே. இந்த வெளியீடுகளினூடு நான் வாசித்துத் தள்ளி விட்டவை ஏராளம். இப்படி ஒரு பிரசுரமாகத்தான் செங்கைஆழியானின் வாடைக்காற்றும் என் கைக்கு வந்தது.

- தொடரும் -

சந்திரவதனா
13.6.2005

3 comments :

பிச்சைப்பாத்திரம் said...

////ரா.சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் கல்கியில் தொடராக வந்தது. அம்மா சேர்த்து புத்தகமாகக் கட்டி வைத்திருந்தா///////


நான் என் புத்தகப்பதிவில் எழுத மறந்து விட்ட பல விடயங்களில் இந்த நாவலும் ஒன்று. எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருக்கிருந்த போது இந்த பைண்டு நாவல் எப்படியோ எங்கள் வீட்டுக்குள் வந்து அடைக்கலமாகியது. குறைந்தது பதினைந்து தடவையாவது படித்திருப்பேன். ரங்கமணி, திரிவேணி, தீட்சிதர், வெங்கி, சாந்தி, என்று இன்னும் மறக்க முடியாத பாத்திரங்கள். ......

Chandravathanaa said...

உண்மைதான் சுரேஷ் கண்ணன்.
அவர்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்தான்.
பதினைந்து தடவைகள் படித்தீர்களா...? நானும் பல புத்தகங்களை இரண்டு, மூன்று, நான்கு தடவைகள் என்று படித்திருக்கிறேன்.
எனது தங்கையின் நிழல்கள் சிறுகதைத் தொகுப்பைத் தவிர வேறு எதையும் 15முறை படிக்கவில்லை.

ஆனால் இப்புத்தகங்கள் எல்லாம் மீண்டும் எனக்குக் கிடைக்குமாயின் அத்தனையையும் வாசிக்க முயற்சிப்பேன்.

சின்னக்குட்டி said...

//.சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் கல்கியில் தொடராக வந்தது//


சு நல்லபெருமாள் interview


r.s.nallaperumal interview

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite