Monday, October 16, 2006

நினைவுகள் சிட்டுக்குருவிகளாய்...

மனசின் இடுக்குகளில் திட்டுத் திட்டாய் பயம் ஒட்டியிருக்க, என் வீட்டுப் பிச்சிப்பூ மரத்தில் குந்துவதும், நெல்லி மரத்தை அண்ணாந்து பார்ப்பதுவும், சிதம்பரத்திகளில் கெந்துவதுமாய்... நினைவுகள் சிட்டுக்குருவிகளாய் சிறகடித்துக் கொண்டிருந்தன. நான் எனது உடமைகளுடன் பேரூந்தினுள் நின்றேன்.

கிளிநொச்சி வெண்புறா நிலையத்திலிருந்து புறப்பட்டதில் இருந்து இதுவரையிலான பொழுதுகளின் வெயில் குளிப்பிலும், நிச்சுதனுடனான மோட்டார் சைக்கிள் பயணத்தின் அலுப்பினிலும் உடல் களைத்திருந்தது. மீண்டும் மீண்டுமாய் வேர்த்ததில் முகத்தில் ஏதோ ஒன்று படர்ந்து காய்ந்திருப்பது போன்ற உணர்வு தோன்றியது. தாகம் தண்ணீருக்காய் ஏங்க வைத்தது.

ஜேர்மனியில் பிள்ளைகளை விட்டு விட்டு வந்து, கிளிநொச்சியில் கணவரையும் விட்டு விட்டு நான் மட்டுமாய் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் என் வீடு நோக்கிச் செல்கிறேன். இடையிடையே என் மன இடுக்குப் பயங்கள் எட்டிப் பார்ப்பதில் நெஞ்சு திக்கிட்டுத் திக்கிட்டு அடங்குகிறது.

"நீங்கள் வெளிநாட்டிலை இருந்து வாறிங்களோ..?"

பேரூந்தின் நெரிசலுக்குள் உடமைகளோடு தள்ளாடித் தளர்ந்து நின்ற என் முகத்தில் ஏதாவது எழுதி ஒட்டியிருந்ததோ என்னவோ..! பக்கத்தில் நின்றவன் கேட்ட போது தடுமாறி "ஓம்" என்றேன். வரணி, கொடிகாமம்... என்று பேரூந்து தாண்டிக் கொண்டிருந்தது. வெளியில், கிளிநொச்சி போல வரண்டில்லாமல் பச்சை, பச்சையாய்... குளிர்ச்சியாய் `மா´ க்களும், `தென்னை´களும்... மிக மிக அழகாக... போரின் வடுக்கள் எதுவுமே தெரியாமல் உயிரோட்டமாகத் தெரிந்தன.

"கனகாலத்துக்குப் பிறகு வாறிங்களோ..?"

"ஓம்.. 16 வருசத்துக்குப் பிறகு வாறன்.
ஏன்.. எப்பிடி... அப்பிடிக் கேட்கிறீங்கள்..?"

"ஏதோ..! உங்கடை முகத்தைப் பார்த்தாலே தெரியுது. பயம் ஆர்வம் இரண்டும் உங்கடை கண்ணிலை இருக்குது."

இவனென்ன மனம் பார்க்கும் கண்ணாடி வைத்திருக்கிறானோ..? மனதுக்குள் வினாவினேன்.

"எந்த இடத்துக்குப் போறிங்கள்? உங்கடை... ஆராவது இங்கை....?"

அவனது கேள்வி மாவீரராக.. யாராவது என்பது போலவே எனக்குப் பட்டது. எனது தம்பிமார் மாவீரர் என்பதைச் சொல்வது சில சமயம் எனக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.. ஒரு கணம் உள்ளுணர்வு எச்சரிக்க "இல்லை... ஆத்தியடியிலை என்ரை வீடிருக்கு. அங்கைதான் போறன். தங்கைச்சி இருக்கிறா." என்றேன்.

சடாரென இரண்டு சீற்றுக்கு முன் இருந்த இளைஞன் திரும்பி "ஆத்தியடிக்கே போறிங்கள்? நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறன். ஓராங்கட்டையிலை இருந்து சூட்கேசுகளைத் தூக்கிக் கொண்டு வந்து தாறன்." என்றான்.

நிட்சயம் அவன் எனது தூரத்து உறவினர்களில் ஒருவனாக என் ஊரவனாகத்தான் இருப்பான். ஆனாலும் ரவுணுக்குப் போனால் ஓட்டோ பிடித்துக் கொண்டு சுலபமாக வீடு போய்ச் சேர்ந்து விடலாம். ஏன் யாரிடமாவது கடமைப் பட வேண்டும் என்ற நினைப்பில் நன்றி சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.

பேரூந்து நெல்லியடிச் சந்தியையும் தாண்டிய போது மனசுக்குள் இனம் புரியாத படபடப்பு. வந்து விட்டேன் என்ற நம்ப முடியாத ஒரு உணர்வு. கிராமக்கோட்டையும் கடந்து, மணியம் மாஸ்டரின் ரியூற்றரியைக் கடந்து.. ஓராங்கட்டையடிக்கு வந்த போது உதவுவதாகச் சொன்ன இளைஞன் இறங்கிக் கொண்டான்.

ஓராங்கட்டைச் சந்தி வீடு, மாமாவின் வீடு. முன்னர் கலகலத்துக் கொண்டிருந்த அந்த மெத்தை(மாடி) வீடு களையிழந்து போய் தெரிந்தது. பேரூந்து புறப்பட்டதுந்தான் சந்தியின் மற்றப்பக்க மூலைக் காணிக்குள் கேணல் சங்கரின் பெயர் எழுதிய கொடி மரத்தோடு சரிந்திருந்தது தெரிந்தது. எனக்குள் எழுந்த கேள்விக்கு, முதலில் கதை கொடுத்தவன் பதில் தந்தான். "ஆமி கோவத்திலை எல்லாத்தையும் அடிச்சு விழுத்திப் போட்டான்."

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறானோ? அவனைத் தீர்க்கமாகப் பார்த்தேன். தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

மருதடியையும் தாண்டிய பேரூந்து பருத்தித்துறை ரவுணுக்குள் வந்து நின்ற போது எனக்கு வேறெங்கோ நிற்பது போன்ற பிரமையே தோன்றியது. களைத்து விழுந்து வெளியில் இறங்கிய போது மந்திகள் போல மரங்களிலும் மதில்களிலும் சீருடை துப்பாக்கி, சகிதம் சிங்கள இராணுவத்தினர் அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் இருப்பவர்கள் கூட என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். ஏளனமா, நட்பா என்று பிரித்தறிய முடியாத சிரிப்புகள்.

நியூ மார்க்கற்றைக்(புதிய சந்தை) காணவில்லை. நடுவெல்லாம் வெளியாய், சுற்றி வரக் கடைகள் என்று இருந்தன. முந்தைய அழகையோ கலகலப்பையோ அங்கு காண முடியவில்லை. ஏதோ ஒரு வெறுமை என்னையும் தொற்றிக் கொண்டது. முன்னர் இல்லாத ஓட்டோக்கள்(முச்சக்கர வாகனம்) மட்டும் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருந்தன. சில நிறுத்தியிருந்தன. நிறுத்தியிருந்த ஒரு வாகனச் சாரதியை அழைத்து எனது வீட்டு முகவரி சொல்லிப் போக வேண்டும் என்றேன். 500ரூபா என்றான். ஏறிக் கொண்டேன்.

பத்திரகாளி அம்மன் கோவிலடியால் ஓடக்கரை வழியாக தங்கப்பழத்தின் சைக்கிள் கடையைத் தாண்டிய போது "நீங்கள் பிரபாக்கா வீட்டையோ போறிங்கள்?" சாரதி கேட்டான். "ஓம்" என்றேன். "அப்ப நீங்கள் மொறிசின்ரை அக்காவோ?" "ஓமோம்." ஊர் நிலைமைகளையும் சொல்லிக் கொண்டு வந்தான்.

ஹாட்லிக் கல்லூரி வீதியில் ஆத்தியடியை நோக்கி வாகனம் விரைந்த போது மனசு பறந்தது. இன்னதென்று சொல்ல முடியாத உணர்வில் கண்கள் பனித்தன.

ஆத்தியடிதான் எனது ஊர். அங்கே ஆலும் அரசும் தெற்கு வீதியை நிறைத்து நிற்க, அலரிகளால் எல்லை போட்டு அழகான அளவான புனிதமான ஆத்தியடிப் பிள்ளையார் கோயில். அத்திமரத்தில் பிள்ளையார் தோன்றி, கல்லிலே கற்பூரம் கொழுத்தி வழிபடப்பட்ட இடந்தான் பின்னர் ஊர் கூடி உணர்வோடு வழிபடும் இடமாகி அத்திமரப் பிள்ளையாரினால் ஆத்தியடி என்ற ஊரானதாக அம்மம்மா சொல்லியிருக்கிறா. ஆத்தியடி எனது ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குள் அளவிலா ஆனந்தம்.

சப்பரம் என்றால் என்ன, தேர் என்றால் என்ன, சூரன் போர் என்றால் என்ன, அந்தப் பெரிய வடக்கு வீதியில் சில மணித்தியாலங்கள் தரித்து மேளக்கச்சேரியும், நாதஸ்வரமுமாய் நெஞ்சை நிறைத்து... மறக்க முடியாத நினைவுகள். அப்பாவின் கைபிடித்து அந்த வீதியில் நடந்ததிலிருந்து என் பிள்ளைகளை என் கையில் பிடித்து அந்த வீதியில் நடந்தது வரை எல்லாமே இனிமை.

வடக்கு வீதியில் கோயிலை ஒட்டிய பூங்காவனம். அது என்றும் நறுமணம் வீசும் நந்தவனம். திருவிழா இல்லாத காலங்களில் ஆத்தியடி இளைஞர்களின் விளையாட்டு மைதானமும் அந்த வடக்கு வீதிதான். காற்பந்து என்றால் என்ன, கைப்பந்து என்றால் என்ன அவர்கள் கூடிக் குதூகலிக்கும் இடம் அது.

தெற்கு வீதியில் ஆல், அரசுகளின் கீழ் பிரமாண்டமான நீளமான செதுக்கப் பட்டது போன்ற கற்கள். அவைகளில் நான் சின்னப் பெண்ணாக இருந்த போதுதான் இருந்திருக்கிறேன். வளர்ந்த பின் அவை பெண்களுக்குச் சொந்தமில்லை. ஆண்களின் சொத்துக்கள் அவை. அந்தக் கற்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த இளைஞர்கள் மேல் எனக்குப் பொறாமை வரும்.

ஆத்தியடி என்றாலே கண்முன் தோன்றும் பிள்ளையார் கோயிலை விட்டுச் சந்திக்கு வந்து, கிழக்கே நோக்கினால் கோயில் ஒழுங்கை விநாயகர் முதலியார் வீதியை நோக்கி வளைந்திருக்கும். வெள்ள வாய்க்காலோடு உள்ள சந்திக் கிணற்றிலே கோவணத்துடன் யாராவது குளித்துக் கொண்டிருப்பார்கள். அனாதரவாய் நிமிர்ந்திருக்கும் ஆவுரஞ்சிக் கல்லில், எப்போதாவது யாராவது ஒருவர் முதுகு தேய்த்துக் கொண்டிருப்பார்.மாடுகள் பக்கத்துத் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும். பனைகளில் இருந்து கொட்டிய பாளைகளும் பன்னாடைகளும் ஒழுங்கை முழுவதும் கோலம் போட்டிருக்கும்.

தெற்கே நோக்கினால் வடமராட்சி வீதி தெரியும். வீடுகளைப் பார்த்தால் மாமரம் இல்லாத வீடுகள் இல்லை. வேலிகள் எல்லாம் பூவரசும், கிளிசறியாவும், வாதனாராயணியும், ஒதியுமாகப் படர்ந்திருக்க, இடையிடையே சிதம்பரத்தி சிவந்திருக்கும். ஆங்காங்கு பாவாட்டைகளும் பரந்திருக்கும்

மேற்கு நோக்கினால் ஆத்தியடி ஒழுங்கை. முதலிலே தெரிவது வெறுங்காணியில் தனி ஒரு புளிய மரம். அதைச்சுற்றி நான்கைந்து பனைமரம். வேலியெல்லாம் பாவட்டையும், அண்ணாமுண்ணாவும். புளியின் அடியில் பெரிய பாம்புப் புற்று. அடிக்கடி உழுத்தம் பிட்டு மணக்கும். நாகபாம்புதான் அதற்குள்ளே வாழ்வதாய் ஆத்தியடி மக்களுக்கு அபாரமான நம்பிக்கை. விருட்சமாய் காணியை நிறைத்திருக்கும் அந்தப்புளி காய்ப்தே இல்லை. பூக்கும். சருகாகி விடும்.

வடக்கே நோக்கினால் ஹாட்லிக் கல்லூரி வீதி நீண்டு தெரியும். ஆர்ப்பரிக்கும் கடலலையின் ஒலி, ஒரு தாலாட்டுப் போலக் காதில் விழும். சற்றுத் தள்ளி கண்களைச் சுழற்றினால் வடக்கு வீதியைத் தாண்டி பனைகள், பனைகள்... எழுதி முடிக்க முடியாத அழகான சின்னஞ்சிறிய ஊர். அங்கு வாழக் கொடுத்து வைக்காத என்னை அது வரவேற்றதா? தெரியவில்லை.

மேற்கு நோக்கிய அந்த ஆத்தியடி ஒழுங்கையில் முச்சக்கர வண்டி நுழைந்த போது அந்தப் புளிய மரத்தைக் காணவில்லை. மூச்சு முட்டித் திணறும் படியாக ஒரு பெரிய மாடிவீடு காணியை முழுவதுமாக நிரப்பிய படி முளைத்திருந்தது. என் வீட்டின் முன் வந்து இறங்கிய போது கேற்றில் பெரிய மாங்காயப்பூட்டு தொங்கியது.

சந்திரவதனா
16.10.2006

2002 இல் எனது தாயகம் நோக்கிய பயண அனுபவங்களை எழுதத் தொடங்கினேன். ஆறுக்கு மேல் அது தெடராமலே நின்று விட்டது. இப்போது மீண்டும் தொடர்கிறது.

தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4
தாயகம் நோக்கி - 5
தாயகம் நோக்கி - 6

இன்னும் தொடரும்

16 comments :

சின்னக்குட்டி said...

நல்லதொரு தாயக பயண நினைவு பகிர்வு... அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... ஹாட்லியில் மழைக்கு ஒதுங்கியதால் நீங்கள் பதிவில் கூறிய இடங்கள். எனக்கு பரிச்சியமானது தான்

அத்துடன் குணசீலன் என்பவர் ஆத்தியடியை சேர்ந்தவர் என்னோடு படித்தவர்..பிற்காலங்களில் இந்தியாவில் படித்தவர்..

காட்லியில்... எங்களுக்கு சீனியர் ஆக இருந்த ஓல் றவுண்ட் கிரிக்கட் வீரர் செந்திவேல் ஊரும் ஆத்தியடி....

சோழியான் said...

ஒருவாறாக ஊருக்கு வந்தாச்சா.. இனி விரைவாக தொடரும் என நினைக்கிறேன்.. நாடு மாறி ஊர் மாறி இப்ப களைப்பெல்லாம் தீர்ந்திருக்கும்தானே?! :))

Chandravathanaa said...

சின்னக்குட்டி
கருத்துக்கு நன்றி.

நீங்கள் குறிப்பிடும் குணசீலன் சிறாப்பரின் மகனாக இருக்க வேண்டும். அவர்களில் மூன்று சீலன்கள்.
குணசீலன், ஜெயசீலன், இன்னொரு சீலன். பெயர் மறந்து விட்டது. இவர்களில் ஜெயசீலன் எனது அண்ணனுடன் படித்ததாக ஞாபகம்.
இன்னொரு சீலன் தம்பியுடன். ஆனால் ஜெயசீலன் அமெரிக்காவில் ஒரு விபத்தில் இறந்து விட்டதாகப் பின்னர் கேள்விப் பட்டேன். சரியான விபரம் தெரியாது.

நீங்கள் குறிப்பிடும் செந்திவேலின் வீடு எனது வீட்டிலிருந்து ஓரிரு வீடுகள் தள்ளியே.
எல்லோரும் உறவினர்களே.

நீங்கள் எந்த வருடம் ஹாட்லியில் படித்தீர்கள்?

Chandravathanaa said...

இராஜன் முருகவேல்

வரவுக்கு நன்றி.
நான் அதைத் தொடர வேண்டும் என்று விரும்பி உற்சாகம் தந்தவர்களுள் நீங்களும் ஒருவர்.
அதற்காவும் நன்றி.

Iniyan said...

Akkaa, rompa nalla eluthuringa....aduttha pathivukku kaathirukkiren.

Mayooresan said...

//பேரூந்து நெல்லியடிச் சந்தியையும் தாண்டிய போது மனசுக்குள் இனம் புரியாத படபடப்பு. வந்து விட்டேன் என்ற நம்ப முடியாத ஒரு உணர்வு. கிராமக்கோட்டையும் கடந்து, மணியம் மாஸ்டரின் ரியூற்றரியைக் கடந்து.. //
வாசிக்கும் போது இனம்புரியாத சந்தோஷம் கலந்த வேதனையாக இருக்கின்றது. 2002 ஜூன் இல் இருந்து கிட்டத்தட் 2004 ஜனவரி வரை பெருமளவுகாலம் பருத்தித்துறையிலேயே இருந்தேன். எனது உயர்தரத்தை அங்கு சென்று ரியூசனில் படித்தேன் (முதற்தடவை திருகோணமலையில் படித்து எடுத்தேன் இரண்டு S தான் தேறியது). ஒவ்வொரு நாளும் நான் சைக்கிள் மிதித்து நெல்லியடி பீக்கொண் டியூசனிற்கு செல்லும் வழி இது..... என்னால் மறக்கவே முடியாது இனி எப்ப போவனோ தெரியேல!!

இரண்டு வழியால போகலாம் (உங்களுக்கு நான் சொல்லியே தெரியோனும்!!!) ஒண்டு பொதுவாக 750 இலக்க யாழ்ப்பாண பஸ் செல்லும் பாதை மற்றது மாலி சந்தியில் திரும்பி உள் வீதியால் அல்வாயூடு வருவது. நான் அதிகம் விரும்புவது இரண்டாவது பாதைதான். காரணம் அதில் ஒரு அழகான என் வகுப்புப் பெட்டையும் வருவார் ;-). வீட்டில் அதுதான் கிட்ட என்று சொல்லிவிடுவேன்...

இரண்டு பாதைகளும் அந்த பாதையில் நான் பெற்ற அனுபவங்களும் மறக்க முடியாதவை. அந்தி மங்கும் நேரத்தில் வெங்காயத் தோட்டங்களினூடு சைக்கிள் ஓடி வருவது இன்னும் மறக்க முடியாது. நெல்லியடி, வறனிச்சந்தி, மந்திகைச் சந்தி, கந்த முருகேசனார் சிலை, அல்வாய், அல்வாய் முத்துமாரி அம்மன் கோவில், கிராமக் கோட்டடி, ஓராங்கட்டைச் சந்தி........ சொல்லிக்கொண்டே போகலாம். யாழ்ப்பாணத்தில் ஏதோ ஒரு மண்வாசனை இருக்கின்றது. நான் 21 வருடங்கள் திருகோணமலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு வருடக்காலப்பகுதி என் நினைவிலிருந்து என்றும் அகலாது. பசுமை என்பதைவிட அதி பசுமையான நினைவுகள்.....

//நியூ மார்க்கற்றைக்(புதிய சந்தை) காணவில்லை.//
நான் சென்றபோதும் இது இருக்கவில்லை. ஆயினும் யுத்தத்தில் அழிந்து சில சிதைவுகளே இருந்ததாம். பின்பு மிகுதிச் சிதிலமும் வீண் குப்பை என்று உடைத்து அகற்றப்பட்டதாம். இப்போதும் அந்த கட்டடத்தின் அத்திவாரத்தை அங்கு பார்க்கலாம்..

//பத்திரகாளி அம்மன் கோவிலடியால் ஓடக்கரை வழியாக //
அப்ப எங்கட வீட்டைத்தாண்டித்தான் போயிருக்கிறியள்.... பத்திரகாளி கோவில் வீதியிலதான் எங்கட வீடு.. ஓடக்கரை வீ.எம் ரோடு சந்தி போக முதல் வர்ற நாகலிங்க முதலியார் வீதிச் சந்திக்கு கிட்டதான் எங்கட வீடு இருக்குது...

அடுத்த பதிவிற்காக மூச்சுப்பிடித்து காத்திருக்கின்றேன் எழுதுங்கோ! ஊருக்குப் போன சந்தோஷம் வாசிக்கேக்க வருகுது!!!!

enRenRum-anbudan.BALA said...

அருமையான நினைவலைகள், தொடர்ந்து எழுதுங்கள் !

புலம் பெயர்ந்தபோது, மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

சின்னக்குட்டி said...

//பத்திரகாளி அம்மன் கோவிலடியால் ஓடக்கரை வழியாக //
அப்ப எங்கட வீட்டைத்தாண்டித்தான் போயிருக்கிறியள்.... பத்திரகாளி கோவில் வீதியிலதான் எங்கட வீடு.. ஓடக்கரை வீ.எம் ரோடு சந்தி போக முதல் வர்ற //

நீங்கள் சொல்ற மூலையிலை பருத்துறைலை வாணி விலாஸ் என்ற ஹோட்டல் 70 களில் பேமஸ்.பத்திர காளி கோயிலடி ஒடக்க்கரை றோட் அப்பக்கடை பருத்துத்துறை வடை ரகசிய ம் இன்றுவரை ரகசியம் தான்..

நாவாலியூர் சோமசுந்திர புலவர் சொன்ன வடை தோசை வெள்ளை அப்பம் என்பன அந்த தெருவுக்கே சொந்தமானது... பரம்பரை ரகசியமானது..

Mayooresan said...

//பத்திர காளி கோயிலடி ஒடக்க்கரை றோட் அப்பக்கடை பருத்துத்துறை வடை ரகசிய ம் இன்றுவரை ரகசியம் தான்.//
ஊருக்குப் போகும் போகும் போதெல்லாம் அங்கிருக்கும் அப்பத்தட்டியில் அப்பம் வாங்கிச் சாப்பிடுவேன்... அது அவர்களால் மட்டும்தான் முடியும்..

Mayooresan said...

//நீங்கள் சொல்ற மூலையிலை பருத்துறைலை வாணி விலாஸ் என்ற ஹோட்டல் 70 களில் பேமஸ்.//
எங்கட அப்பாவயள் இந்தக் கடைபற்றி அடிக்கடி கதைப்பினம்..
அப்பாவின்ற பெயர் ஜெயக்குமாரன்.. அந்தக்காலத்தில ஓடக்கரை ஏரியாவிட சரியான குளப்படியாம் உங்கள் யாருக்காவது தெரியுமா???

Chandravathanaa said...

இனியன்
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

Chandravathanaa said...

மயூரேசன் Mayooresan Said:
இரண்டு வழியால போகலாம் (உங்களுக்கு நான் சொல்லியே தெரியோனும்!!!) ஒண்டு பொதுவாக 750 இலக்க யாழ்ப்பாண பஸ் செல்லும் பாதை மற்றது மாலி சந்தியில் திரும்பி உள் வீதியால் அல்வாயூடு வருவது. நான் அதிகம் விரும்புவது இரண்டாவது பாதைதான். காரணம் அதில் ஒரு அழகான என் வகுப்புப் பெட்டையும் வருவார் ;-). வீட்டில் அதுதான் கிட்ட என்று சொல்லிவிடுவேன்...


மயூரேசன்
எனக்கு 750இலக்க பஸ்சை அவ்வளவாகத் தெரியாது. நான் படித்தது வடமாராட்சி இந்து மகளிர் கல்லூரியில் என்பதால் ரவுண் பக்கம் தனியே போக வேண்டிய அவசியம் வரவில்லை. நடந்தே பாடசாலைக்குப் போய் வந்தேன். . என்னுடன் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் படித்த பல மாணவிகள் மந்திகை, நெல்லியடி, அல்வாய் போன்ற இடங்களிலிருந்துதான் வந்தார்கள். அதனால் அந்த இடங்கள் பற்றி நிறைய அறிந்தும் வைத்திருந்தேன். அத்தோடு மந்திகை மருத்துவமனை, மந்திகை அம்மன் கோயில், நெல்லியடிச் சந்தை, நெல்லியடி லக்சுமி தியேட்டர், மகாத்மா தியேட்டர், கொடிகாமச் சந்தை... கொடிகாமம் புகையிரத நிலையம் போன்றவை அடிக்கடி நாம் தரிசித்த இடங்கள். இவைகளுக்கான குறுக்கு வழிப்பாதைகள் அத்துபடி. மந்திகை மருத்துவ மனைக்கு பஸ்சிலும் போயிருக்கிறேன். கிராமக்கோட்டிலிருந்து அல்லது ஓராங்கட்டையில் இருந்து பஸ் எடுக்கும் போது அந்த நம்பர் எனக்குத் தேவைப்படவில்லை. அந்த வழியால் போகும் பஸ் மந்திகை தாண்டித்தான் போகும். மாலிசந்தியால் திரும்பி அல்வாயூடு வருவது போன்ற பாதைகள், சைக்கிள் பாதைகள்தான் எனக்குப் பரிச்சயமானவை

அதுசரி அந்த அழகான பெண்பிள்ளையைப் பின்னர் சந்தித்தீர்களா? அல்லது கூடப் போய் வந்ததுடன் சரியா?

கந்த முருகேசனார் சிலை, அல்வாய் முத்துமாரி அம்மன்... எல்லாமே மறக்க முடியாதவை. பல தடவைகள் மந்திகையிலிருந்து வீட்டுக்கு நடந்திருக்கிறேன். இரு மருங்கிலும் உள்ள புகையிலைத் தோட்டங்களும் மறக்க முடியாதவை.

வீஎம்றோட், விநாயகமுதலியார் வீதி எல்லாமே எனக்கு மிகவும் பரிச்சயமான வீதிகள். அங்குள்ள மக்களும் ஓரளவு தெரிந்தவர்களே. அங்குதான் வாழ்ந்தீர்களா? ஒருவேளை உங்கள் அப்பா, அம்மாவை எனக்குத் தெரிந்திருக்கலாம்.

Chandravathanaa said...

enRenRum-anbudan.BALA said:அருமையான நினைவலைகள், தொடர்ந்து எழுதுங்கள் !

புலம் பெயர்ந்தபோது, மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.நன்றி பாலா.
புலம் பெயர்வு எனக்கு மட்டுமல்ல.
ஒவ்வொருவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும்.
வாழ்ந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் பட்டவர்கள் நாம்.
மீண்டும் எம்மை ஒரு புதிய நிலத்தில் பதிய வைப்பதற்குள் நாம் பட்ட கஸ்டங்கள் கொஞ்சமில்லை.
இன்று வாழ்கிறோம். அன்றைய சோகங்கள் மறக்க முடியாதவை.

Chandravathanaa said...

சின்னக்குட்டி said: பத்திர காளி கோயிலடி ஒடக்க்கரை றோட் அப்பக்கடை பருத்துத்துறை வடை ரகசிய ம் இன்றுவரை ரகசியம் தான்..

நாவாலியூர் சோமசுந்திர புலவர் சொன்ன வடை தோசை வெள்ளை அப்பம் என்பன அந்த தெருவுக்கே சொந்தமானது... பரம்பரை ரகசியமானது..


உண்மைதான் சின்னக்குட்டி
பருத்தித்துறைத் தோசை என்பது பருத்தித்துறையில் வாழும் எங்களுக்கே மிகவும் பிடித்தமானதுதான். எப்படித்தான் சுவையாக வீட்டில் தோசை சுட்டாலும், மூடுபெட்டி கொண்டு போய் ஓடக்கரையில் தோசை வாங்கி வந்து சுவைக்கும் பழக்கம் எமக்கு எப்போதுமே இருந்தது.

இவை என்னுடைய ஒரு சிறுகதையில் வரும் வசனங்கள்
பருத்தித்துறைத் தோசை என்றாலே அவருக்குக் கொள்ளை பிரியம். அதற்காகவே மகள் சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஓடக்கரைக்குப் போவார். பகலில் எந்த வித அசுமாத்தமும் இல்லாமல் வேலியோடு வேலியாக மூடப் பட்டிருக்கும் சின்னச் சின்னச் சதுரத் தட்டிகள் மாலையானதும் திறக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருந்து - கள் - விட்டுப் புளிக்க விடப்பட்ட தோசை மாவில் சுடப்படும் தோசையின் வாசம் மூக்கைத துளைக்கும்.

கதிரேசர் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு ஒவ்வொரு தட்டியாகத் தாண்டும் போது சங்கவி ஏனப்பா போறிங்கள்? இங்கையே வேண்டுங்கோவன். - பொறுமையிழந்து கேட்பாள்.

கதிரேசர் "இவளட்டைத் தோசை சரியில்லை. இவளின்ரை பச்சைச் சம்பல் சரியில்லை." என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொன்றாகத் தாண்டி குறிப்பிட்ட தட்டியடியில் குனிந்து மூடு பெட்டியைக் கொடுத்து "முப்பது தோசை சுட்டு வையணை." என்கிற போது "என்ரை ராசா வந்திட்டியே." என்பாள் தோசை சுடும் பெண்.


ஏதோ அவளும் கதிரேசரும் நெருங்கிய உறவினர்கள் போல இருக்கும் அவளின் கதை. தோசை வாங்கி வாங்கியே பரிச்சயமான உறவு. நல்லா நிறையச் சம்பல் போட்டு வையணை. பத்துப் பாலப்பமும் புறிம்பாச் சுட்டு வையணை. - கதிரேசர் சொல்லி விட்டு சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ரவுணுக்குள் போய் இன்னும் தேவையான வீட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து தோசை பாலப்பத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்.

Chandravathanaa said...

மயூரேசன் Mayooresan said
ஊருக்குப் போகும் போகும் போதெல்லாம் அங்கிருக்கும் அப்பத்தட்டியில் அப்பம் வாங்கிச் சாப்பிடுவேன்... அது அவர்களால் மட்டும்தான் முடியும்..

//நீங்கள் சொல்ற மூலையிலை பருத்துறைலை வாணி விலாஸ் என்ற ஹோட்டல் 70 களில் பேமஸ்.//
எங்கட அப்பாவயள் இந்தக் கடைபற்றி அடிக்கடி கதைப்பினம்..
அப்பாவின்ற பெயர் ஜெயக்குமாரன்.. அந்தக்காலத்தில ஓடக்கரை ஏரியாவிட சரியான குளப்படியாம் உங்கள் யாருக்காவது தெரியுமா???


மயூரேசன்
பருத்தித்துறைக்கு வருபவர்கள் இவைகளைச் சுவைக்காமல் செல்வது குறைவு.

உங்கள் அப்பாவுக்கு என்ன வயதிருக்கும்?

Mayooresan said...

அப்பாவிற்கு இப்ப 55 வயதிருக்கும். இவரிற்கு பபி, தயாநிதி போன்ற நண்பர்கள் இருக்கினம். அப்பா பருத்துறையில் இருந்து 80 களில் திருகோணமலைக்கு வேலை நிமிர்த்தம் வந்து விட்டார். அவரின் இடம் ஓடக்கரைதான். அம்மா தான் பத்திரகாளி கோவில் வீதி. உங்களிற்கு முந்திய தலைமுறையாக இவர்கள் இருந்திருக்கக் கூடும். எனது அம்மாவும் வடஇந்து மகளீர்கல்லூரியில்தான் படித்தார். அம்மாவின் சகோதரிகள் மெதடிஸ்ட்டில் படித்தார்கள் (ஞாணமணி, சாரதாமணி, புனிதமணி, யோகமணி--- தொயுமோ?) அவர்களிற்கு கிட்டத்தட்ட உங்கட வயசிருக்கும். நாகலிங்க முதலியார் வீதி பத்திரகாளி கோவில் வீதியில வந்து இறங்கும் சந்தியில் உள்ள வீடுதான் எங்கட வீடு. வீட்டுக்கு முன்னுள்ள பெரிய காணி (அந்த ரோட்டில அது மட்டும்தான் காணி) டபிள் கேட் இருக்கிறது அம்மாவிண்ட சகோதரி மாரிண்ட இடம்.

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite