Sunday, August 13, 2006
Friday, August 11, 2006
நினைவுப் பதிவு
தன்னோடு கைகோர்த்து வந்த ஒரு குழந்தை தன் முன்னாலேயே குருதி வடியஅது ஷெல், குண்டு, சூடு என்று அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் 1985ம் ஆண்டுக் காலம். நான் ஜேர்மனிக்குப் புறப்படுவதற்கான ஆயத்தங்களில் இருந்தேன். பாஸ்போர்ட் எடுப்பதற்கு சில ஆவணங்களைப் போட்டோக் கொப்பி எடுக்க வேண்டி இருந்தது. மூத்த இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு கடைசி மகனை அம்மாவுடன் விட்டு விட்டு ஒழுங்கைகள் கடந்து மருதடியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அங்குதான் எங்கோ ஒரு இடத்தில் போட்டோ கொப்பி மெசின் இருக்கிறது என்ற தகவல் எனக்குக் கிடைத்திருந்தது. தம்பிமாரை அனுப்பக் கூடிய இடமல்ல அது. அதனால்தான் நானே சென்றேன்.
சுருண்டு வீழ்ந்ததைப் பார்க்கும் ஒரு ஆறு வயதுக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்?
ஐயனார் கலட்டி ஒழுங்கைகளைக் கடந்து கொண்டிருக்கும் போது பருத்தித்துறைக் கடலில் இருந்து வந்து கொண்டிருந்த ஷெல்களின் ஆக்ரோசம் கூடியிருந்தது. கூடவே சீனவெடிப் பாணியில் சூட்டுச் சத்தமும் கூடிக் கொண்டே போனது.
"வெளிக்கிட்டனான். வேலையை முடிச்சிடோணும்" என்ற வைராக்கியத்தோடு நான் நடந்து கொண்டிருந்தேன். பிரதான வீதியில் ஏறுவதற்கு இன்னும் 100மீற்றர்தான் இருக்கும் போது சனங்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடத் தொடங்கியிருந்தார்கள். என்ன ஏது என்று யோசிக்க முன்னம் சைக்கிள்கள் சுழன்று அடித்துக் கொண்டு திரும்பின. இளம்பெடியள் பாய்ந்து விழுந்து ஓடினார்கள்.
"பள்ளிக்கூடப் பிள்ளையளுக்குச் சூடு விழுந்திட்டுதாம். வடமாராட்சிப் பள்ளிக்கூடப் பிள்ளையள்." ஓடுபவர்களின் வாய்களில் இருந்து உதிர்ந்தன வார்த்தைகள். எனக்குள் பதட்டம். எனது இரண்டு பிள்ளைகளும் வடமாராட்சிப் பாடசாலையில்தானே.
தொடர்ந்து போவோரின் வாய்களிலிருந்து தீபா, சாந்தி என்ற வார்த்தைகளும் வந்து விழுந்தன. எனக்குப் பகீரென்றது. ஓரிருவரை இடை மறித்து "என்ன நடந்தது? யாருக்குச் சூடு விழுந்தது?" கேட்டேன். "தீபாவுக்கும் சாந்திக்கும் சூடு" என்றார்கள். அந்தக் கணத்தில் நான் என்னை மறந்து விட்டேன். ஒரு பைத்தியக்காரி போல வடமராட்சிப் பாடசாலையை நோக்கி பிரதான வீதியில் ஓடத் தொடங்கினேன்.
"அக்கா, அங்கை போகாதைங்கோ, நில்லுங்கோ, இஞ்சை பாற்றா, மொறிசின்ரை அக்கா..." என்று பல குரல்கள் கனவில் போல என் காதுகளில் வீழ்ந்தன. தடக்கும் சேலையின் கொசுவத்தை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு நான் ஓடிக் கொண்டிருந்தேன். சிலர் என்னை வந்து தடுத்தார்கள். போக வேண்டாம் என்று மன்றாடினார்கள். ஒரு கட்டத்தில் என்னை மேற் கொண்டு நகர விடாமல் முழுவதுமாக மறித்து விட்டார்கள்.
"நீங்கள் திரும்பி வீட்டை போங்கோ அக்கா." சூடு விழுந்த பிள்ளையளை உடனையே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டினம். ஒண்டும் நடக்காது. நீங்கள் போங்கோ. வடிவா விசாரிச்சுப் போட்டு, வீட்டை வந்து எல்லா விபரத்தையும் சொல்லுறம்" என்றார்கள்.
வேறுவழியின்றி நான் வீட்டுக்குத் திரும்பி நடக்கத் தொடங்கினேன். உலகம் இருண்டு விட்டது போலிருந்தது. மனசு "ஆண்டவா என்ரை பிள்ளையை என்னிடம் உயிரோடு தந்து விடு" என்று மன்றாடியது.
வழியெல்லாம் பதட்டத்துடன் மக்கள். நான் வீட்டடிக்குப் போனபோது அப்பாச்சி, அம்மா இருவருமே வீட்டு வாசலில் திகைத்துப் போய் நின்றார்கள். நான் உள்ளே போக மனமின்றி கேற்வாசலில் அப்படியே இருந்து விட்டேன்.
பிரமை பிடித்தவள் போல எவ்வளவு நேரம் அதிலேயே இருந்திருப்பேனோ எனக்குத் தெரியாது. ஒரு சைக்கிள் வருகிறது. ஒரு போராளிதான் ஓட்டி வந்தான். யார் முன்னுக்கு என்று பார்த்தேன். என் கண்களையே நம்ப முடியவில்லை. தீபாவேதான் வருகிறாள். முகத்தில் ஒரு மருட்சி. சிரிக்க மறந்த தன்மை. ஆனாலும் உயிரோடு என் மகள். அப்போதுதான் நான் அடக்க முடியாமல் அழத் தொடங்கினேன்.
---------------------------------
சிங்கள இராணுவத்தின் அட்டகாசம் அன்று அதிகமாயிருந்ததால் வடமராட்சிப் பாடசாலைப் பிள்ளைகளை, ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். பிள்ளைகள் கும்பலாகப் போய்க் கொண்டிருந்தார்கள். இராணுவம் பருத்தித்துறைக் கடலோடு சேர்ந்த முகாம்களிலிருந்து சுட்டுக் கொண்டு இருந்திருக்கிறது. தீபாவும் சாந்தியும் கைகோர்த்த படி பாடசாலை வீதியில் விநாயகமுதலியார் வீதியடியைக் கடக்கும் போது ஒரு ரவை சாந்தியின் கழுத்தில் பாய்ந்து விட்டது.
தன்னோடு கைகோர்த்து வந்த ஒரு குழந்தை தன் முன்னாலேயே குருதி வடிய சுருண்டு வீழ்ந்ததைப் பார்க்கும் ஒரு ஆறு வயதுக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? சாந்தி உடனேயே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டு விட்டாள். தீபா என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப் பட்டாள்.
சாந்தி நான் ஜேர்மனிக்கு வரும் வரை பேசும் சக்தியை இழந்த நிலையிலேயே இருந்தாள். தீபா பல நாட்கள் ஒரு அதிர்ச்சி அடைந்த நிலையிலேயே இருந்தாள். அதிகம் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். நித்திரையில் சாந்தி.. சாந்தி.. என்று ஏதேதோ புலம்பினாள். ஷெல் சத்தம் கேட்டால் உடனேயே ஒரு பதட்டத்துடன் ஓடிச் சென்று பக்கத்தில் நிற்கும் யாரையாவது இறுகக் கட்டிப் பிடிப்பாள். யாரும் பக்கத்தில் இல்லை என்றால் அறைக்குள் ஓடிப்போய் கட்டிலுக்குக் கீழ் புகுந்து கொள்வாள். ஜேர்மனிக்கு வந்த பின்னும் சில வருடங்களாக இடி இடிக்கும் சத்தம் கேட்டால் ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிப்பாள்.
சந்திரவதனா
11.7.2006
மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று
குண்டுச் சத்தங்களில் ஊரே குழம்பிப்போய், அன்று 85 இல் என் வீட்டுக் கோடியில் ஓர் அரவம். எண்ணிலாப் பயத்துடன் என்னென்று பார்த்தேன். அவன் நின்றான்.
தொண்டை வரண்ட நிலையில், மூச்சு வாங்கிய அவனைப் பார்த்து, "குடிக்க ஏதும் தரவா?” எனக் கேட்டேன். "வேண்டாம்" என்றது அவன் வாய், "வேணும்" என்றது அவன் முகத்தின் பாவம்.
நெல்லிரசம் கலந்து நான் கொடுத்த கிளாசை வாங்கி மூச்சைப் பிடித்த படி குடிக்கும் போது ஓரக் கண்ணால் ஓராயிரம் நன்றி சொன்னான்
அவன் பெயர் தெரியாது எனக்கு. அவன் முகம் தெரியும். அவன் இலட்சியம் தெரியும். மறக்காத அவன் முகத்தை மறக்காது தேடுகிறேன். கிடைக்கவில்லை இன்னும்.
என் வீட்டுக் கோடியும், வேர்வை வடிந்த அவன் முகமும், குடித்து விட்டுத் திருப்பித் தந்த கிளாசில் விரல்கள் படித்த குருதிக் கறையும், "திக்கத்துக்குள்ளை நாலு பேரை முடிச்சிட்டனக்கா" சொன்ன படியே இராணுவ நகர்வுகளை உணர்த்தும் சத்தங்கள் கேட்டு, தோளில் தொங்கிய கிரனைட் பையுடன் நொண்டியபடி அவன் ஓடிய போது அவன் பின்னங்கால்களில் வழிந்த குருதியும் இன்னும் மறக்கவில்லை.
Thursday, August 10, 2006
Wednesday, August 09, 2006
இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது?
ஒரு இதழ் அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாக வருவதா இன்றைய காலகட்டத்தில் சிறந்தது? இப்பிரச்சனை உலகளாவிக் கொண்டிருக்கிறது. இணைய இதழ்களின் வரவில் இன்றைய ஜேர்மனியப் பத்திரிகைகள் கூட ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில் எமது சஞ்சிகைள் பத்திரிகைளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது?
இனி வரும் காலங்களில் இணைய இதழா, அச்சுப் பதிப்பா எது முன்னிலையில் நிற்கப் போகிறது? எது வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெறப் போகிறது?
இணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளது. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.
தேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளைத் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.
இந்த இக்கட்டான நிலையில், தொடர்ந்தும் பூவரசை பதிப்பாக வெளியிடுவதா, அல்லது இணைய சஞ்சிகை ஆக்கி விடுவதா என்ற ஆசிரியரின் கேள்வியோடும், வாசகர்களின் பதில்களோடும் பூவரசின் 97வது இதழ் என்னை வந்தடைந்திருக்கிறது. பூவரசு தொடர வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பத்தோடான பதிலாக இருந்தாலும் அது இன்னும் எத்தனை காலத்துக்கு சாத்தியமாகப் போகின்றது என்பது தெரியவில்லை. எப்போதுமே பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லையாயினும் "பதிப்பாகத்தான் வரவேண்டும்" என்று என்னால் உரத்துச் சொல்ல முடியவில்லை. இணையங்களின் வரவுக்குப் பின் குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுகளுக்குப் பின் பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்து விட்டதுதான் அப்பட்டமான உண்மை.
இணையங்களோடு தம்மை இணைத்துக் கொள்ளாமலேயே இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே! என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி உங்களிடம் எழலாம். அந்த எத்தனையோ பேர்களில் வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் முதற் கேள்வி. அந்த வாசிப்பவர்களிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் மனம் கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது அடுத்த கேள்வி? இப்படியே அடுக்காகப் பல கேள்விகள் உள்ளன.
ஊரிலே எமது ஒரு ஆக்கம் பத்திரிகையில் பிரசுரமானால், வீரகேசரி என்றால் சிறுகதைக்கு 50ரூபாவும், தினகரன் என்றால் 25ரூபாவும் என்று தபாலில் அனுப்பி வைப்பார்கள். புலத்தில் நிலை அப்படி அல்ல. படைப்பாளிகளும் சரி, பிரசுரிப்பவர்களும் சரி பண விடயத்தில் தம்மை நிலை நிறுத்த முடியாத ஒரு கடினமான நிலையிலேயே வாழ்கிறார்கள். படைப்புக்களுக்கு எந்த விதமான சன்மானத்தையும் கொடுக்கக் கூடிய நிலையில் புலம்பெயர் பத்திரிகைகள் உலகம் இல்லை. அதேநேரம் நல்ல படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தமது செலவில் தொகுப்பாக்கக் கூடிய நிலையில் எமக்கென அச்சகங்களும் இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் ஊக்குவிக்கப் படுவதற்கான இப்படியான எந்த வசதிகளும் இன்னும் புலத்தில் சரியாக இல்லை.
ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது. அவன் தனது ஆக்கம் வெளிவந்ததா இல்லையா என்பதைப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தே அறிந்து கொள்கிறான். அனேகமான சமயங்களில் இதழ்களோ, பத்திரிகைகளோ வெளிவரும் போது அதன் படைப்பாளிகள்தான் பெரும்பாலும் பணம் கொடுத்து அவைகளை வாங்குபவர்களாகவும் அதன் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வாசகர்களிலேயே தங்கி வாழ்கின்ற பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்?
தை-மாசியில் வரவேண்டிய பூவரசு இத்தனை மாதங்கள் கழித்து தற்போது ஆடி அசைந்து வந்துள்ளது. இதன் வரவு இதழாசிரியரை எத்தனை தூரம் சிக்கல் நிலைக்குத் தள்ளியிருக்கும் என்பது தள்ளி நின்று பார்க்கின்ற எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் 15ஆண்டுகளாக உலா வந்த பூவரசு இப்போது தனது 16வது ஆண்டில் சிறிய தளர்ச்சியையும், ஒரு வித களைப்பையும் கண்டிருக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.
1991 இல் தமிழ் வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இல்லாத ஐரோப்பிய மண்ணில் துளிர்த்த சஞ்சிகைதான் பூவரசு. ஐரோப்பிய அவசரத்தில், புலம்பெயர் தமிழர்களின் பல்வேறு பட்ட பிரச்சனைகளின் மத்தியில் பூவரசு 16வருடங்களைத் தொட்டிருப்பது ஒரு சாதனையே. இப்படியான சாதனைகளுக்கு வாசகர்களும், படைப்பாளிகளும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்தாலும், அவர்களை ஒன்று கூட்டி, அவர்களோடு இசைந்து புலம்பெயர் வாழ்வில் முகம் கொடுக்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு சஞ்சிகையை வளர்த்தெடுப்பது என்பது சுலபமான விடயமல்ல. ஆனால் பூவரசு சஞ்சிகையின் ஆசிரியர் இந்துமகேஷ் அவர்கள் அந்தச் சாதனையைச் செய்துள்ளார். அவர் வளர்த்தது பூவரசை மட்டுமல்ல. புலம்பெயர் மண்ணில் இலைமறைகாய்களாக இருந்த எத்தனையோ எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, பூவரசின் ஊடாக அவர்களையும் வளர்த்து விட்டிருக்கிறார்.
அதே நேரம் வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டக் கூடிய வகையில் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள், என்று நடாத்தி வளரும் எழுத்தாளர்களை பூவரசு மூலம் ஊக்குவிக்கவும் இவர் தவறியதில்லை.
புலம்பெயர்மண்ணில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய, வளர்த்து விட்ட பெருமை, பல் வேறுபட்ட நாடுகளிலும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் கொண்ட இந்தப் பூவரசுக்கு இருக்கிறது.
இம்முறை நான் இந்தப் பூவரசைப் பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது பூவரசின் தளர்ச்சியும், களைப்பும் மட்டுமல்ல. இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனமுந்தான்.
இதழிலே வாசகர்களின் கடிதங்களைத் தொடர்நது ஏ:ஜே.ஞானேந்திரனின் வாழ்வின் வர்ண ஜாலங்கள் கட்டுரை, திருமதி.புஸ்பரட்ணத்தின் படித்துச் சுவைத்தவை, கோசல்யா சொர்ணலிங்கத்தின் ஒளவை தொடர், வளர்மதியின் கோள்கள் பற்றிய தொகுப்பு, இரா.சம்பந்தன், வேதா.இலங்காதிலகத்தின் கவிதைகள், கலா.கிருபாவின் குழந்தைகளின் பயத்தைப் போக்குவதற்கான குறிப்புகள் கூடவே என்.செல்வராஜா அவர்களின் ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், போராட்ட இலக்கியங்களும் பற்றிய அருமையான குறிப்புக்களைக் கொண்ட தொகுப்பு, இன்னும் சிறுவர்களுக்கான சில... என்று பல விடயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இவைகளுக்குள் சற்று அதிகமான ஈர்ப்பைத் தந்தது இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம். இது ஏற்கெனவே இணையத்தில் தொடராக வந்த நவீனம்தான். ஆனாலும் அதை ஒரு பதிப்பாக கையில் எடுத்து வாசிக்கும் போது இன்னும் கொஞ்சம் அதிகமாக ரசித்து வாசிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான "சட்" உலகத்துடனான உரையாடல் ஒன்றைத்தான் அவர் கதையாக்கி உள்ளார். அந்த உரையாடலின் போதுள்ள இளையோரின், ஏன் வயதானோரின் மனநிலைகள,; கதைக்கும் விதங்கள்.. என்று அவர் கதை சொல்லத் தொடங்கிய பாணியே மிக நன்றாக அமைந்துள்ளது.
பொதுவிலேயே இராஜன் முருகவேலுக்கு நன்றாகக் கதை சொல்லத் தெரியும். எடுக்கும் கரு எதுவாயினும் கதையை நகர்த்தும் விதத்தில் அவருக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தொடங்கினால் நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் நடை. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே "சட்" உலகத்தினூடு இன்றைய இளைய சமூகத்தின் சில பிரச்சனைகளையும் தொட்டுள்ளார். அடுத்த அங்கத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.
பூவரசு தொடர வேண்டுமென்றால், அதற்கு வாசகர்களின் ஆதரவுதான் அதிகம் வேண்டும். தொடர்ந்து வருவார்களா? ஆதரவைத் தொடர்ந்தும் தருவார்களா?
இணைய இதழ்கள், தொலைக்காட்சிகள் போல அதிவேகமாய்ச் செய்திகளை மூலை முடுக்குகள் எல்லாம் பாய வைக்கின்றன. இன்பமோ, துன்பமோ எதுவாயினும் உடனடியாக அறியவும், உணரவும் ஏதுவாகின்றன. அச்சுப்பதிப்புகளால் அது முடிவதில்லை. அதுவும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் போரும், புலம் பெயர்வும் மிகவும் ஐதாக, உலகம் பூராவும் தூவி விட்ட நிலையில் ஒரு அச்சுப்பதிப்பு பலரையும் சென்றடைவது என்பது அவ்வளவு சாத்தியமான காரியமல்ல. ஆனாலும் என்றைக்கும் ஒரு ஆவணமாக பத்திரமாக எம்மோடு கூட இருக்கப் போவதும், நினைத்த போதெல்லாம் எந்த நிலையில் இருந்தும் நாம் ஆசுவசமாகப் படிப்பதற்கு ஏதுவானதும் ஒரு அச்சுப்பதிப்பே. ஒரு அச்சுப் பதிப்பைப் படிப்பதில் உள்ள அலாதியான சுகம்; இணைய இதழில் ஒருபோதும் வந்து விடாது. இருந்தும், வரும் காலத்தில் எது நிலைக்கப் போகிறது என்று கேட்டால், இணைய இதழ்கள்தான் வாழும் என்பது போன்றதான ஒரு அச்சம் கலந்த பிரமை ஏற்படுகிறது.
சந்திரவதனா
17.8.2006
பூவரசு 100வது இதழில் இப்பதிவு பிரசுரமாக இருப்பதால் சில சிறிய திருத்தங்களுடன் மீள் பதிவு செய்துள்ளேன்.
Tuesday, August 08, 2006
பூவரசு (தை-மாசி 2006 )
இணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளது. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.
தேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் கூட ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளைத் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.
இந்த இக்கட்டான நிலையில், தொடர்ந்தும் பூவரசை பதிப்பாக வெளியிடுவதா, அல்லது இணைய சஞ்சிகை ஆக்கி விடுவதா என்ற ஆசிரியரின் கேள்வியோடும், வாசகர்களின் பதில்களோடும் பூவரசின் 97வது இதழ் என்னை வந்தடைந்திருக்கிறது. பூவரசு தொடர வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பத்தோடான பதிலாக இருந்தாலும் அது இன்னும் எத்தனை காலத்துக்கு சாத்தியமாகப் போகின்றது என்பது தெரியவில்லை. எப்போதுமே பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லையாயினும் "பதிப்பாகத்தான் வரவேண்டும்" என்று என்னால் உரத்துச் சொல்ல முடியவில்லை. இணையங்களின் வரவுக்குப் பின் குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுகளுக்குப் பின் பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்து விட்டதுதான் அப்பட்டமான உண்மை.
இணையங்களோடு தம்மை இணைத்துக் கொள்ளாதவர்கள் எத்தனை பேர் என்ற கேள்வி உங்களிடம் எழலாம். அவர்களில் வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் முதற் கேள்வி. அந்த வாசிப்பவர்களிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் மனம் கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது அடுத்த கேள்வி? இப்படியான பல கேள்விகள் இருக்கின்றன.
ஊரிலே எமது ஒரு ஆக்கம் பத்திரிகையில் பிரசுரமானால், வீரகேசரி என்றால் சிறுகதைக்கு 50ரூபாவும், தினகரன் என்றால் 25ரூபாவும் என்று தபாலில் அனுப்பி வைப்பார்கள். புலத்தில் நிலை அப்படி அல்ல. படைப்பாளிகளும் சரி, பிரசுரிப்பவர்களும் சரி பண விடயத்தில் தம்மை நிலைநிறுத்த முடியாத ஒரு கடினமான நிலையிலேயே வாழ்கிறார்கள். படைப்புக்களுக்கு எந்த விதமான சன்மானத்தையும் கொடுக்கக் கூடிய நிலையில் புலம்பெயர் பத்திரிகைகள் உலகம் இல்லை. அதேநேரம் நல்ல படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தமது செலவில் தொகுப்பாக்கக் கூடிய நிலையில் எமக்கென அச்சகங்களும் இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் ஊக்குவிக்கப் படுவதற்கான இப்படியான எந்த வசதிகளும் இன்னும் புலத்தில் சரியாக இல்லை.
ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது. ஒரு படைப்பாளி தனது ஆக்கம் வெளிவந்ததா இல்லையா என்பதைப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தே அறிந்து கொள்கிறான். அனேகமான சமயங்களில் இதழ்களோ, பத்திரிகைகளோ வெளிவரும் போது அவைகளில் படைப்புக்களை எழுதியவர்கள்தான் பெரும்பாலும் பணம் கொடுத்து அந்தப் பத்திரிகையை வாங்குபவர்களாகவும் அதன் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வாசகர்களிலேயே தங்கி வாழ்கின்ற பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்?
சரி, பூவரசு பற்றி எழுத நினைத்து வந்து எழுதத் தொடங்கினால் சில யதார்த்தங்கள் வந்து முன்னுக்கு நிற்கின்றன.
தை-மாசியில் வரவேண்டிய பூவரசு இத்தனை மாதங்கள் கழித்து தற்போது ஆடி அசைந்து வந்துள்ளது. இதன் வரவு இதழாசிரியரை எத்தனை தூரம் சிக்கல் நிலைக்குத் தள்ளியிருக்கும் என்பது தள்ளி நின்று பார்க்கின்ற எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் 16ஆண்டுகளாக உலா வந்த பூவரசில் இப்போது சிறிய தளர்ச்சியும் ஒரு வித களைப்பும் இருக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.
இந்தப் பூவரசைப் பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம்.
இதழிலே வாசகர்களின் கடிதங்களைத் தொடர்நது ஏ:ஜே.ஞானேந்திரனின் வாழ்வின் வர்ண ஜாலங்கள் கட்டுரை, திருமதி . புஸ்பரட்ணத்தின் படித்துச் சுவைத்தவை, கோசல்யா சொர்ணலிங்கத்தின் ஒளவை தொடர், வளர்மதியின் கோள்கள் பற்றிய தொகுப்பு, இரா.சம்பந்தன், வேதா.இலங்காதிலகத்தின் கவிதைகள், கலா.கிருபாவின் குழந்தைகளின் பயத்தைப் போக்குவதற்கான குறிப்புகள் கூடவே என்.செல்வராஜா அவர்களின் ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், போராட்ட இலக்கியங்களும் பற்றிய அருமையான குறிப்புக்களைக் கொண்ட தொகுப்பு, இன்னும் சிறுவர்களுக்கான சில... என்று பல விடயங்கள் இடம் பெற்றுள்ளன.
இவைகளுக்குள் இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம் ஏற்கெனவே இணையத்தில் தொடராக வந்த நவீனம்தான். ஆனாலும் அதைப் ஒரு பதிப்பாக கையில் எடுத்து வாசிக்கும் போது அதனை இன்னும் கொஞ்சம் அதிகமாக இரசித்து வாசிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான "சட்" உலகத்துடனான உரையாடல் ஒன்றைத்தான் அவர் கதையாக்கி உள்ளார். அப்போதுள்ள இளையோரின் ஏன் வயதானோரின் மனநிலைகள் கதைக்கும் விதங்கள்.. என்று அவர் கதை சொல்லத் தொடங்கிய பாணியே மிக நன்றாக அமைந்துள்ளது.
பொதுவிலேயே இராஜன் முருகவேலுக்கு நன்றாகக் கதை சொல்லத் தெரியும். எடுக்கும் கரு எதுவாயினும் கதையை நகர்த்தும் விதத்தில் அவருக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தொடங்கினால் நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் நடை. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே "சட்" உலகத்தினூடு இன்றைய இளைய சமூகத்தின் சில பிரச்சனைகளையும் தொட்டுள்ளார். அடுத்த அங்கத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டியுள்ளார். அவரது மிகுதிக் கதைகளையும் வாசிக்க வேண்டும் என்றால் பூவரசு தொடர்ந்து வரவேண்டும். அதற்கு வாசகர்களின் ஆதரவுதான் அதிகம் வேண்டும். பார்ப்போம்.
சந்திரவதனா
8.7.2006
ஒரு SMS உரையாடல்
பத்து வருடங்களுக்கு முந்திய ஒரு SMS உரையாடல்
குளிக்கும் பேசினுக்குள் தலையைக் கவிழ்த்து, கையில் சவரைத் தூக்கி கொட்டும் தண்ணீரில், அவசரமாய் தலையைக் கழுவத் தொடங்கினான் சாருகன். ஆறுதலாக இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது கைத்தொலைபேசி சிணுங்கிய பின்தான் இப்படி அவசரமானான். "எங்கேயோ போகப் போகிறான்." நினைத்துக் கொண்டேன்.
தலையைத் துவாலையால் மூடி ஒத்தியபடி சமையலறைக்குள் வந்தான்.
"எங்கை இப்ப அவசரமா வெளிக்கிடுறாய்? நாளைக்கு ஸ்கூலிலை ரெஸ்ற் எண்டெல்லோ சொன்னனி."
"ஓமம்மா..., நான் படிச்சிட்டன். இன்னொருக்கால் திருப்பிப் பார்த்தால் சரி"
"இப்ப எங்கை போறாய்?"
இப்போ அவன் கைத்தொலைபேசியை அழுத்தி... என்னிடம் நீட்டிக் காட்டினான்.
"Charu, hast du heute Zeit? (சாரு, இன்று உனக்கு நேரமிருக்கிறதா?)
- Nora(நோரா)"
நோரா, சாருகனது வகுப்புத் தோழி. பட்டரில் வதக்கிய எனது கத்தரிக்காய் வெள்ளைக்கறியும் சோறும் அவளுக்குப் பிடிக்கும். எப்போதாவது எனது வீட்டுக்கு வரும் போது சாப்பிடுவாள். மிகவும் அழகான பெண். 14வயதுக்கே உரிய பளிச் சோடு குழந்தையாகப் பேசுவாள். நல்ல கெட்டிக்காரி. அவளும் சாருகனும் சின்ன வயதிலிருந்தே ஒன்றாகப் படிக்கிறார்கள். நல்ல நண்பர்கள்.
மீண்டும் அவன் கைத்தொலைபேசியை அழுத்தி அதற்கு எழுதிய பதிலைக் காட்டினான்
"ஏன்?
- சாரு"
"எனக்கு சில உள்ளாடைகள் வாங்க வேண்டும். உன் ஒருத்தனால்தான் எனக்கு எது பொருத்தம் என்பதைச் சரியாகச் சொல்ல முடியும்.
- Nora(நோரா)"
"சரி, நான் மாலை நான்கு மணிக்கு வருகிறேன்.
- சாரு"
"சரி, அயன் கஃப் சென்ரறில் சந்திப்போம்.
- நோரா. "
"ஏன்ரா, அவளுக்கு உள்ளாடைகள் வாங்க, உன்னை விட்டால் வேறை ஆக்கள் கிடைக்கேல்லையோ? ஆராவது பெட்டையளோடை போறதுக்கு...."
"இல்லை அம்மா, நான்தான் நல்லதா செலக்ட் பண்ணுவன். எப்பவும் சொல்லுவாள். "
"ஓமோம் நல்லாத்தான் சொல்லுவாள். உனக்கு உள்ளாடைகள் வாங்கவே உனக்குத் தெரியாது. நான் அலையோணும். அவளுக்கு நீ வேண்டப் போறாய்...? "
"......"
"ஏன் அவள் உன்ரை கேர்ள் பிரண்டோ? (காதலியோ?)"
"இல்லை இல்லை einfach freundin (சாதாரண நண்பி.)
"அதென்ன சாதாரண நண்பி?"
"என்னம்மா இது கூடத் தெரியாமல். சாதாரணமான நட்பு.
ஒரு அக்கா போல. அல்லது ஒரு தங்கைச்சி போல...."
Monday, August 07, 2006
இம்மியேனும் கவலையின்றி...
அன்புகளும்
நன்றிகளும்
இலக்கணப் பிழை பற்றி
இம்மியேனும் கவலையின்றி
மின்னஞ்சலிலும்
கடிதங்களிலும்
தொலைபேசி வழியாகவும்
வந்து குவிகின்றன
ஏன் சில சமயங்களில்
வீதிகளில் கூட
கை குலுக்கிச் செல்கின்றன.
சந்திரவதனா
7.8.2006
Sunday, August 06, 2006
தாயகம் நோக்கி - 4
தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
அடிக்கடி ரோச்சைப் பிடித்து நேரம் பார்த்து 5.30 என்றதும் எழுந்து கொண்டேன். வெளியில் போய் இருள் கலைந்து கொண்டிருக்கும் அதிகாலையின் இயற்கை அழகைச் சிறிது நேரம் பருகி விட்டுக் காலைக் கடன்களை முடித்து, குளித்து வரும் போது வோச்சர் ஐயா முற்றம் கூட்டத் தொடங்கி இருந்தார். கணக்காளர் பாஸ்கரன் எனது அறைக்கு முன்பக்கமுள்ள சிறிய முற்றத்தைக் கூட்டத் தொடங்கியிருந்தான். மாஸ்டர் என அழைக்கப் படும் சுகுணன் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தான்.நான் ஒற்றைப் பனையின் கீழ் கதிரை போட்டு அமர்ந்து கொள்ள சுகுணன் தேநீருடன் வந்தான். அம்மாவுடன் வாழ்ந்த காலங்களுக்குப் பிறகு இருந்த இடத்தில் எனக்காகத் தேநீர் தயாரிக்கப் பட்டு வருவது புது அனுபவம். தேநீர் சுமாராக இருந்தாலும் வெண்புறா உறவுகள் அத்தனை பேரும் என்மேல் காட்டும் அன்பு என்னை நெகிழ வைத்தது. தமது கஷ்டங்களைப் பற்றியதான அக்கறைகள் எதுவுமின்றி எனக்கு எந்த விதமான அசௌகரியங்களும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலான அவர்களது அவதானம், அவர்கள் மேல் எனக்கு மிகுந்த பிரியத்தை ஏற்படுத்தியது.
அவர்களில் சிலர் காலை வணக்கங்களுடன் என்னைத் தாண்டி கேற் கடந்து கரடிபோக்குச் சந்தி வெள்ளவாய்க்காலுக்கு குளிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். சிலர் நின்று என்னோடு சிரித்து, பேசிச் சென்றார்கள்.
சொல்லாமல் கொள்ளாமல் வெயில் வெண்புறா நிறுவனத்துக்குள்ளும் புகுந்து மெய் கருக்கத் தொடங்கியது. கால் போடுவதற்காக ஆட்கள் வரத் தொடங்கி இருந்தார்கள். சடகோபன் வேலையைத் தொடங்குவதற்காக செயற்கைக் கால் தயாரிக்கும் பட்டறைக்குள் நுழைந்தான். நேரத்தைப் பார்த்தேன். எட்டு மணியாகி இருந்தது.
முதல்நாட்தான் Fiberglass இல் கால்செய்வதற்கான வகுப்பு சரியாகத் தொடங்கியது. நாம் புறப்படும் போதே யேர்மனியின் டுசுல்டோர்ஃப் (Düsseldorf) விமான நிலையத்தில் Fiberglass இல் கால் செய்வதற்கான மருந்துப் பொருட்களில் பவுடர் போல இருந்த சில பொருட்களை எம்முடன் கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார்கள். பின்னர் நாங்கள் விளக்குவைச்ச குளத்தில் பொருட்களுடன் தாண்டப் பயந்து வவுனியாவில் சிலதை விட்டு விட்டோம். அதனால் வந்த உடனே நாம் எதிர்பார்த்தது போல வகுப்பைத் தொடங்க முடியாதிருந்தது.
காலையில் கால் இல்லாமல் வந்தவர்களில் அளவெடுக்கப் பட்ட அந்த மூவரும் காலை அணிந்து கொண்டு நடப்பதற்கான பயிற்சியை எடுக்கத் தொடங்கிய போது நியமாகவே எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசமும் வியப்பும் ஏற்பட்டது.
தகரத்தில் கால்களைச் செய்யும் அவர்களது அந்த வேகத்துக்கு ஏற்ப Fiberglass கால்களைச் செய்ய முடியாது என்று ஹொல்கெர் சொல்லி விட்டார்.
முதல்நாட்தான் நாம் ஜேர்மனிய விமான நிலையத்தில் விட்டு வந்த பொருட்களை தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் ஜேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் ஆனந்தராஜா அவர்கள் எடுத்து மீளவும் எமக்கு அனுப்பி இருந்தார். வவுனியாவில் விட்டு வந்த பொருட்களும் எம்மை வந்தடைந்தன. இதற்கிடையில் முல்லைத்தீவுக் கடற்கரை வரை சென்று இது சம்பந்தமான சில பொருட்களை கப்பல் தயாரிப்பாளர்களிடமும் பெற்று வந்தோம்.
எனது கணவரும் ஹொல்கெரும் பட்டறைக்குள் நுழைந்தார்கள். உடனே நானும் எழுந்து கொண்டேன். முற்றத்து மண் செருப்புக்குள் புகுந்து கால்பாதங்களுடன் சரசமாட பட்டறையை நோக்கி விரைந்தேன். வெயில் சுட்டது.
அண்ணையை எப்படிச் சந்திக்கலாம்? அவரைச் சந்திக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா? கேள்வி இன்னும் எனக்குள்...!
சந்திரவதனா
யேர்மனி.
Thursday, August 03, 2006
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
ரோச்சைப் பிடித்து நேரத்தைப் பார்த்தேன். 3.30 மணி. இங்கு வந்த பின் இப்படித்தான். வேளைக்கே விழிப்பு வந்து விடுகிறது. இன்று இன்னும் வேளைக்கு. இயற்கையின் சலசலப்புகள்தான் என்னை அருட்டினவோ!மெதுவாக எழுந்து மெத்தை இல்லாத மரக்கட்டிலில் முட்டுக்காலில் இருந்த படியே மரச்சட்டங்களினூடே வெளியில் பார்த்தேன். விடியலுக்கான அறிகுறியாய் இருள் விலகியும் விலகாமலும் மங்கிய பொழுது. வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனம் அமைதியாக உறங்கிக் கிடந்தது.
எனது அறைக்கு முன்னால் கேற்வாசல் மூலையோடு நிற்கும் பருத்த பெரிய ஒற்றை ஆண்பனை ஆடாமல் அசையாமல் அழகாய் கம்பீரமாய் எழுந்து நின்றது.
போரின் அனர்த்தங்களால் பொலிவிழந்து ஆங்காங்கு குழி விழுந்து வாடிப் போயிருக்கும் ஏ9 வீதியில் கடாமுடா என ஏறி இறங்கிச் செல்லும் வாகனங்கள் வீசிச் செல்லும் ஒளி வெள்ளத்தில், கேற்றுக்கு வெளியே மதிலோடு ஏ9 பாதையின் ஓரமாக நிமிர்ந்து நின்ற அறிவிப்புப் பலகையில் உள்ள வெண்புறாச் சின்னமும், வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனம், கிளிநொச்சி பிராந்தியச் செயலகம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்த வாசகங்களும் மின்னி மின்னி மறைந்தன.நேற்று வரை மூடிய படியே கிடந்த பாழடைந்த எதிர் வீட்டில் இன்று ஒரு வகை உயிர்ப்புத் தெரிந்தது. மோட்டார் சைக்கிள் ஒன்று வாசலில் நின்றது. திறந்த கதவினூடே ஒரு பெண்ணின் அசைவுகள் தெரிந்தன. இடம் பெயர்ந்து போன வீட்டுச் சொந்தக்காரர் மீண்டுள்ளனர் என்பது புரிந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு ஒரு கடை முளைத்திருக்கும். நான் வந்த சில நாட்களுக்குள் இந்த வீதிகளில் முளைக்கும் புதிய புதிய கடைகள் என்னை அப்படித்தான் எண்ண வைத்தன.
பக்கத்துக் கோயிலில் வேர் பரப்பி, விழுது விட்டு, குடை விரித்திருக்கும் அழகிய அரச மரத்தின் கிளைகள் எனது அறையின் தகரக் கூரையில் உரசும் சத்தத்தை விட, அதிகாலையிலேயே குதித்துக் கொண்டும், இறகைச் சிலுப்பிக் கொண்டும் மற்றவர்களைத் தொந்தரவு பண்ணுகிறோமே..! என்ற எந்தப் பிரக்ஞையுமின்றி தமக்கு மட்டுந்தான் இந்தப் பிரபஞ்சம் சொந்தம் என்பது போல கரைந்து கொண்டிருந்த காகங்களின் சத்தம் அதிகமாகவே இருந்தது.
இவையெல்லாவற்றையும் மீறி எங்கிருந்தோ விட்டு விட்டு ஒலித்த அந்தச் சத்தம் என்னைத் தன்பால் ஈர்த்தது. "அது வானொலியா...!" "இந்த நேரத்தில் எந்த வானொலி...!" எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடும் முனைப்பில்... கேட்கும் திறனையெல்லாம் ஒன்று கூட்டி, ஒரு நிலைப் படுத்தி கூர்ந்து கவனித்தேன். அது வானொலியல்ல. ஒலி பெருக்கி.
எங்கோ தொலைவிலிருந்து காற்று அள்ளி வந்த அந்தத் துண்டுத் துண்டு வாக்கியங்களைக் கோர்த்துப் பார்த்ததில், சிறார்களைப் பள்ளிக்கு அழைப்பது தெரிந்தது. அழியாத செல்வமாம் கல்வியைப் பற்றி குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் விளக்கும் அவசரம் தெரிந்தது. கல்வியின் மகத்துவம் விளக்கப் பட்டது. எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வராமல் இருந்து விடக் கூடாது என்ற கரிசனம் தெரிந்தது. தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் UNICEF நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிராமிய கல்வி பொருளாதார நிறுவனம் நடைமுறைப் படுத்தும் அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாது பயன் படுத்தி விட வேண்டுமென்ற அக்கறை தெரிந்தது.
இந்த அக்கறை, மனிதம் மீதான இந்தக் கரிசனம் வன்னிக்குள் எங்கும் ஒட்டியிருந்தது. சிதைக்கப் பட்ட ஒரு பூமியில் நம்பிக்கை விதை நல்லெண்ணத்தோடு விதைக்கப் பட்டு செழிப்போடு வளர்ந்திருந்தது. அந்த நிர்வாகத்திறன் என்னை வியக்க வைத்தது.
கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி வன்னிமண் செப்பனிடப் பட்டிருந்தது. நான் நினைக்கிறேன் இலங்கையிலேயே கூடுதலான அங்கவீனர்கள் வன்னியில்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால் வன்னி அவர்களை வீதியில் வீசி எறியாமல் தன்னோடு அணைத்து வைத்திருந்தது. ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்தது.
இந்த மனிதத்தனம், இந்த மனிதநேயம், மக்களோடான இந்த நட்பு, மக்களின் எதிர் காலத்தின் மீதான இந்த அக்கறை இவைதான் என்னுள் சந்தோசப் பிரவாகத்தையும் அளவிலாப் பிரமிப்பையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தன. போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பது தெரிந்தது.
தாயக விடுதலைக்காய் தோள் கொடுத்த, கால் கொடுத்த, கை கொடுத்த... போராளிப் பிள்ளைகளைச் சந்திக்கும் போதெல்லாம் வன்னியின் இப்படியான நடப்புக்கள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஆச்சரியம் பற்றிப் பேசினேன். அதனால் ஏற்பட்டிருக்கும் இன்பத் திணறல் பற்றிப் பேசினேன். இவையெல்லாவற்றையும் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன் மிக்க அண்ணனைப் பற்றிப் பேசினேன்.
"அண்ணன்" அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.
வாய்க்கு வாய் "அண்ணை" என்றும் "அண்ணன்" என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளை விட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து தளிர்த்து சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. "நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்கு உரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்." எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.
நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், அது எனது ஆசை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளாதபடி, பொதுவாகக் கேட்பது போல் "அண்ணனை யாருக்காவது சந்திக்கும் வாய்ப்பிருக்கா..?" என்று கேட்டுப் பார்த்தேன்.
எல்லோரிடமிருந்தும் "அண்ணன் இப்ப பிஸியாக இருக்கிறார். முடியாது." என்ற பதில்கள்தான் வந்தன. "எத்தனையோ பேர் வந்து காத்திருந்து விட்டுப் போய் விட்டார்கள்." என்றும் சொன்னார்கள். அந்தப் பதில்களில் நான் சற்று ஏமாற்றத்தை அடைந்தாலும் எனக்குள் விசுவரூபம் எடுத்த அந்த ஆசையை என்னால் வீசி எறிய முடியவில்லை.
என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காக தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு பேச வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.
"என்ன...! வெளியிலை ஆரும் நிக்கினமே...? விடிஞ்சிட்டே..? "
அருகில் ஆழ்ந்து தூங்கியிருந்த எனது கணவரின் விழிப்போடு வந்த கேள்வியில் நான் நினைவுச் சிறகுகள் அறுபட்டு தொப்பென்று மீண்டும் மரக்கட்டிலில் வீழ்ந்தேன்.
"இல்லை. ஒருத்தரும் இல்லை. எனக்கு மூண்டு மணிக்கே நித்திரை போட்டு."
சொல்லி விட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு நித்திரை வரவில்லை. மனசு இறக்கை கட்டிக் கொண்டு சிலிர்ப்பு, தவிப்பு, துடிப்பு... என்று பல்வேறு உணர்வுகளுடன் எங்கெல்லாமோ அலைந்தது. இடையிடையே "அண்ணையை எப்படிச் சந்திக்கலாம்! அவர் என்னைச் சந்திக்கச் சம்மதிப்பாரா..?" என்ற கேள்விகளுடன் வெண்புறாவுக்குள் வந்து மரக்கட்டிலில் விழுந்தது.
சந்திரவதனா
யேர்மனி.
- தொடரும் -
Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
