Thursday, July 10, 2008

இப்படியும் நடக்கிறது

கடந்த வாரத்தில் ஒரு நாள் எமது நகரில் வாழும் ஒருவர் இரவு 9.30 மணியளவில் எமது வீட்டுக்கு வந்தார்.எந்தவித முன்னறிவித்தலுமின்றி அவர் அப்படி வந்ததில் எமக்குள் ஆச்சரியமும் ஏன் என்ற கேள்விக் குறியும்.

கூடவே இரண்டு பூப்புனிதநீராட்டு விழா அழைப்பிதழ்களையும் கொண்டு வந்திருந்தார். வாரஇறுதியில் தானும் இன்னும் இருவருமாக எமது வீட்டைத் தேடிக் கண்டு பிடிக்க முடியாமற் போய் விட்டது எனவும், எப்படியோ கஸ்டப் பட்டு இப்போ கண்டு பிடித்து விட்டதாகவும் சொல்லி அந்த அழைப்பிதழ்களை எம்மிடம் தந்தார்.

அவைகளில் ஒன்று எமது நகரிலேயே வாழும் ஒரு குடும்பத்துப் பெண்ணுடையது. மற்றையது வேறொரு நகரத்தது. அந்தக் குடும்பத் தலைவர் யாரென்று எமக்குத் தெரியவில்லை. கொண்டு வந்தவரும் இப்போதுதான் முதல்முதலாக அந்த நபரைச் சந்தித்தாராம்.

அவர் போன பின்னும் நானும் கணவருமாக நன்கு யோசித்துப் பார்த்தோம். அந்தப் பெயரில் சொந்தமோ, நட்போ எமக்கு ஊரில் கூட இல்லை. ஜேர்மனியில் நிட்சயமாக இல்லை.

வழமையான பூப்புனிதநீராட்டு விழா வாழ்த்து மடல்கள் போலவே இதையும் ஒரு பக்கமாக வைத்து விட்டு படுத்து விட்டோம். தொடர்ந்த நாட்களில் ´யாரது? என்ற கேள்வி´ அவ்வப்போது வந்தாலும் அதிக ஆராய்ச்சிகள் செய்யாமல் அதை விட்டு விட்டோம்.

நேற்று வேலை முடிந்து வரும் போது எமது நகரத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணை பேரூந்தினுள் சந்தித்தேன். கதைகளின் மத்தியில் "ஏன் சாமத்திய வீட்டுக்கு வரவில்லை" என்று கேட்டாள் அந்தப் பெண். நானும் சட்டென்று எதுவும் ஞாபகத்துக்கு வராத நிலையில் "எந்தச் சாமத்திய வீடு?" என்றேன். அதுதான்... என்று தொடங்கி குறிப்பிட்ட அந்த நபரின் பெயரைப் சொல்லி அவரது மகளின் சாமத்திய வீட்டுக்குத்தான் என்றாள்.

"ஆரது, உங்களுக்குத் தெரிந்தவரா?" கேட்டேன்..

"சீ.. சீ.. தெரியாது. சரியிலைத்தானே பாவம் கொண்டு வந்து தந்திட்டார். அதுதான் நாங்கள் போயிட்டு வந்தனாங்கள்." என்றாள்

அதாவது இந்த நகரில் உள்ள அனேகமான தமிழர் எல்லோரும் குறிப்பிட்ட அந்த நகருக்குச் சென்று சாமத்திய வீட்டில் பங்குபற்றி வந்திருக்கிறார்கள். எமது நகரில் வாழும் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் அவரோடோ அந்தக் குடும்பத்தோடோ முற்கூட்டிய பழக்கமும் இல்லை. நட்பும் இல்லை.

Tuesday, July 01, 2008

சில பக்கங்கள்

நெருங்கிய உறவொன்றின் மரணம் பெரும் சுமையாக, ஆற்ற முடியாத துயராக, விடை கிடைக்காத கேள்வியாக என்னை அழுத்திக் கொண்டேயிருந்தது. வாழ்பவர்கள் அத்தனை பேரும் இறந்துதான் ஆக வேண்டும் என்ற நியதி மனதுக்கு ஒவ்வாததாக இருந்தது. ஏன் என்ற கேள்வி அடிக்கடி என்னைக் குடைந்தது. மரணம் ஏன் என்பதை விட இந்த வாழ்வும், அதனோடு இணைந்த இன்ப துன்பங்களும், பிரிவுகளும் எதனால்? எதற்காக? மரணத்தின் பின்னே என்ன இருக்கிறது? மூச்சடங்கி, இரத்த ஓட்டங்கள் அஸ்தமித்து, உடல் வெறும் வெற்றுக் கூடாகி, சாம்பலாகி... இதுவே நியதியாய்... ஏன்? மனதின் அலைவுகளைத் தவிர்க்க முடியாமலே இருந்தது.

ஒவ்வொரு மரணமும் அது சார்ந்த நெருங்கிய உறவுகளை அடித்துப் புரட்டிப் போட்டு விடுகிறது. சிலரை மனதளவில் அதள பாதாளத்தில் கூட வீழ்த்தி விடுகிறது. அதற்காக ஆதவன் தொடங்கி அத்தனை இயற்கைகளும் அசமந்து இருந்து விடுவதில்லை. உலகம் தன்பாட்டில் இயங்கிக் கொண்டேயிருக்கும். சம்பந்தப் பட்டவர்களும் அவரவர் மனங்களுக்கு ஏற்ப ஸ்தம்பித்து, உறைந்து, கண்ணீரில் கரைந்து மீண்டும் மெதுமெதுவாக எல்லாவற்றுடனும் இணைவார்கள்.

நானும் மெதுமெதுவாக என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வெளியோடு இணைய முயன்றேன். ஆதவனின் இருப்பு அதீதமாகவே தெரிந்தது. வெளியின் வெளிச்சம் மனதிலும் சிறிய புத்துணர்வைத் தந்தது. வசந்தம் வந்து விட்டதாம். கடந்த சில நாட்களில் கொட்டி விட்ட பனியின் சுவடே தெரியாமல் புற்கள் பசுமை காட்டின. இலைகள் துளிர்க்க முன்னமே சில மரங்கள் மொட்டவிழ்த்திருந்தன. வீதிகளின் ஓரங்களிலும், வீடுகளின் முன்றல்களிலும் சிவப்பு, மஞ்சள், நீலம்... என்று பல வர்ணங்களிலும் பூக்களைத் தாங்கியபடி செடிகள் அசைந்தாடின. மௌனித்திருந்த வீதிகள் மனிதர்களினால் ஆராவாரப் பட்டன. இத்தனை கோலாகலங்களிலும் கலந்து கொள்ளாமல் சில மரங்கள் இன்னும் நிர்வாணமாகவே நின்றன.

வெயில் சிரித்தாலும் கொஞ்சமாய் குளிரும் உறைத்தது. கடும் குளிருக்கான தடித்த உடைகளும், சப்பாத்துகளும் தவிர்க்கப் பட்டதால் வேகமாக நடக்க முடிந்தது. இப்படியான பொழுதுகளில் பேரூந்தை விடுத்து நடந்தே வேலைக்குப் போய் விடுவது என் வழக்கம். மூளையில் பதியப் பட்டிருக்கும் சில நாளாந்த விடயங்கள் அதிக சிந்தனைகளுக்கு இடமின்றி தன்பாட்டில் நடந்து விடுவது போல நானும் பேருந்துத் தரிப்பிடத்தைத் தாண்டி மலைக்குன்றிலிருந்து கீழிறங்கும் படிக்குத் தாவினேன்.

வாகனங்களின் இரைச்சல்களிலும், புகைகளிலும் தவித்துத் தத்தளித்துக் கொண்டிருக்கும் பெருஞ்சாலைகளை விட மரங்களும், செடிகளும் இருமருங்கிலும் அசைந்தாடும் சிற்றொழுங்கைகளிலும், சிறு வீதிகளிலும் நடக்கும் போது ஒரு தனியான சுகம் கிடைக்கும். அனேகமான பொழுதுகளில் வேலைக்குச் செல்வதற்கு நான் தேர்ந்தெடுக்கும் பாதை ஆலனில் தொடங்கி எனது ஸ்வெபிஸ்ஹால் நகரை ஊடறுத்து நகர்ந்து கொண்டிருக்கும் நதியை ஒட்டிய கரைப் பாதையாகவே இருக்கும். அந்தப் பாதையில் நதியைப் பார்த்துக் கொண்டே, அதன் சலசலப்பைக் கேட்டுக் கொண்டே எத்தனை மணித்தியாலங்கள் வேண்டுமானாலும் நடந்து விடலாம்.

இன்பத்திலும் சரி, துன்பத்திலும் சரி என்னைத் தழுவி, என்னோடு கலந்து எனது உணர்வுகளுக்கு வலுவும், உயிர்ப்பும் சேர்க்கும் இசை போல நதியின் சலசலப்பும் என் செவிகளினூடு புகுந்து மூளையின் ஒவ்வொரு உணர்வு நரம்புகளையும் சிலிர்க்க வைத்தது. தவழ்ந்து கொண்டிருந்த தென்றல் முடியோடு சல்லாபித்தது. கன்னங்களை வருடியது. நெளிந்து வளைந்து நகர்ந்து கொண்டிருந்த நதியின் மேற்பரப்பில் பட்டுத் தெறிந்த சூரியஒளியில் கண்கள் பனித்தன. மரணம் பற்றிய கேள்விகள் தற்காலிகமாக என்னிடமிருந்து விடைபெற்றன. கவலைகளும், நினைவுகளும் என் மனதுக்குள் முட்டியிருந்தாலும் இயற்கையின் தழுவலில் ஒருவித கிறக்கம் என்னை ஆட்கொள்ள நான் விரைந்து கொண்டிருந்தேன்.

இன்று திருவாளர் சுறொத்துடன் ரெஷறியில் வேலை செய்ய வேண்டுமென கடந்த வாரமே அறியத் தந்திருந்தார்கள். சுறொத்துடன் வேலை செய்வது என்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். சுறொத் இனிமையானவர். மென்மையானவர். சந்தோசமாகப் பழகக் கூடியவர்.

சுறொத்தை முதன் முதலாக சந்தித்த நாள் இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. நான் வங்கியில் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களில் ஒரு நாள் ´திருமதி.சூமாகர் சுகவீன விடுமுறையில் போய் விட்டார்´ என்ற செய்தியைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு என்னைப் போகும் படி பணித்தார்கள். நான் செய்யும் வேலைக்கும், அந்த வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாயினும் அது ரெஷறி என்பதால் நம்பிக்கையான ஆட்களை மட்டுமே அதனுள் அனுமதிக்கலாம் என்ற அடிப்படையில் என்னை அழைத்திருந்தார்கள். என்னோடு பல ஜேர்மனியப் பெண்களே வேலை பார்க்கும் போது அவர்களை விடுத்து என்னைத் தேர்ந்ததில் அவர்களிடம் சற்றுப் பொறாமை தெரிந்தது. ஆனால் எனக்கோ பழகிய வேலையையும், பழகிய வேலைத் தோழிகளையும் விட்டு அந்த செக்சனுக்குப் போவதில் அரைமனதான சம்மதமே இருந்தது. மறுக்க முடியாத நிலையில் போனேன்.

தடித்த சுவர்களும், இரும்புக் கதவும் கொண்ட அந்த நிலக்கீழ் அறைக்குள் நுழையும் போது ஏதோ சிறைச்சாலைக்குள் செல்வது போன்ற உணர்வே மேலோங்கி என்னைப் பயமுறுத்தியது. உள்ளே நுழைந்து விட்ட மாத்திரத்தில் வேறு உலகத்துக்குள் வந்து விட்டது போன்ற உணர்வு தோன்றியது. அப்படியொரு அழகான பெரிய அறை. சுவர்களில் இயற்கைக் காட்சிகளுடன் அமைந்த அழகான பெரிய பெரிய புகைப்படங்கள். ஒவ்வொரு புகைப்டத்திலும் திரு.சுறொத் அவர்கள் இளமைக்கோலத்துடன் அவர் மனைவியை அணைத்த படியும், மனைவியுடன் பனிச்சறுக்கல் செய்த படியும், மலைகளில் கயிறுகளில் தொங்கிய படியும், ஏறிய படியும் என்று மிக மிக அழகான புகைப்படங்கள் தொங்கின.

சுறொத் மெல்லிய புன்சிரிப்புடன் கைகுலுக்கி என்னை வரவேற்றார். அவரைப் பார்த்ததுமே எனது அப்பாவின் நினைப்புத்தான் எனக்கு வந்தது. எனது அப்பா போல வாட்டசாட்டமான உடலமைப்பு இல்லாவிட்டாலும் அந்தப் புன்சிரிப்பிலும், கண்களை ஊடுருவிய அந்தப் பார்வையிலும் ஒரு கனிவும், மிகுந்த நட்பும் தெரிந்தது. அழகு என்பது தோற்றத்தில் மட்டுமல்ல, புன்சிரிப்பிலும், பார்வையிலும், பழகுதலிலும் கூட இருக்கிறது என்பதை நட்போடும், பண்போடும் பழகக் கூடிய அவரோடு வேலை செய்யத் தொடங்கிய பின்தான் புரிந்து கொண்டேன்.

அந்தப் பாதுகாப்பான அறையினூடு இன்னொரு அறைக்குள் செல்லலாம். முதன் முதலாக அந்த அறைக்குள் நுழைந்த பொழுது என்னுள் ஒரு அதிர்வு ஏற்பட்டது. சுற்றி வர அறைச் சுவரெல்லாம் அலுமாரிகள் பொருத்தப் பட்டிருந்தன. அலுமாரிகளின் ஒவ்வொரு தட்டிலும் கட்டுக் கட்டாகப் பணங்கள். பணத்தாள்கள். வெறுமே படங்களிலோ, புத்தகங்களிலோ பார்ப்பது போலல்லாமல் நியமான பணக்கட்டுகள். தலை கிறுகிறுத்தது. இரண்டு கைகளாலும் தலையின் இருபக்கங்களையும் அழுத்தியவாறு அப்படியே பேச மறந்து நின்று விட்டேன்.

'என்ன திகைத்து விட்டாயா? இன்றுதானே முதன் முதலாகப் பார்க்கிறாய். சில காலம் போக இதெல்லாம் வெறும் தாள்கள் என்பதான உணர்வைத்தான் இவைகள் உனக்குத் தரும். என்னைப் பொறுத்த வரையில் இதெல்லாம் வெற்றுத் தாள்களே' என்றார் சுறொத்.

அன்றைய பொழுதில் என்னை விட சுறொத்தான் அதிகம் கதைத்தார். கதைத்த படியே பார்ப்பதற்கு ஒரு சாதாரண ரைப்ரைட்டர் அளவில் இருக்கும் இயந்திரம் ஒன்றினுள் தட்டுக்களை வைத்து விட்டு மேலுள்ள துவாரத்தினுள் நாணயங்களைப் போட்டு சுவிச்சை அழுத்தினார். உள்ளே மளமளவென்று நாணயங்கள் கொட்டுப்படும் சத்தம் கேட்டது. சத்தம் நின்று பச்சைநிறத்தில் ஒரு பொத்தான் மின்னியதும் அந்தத் தட்டுகளை ஒவ்வொன்றாக வெளியில் இழுத்து எடுத்தார். ஒவ்வொரு தட்டிலும் அதனதன் பெறுமதிக்கு ஏற்ப பிரிபட்ட படி நாணயங்கள் அடுக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு தட்டிலும் எத்தனை நாணயங்கள் அடங்கும் என்பது முற்கூட்டியே தெரிந்திருப்பதால் அது எவ்வளவு பணம் என்பதை சுலபமாகக் குறித்து விட முடிந்தது. ஒவ்வொரு முறையும் தட்டுக்களை வெளியில் எடுத்த கையோடு அதனதன் பெறுமதிகளை பேப்பரிலும் எழுதி, கணினியிலும் குறித்தார்.

தட்டுக்கள் எல்லாம் நிறைந்ததும் சற்றுப் பெரிதாக மறு பக்கத்தில் இருந்த இன்னுமொரு விதமான இயந்திரத்தை அணுகினார். அந்த இயந்திரத்தின் முன்பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றுவதற்கு நாம் ஊரில் பாவிக்கும் புனல் போன்ற வடிவம் கொண்ட ஒரு இரும்புக் கொள்கலன் இருந்தது. அதற்குள் பிரித்த நாணயங்களின் ஒரு யூரோ பெறுமதியுள்ள நாணயங்களைக் கொட்டி விட்டு, மறு பக்கத்தில் இருந்த ஒரு தட்டில் நாணயங்களைச் சுற்றுவதற்கான அளவான தாள்களை அடுக்கி விட்டு சுவிச்சை அழுத்தினார். நாணயங்கள் முழுவதுமாகப் பேப்பரால் சுற்றப்பட்டு சிறு சிறு உருளைகளாக வந்து விழுந்தன.

இப்போது எண்ணுவதும், கணக்கெடுப்பதும் சுலபமாக இருந்தது. 10நாணயங்கள் கொண்ட ஒரு யூரோ உருளைகள் எத்தனை என எண்ணி எழுதிக் குறித்து விட்டு சற்று அமர்ந்தார்.

மறுபக்கத்து மேசையில், திருமதி.பிராங்கே பணத்தாள்களை எண்ணி எண்ணி, நீல ஒளி பாய்ச்சும் இயந்திரம் ஒன்றினுள் அடுக்கி அவை நியமான பணத்தாள்கள்தானா என்பதை உறுதிப் படுத்திய பின், அதற்குரிய மெல்லிய தாளால் நடுவில் சுற்றி ஒட்டிக் கொண்டிருந்தார். இளம்பெண்ணான சபினே ஒட்டிய பணத்தாள்களை ஒவ்வொன்றாக எடுத்து, சரிபார்த்து தொகையைக் குறித்துக் கொண்டிருந்தாள்.

நான் ஒவ்வொன்றையும் வியப்புடன் பார்ப்பதை அவதானித்த சுறொத் மெலிதான சிரிப்புடன் 'இப்போது சில வருடங்களாகத்தான் இந்த வசதியெல்லாம். நான் பதினேழு வயதில் இந்த வேலையில் சேர்ந்த போது ஒவ்வொரு நாணயமாகப் பிரித்து, ஒவ்வொன்றாக அடுக்கி... இந்த இயந்திரங்கள் சில நிமிடங்களுக்குள் செய்த இந்த வேலைகளை மணித்தியாலக் கணக்கில் இருந்து செய்திருக்கிறேன்.' என்றார்.

'17வயதிலிருந்தே இந்த வேலையா?'

'ம்.. ம்.. அப்போது இந்த அறையில் 15பேர் வேலை செய்தோம். இப்போது இந்த இயந்திரங்கள் 15பேர் ஒரு நாள் முழுக்கச் செய்யும் வேலைகளை ஓரிரு மணித்தியாலங்களில் முடித்து விடுகின்றன. அதனால் அவர்கள் வேறு செக்ஷனுக்கு மாற்றப்பட்டு விட்டார்கள்' என்றார்.

கதைத்த படியே எழுந்து ஒரு அலுமாரியைத் திறந்தார். அதனுள்ளேயும் பணக்கட்டுகள் இருக்குமென நினைத்தேன். மாறாக தண்ணீர் பைப், சிங் இவைகளோடு ஒரு கோப்பி மெசின் என்று ஒரு குசினி மிகச் சிறிய அளவில் அமைக்கப் பட்டு அந்த அலுமாரிக்குள் ஒளிந்திருந்தது. அழகாக, நேர்த்தியாக குடிக்கும், சாப்பிடும் கோப்பைகளும் கிளாசுகளும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கோப்பி இயந்திரத்தில் இருந்து துளித்துளியாக கோப்பி சிந்திக் கொண்டிருந்தது. கோப்பி வாசனை நன்றாக இருந்தது.

'நீயும் குடிக்கிறாய்தானே' என்ற படி ஒரு கோப்பையை எடுத்து அதற்குள் கோப்பியை ஊற்றினார்.

'நன்றி. நான் கோப்பி குடிப்பதில்லை. தேநீர் மட்டுந்தான்' என்றேன்.

அந்த அலுமாரிக்குள் இருந்த இன்னொரு சிறிய அலுமாரியைத் திறந்தார். பலவிதமான தேயிலைகளைக் கொண்ட பைகள் நிரம்பிய பெட்டிகள். 'விரும்பியதை எடு' என்றார். நான் செம்பருத்திப் பூவில் செய்த தேயிலை நிரம்பிய பை ஒன்றை எடுத்து தேநீர் தயாரித்துக் கொண்டு போய் இருந்தேன்.
முன் சுவரில் அவரது படங்கள். அழகிய மனைவியுடன். ஒரு புகைப்படத்தில் ஆல்ப்ஸ் மலையைப் பின்புலமாகக் கொண்ட போடன்சேயில் இருவரும் வள்ளத்தில் போய்க் கொண்டிருந்தார்கள். இன்னொன்றில் மலையில் ஏறிக் கொண்டிருந்தார்கள். இன்னொன்றில் மயோக்கா கடற்கரையில் ஒருவரோடு ஒருவர் சாய்ந்து ஒய்யாரமாக வெயில் குளித்தார்கள். இன்னுமொன்றில் எகிப்தின் பிரமிட்டுகளை ஆவல் ததும்பும் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் அந்நியோன்யமான தம்பதிகளாய், வாழ்க்கையை அனுபவிக்கும் ஆர்வம் உள்ளவர்களாய், பார்ப்பவர்கள மனதில் சந்தோசம் ஊட்டுபவர்களாய் தெரிந்தார்கள்.

நான் ஒவ்வொரு படத்தையும் ஆர்வத்துடன் பார்ப்பதைப் பார்த்த அவர் வேலைகளின் மத்தியில் கிடைக்கும் அவ்வப்போதான இடைவெளிகளில் ஒவ்வொரு படமும் எங்கே எடுக்கப் பட்டது, எந்தச் சந்தர்ப்பத்தில்... அன்றைய நாளில் என்ன காலநிலை இருந்தது... என்றெல்லாம் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

எந்த நிலையிலும், எந்தக் கதையிலும் அவர் வேலையிலான நிதானத்தை இழக்காமல் மிகுந்த கவனமாகச் செயற்பட்டார். சுறொத்தின் வேகத்துக்கு அங்கு யாரும் ஈடு கொடுக்க மாட்டார்கள். அத்தனை வேகமாக நாணயங்களை இயந்திரத்தில் கொட்டி வெளிவரும் உருளைகளை பெட்டிகளில் அடுக்கி கணக்குகளைக் குறித்துக் கொண்டிருந்தார். இந்தளவு வேலைகளையும் கைகள் செய்து கொண்டிருந்தாலும் எப்பொழுதும் புன்னகை மாறாத முகத்தோடு ஒவ்வொருவரையும் எதிர் கொண்டார்.

மேலே வங்கிக்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம் திருமதி.சிமித்தோ அன்றி திருவாளர்.வாக்னரோ இந்த அறைக்குத்தான் வருவார்கள். சுறொத்தான் அவர்களிடம் பணத்தைக் கொடுத்து, குறித்துக் கொள்வார்.

மதியம் 12மணி என்றதும் எல்லோரும் கன்ரீனுக்கோ, அன்றி வெளிக் கடைகளுக்கோ சாப்பிடப் போவார்கள். சுறொத் மட்டும் வீட்டுக்கு ஓடி விடுவார். மீண்டும் 2மணிக்கு வந்து வேலை தொடங்கி 5 மணியானதும் ஒரு நிமிடம் கூடத் தாமதியாது போய் விடுவார்.

சுறொத்துடன் வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கும் என்றில்லை. இங்கு வேலை செய்பவர்களில் யாராவது விடுப்பில் போக வேண்டும். அந்த நாட்களில்தான் எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்கும். நான் இந்த வங்கியுடன் இணைந்து விட்ட 17வருடங்களில் ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாகச் சில வாரங்களேனும் சுறொத்துடன் இந்த ரெஷறியில் வேலை செய்வேன். ஒவ்வொரு சந்தர்ப்பமுமே மகிழ்வான பொழுதுகளாகவே கழிந்தன.
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எமது கதைகள் உலகத்தைச் சுற்றி வரத் தவறுவதில்லை.

நீண்ட மாதங்களின் பின் இந்த வருடத்திற்கான முதல் அழைப்பு இது. இப்போதெல்லாம் அந்தப் பணக்கட்டுக்களைப் பார்க்கும் போது எனக்கு எந்தத் திகைப்பும் ஏற்படுவதும் இல்லை. நெஞ்சு படபடப்பதும் இல்லை. எல்லாம் வெற்றுத்தாள்கள் போலவே.

உள்ளே போன போது சுறொத் கைகுலுக்கி வரவேற்றார். முதல்முதல் கண்ட சுறொத் 45வயதில் இருந்தார். இன்று அவர் 62வயதில்.

தனது கோப்பியோடு எனக்கு ஸ்ரோபெரி தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து மேசையில் வைத்தார். மேசையில் செரிப்பழங்கள் சேர்க்கப் பட்ட ´டொனாவெலே கேக்´ கும் இருந்தது. 'சாப்பிடுகிறாய்தானே..!' என்ற படி அதில் ஒரு துண்டு வெட்டி ஒரு சோஷரில் வைத்து, கரண்டியும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தார். 'மனைவி முதல்நாள் 62வது பிறந்தநாளைக் கொண்டாடினாள்' என்றார்.

கோப்பியில் இரண்டு மூன்று மிடறுகளை உறிஞ்சி விட்டு எழுந்து சென்று பத்து சென்ற் களை இயந்திரத்துள் கொட்டி பொத்தானை அழுத்தினார். பத்து சென்ற் உருளைகளைத் தொடர்ந்து, நெளிந்து வளைந்து கிறுக்குப் பட்ட படி சில வேற்று நாட்டு நாணயங்களும் வந்து வீழ்ந்தன.

சில சமயங்களில் சிலர் வேற்று நாட்டு நாணயங்களையும் போட்டு ஏமாற்றியிருப்பார்கள். கூடுதலாக வெளியில் நாட்டப் பட்டிருக்கும் சிகரெட் மெசின்கள், வாகனத் தரிப்பிடங்களிலுள்ள தரிப்புக்கான கட்டண மெசின்கள் போன்றவன்றில் போடப்படும் நாணயங்களில் இப்படியானவையும் வருவதுண்டு. மனிதர்களின் கண்களை விட இந்த இயந்திரங்களின் பார்வை கூர்மையும், அவதானமும் மிக்கவை. வேற்று நாட்டு நாணயங்களை ஒரு புரட்டுப் புரட்டி தனியாகக் கக்கி விடுகின்றன. சுறொத் அவைகளை நிரம்பி வழிந்து கொண்டேயிருக்கும் அதற்கான பெட்டிகளுக்குள் கொட்டினார். அந்த நாணயங்கள் எப்போதாவது உதவி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்;.
அன்றைய கதைகளில் சுறொத், தான் ஓய்வில் போய் விடப் போவதாகச் சொன்னார். 'ஏன் இத்தனை அவசரம், ஊருலா மோகமா?' ஆச்சரியத்துடன் கேட்டேன். 67வயது வரை வேலை செய்தால்தான் முழு ஓய்வூதியமும் கிடைக்கும். இவர் 62இலேயே போவதால் ஓய்வூதியத் தொகை குறையும்.

'இல்லையில்லை. 20வருடங்களாக நாம் ஊருலா செய்வதில்லை. 20வருடங்களுக்கு முன் திடீரென்று ஏற்பட்ட ஒரு சுகவீனத்தில் எனது மனைவியின் உடலின் சில பகுதிகள் இயக்கத்தை இழந்து விட்டன. இதுவரை வேலை தவிர்ந்த சில மணிகளை மட்டுமே அவளுக்காகச் செலவழிக்க முடிந்தது. இனி அவளருகில் இருந்து அவளைக் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்.' என்றார். இன்றுதான் அவர் முகத்தில் சோகத்தின் இழைகளையே பார்த்தேன். எல்லாம் சில விநாடிகள்தான். சட்டென்று கவலையைக் களைந்து விட்டு சிரித்த படியே நாணயங்களை இயந்திரத்தினுள் கொட்டத் தொடங்கினார்..

சந்திரவதனா
3.5.2008

பிரசுரம் - யூன் யுகமாயினி

Wednesday, June 18, 2008

தவிர்க்க முடியாதவைகளாய்...


என் கண்ணுக்குள் தெரிந்த உலகம் குளிரில் உறைந்து கிடந்தது. கால்கள் தன்போக்கிலே நடந்தாலும் மனசு வீட்டுக்குத் திரும்பி விடு என்று கெஞ்சியது. குருவிகளினதும், கோட்டான்களினதும் கூச்சலும், சிறகடிப்பும் ஆற்றுப் படுக்கைக்கேயுரிய ஆத்மார்த்த சலசலப்புகளாயிருந்தன. ஆற்றைக் குறுக்கறுத்து நின்ற பாலத்தைக் கடக்கும் போது குத்தெனத் தெரிந்த ஆற்றின் மீது படர்ந்திருந்த குளிர்ந்த அமைதி சுனாமியை ஞாபகப் படுத்தி என்னைக் கிலி கொள்ளச் செய்தது. அழகான இயற்கை ஏதோ ஒரு கணத்தில் ஆக்ரோஷமாக உயிர் குடிக்கும் என்ற உண்மை இப்போதெல்லாம் அடிக்கடி மனசை உதைத்து விட்டுச் செல்கிறது.

நேற்றிரவு எரிமலை சஞ்சிகையில் வாசித்த, சித்திரா சுதாகரனின் ´மாபிள்கல் பதித்த விறாந்தை´ சிறுகதை நினைவுக்குள் உருண்டது. போர் எப்படியெல்லாம் எங்களைச் சிதைத்து விட்டது. இந்தக் குளிரிலும், பனியிலும் இராப்பகலாய் உழன்று வேலை செய்து மாபிள்கல் பதித்த விறாந்தையுடனான வீட்டுக்காக ஏங்கிய ஏழைத்தாய்க்குப் பணம் அனுப்புகிறான் ஒரு ஐரோப்பியா வாழ் ஈழ அகதி. தாயும் அந்த வீட்டைக் கட்டுகிறாள். கட்டி முடியும் தறுவாயில்தான் அந்தக் கொடுமை நடக்கிறது. அந்த மாபிள்கல் பதித்த தரையிலேயே அந்தத் தாயும், அவனது சகோதரி குடும்பமும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை அவன் தொலைக்காட்சியில் பார்க்க நேர்கிறது. அந்தக் கொடுமை மனசைப் படுத்தியது. அந்த நினைவில் சப்பாத்தையும் துளைத்துக் கொண்டு கால்விரலில் ஏறிய குளிரை மனசு கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்தது.

நான் தனியே நடந்து கொண்டிருந்தேன். ஆற்றங்கரையும், அதையொட்டிய புல்வெளியும் பனி போர்த்தியிருந்தன. தூரத்தில் அந்தப் பனியின் மேல் நின்று சில ஜேர்மனியர்கள் மிகவும் சிரத்தையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆசிரியர் ஆணானாலும் நீண்ட கூந்தலைப் பிடியாகக் கட்டியிருந்தார்.

மீண்டும் மீண்டுமாய் அந்த ஐரோப்பிய அகதி இளைஞனும், அவனது குடும்பமும் மனசுக்குள் உருண்டார்கள். உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களைத் தாண்டும் போது ஆசிரியர் பல தடவைகள் தலையை என் பக்கம் திருப்பினார். நான் நடந்து கொண்டிருந்தேன்.

இலக்கின்றிய, ஏகாந்த நடையென்றாலும் இன்னும் அரைமணியில் பேரூந்துத் தரிப்பிடத்துக்குத் திரும்பி விட வேண்டும் என்பது மட்டும் நினைவில் துருத்திக் கொண்டு நின்றது.

கோடைகாலத்தில் இப்படிப் பலரும் நடப்பார்கள். எனக்கு இந்தப் பனியிலும் இந்த வெளியில் நடப்பதில் ஏதோ ஒரு ஆர்வம். தினமும் காலை வேலை முடிந்ததும் என்னையறியாமலே என் கால்கள் இந்த வழியை ஏகும். பனி எவ்வளவு அழகானது. ரோஜாவின் முட்களைப் போல இந்தப் பனிக்கு குளிர் மட்டும் இல்லாதிருந்தால் நான் என் வாழ்க்கையின் பாதிப்பொழுதுகளையேனும் இந்தப் பனியின் மேல் படுத்தும், புரண்டும்... என்று கழித்து விடுவேன்.

பனிப்பூக்கள் பூத்திருந்த ஹாசல்நட்ஸ் மரத்தில் சிறகடித்த ஒரு சிட்டுக்குருவி என் மேல் பனிகளை சிதற விட்டுக் கொண்டு அவசரமாய்ப் பறந்தது. உடல் ஒரு தரம் சிலிர்த்தது. நினைவு துருத்தியது. திரும்பி பேரூந்துக்கான தரிப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். "பகுதி நேர வேலை ஒண்டு இருக்கு. செய்தால் கொஞ்சம் காசு வரும்.." என்று மருமகள் சில தடவைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். நான்தான் "நான் அப்ப முகிலைப் பார்க்கிறன். நீங்கள் அந்த வேலையைச் செய்யுங்கோ" என்று சொல்லிப் பேத்தி முகிலைப் பார்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். அதுதான் இந்த அவசரம்.

மருமகளின் பாடும் ஓட்டம்தான். முகிலை வெளிக்கிடுத்திக் கொண்டு வந்து என்னிடம் தந்து விட்டு வேலைக்கு விழுந்தடித்து ஓடுவாள். திரும்பி வருகிற பொழுது நன்றாகக் களைத்துப் போயிருப்பாள். ஆனாலும் இருந்து மெனக்கடாமல் முகிலையும் கூட்டிக் கொண்டு போய் சமையல், கூட்டல், கழுவல்... என்று தனது வீட்டு வேலைகளுடன் ஒன்றி விடுவாள்.

முகில் நல்ல பிள்ளை. சொல்லுக் கேட்பாள். ஆனாலும் எனக்கு கால்கட்டு மாதிரித்தான். முன்னரைப் போல நினைத்த மாத்திரத்தில் கடைக்கு அதுக்கு இதுக்கு என்று ஓட முடிவதில்லை. ஏதேனும் அவசரம் என்றாலும் வெளியின் குளிருக்கு ஏற்ப முகிலை வெளிக்கிடுத்திக் கொண்டு புதையும் பனிக்குள் புஸ்செயரைத் தள்ளிக் கொண்டு போய் வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இருந்தும் அலுத்துக் கொள்ளும் படியாகவும் இல்லை. முகிலோடு பொழுது போவதில் ஒரு அலாதியான சந்தோசம்தான். வானொலியோடும், கணினியோடும் மட்டும் பேசிக் கொண்டிருக்கக் கூடிய மனதின் அழுத்தமான மௌனங்களை முகிலின் மழலை கலைத்து விடும். எனது குழந்தைகளிடம் இருந்து எனக்குக் கிடைத்த அதிஅற்புத பரிசுகளில் ஒன்றென நான் புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் படியாகத்தான் முகில் என் வீட்டிலும், என் மனசிலும் தவழ்ந்தாள்.

இப்போதெல்லாம் வாழ்க்கையே அவசரமாக விரைவது போன்றதொரு உணர்வு. காலையும், மாலையும், திங்களும், வெள்ளியும் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக ஓடிக் கொண்டே இருப்பது போன்ற பிரமை. ஒவ்வொரு விடயத்தையும் செய்து முடிக்கும் வேகத்துக்கு முன் மணிகளும், நாட்களும் விரைந்து விடுகின்றனவே என்ற பரிதவிப்பு. இருந்தாலும் முன்னரைப் போன்ற அனாவசிய சலிப்புகள் எப்படியோ என்னிடமிருந்து மறைந்திருந்தன.

பனி தாண்டி, குளிர் தாண்டி வீடு வந்து சேர்ந்த போது மெலிதான களைப்புத் தெரிந்தது. வெப்பமூட்டியின் கதகதப்பு வீடு முழுக்கப் பரவியிருந்தது. அதிகாலையிலேயே வேலைக்குப் போய்விட்டதால் இழுத்து விடப் படாதிருந்த யன்னல்களின் சட்டர்களை இழுத்து விட்டேன். மங்கலாக இருந்த வீட்டின் உட்புறம் சட்டென்று வெளிச்சமாகியது. ஆதவனின் ஆதிக்கத்தை விட வெண்பனியின் ஒளிர்வு தூக்கலாக இருப்பது போல இருந்தது. எதிர்வீட்டு மாது தனது வீட்டு ஜன்னலினூடு கையசைத்தாள். புன்னகைகளும், கையசைப்புகளும் கூட மனதை வருடி விடும் என்பதை இவர்கள்தான் எனக்கு அதிகமாக உணர்த்தினார்கள்.

வானொலியைத் தட்டி விட்ட போது கஜனி படத்தின் சுட்டும் விழிச் சுடரே.. பாட்டு இனிமையாக ஒலித்தது. இந்தப் பாட்டு முகிலுக்கும் பிடிக்கும். பாட்டுத் தொடங்கியதுமே தலையை அசைத்து அசைத்து ரசிப்பாள். இத்தனை தூரமான அவதானிப்பும், ரசிப்பும் இரண்டு வயது மழலையிடமே வந்து விடும் என்பது என் குழந்தைகளை வளர்க்கும் போது எனக்குப் புரியவில்லை. முகில் எனக்குப் பல ஆச்சரியங்களைத் தருவாள். இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுவாள்.

அதற்கிடையில் தேநீர் தயாரித்து முகிலுக்கான பாற்போத்தலுடன் வந்தமர்ந்த போது மருமகள் அவசரமாக வந்து முகிலை என்னிடம் தந்து விட்டுப் பறந்தாள். ´அம்மா ஓடுகிறாளே!´ என்பதில் முகிலின் முகத்தில் ஒரு மெல்லிய கவலை படர்ந்தது. சில வினாடிகள் வாசற்கதவையே பார்த்துக் கொண்டு நின்றவள் எனது கொஞ்சலில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினாள்.

பாலைக் குடித்ததும் இன்னும் உசாராகி வீட்டுக்குள் இயல்பாக தத்தித் தத்தி நடந்தாள். படுக்கையறைக்குள் சென்று லாச்சிகளைத் திறந்து ஆராய்ச்சிகள் செய்தாள். ஒரு லாச்சிக்குள் இருப்பதை எடுத்து இன்னொரு லாச்சிக்குள் போட்டாள். புத்தக ஷெல்பிலிருந்த புத்தகமொன்றை இழுத்தெடுத்த போது அதன் பாரத்துக்கு ஈடு கொடுக்க முடியாது ´தொப்´ பென விழுந்தாள். அப்படியே நிலத்திலிருந்து புத்தகத்தை விரித்து பெரிய மனுசத் தோரணையில் படிப்பது போல புத்தகத்தைப் பார்த்தாள்.

அவள் இப்படிப் பராக்காக இருப்பதைப் பார்த்ததும் நான் கணினியின் முன் போய் அமர்ந்தேன். ஒரு கட்டுரை எழுத வேண்டும். பெண்கள் தினத்தை முன்னிட்டு கட்டுரையொன்று எழுதித் தரும்படி பத்திரிகையொன்று கேட்டிருந்தது. தருவதாகச் சொல்லி விட்டேன். ஆனால் இன்னும் எழுதுவதற்கான நேரம் வரவில்லை. வேலை, வீட்டுவேலை, சமையல்... என நேரங்கள் ஓடி விடுகின்றன. முன்னரைப் போல நினைத்த கையோடு இரவிரவாய் இருந்து எழுதி முடித்த காலங்கள் என்னைக் கடந்திருந்தன. இன்று எப்படியாவது எழுதிக் கொடுத்து விட வேண்டும். நாளை பேப்பர் பிறின்ற் க்குப் போகும்.

நான் கணினியின் முன் அமர்ந்ததைப் பார்த்ததும் புத்தகத்தை தள்ளி விட்டு முகில் தத்தித் தத்தி ஓடி வந்தாள். அவளுக்கு நான் கணினியின் முன் இருந்தால் பிடிக்காது. சிணுங்கிக் கொண்டு தூக்கச் சொன்னாள்.

அவளை மடியில் வைத்துக் கொண்டே சில இணையத்தளங்களை மேயத் தொடங்கியதில் நேரம் போனது தெரியவில்லை. ´இனி மெதுவாகச் சமைக்கத் தொடங்க வேண்டும்´ என்று மூளை எச்சரிக்க, முகிலுடன் குசினிக்குள் நுழைந்தேன். பாத்திரங்களை எடுத்து வைத்து, காய்கறிகளை வெட்டத் தொடங்கவே முகில் கண்களைக் கசக்கிக் கொண்டு 'அப்பம்மா.., தூக்குங்கோ' மழலை பொழிந்தாள். ம்... அவளுக்கு நித்திரை வந்து விட்டது. தூக்கித் தோளில் போட்டு முதுகை மெதுவாகத் தட்டினேன். "கை வீசு.. அப்பம்மா! கை வீசு.." எனறாள். ´கை வீசம்மா கை வீசம்மா...´ பாடச் சொல்லிக் கேட்கிறாள். அது பாடி ´நிலா நிலா ஓடி வா...´ பாடிக் கொண்டு போக நித்திரையாகி விட்டாள்.

அவளைப் படுக்கையில் போட்டுப் போர்த்தி விட்டு ´மள மள´ வென்று சமைத்து முடித்தேன். அத்தனை அவசரமாக நான் செயற்பட்டும் பாத்திரங்களைக் கழுவி முடிக்க முன்னர் தூக்கம் கலைந்து எழுந்து விட்டாள். 'அப்...பம்...மா...' சிணுங்கலோடு கூப்பிட்டாள்.

'ஓமடா... என்ரை குஞ்சில்லே வந்திட்டன், வந்திட்டன்.' ஓடிப் போய் தூக்கினேன். அப்படியே என் தோளில் சாய்ந்தாள். இனி, இப்போதைக்கு குசினிப் பாத்திரங்களோடு மினைக்கெட முடியாது. நித்திரை கலைந்த இந்த நேரத்தில் சிறிது நேரத்துக்காவது என் மடியிலோ அல்லது தோளிலோ ஒய்யாரமாகச் சாய்ந்திருக்கத்தான் அவளுக்கு விருப்பம். அவளையும் தூக்கிக் கொண்டு போய் கணினியின் முன் அமர்ந்தேன்.

மடியில் முகிலை வைத்துக் கொண்டு கணினி விசைப்பலகையைத் தட்டுவது கொஞ்சம் அசௌகரியமாகத்தான் இருந்தது. சௌகரியம் பார்த்தால் இன்றும் எழுதி முடிக்க மாட்டேன். அதனால் அந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன்.

ஏதாவது தினங்கள் வந்தாலே பத்திரிகைகளும், சஞ்சிகைளும் போட்டி போட்டுக் கொண்டு அவை பற்றிய கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள்.. என்று பிரசுரிப்பார்கள். இப்போது பெண்கள் தினம். அது சம்பந்தமாகத்தான் எழுத வேண்டும்.

எதை எழுதினாலும் என்ன? சில விடயங்களில் முழுதான மாற்றங்கள் இன்னும் இல்லை. பல விடயங்கள் மாறி விட்டனதான். ஆண்களும் சமைக்கிறார்கள்தான். பெண்களும் வேலைக்குப் போகிறார்கள்தான். ஆனாலும் சமையல் என்பது பெண்களினதுதான் என்பதில் மாற்றம் இன்னும் வரவில்லை. ஆண்கள் வீட்டில் நின்றால் சமைப்பார்கள். பெண்கள் சமைக்கிறதுக்காகவே வீட்டில் நின்றாக வேண்டிய அல்லது விழுந்தடித்து வீட்டுக்கு ஓடி வரவேண்டிய நிலைமை. ஐரோப்பிய வாழ் தமிழ்க் குடும்பங்களில் கூட இந்த நிலையில் பெரியளவான மாற்றங்கள் ஏற்படவில்லை. அனேகமான ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் தனது வழமையான வேலை நேரத்தை விட சில நிமிடங்களே கூடச் செய்ய வேண்டிய நிலை வந்தாலும் பதறுகிறாள். பதட்டத்தில் வேலையிலான கவனத்தைச் சிதறடிக்கிறாள். இது பற்றிக் கண்டிப்பாக எழுத வேண்டும் என்றாலும் இன்றைய நேரத்தில் இந்தப் பிரச்சனையின் தார்ப்பரியத்தை ஒவ்வொரு ஆணும் சரியான முறையில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதுவதற்கு இன்றைக்குக் கிடைக்கும் நேரம் போதாது. அதனால் சமையலில் இருந்து இன்னும் சில வேலைகள் பெண்களுக்குத்தான் என்ற நிலை அடுத்த தலைமுறையிலாவது இல்லாமல் போகும் படியாக என்ன செய்யலாம் என்பதைக் கருவாகக் கொண்ட கட்டுரையை எழுதத் தொடங்கினேன்.

அது பெரிய நீண்ட கட்டுரையாக வந்து விட்டது. 'உவ ஜேர்மனியிலை இருந்து பெண்ணியம் எழுதினாப் போலை இங்கை இந்தியாவிலை பெண்விடுதலை கிடைச்சிடுமோ' என்று யாராவது வலைப்பூக்களில் கிறுக்கி வைப்பார்கள்தான். அவர்களுக்கெங்கே தெரியப் போகிறது, ஜேர்மனியிலும் பெண்களுக்கு விடுதலை தேவைப் படுகிறது என்ற விடயம்.

எழுதியதை உடனேயே மின்அஞ்சல் மூலம் அனுப்புவதில் எனக்கு இஸ்டமில்லை. யாரோ ஒரு பிரபல எழுத்தாளர் "எழுதியதை ஊறுகாய் போடுவது போல வைத்து வைத்து எடுத்துத் திருத்த வேணும். அப்பதான் அந்த எழுத்து நல்லா வரும்" என்று சொன்னது அடிக்கடி என் நினைவில் வந்து போகும். ஊறுகாய் போடுவது போல வைக்க முடியாவிட்டாலும் சில மணி நேரங்களுக்காவது வைத்து விட்டு எடுத்துப் பார்த்தால் எழுத்துப் பிழைகள் ஏதாவது இருந்தால் தெரியும். திருத்தி விட்டு அனுப்பலாம் என்பது என் எண்ணம்.

நேரமும் 1.00மணியாகி விட்டது. நினைத்ததை எழுதி முடித்து விட்டதில் என் மனதில் பெரியதொரு திருப்தி. அந்த நிறைவோடு முகிலுக்கு சாப்பாட்டைக் கொடுக்க நினைத்தேன். இன்று மருமகளையும் சாப்பிடச் சொல்லாம் என்ற நினைப்பில் சோறு, கறிகளை மேசைக்குக் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருந்தேன். தன் பாட்டில் விளையாடிக் கொண்டிருந்த முகில் திடீரென மழலை தழுவக் கேட்டாள்

'அப்பம்மா.., அப்பாவுக்கோ சாப்பாடு? அப்பா இண்டைக்கு இங்கையோ சாப்பிட வருவார்?'

சந்திரவதனா
ஜேர்மனி
25.3.2008

பிரசுரம் - மே யுகமாயினி

Saturday, June 07, 2008

பேரன் தீரன் பிறந்திருக்கிறான் (6.6.2008)




பேத்திமார் சிந்து, நதி, நிலா வைத் தொடர்ந்து
பேரன் தீரன் 6.6.2008 இல் பிறந்திருக்கிறான்.

நதிக்குத் தம்பியாக.

Thursday, May 15, 2008

என்று நாம் முன்னேறுவோம்?

- செல்வா -

நண்பர்களே,
உழைப்பவர்களுக்கே உலகம்!
தமிழர்களாகிய நாம் எப்பொழுதுதான் விழிப்படைவோமோ?!

உலகில் உள்ள சில ஆயிரம் மொழிகளில், 256 மொழிகளில் இன்று விக்கிப்பீடியா என்னும் இலவச அறிவுக்களஞ்சியம், அழகான படங்களுடன், உரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல், யாரும் பயன்படுத்துமாறு, கட்டற்ற கலைக்களஞ்சியமாக உள்ளது. நாளும் வளர்ந்து வருகின்றது.

http://ta.wikipedia.org/

தமிழர்கள் ஏன் இப்படி உறங்கிக்கொண்டுள்ளனர்?!
உலக மொழிகளின் வரிசையில் தமிழ் 68 ஆவது இடமாக மிகப் பின் தங்கி உள்ளது. இந்திய மொழிகளுள் முதன்மையானதாக நாம் இருந்தாலும் (200 எழுத்துகளுக்குக் கூட உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையிலும், மொத்த பைட் அளவிலும்,

மற்ற பல்வேறு தரக் கட்டுப்பாடுகளிலும் தமிழ் இந்திய மொழிகளுள் முன் நிற்பது உண்மை).

கீழ்க்காணும் மொழி வரிசையைப் பாருங்கள்:
http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#1.2C000.2B_articles

தமிழ் எங்கே உள்ளது?! ஏன்?!

43 மில்லியன் மக்கள் பேசும் போலிஷ் மொழி 4 ஆவது இடத்தில் (499 189 கட்டுரைகளுடன்).

23-25 மில்லியன் மக்கள் பேசும் 'டச்சு மொழி 7 ஆவது இடத்தில். (437 512 கட்டுரைகளுடன்).

அட, வேண்டாம் ஐயா, 4 அல்லது 5 மில்லியன் மக்கள் பேசும் மொழிகள் பலவும் மிக முன்னணியில் உள்ளன.

75 மில்லியம் மக்கள் பேசும் செம்மொழியாகிய தமிழ் மொழி ஏன் 68 ஆவது இடத்தில் உள்ளது? இது வெட்கப்பட வேண்டிய நிலை!

பெரிய புரட்சி மண்ணாங்கட்டி எதுவும் செய்ய வேண்டாம். ஒரு 4-5 வரிகள் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது எழுதி பங்களிக்கக்
கூடாதா?

75 மில்லியன் மக்களில் ஒரு 100-200 பேர் கூடவா வந்து பங்களிக்கக் கூடாது?

தமிழ் விக்கிப்பீடியாவில் மே 3, 2008 அன்று வரை உருவாகியிருந்த மொத்தம் 13, 675 கட்டுரைகளில், ஏறத்தாழ 20 பேர் மட்டுமே பங்களித்து 11,150 கட்டுரைகள் தொடங்கி எழுதியுள்ளார்கள். இக்கட்டுரைகளில் உள்ள பிழைகளை நீக்கவும், மேலும் விரிவாக்கங்கள் செய்யவும், புதிய ஆக்கங்கள் செய்யவும், ஏன் தமிழர்கள் முன்வரவில்லை என்பது எனக்கு வியப்பாக உள்ளது. உண்மையில் இன்றளவில் சில ஆயிரம் தமிழர்களாவது ஊக்கமுடன் பங்களித்திருக்க வேண்டும்!

புதிய அறிவுக் கோயிலை கட்ட எல்லோரும் வந்து பங்களிக்க மீண்டும் வேண்டுகிறேன்! ஒரு 4-5 வரிகளாவது எழுதுங்கள்! ஒரு படம் தந்து உதவுங்கள்! ஒரு எழுத்துப் பிழையை நீக்கிப் பங்காற்றுங்கள்!

நாம் உலக மொழிகளின் வரிசையில், பேசுவோர் எண்ணிக்கையில், 15 முதல் 20 வரையிலான இடத்தில் உள்ளோம். கலைக் களஞ்சிய வரிசையில் நாம் முதல் 10 ஆக இருக்க வேண்டும் என்னும் உணர்வோடு, ஊக்கமுடன் வந்து உதவுங்கள் நண்பர்களே! நம் மொழிக்கு செய்யக்கூடிய உண்மையான ஒரு தொண்டு, பணி. இதனால் நாம் யாவருமே பயன்பெறுவோம்.

அன்புடன்
செல்வா
மே 13, 2008

தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்க:
http://ta.wikipedia.org/


தகவல் - சிறீதரன்
http://kanaga_sritharan.tripod.com/

Tuesday, May 13, 2008

வன்னியிலே கவி படித்த வானம்பாடி

தீட்சண்யனின் இறுதி ஊர்வலத்தில் நாவண்ணன்

மறைந்த கவிஞர் தீட்சண்யனின் இறுதி ஊர்வலத்துக்காக நாட்டுப்பற்றாளர் நாவண்ணன் அவர்கள் புலிகளின் குரல் வானொலியில் தானே தனது குரலில் வழங்கிய அஞ்சலிப்பாவின் ஒரு பகுதி



கவிஞர் தீட்சண்யன் 13.5.2000 இல் காலமானார்.

58க் கலவரத்துக்குள்தான் அவன் பிறந்தவனாம். தொட்டில் எல்லாம் வாங்கி வைத்து விட்டு அம்மாவைப் பிரசவத்துக்காக வடக்கே விட்டு வந்து பார்த்த பொழுதுதான் தொட்டில் எரிந்து கொண்டிருந்ததை அப்பா கண்டாராம்.

உடைமைகள் எல்லாம் கருகிப் போனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மட்டுமல்ல. கொழும்புத் தமிழர் பலருக்கும்தான்.

அவன் பிறந்த பலன்தான் எல்லாம் அழிந்து போய் விட்டது என்று சில வாய்கள் முணுமுணுத்தாலும் அவன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் முத்தானான். மூத்த பிள்ளை. மூத்த பேரப்பிள்ளை. மூத்த மருமகன். மூத்த பெறாமகன்... இப்படியே எல்லாவற்றிலும் அவன் மூத்தவனாய், முத்தானவனாய் மிளிர்ந்தான்.

எனக்கும்தான் அவன் மூத்தவன். அவன் இருந்த கருப்பைக்குள்தான் அவனுக்கு அடுத்து நானும் இருந்தேன். அவன் சுவைத்த அம்மாவின் மார்பகங்களைத்தான் நானும் சுவைத்தேன். அவன் கிடந்த மடிகளில்தான் நானும் தவழ்ந்தேன். அவன் சாய்ந்த தோள்களில்தான் நானும் தூங்கினேன். அவன் ஓடிய எனது வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நானும் கால் பதித்தேன்.

அவன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ராஜா. பிறேமராஜன் எனப் பெயரிட்டிருந்தாலும் ராஜன் என்றே அம்மா அவனை வாஞ்சையுடன் அழைப்பாள். அன்போடு அணைப்பாள். எல்லோருக்கும் அவன் ராஜன்தான். சிரிப்பும், துடிப்பும், அறிவும், குறும்பும், அழகும் அவன் கூடவே பிறந்தவை.

நேற்றுத் தோசை சுடும் போதும் வழமை போலவே அவன் பற்றிய சில நினைவுகள். இலுப்பெண்ணெய் காரன் எப்போது வருவான் என்று பார்த்திருந்து அம்மா அவனுக்காக இலுப்பெண்ணெய் வாங்குவாள். இலுப்பெண்ணெய் தோலில் ஏற்படும் பொருக்கு போன்ற தன்மையைப் போக்கி விடுமாம். இந்த விடயங்களிலெல்லாம் அம்மா கவனம். ஒவ்வொரு சின்ன விடயங்களையும் கவனிப்பது போலவே அண்ணனின் கால்களும், தோலும் வழவழப்பாக இருக்க வேண்டும், பொருக்கு வந்து விடக் கூடாது என்பதிலும் அவளுக்கு அதீத கவனம்.

இலுப்பெண்ணெய்யை சும்மா சாப்பிடவோ குடிக்கவோ முடியாதுதானே. கசக்கும். அதுவும் ஊர் இலுப்பெண்ணெய் நேரடியாகக் கையால் பிழிந்தெடுக்கப் பட்ட எண்ணெய். தடிப்பாயும், அதீத கசப்பாயும் இருக்கும். அதனால் அம்மா கையாளும் உத்தி தோசைக்கு இலுப்பெண்ணெய் ஊற்றி மொருமொருக்கச் சுடுவது. அப்படிச் சுட்டால் அண்ணனும் விரும்பிச் சாப்பிடுவான்.

அடுப்புக்குள் சுள்ளி முறித்து முறித்துப் போட்டு எரித்து, மொருமொருத்த தோசை சுடும் போது எங்கள் வீடு முழுக்க உழுந்துத் தோசையின் வாசம் கமகமக்கும்.

எண்ணெய் ஊற்றிச் சாப்பிடும் போது சுடச்சுடச் சாப்பிட்டால்தான் சமிக்கும் என்பதால் அம்மா ஒவ்வொருவராகக் கூப்பிட்டு சுட்டுச் சுட்டுப் போட்டுக் கொண்டிருப்பாள்.

முதல் உபயம் அண்ணனுக்குத்தான். முதல் இரண்டு தோசை சும்மா தோசை. அடுத்த ஒரு தோசை நல்லெண்ணெய்த் தோசை. அடுத்து இரண்டோ, மூன்றோ அவரவர் கொள்ளளவுக்கு ஏற்ப இலுப்பெண்ணெய்த் தோசை. கடைசியாக ஆசைக்கு ஒரு நெய்த்தோசை. அண்ணன் ஒரு பிடிபிடித்து விட்டு வருவான்.

இலுப்பெண்ணெய் தோசையை விட நெய்த்தோசைக்கு சுவை அதிகம். ஆனாலும் அம்மா இலுப்பெண்ணெய் தோசையைத்தான் அண்ணனை அதிகம் சாப்பிட வைப்பாள். அதுதான் உடலுக்கும், தோலுக்கும் நல்லது என்பாள்.

அண்ணனின் கால்களும், தோலும் எப்போதும் ஒரு பளபளப்புடன்தான் இருக்கும்.

அம்மா பார்த்துப் பார்த்து வளர்த்த அவனது அந்தக் கால்களில் ஒன்றைத்தான் எங்கள் நாட்டுப் போர் ஒரு நாள் பறித்து விட்டது. இன்னொரு நாள் அவனது உயிரையும் பறித்து விட்டது.

நானே ஏமாந்து போனேன். எனக்குள்ளே சிதைந்து போனேன். ஏன் ஏன்..? என்ற விடை கிடைக்காத கேள்வியோடு மாரடித்து மாரடித்துத் துடித்துப் போனேன். சமயங்களில் துவண்டு போயும் கிடந்தேன். எனக்கே அப்படியென்றால் அவனைப் பத்து மாதம் சுமந்து, தன் உதிரத்தையே பாலாக்கி அவனை மனிதனாக்கிய எனது அம்மா எப்படித் துடித்திருப்பாள்? இன்னும் அவள் மனம் என்ன பாடுபடும்?

அவள் மட்டுமா? இன்னும் எத்தனை அம்மாக்கள்!

சந்திரவதனா
13.5.2008

Sunday, May 11, 2008

மே மாத யுகமாயினி பார்த்து விட்டீர்களா?


மே மாத இதழ்

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து மாதம் ஒரு இதழாக, பல்சுவை அம்சங்களுடன் யுகமாயினி வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஈழத்துக்கலைஞர் எஸ்.பொ அவர்களை நிறுவக ஆசிரியராகவும், சித்தன் அவர்களைப் பொறுப்பாசிரியராகவும் கொண்ட இவ்விதழில் ஈழத்துக் கலைஞர்களும், இந்தியக் கலைஞர்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

Friday, May 09, 2008

ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"

[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 06:21 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

சிறிலங்கா ஆட்சியாளர்களால் 1981 ஆம் ஆண்டில் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றி "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறுவட்டில் (DVD) தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் 50 நிமிடங்கள் ஓடக்கூடியது.

யாழ். நூலகம் எரியூட்டப்பட்ட 27 ஆவது ஆண்டு நாளான 31.05.08 அன்று உலகம் எங்கும் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது.

ஈழத் தமிழர்களின் பெரும் சொத்தாகவும், கல்விப்புலமையின் குறியீடாகவும் விளங்கிய யாழ். நூலகத்தின் வரலாறு, ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தது.



1933 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலத்தில் அந்த நூலகத்தின் வலிமிகுந்த வரலாறு இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனை சோமீதரன் உருவாக்கியுள்ளார்.

சிதைவுற்ற யாழ். நூலகத்தின் காட்சிகள், அங்கு பணியாற்றியோரின் வாக்குமூலங்கள், பத்திரிகை நறுக்குகள், உரைகள், கறுப்பு வெள்ளையிலான காணொளி நேர்காணல்கள், வரைபடங்கள், எடுத்துரைப்புக்கள் ஆகியவற்றுடன் "எரியும் நினைவுகள்" தொகுக்கப்பட்டுள்ளது.



தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் யேர்மன் மொழிகளில் எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

"நிகரி" தயாரிப்புக் குழுவினர் 2006 ஆம் ஆண்டில் இருந்து இதனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எண்பதுகளில் வாழ்ந்த, உணர்ந்த ஒரு தலைமுறையின் எரியும் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Quelle - Puthinam

Saturday, April 05, 2008

மாமி போய் விட்டாள்

எழுது எழுது என்று மனம் உந்தினாலும் எதுவோ தடுக்கிறது. எதை எழுத நினைத்தாலும் சில சொற்களுக்கு மேல் முடியவில்லை. ஏதோ ஒரு வெறுமை.

பிறப்பவர் ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதி என்றாலும் எந்தப் பொழுதிலும் மரணத்தை ஏற்றுக் கொள்ள மனங்களால் முடிவதில்லை. இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா! முடியவில்லை. எந்த மின்னஞ்சலுக்கும் பதில் எழுதவோ, எந்தத் தொலைபேசி அழைப்பையும் சந்தோசத்தோடு அணுகவோ முடியவில்லை.

எனது தம்பிமார் மாவீரர் ஆன போதோ, எனது அப்பா மரணித்த போதோ, என் அண்ணன் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாய் சென்று விட்ட போதோ ஆற்றொணாத் துயரில் அழுது புலம்பியது போல் இன்று நான் அழுது புலம்பவில்லை. துயரம்தான். மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லைத்தான். தாங்க முடிகிறது. ஆனாலும் மனதில் சூழ்ந்துள்ள வெறுமையில் இருந்து வெளியேற முடியவில்லை. மரணத்தை வெல்ல முடியாது என்ற உண்மை நன்கு தெரிந்திருந்தாலும் வென்றிருக்க முடியாதோ என்று மனசு நப்பாசை கொள்கிறது. கண்கள் அடிக்கடி பனிக்கிறது. சமயங்களில் கன்னங்களிலும் வழிகிறது.

தூரத்து மரணம் எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு துயரச் செய்தி மட்டுமே. அது ஒரு துன்பியல் நாடகம் போல அவரவர் மனங்களுக்கு ஏற்ப அவரவர்களைத் தாக்கி கண்ணீர் சிந்தவோ, மனம் வருந்தவோ வைக்கும். சில மரணங்கள் மனங்களைப் பிழிந்தும் எடுக்கும். இதை எல்லோரும் அறிந்தும் உணர்ந்தும் இருப்பார்கள். ஆனால் மிக மிக நெருங்கிய உறவின் மரணம், அதாவது மிக மிகப் பிரியமான அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை, குழந்தை… என்று எவராவது ஒருவரின் மரணமும், அது தரும் சோகமும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது. அனுபவித்து மட்டுமே உணரக் கூடியது.

அப்படியானதொரு ஆற்றொணாத் துயரில் என் பிரியமானவன் அமிழ்ந்து தவிக்கிறான். அவனுக்கு அழக் கூடத் தெரியவில்லை. எப்படி அவனை ஆற்றுவது என்று தெரியிவில்லை. தேற்றுவதற்கும் என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவன் துயரமே என்னிடம் பெருந்துயராய் படர்ந்து என்னைப் படுத்துகிறது.

மாமி (என் கணவரின் தாயார்) 3.4.2008 அன்று மரணித்து விட்டாள். நாற்பது வயதிலேயே கணவனை இழந்து விட்டாலும், மனதைரியத்தோடு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவள். தற்போது வயது 89. ஆனாலும் படுக்கையில் வீழ்ந்து விடாமல் கடைசி வரை சமையலில் இருந்து பல வேலைகளிலும் வீட்டில் பங்கேற்று வாழ்ந்து கொண்டிருந்தவள். இறப்பதற்கு முதல்நாள் கூட தொலைபேசியில் எம்மோடு பேசி விட்டு, போய் விட்டாள். ஆயிரக் கணக்கான மைல்களை அவசரமாய் ஓடிக் கடக்க முடியவில்லை. நியூசிலாந்தில் உயிரற்று அவள் உடல் இருக்கிறது என்ற உண்மையை ஏற்க மறுக்கிறது மனம். மாமியார் கொடுமைகளைப் பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். வாசித்திருக்கிறேன். ஆனால் என்றைக்குமே நான் அனுபவித்ததில்லை. நல்லவள். எம்மை விட்டுப் போய் விட்டாள்.

இதற்கு மேல் எழுத முடியவில்லை.

4.4.2008

Wednesday, April 02, 2008

இலக்கியப் போட்டி

தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு

வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.

அன்புடன் நண்பர்களுக்கு!

வணக்கம்!

ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது. இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.

தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின் வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம்.


வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.

போட்டிகளின் விபரங்கள் வருமாறு:

இலக்கியப் போட்டிகள்

சிறுகதை
கவிதை
கட்டுரை

நகைச்சுவை துணுக்கு
ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படும்.

ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆக்கம் மட்டுமே அனுப்பலாம். ஒவ்வொரு ஆக்கமும் உங்கள் சொந்தக் கற்பனையில் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்;
வேறெந்த ஊடகங்களிலும் பிரசுரமாகாத படைப்புகளாக இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பு படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. ஆபாசம் அல்லது தனி மனிதக் கீறல் இருப்பதாகக் கருதப்படும் எந்த ஆக்கமும் போட்டியிலிருந்து நீக்கப்படும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்படும்.

போட்டிகளுக்கான ஆக்கங்கள் நம்மை வந்தடைய வேண்டிய கடைசி திகதி 2008 ம் ஆண்டு மே 31ம் திகதி.

சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:


1வது பரிசு - 2500.00 பெறுமதியான புத்தகங்களும், 2500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2 வது பரிசு- 1250.00 பெறுமதியான புத்தகங்களும் 1250.00 இந்திய
ரூபாயும் வழங்கப்படும்.

பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில் பிரசுரமாகும்.

சிறுகதை:


ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். எத்தகைய கருவையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப்படலாம்.

ஒருவர் ஒரு சிறுகதை ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.

சிறுகதை 7 பக்கங்களிலிருந்து 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)

நடுவர்களின் முடிவே இறுதியானது.

கட்டுரை:


ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். கட்டுரைகள் இங்கு தரப்பட்டிருக்கும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஒருவர் ஒரு கட்டுரை மட்டும் எழுதலாம். ஒவ்வொரு கட்டுரையும் 1000 சொற்களுக்கு மேற்படாதவையாக இருக்க வேண்டும்.

கட்டுரைகளுக்கான தலைப்புகள் :


பெண்ணியம்.

உலக அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை.

தமிழ் கலாச்சாரமும் , இந்துசமயத்தின் ஆதிக்கமும்.

உலக அரங்கில் இந்தியா வல்லரசாகக் கணிக்கப்டுகிறாதா இல்லையா?

ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்.

அரசியலில் பொது மக்களின் பங்கு.

இன்றைய இளைஞர்களின் வளர்ச்சி ஆக்கபூர்வமான பாதை நோக்கியா? அழிவுப்பாதையை நோக்கியா?

இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?'

மெல்லத் தமிழினி....வாழும்?வீழும்?

கடவுள் பக்தியா , சுய கட்டுப்பாடா மனிதனை செம்மைப் படுத்த வல்லது?

தியானம் என்பது....!

நகைச்சுவைத் துணுக்கு:


ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து துணுக்குகளை ஒரே தாளில் அனுப்பலாம். ஆனால் சிறந்த துணுக்காக 3 துணுக்குகளே தேர்வு செய்யப்படும்.
ஒவ்வொரு துணுக்கும் பரிசாக தலா 500.00 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.

கவிதை:
கவிதைப் போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.
மரபுக் கவிதை. புதுக்கவிதை ஒவ்வொரு பிரிவிலும் ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான, இயல்பான
ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். இரண்டு பக்கங்களுக்குள் கவிதை இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது)

1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.


தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக் குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு சமர்பிக்கப்படும்.

எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் thamizmakal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.

இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

*படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நன்றி !
வணக்கம்!!

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite