Thursday, August 24, 2006

தாயகம் நோக்கி - 6


கவனம் மிதிவெடிகள் - உங்களின் தற்பாதுகாப்பு உங்களுக்கு
ஏற்படக் கூடிய அங்கவீனத்தையோ அல்லது மரணத்தையோ தடுக்கும்.



காகங்களின் கரையல்களும், வானொலிகளின் இரைச்சல்களும்.... விடியலின் வரவைச் சொல்ல மரக்கட்டிலிலிருந்து எழுந்து கொண்டேன். ஊருக்குப் போகும் நினைவுகள் ஒரு புறம் பதட்டத்தையும் மறு புறம் உற்சாகத்தையும் தந்து கொண்டிருந்தன.

நேற்று ஐனனியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த துணிவுடன் யாழ் செல்வதற்கான அனுமதியைப் பெற நிச்சுதனுடன் நந்தவனம் பயணமானேன்.

"நிச்சுதன் மெதுவாய்..."

"பயப்படாதைங்கோ அன்ரி..! நான் விழுத்த மாட்டன்."

ஏ-ஒன்பது பாதையின் குழிகளில் மோட்டார் சைக்கிளை இறக்கி விடாமல் அவன் லாவகமாக ஓட்டிச் சென்ற போதும், இடையிடையே மோட்டார் சைக்கிள் துள்ளத்தான் செய்தது. `பறந்து போய் விழுந்து விடுவேன்´ போன்றதொரு உணர்வு எனக்கு வந்து கொண்டிருந்தது. எதிரே வந்து கொண்டிருக்கும் வாகனங்களின் வேகத்தில் கிராவல் மண் புகை போல எழுந்து என் மேல் அப்பியது. இடையிடையே எதிர் வரும் வாகனத்துடன் மோதி விடாதிருக்க திருத்தப் படாத பாதையின் கரையில் ஒதுங்குகையில் மோட்டார் சைக்கிள் கவிண்டு விடுமோ என்ற பயம் கூட வந்தது.

நிச்சுதனோ "பயப்படாதைங்கோ அன்ரி..! நான் விழுத்த மாட்டன்." என்று சொல்லிக் கொண்டு பயணித்து, என்னை நந்தவனத்தில் கொண்டு சேர்த்தான்.

நந்தவனத்தின் முன்றலில் மாங்காய்களும் பலாப்பழங்களும் மரங்களில் தொங்கின. விலாட் மாங்காயை எட்டிப் பிடுங்கலாம் போலிருந்தது. அங்கு நின்ற இருவரில் ஒருவர் என்னை வரவேற்க, உள்ளே நின்றவர் எனது யேர்மனியப் பாஸ்போர்ட்டை வாங்கி நம்பர் பதிந்து விட்டு, பெயரெழுதும் போது எனது பெயரை.. சந்திரவதனா... என்று இழுத்தவர் கணவரின் பெயரையும் வாசித்து விட்டு "நீங்கள்தானே அக்கா மொறிஸின்ரை அந்த ஆர்ட்டிக்கலை எழுதினனிங்கள்..? நல்லாயிருந்தது." என்றார்.

"எது..?" ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"ஈழமுரசிலை வந்தது." என்றார்.

"ஈழமுரசு இங்கை வருமோ..? " மீண்டும் ஆச்சரியமாகக் கேட்டேன்.

"ஓம் கஸ்ரோ அண்ணையிட்டை வாறது" என்றார்.

ஐரோப்பியாவில் பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழமுரசை வன்னியில் உள்ளவர்கள் வாசித்தது மட்டுமல்லாமல், முன் பின் தெரியாத ஒருவர், என் பெயரைப் பார்த்ததும் அதை நினைவில் கொண்டு வந்தது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தையும், சந்தோசத்தையும் தந்தது.

"நீங்கள்..?" அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன்.

"இளங்கோ" என்றார்.

மற்றவர் "அறிவு" என்றார்

எல்லாம் நிரப்பி என்னிடம் கையெழுத்தை வாங்கிய பின் "சரி அக்கா நீங்கள் வீட்டை போங்கோ. நான் சைன் வேண்டிக் கொண்டு வந்து தாறன்." என்றார்.

நான் செய்ய வேண்டிய வேலையை என்னை அலைக்கழிய விடாமல், இளங்கோ தானே செய்ய முன்வந்த போது மனசு நன்றி சொல்லியது.

" நான் வெண்புறாவில்தான் நிற்கிறன்." என்றேன்.

"அப்ப நல்லதாப் போச்சு. அரைமணித்தியாலத்துக்கை அங்கையே கொணர்ந்து தாறன் அக்கா." என்றார்.

சந்தோசமான உணர்வுகள் என்னை நிறைத்திருக்க இளங்கோவிடமும், அறிவிடமும் இருந்து விடைபெற்றேன்.

வெளியில் காத்திருந்த நிச்சுதனுடன் மீண்டும் வெண்புறா சென்ற அரைமணிக்குள் இளங்கோ பாஸைக் கொண்டு வந்து தந்து விட்டுச் சென்றார்.

வெண்புறா உறவுகள் எல்லோரும் வாசலில் வந்து என்னை வழியனுப்பி வைக்க மதிய வெயில் உச்சியில் சுடும்போது ஊர்க் கனவுகளைச் சுமந்தபடி வெண்புறாவிலிருந்து முகமாலை நோக்கி நிச்சுதனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன். "அன்ரி...! திங்கட்கிழமை வற்றாப்பளைப் பொங்கலுக்குப் போறது ஞாபகந்தானே. அதுக்குள்ளை வந்துடுங்கோ" என்ற சுந்தரத்தின் குரல் பின்னால் ஒலித்தது. நீங்கள் வராட்டில் நாங்களும் போகமாட்டம் இன்னொரு குரல் தொடர்ந்தது.

கரடிப்போக்குச் சந்தி, வெள்ளவாய்க்கால் மதவில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது நான் வீழ்கிறேன் என்றுதான் நினைத்தேன். எப்படி முகமாலை வரை போய்ச் சேரப் போகிறேன் என்ற பயத்தில், "எவ்வளவு நேரம் பிடிக்கும்.. நிச்சுதன்..?" என்று கேட்டேன்.

"பயப்படுறிங்கள் போலை இருக்கு அன்ரி. நான் ஓடுற வேகத்தைப் பொறுத்து ஒண்டு ஒண்டரை மணித்தியாலத்துக்கை போயிடலாம். நான் இருபதிலை இருந்து முப்பதுக்குள்ளைதான் ஓடுறன். பயப்படாதைங்கோ"என்றான்.

வீதியோரங்களில் ஆங்காங்கு ஓரிரு கடைகள் திறக்கப் பட்டு வாழைக் குலைகள் தொங்கிக் கொண்டிருந்தாலும் மீதி இடங்கள் வீடுகளோ, வாசல்களோ இன்றி பெரு வெளிகளாக வெறிச்சுப் போயிருந்தன.



"இதுதான் அன்ரி நாங்கள் பிடிச்ச இராணுவத்தின்ரை வாகனம்"

"இதிலைதான் அன்ரி பெரிய கிபீர் விழுந்தது"

"இது இராணுவம் ஷோ காட்டுறதுக்காண்டி எங்கடை வாகனத்தைக் கொண்டு வந்து முன்னுக்கு விட்டிருக்கிறாங்கள்."



என்று நிச்சுதன் ஆனையிறவுச் சண்டையை என் மனக் கண்ணுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

மோட்டார் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்ததால் காற்றின் எதிர் மோதலில் ஆரம்பத்தில் வெயிலின் அகோரம் அவ்வளவாகத் தெரியவில்லை. போகப் போக பாதைகளின் இருமருங்கிலும் இருந்த காட்டு மரங்களும் செடிகளும் எரிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் பயணம் மிகவும் அகோரமாக அனல் கக்கியது.

பரந்தன் பளை பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது தூரத்தில் வரும் சைக்கிளைப் பார்த்ததும் "அன்ரி, அதிலை வாறது எனக்குத் தெரிஞ்ச பெடியன் போலை இருக்கு. யாழ்பாணத்திலை இருந்து வாறான். கனகாலத்துக்குப் பிறகு வாறான். இறங்கிக் கதைச்சிட்டுப் போவம்." என்ற படி மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.

நல்லது. என்னை சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு இறங்கினேன். இறங்கிய உடனே என் முன்னே நாட்டப் பட்டிருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் மனம் திக்கென்றது.


கவனம் மிதிவெடிகள்
உங்களின் தற்பாதுகாப்பு உங்களுக்கு ஏற்படக் கூடிய அங்கவீனத்தையோ அல்லது மரணத்தையோ தடுக்கும்...
என்ற வாசகங்களில் கால் கூசியது. இறங்கிய வேகத்தில் பாய்ந்து, விழுந்து ஓடி ரோட்டில் நின்றேன்.

நிச்சுதனின் உரையாடலில் சில நிமிடங்கள் கரைந்தன. மீண்டும் மோட்டார் சைக்களில் ஏறிய பின் என் நினைவுகள் என் வீட்டுப் பிச்சிப்பூ மரத்தையும், வேப்பம்மரத்தையும் எதிர்கொள்ளப் போகும் உறவுகளையும் சுற்றத் தொடங்கி விட்டது.

"என்ன அன்ரி. வெய்யில்லை களைச்சிட்டிங்களோ..? பேசாமல் வாறிங்கள்..?"

"இல்லை நிச்சுதன். ஊர் எப்பிடி இருக்கும் எண்டு நினைச்சுப் பார்த்தன்.
அதுசரி நீங்கள் உங்கடை ஊருக்குப் போனனிங்களோ? "

"இன்னும் இல்லை அன்ரி. நான் முகமாலை தாண்டேலாது."

மீண்டும் நான் நினைவுகளுக்குள் மூழ்கிய போது, "அன்ரி, நான் இப்ப எழுபதிலை ஓடுறன் தெரியுமோ.? நீங்கள் என்ரை ஓட்டத்துக்கு ஏற்ற மாதிரி வளைஞ்சு குடுககத் தொடங்கீட்டிங்கள். அதாலைதான் இவ்வளவு கெதியா வந்து சேர்ந்தனாங்கள்."

"கிட்ட வந்திட்டமோ..?"

ஓமன்ரி. இன்னும் இரண்டு நிமிசந்தான்.

ஒருவாறு தமிழீழச் சோதனைச் சாவடியை வந்தடைந்த போது நா வரண்டிருந்தது. எங்காவது இளநீர் வாங்க முடியுமோ என்று பார்த்தேன். மருந்துக்குக் கூட அங்கே இளநீர் தெரியவில்லை.

கிடுகுகளால் வேயப் பட்ட சோதனைச் சாவடிக்குள் நுழைந்து பெண்களுக்கான வரிசையில் நின்று கொண்டேன். நிச்சுதன் எனது சூட்கேசைத் தூக்கியபடி ஆண்களுக்கான பக்கத்தால் என்னோடு கதைத்த படி வந்து கொண்டிருந்தான்.

அமர்ந்திருந்த தமிழ்ப் பெண்ணிடம் பாஸ் காட்டும் போது அவள் நிச்சுதனை அடையாளம் கண்டு கொண்டவளாய் மெல்லிய சிரிப்புடன் என்னைப் போக அனுமதித்தாள்.

"அன்ரி இனி நீங்கள் தனியத்தான் போகோணும். அங்காலை நான் வரேலாது. அதிலை பஸ் எடுத்திங்களெண்டால் முகமாலை வரை கொண்டு போய் விடுவாங்கள்." சொல்லிக் கொண்டே அந்தக் கொட்டில் வரை வந்து என்னை விட்டிட்டுப் போனான்.

இரண்டு தட்டிவான்கள் பட்டிகளில் மாடுகளை அடைப்பது போல மனிதரை ஏற்றிச் சென்றதைப் பார்த்துப் பயந்து எப்படி எனது உடைமைகளுடன் போய்ச் சேருவது என்று நான் தவித்துக் கொண்டிருந்தேன். அதில் ஏறும் துணிவு எனக்கு வரவில்லை. சில நிமிடங்களில் நிச்சுதன் மீண்டும் வந்தான்.

"என்ன நிச்சுதன்..?"

"அன்ரி நான் அனுமதி எடுத்திட்டன். உங்களை அங்கை மட்டும் கொண்டு வந்து விட்டிட்டுப் போறன்."

மனசு நன்றி சொன்னது. மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறினேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த இராணுவச் சோதனைச் சாவடியை அடைய சில நிமிடங்கள்தான் தேவைப் பட்டன.

அவன் என்னை இறக்கிய போது எம்முன்னே இரண்டு மூன்று இராணுவத்தினர் வந்து விட்டனர். தடுப்படியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சில அடிகள் என்னுடன் நடந்தவன்

"நான் போறன் அன்ரி..." என்றான்.

இப்போ எனக்கு அழுகை வந்து விடும் போலிருந்தது. எங்கும் இராணுவம். நான் தனியாக என் சூட்கேசை இழுத்துக் கொண்டு...

அவர்களின் பார்வைகளிலும், சிரிப்பிலும் ஏளனமா..? நட்பா..? குரோதமா..? எல்லாம் கலந்தா..? புரியவில்லை. எனக்கு மிக அருகில் நின்றார்கள். பயமாகப் பதட்டமாக இருந்தது.

நிச்சுதனின் மோட்டார் சைக்கிள் திறப்பு நிலத்தில் வீழ்ந்து மண்ணுள் புதைந்து விட்டது. சாடையாகத் தேடி விட்டு நிற்க விருப்பம் இல்லாததால் "பரவாயில்லை, மற்றத் திறப்பைப் பாவிக்கிறன்" என்று சொல்லி விட்டுப் வேகமாக மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.

"நன்றி நிச்சுதன்..!"

திரும்பிப் பார்த்து, சிரித்துக் கொண்டு விரைந்தான்.

பெண்களுக்கான சோதனை இடத்தைக் காட்டி என்னை அங்கே போகும் படி சொன்னார்கள். அங்கு தூரத்தில் வரிசையில் நின்ற சில பெண்கள் என் கண்களுக்குள் பட்ட போது பயம் கொஞ்சம் குறைந்தது. ஒரு சூட்கேசை இழுத்துக் கொண்டும், மற்றையதைத் தோளில் கொழுவிக் கொண்டும் அந்த இடத்தைச் சென்றடைந்த போது, முதலில் மறைவான பகுதியில் உடைகளுக்குள் உடம்போடு ஏதாவது வைத்திருக்கிறேனா எனச் சோதித்து வெளியில் அனுப்பினார்கள்.

வெளியில் ஐந்தாறு சிங்களப் பெண்கள் வரிசையில் இருந்து அடையாள அட்டை சூட்கேஸ் போன்றவற்றைச் சோதனை செய்து கொண்டிருந்தார்கள். என் முறை வந்ததும் "அக்கா சூட்கேசைத் திறங்க." தமிழில் கதைத்தார்கள்.

எனது சூட்கேசில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் ஆர்வமாக ஆராய்ந்தார்கள். ஆளுக்காள் மாற்றி மாற்றி விடுப்புப் பார்த்தார்கள். வெளிநாட்டுச் சாமான் என்பதில் ஆசைப் பட்டார்கள். ஒரு சிறிய கீரெக்கை தரமனமின்றி வைத்திருந்தாள் ஒருத்தி. "வேணுமெண்டால் வைச்சிருங்கோ" என்றேன். "வேண்டாம்" என்று தந்து விட்டாள். கமராவைப் பிரட்டி உருட்டிக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி. "என்ன போட்டோ எடுத்திருக்கிறன்" என்று கேட்டாள்.

ஒருமாதிரி அடையாள அட்டையையும் காட்டி வெளியில் போன போது நிறைய பேரூந்துகள் நின்றன. பருத்தித்துறைக்கான பேரூந்தைத் தேடி ஏறப் போன போது வெளியில் நின்ற கொண்டெக்கடர் என்னிடம் கட்டணமாக 15 ரூபாவைக் கேட்டு வாங்கினார்.

எதிரே தண்ணீர் விற்பது தெரிந்தது. அதனோடு சேர்ந்திருந்த கடையில் பின்னுக்குப் போத்தல்கள் அடுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இது வரை அடக்கி வைத்த தாகத்தை இப்போது என்னால் அடக்க முடியவில்லை. எப்படியும் அங்கே `பிளெயின் சோடா´ இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பேரூந்திலிருந்து இறங்கிப் போனேன்.

சிங்களச் சிப்பாய் மிகவும் நட்பாகச் சிரித்த படி என்னை வரவேற்றான்.
"சோடா இல்லை" என்றான். வன்னி தாண்டி விட்டேன்தானே. இது யாழ்ப்பாணத் தண்ணீர்தானே குடிப்போம் என நினைத்து தண்ணீராவது தரும்படி கேட்டேன்.

"தண்ணி இல்லை. நெல்லிக்கிரஸ்தான் இருக்கு." தமிழும் சிங்களுமும் கலந்து சொன்னான். தண்ணி வேணுமெண்டால் பைப்பில் குடிக்கச் சொன்னான்.
வேறு வழி தெரியாததால் சரியென்று பத்துரூபாய் கொடுக்க றம்மிலிருந்து தண்ணீரை ஒரு ரம்ளரில் எடுத்து, நெல்லிரசத்தைக் கலந்து தந்தான். அருந்தினேன். றம் தண்ணீர் ஊத்தையாக இருந்திருக்குமோ என்ற நினைப்பில் எனக்கு நெல்லிரசம் இனிக்கவில்லை.

பஸ்ஸில் ஏறிய பின் வெளியில் கண்களைச் சுழல விட்ட போது இராணுவம், மனிதர் என்று முகமாலை சோதனைச் சாவடி சனமாய்த் தெரிந்தது. நெல்லிரசம் தந்த சிப்பாய், சிரித்த படி என்னைப் பார்த்துக் கை காட்டிக் கொண்டிருந்தான். பேரூந்து ஊரத் தொடங்கியது. என் கிராமத்தை நோக்கி...

சந்திரவதனா
யேர்மனி
2002

தொடரும்

தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4
தாயகம் நோக்கி - 5

Tuesday, August 22, 2006

நளாயினியின் கவிதை நூல்கள் அறிமுகம்


நாள் : 27.08.2006 ஞாயிறு
நேரம் : 14.00 – 20.00
இடம் : VOLKSHAUS
Stauffacherstrasse 60
8004 Zurich

கவிதை நூல்கள்
நங்கூரம்,
உயிர்த்தீ

நளாயினியின் நங்கூரம் கவிதைத் தொகுப்பு பற்றி சுவிசிலிருந்து ரவி

தாயகம்FM இணையத்தளத்தில் புதிய இறுவட்டுக்கள்


தாயகம்FM இணையத்தளத்தில் புதிய இறுவட்டுக்கள் இணைக்கப் பட்டுள்ளன.

1) புலிகளின் புரச்சி இசை விழா
2) மண்ணைத் தேடும் இராகங்கள்

விரைவில் இணைக்கப்பட உள்ளமை
வெல்லும் வரை செல்வோம்,
வரலாறு வந்த வல்லமை,
அன்னைத் தமிழ்

Monday, August 21, 2006

வாழ்வும் வரும் சாவும் வரும்...


வாழ்வும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒரு நாள் விடிவும் வரும்
கொஞ்சம் வரும் ஓய்ந்தே இரு
நாளைய நாளில் வரமாய் வரும்

வீதியிலை நடக்கிறேன்

விதியை நினைக்கிறேன்
தமிழனாய் பிறந்து நான்

தினமும் தவிக்கிறேன்... - தொடர்ச்சி

பாடலை ஒலி வடிவில் கேட்க
viduthalai.mp3

பாடல் - விடுதலை
பாடல் வரிகள் - சுஜீத்.ஜீ
இசை - சந்தோஷ்
பாடல் காட்சியில் - சுஜீத்.ஜீ + சந்தோஷ்


புலம்பெயர்ந்த எமது இளைஞர்கள் இன்று பல்துறைகளிலும் கால் பதித்துக் கொண்டு வருவதை நாம் அறிகிறோம். மொழி, காலநிலை, கலாச்சாரம், புலப்பெயர்வு... என்ற பல்வேறு முரண்களின் நடுவே நின்று வாழ வேண்டிய இளைய சமூகத்தினர் தமது திறமைகளை வெளிப்படுத்துவதில் பல சிக்கல்களையும் எதிர் நோக்குகிறார்கள். "இது இதுதான் எமக்கு" என்று முத்திரை குத்தி வைக்கப் பட்ட விடயங்களைத் தாண்டி இன்னொரு விடயத்தைத் தொடும் எந்த ஒரு புதிய செயற்பாடும் முதலில் யாராலும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அது கட்டுடைத்தல் போன்றதானதொரு பிரமையையே எமது பெரியோரிடம் ஏற்படுத்துகின்றது. இந்தப் பிரமையினால் இளையோருக்குக் கொடுக்கப் படும் அழுத்தங்கள் மிகமிக அதிகமே. அந்த அழுத்தங்களினால் பல இளைஞர்கள் தமக்கே உரிய, தமக்குப் பொருத்தமான துறைகளில் நிலைத்து நிற்க முடியாது மனம் ஒடிந்து தொடங்கியதைப் பாதியிலே நிறுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் மனஉறுதி படைத்தவர்கள்தான் எல்லா அழுத்தங்களையும் தாண்டி கொஞ்சமேனும் வெளியில் வந்திருக்கிறார்கள்.

அப்படி வந்தவர்களில் சுஜீத்ஜீ யும் ஒருவர். "எனக்கு சங்கீதம் தெரியாது" என்று சொல்லும் சுஜீத்ஜீ எல்லாவிதமான இசைகளிலும் நாட்டம் கொண்டவர்.

"ஏன் ராப் இசையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்று கேட்டால் "புலம்பெயர் ஈழத்தமிழருக்கென்று தனித் துறையாக இறங்க வேண்டும் என்றால் பழக்கம் குறைவான ஏதாவது ஒரு இசையினை தெரிவு செய்தால் வித்தியாசப் படலாம் என்ற எண்ணம்" என்றும் "சில உணர்வுகளினை சங்கீதத்தால் சொல்லி விடமுடியாது" (உதாரணம் : விடுதலை பாடல்) என்றும் சொல்கிறார்.

இவரது விடுதலை என்ற பாடல் ரீரீஎன் நடாத்தும் ஒளிக்கீற்று நிகழ்ச்சியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது. உணர்வு பூர்வமான அந்தப் பாடல் வரிகளை எழுதியவர் சுஜீத்ஜீ யேதான். அழகிய முறையிலான இசையும் ராப் இசைக்கே உரிய முறையில் பாடப்பட்ட விதமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளன. இசையை அமைத்த சந்தோசும், சுஜீத்தும் இணைந்தே பாடல் காட்சியில் வருகிறார்கள். பலரையும் கவர்ந்து விட்ட பாடல். ராப் இசையை ரசிக்கும் எவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய பாடல். ராப் இசையை ரசிக்காதவர்கள் கூட பாடல் வரிகளில் ஈர்க்கப் படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

(நிகழ்ச்சியில் இடம் பெற்ற மற்றைய பாடல்கள் கூட தரமான பாடல்களாகவே அமைந்திருந்தன. சில பாடல்களுக்கான காட்சிகளிலும், கமராவிலும் இன்னும் திருத்தங்களும் கவனங்களும் தேவையென்பது குறிப்பிடப் படவேண்டிய ஒன்றாயினும், ஒவ்வொரு பாடல்களுக்குமான இசையமைப்புகள் எமது கலைஞர்களின் வளர்ச்சியைப் பறை சாற்றுவதாகவே அமைந்திருந்தன. )

ஈழத்தமிழர்கள் இப்பொழுது பல துறைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வகையில் இசைத்துறையில் அதுவும் மேற்கத்திய இசையில் தனக்கிருந்த திறமையினை சிங்கிள்ஸ் என்ற இசைத்தட்டை வெளியிட்டதன் மூலமாக உணர்த்தியிருக்கிறார் சுஜீத்.ஜி.

சுஜீத்.ஜி யுடனான ஒரு நேர்காணல்

எப்படி இந்த இசையில் நாட்டம் வந்தது?
எனக்கு எல்லாவிதமான இசைகளிலும் நாட்டம் உண்டு. இருப்பினும் எல்லோரும் செய்கிற ஒரு விடயத்தினை நானும் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தபோது ஏதாவது வித்தியாசமாக செய்வோமே என்று எண்ணினேன்.

ஏன் இவ் இசையினைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
இன்று மேற்குலகைப் பொறுத்தவரையில் இரண்டுவகையான இசை அதிகமாக இளைஞர்களை ஆக்கிரமிக்கிறது. ஒன்று றிதம் அண்ட் புழூஸ் இசை மற்றையது கிப்பொப் இசை. நான் லண்டனில் இருக்கிற காரணத்தினால் இவை என்னையும் ஆக்கிரமித்து விட்டது.

இதற்கான இசைப் பயிற்சியினை எங்கே பெற்றீர்கள்?
இசைப்பயிற்சியினை எங்கும் பெறவில்லை. கேள்விஞானம் என்று சொல்லலாம். பிரபல்யம் அடைகிற ஆங்கிலப் பாடல்கள் அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். அவைகளை கேட்கும் வழக்கம் உண்டு அவ்வளவுதான். மற்றப்படி சிங்கள்ஸ்க்கு இசையமைத்த சந்தோஷ் மூலமாகவும் பல விடயங்களை அறிந்து கொண்டேன்.

ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் பாடல்களினைக் கேட்டுத் தமிழில் பாடல்களை எழுத கேள்வி ஞானம் உதவியது என்கிறீர்களா?
அப்படியல்ல. நான் ஏற்கனவே சில பாடல்களை எழுதிய அனுபவம் பெற்றிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு எப்படியான இசைக்கும் பாடல்களை எழுத முடியும் என்ற நம்பிக்கையினைத் தந்தது.

இந்த இசை அனைவரையும் கவரும் என்கிறீர்களா?
உலகில் எதுவுமே எல்லோரையும் கவர்ந்து விடுவதில்லை. அதற்கு என்னுடைய படைப்பும் விதிவிலக்கல்ல. நான் இலக்கு வைத்த இளைஞர்களை அதாவது மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்களை நிச்சயமாகக் கவரும், கவர்கிறது.

அதென்ன மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்திருக்கிறீர்கள்?
எந்த ஒரு பொருளுக்கும் அதற்கான நுகர்வோர் வட்டம் இருக்கும். அதுபோல என்னுடைய இலக்கு மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்கள். காரணம் நான் ஏற்கனவே சொன்னது போல மேற்குலக இசையின் ஆக்கிரமிப்பு அவர்கள் மேலும் இருக்கிறது. எங்களை ஆக்கிரமிக்கும் அந்த இசைக்குள் தமிழினை செலுத்தியிருக்கிறேன்.

இதனைத் தமிழ் ஆர்வலர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஏற்கனவே இந்தச் சிக்கலுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. நான் தவறான பாதையில் செல்வதாகச் சொன்னார்கள். ஏன் என்று விளக்கம் தர அவர்களால் முடியவில்லை. இந்தியாவின் கர்நாடக மானிலத்து இசைக்குள் தமிழ் தவழும்போது மகிழ்ச்சி அடைபவர்கள் ஏன் மேற்கத்தேய இசைக்குள் தமிழ் துள்ளத் துன்பப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் எல்லாத் தமிழ் ஆர்வலர்களும் இப்படிப் பேசமாட்டார்கள் என்று நினைக்கிறேன். கர்நாடக இசையினால் சொல்லமுடியாத சிலவற்றை கிப்பொப் இசை சொல்லும்.

- சங்கீதா

சுஜீத்.ஜி பற்றி

SujeethG, as a child, he had no such ambitions of becoming a musical artist. When in London, he realised he had a knack for finding flaws in Tamil songs and would talk about how he could have composed it better, and had his own ideas on how to do things differently. So one day he decided to put pen to paper.

He has always felt if his work is good in his eye, that's enough for him. He wasn't expecting recognition or praise from anyone. SujeethG wasn't just musically artistic, he writes stories, poems and has even made one or two short films.

His friends who asked him to write them songs appreciated his talents. Unfortunately none of the songs were recorded. But plenty of praise came his way. After waiting in hope of his work would getting produced into records, he decided to showcase his talents by making his own album.
(His debute album SINGLES was released in 2005, next one CEYLON hope to be released in January 2007)

I want to show people that an Eelam Tamil also can do something in music. He wanted to project a positive message to society, to make people realise that Eelam Tamils are artistic in this field and can get far in the industry. Although he admires a lot of artists for their various talents, he isn't interested in following current eastern musical trends; he's following his own personal taste.
"I want to provide the second generation of Tamils living in the western world something they can relate to. Even though putting Tamil lyrics to this kind of music would be difficult, I knew I could achieve it."

He certainly has the know how to manipulate the Tamil language to suit any musical structure. This is what makes him different. He has no professional training in the music field and has no musical background. His knack is natural and is helped by observing people in the industry.

He aims to show that ordinary hard working people can achieve their goals.

Friday, August 18, 2006

குருதி தோய்த்தெழுதும் தொடர்கதையா?



அன்றைய நவாலிப் படுகொலையின் ரணம்
ஆறாத வடுவாய்
இன்று வள்ளிபுனத்தில்
அது தொடராய்
மீண்டும் மீண்டும் இது என்ன!
குருதி தோய்த்தெழுதும் தொடர்கதையா?

ஒளிவடிவில் பார்க்க
http://www.eelatamil.com/sensolai/

Monday, August 14, 2006

தாயகம் நோக்கி - 5


மனிதநேய வெளிப்பாடுகளில் வெண்புறாவின் செயற்பாடு

ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செயற்கைக் கால் செய்வதென்பது மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது. பயனாளிகள் ஒவ்வொருவரதும் பாதிப்புக்குள்ளான கால்களை துல்லியமாக அளவெடுத்து, அதற்கான வடிவத்தை அச்சில் (plaster of paris) வார்த்தெடுத்து, பின்னர் அந்த அச்சின் வடிவத்தைக் கொண்டே செயற்கைக் கால் பைபர்கிளாஸில் (Fiber glass) செய்யப் படுகிறது.

அதனால்தான் மூன்று தகரக் கால்களை இரண்டு மணித்தியாலத்துக்குள் செய்து முடிப்பது போல வேகமாக Fiber glass கால்களைச் செய்து முடிக்க முடியவில்லை.

ஒரு தகரத்தாலான செயற்கைக் காலினைத் தயாரித்து, ஒரு பயனாளியை ஒரு கிழமை வெண்புறா நிறுவனத்தில் தங்க வைத்து, பயிற்சி கொடுத்து, உணவும் கொடுத்து அனுப்பி வைக்க வெண்புறா நிறுவனத்துக்கு ஏற்படும் செலவு ரூபா12000 (150 யூரோ) தான்.

ஆனால் தகரக்கால்கள் என்ற ஒரே காரணத்தால் 1994 முதல் 2001 மார்கழி வரை வெண்புறா நிறுவனத்தால் பொருத்தப் பட்ட 1197 பேரினது செயற்கைக் கால்களுக்கான திருத்த வேலைகள் மட்டும் 9893 தடவைகள் மீண்டும் மீண்டுமாய் செய்ய வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதே நேரம் ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால்களுக்கான செலவும் நேரமும் சற்று அதிகமாக இருந்தாலும் ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால் பல முன்னேற்றமான நன்மைகளைக் கொண்டுள்ளது.

அதாவது ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால்,
1. தகரத்தால் செய்யப்பட்ட கால்கள் போலத் துருப்பிடிக்காது.
2. அணிபவருக்கு இலகுவானது. (பாரம் குறைவு)
3. வார்த்தெடுக்கப்பட்ட அச்சில் செய்யப்படுவதால், காலுடன் பொருந்தக்கூடியது. எனவே செயற்கை உறுப்பை பொருத்துவதற்கு எந்தவிதமான பட்டிகளும் தேவையில்லை
4. தகரத்தில் உருவாக்கப்படும் செயற்கைக்காலில் ஏற்படும்
திருத்த வேலைகள் இந்த வகையில் உருவாகும் கால்களுக்கு மிகமிக அரிது.
5. கால்களின் அளவும் முழங்கால் சில்லின் அளவும் மிகத் துல்லியமாக அளந்து
எடுக்கப்படுவதால், முதுகெலும்பு வளைவதற்கான சாத்தியங்கள் இல்லை.
6. பாதிப்புக்குள்ளான காலின் பகுதி மெலிந்து போவதற்கான காரணிகள் குறைகின்றன.
7. பாதிக்கப்பட்ட காலின் பகுதிக்கும் செயற்கை உறுப்புக்கும் இடையில் உள்ள இறப்பரினால் ஆன பகுதி காலில் ஏற்படும் வீணாண எரிச்சல் உபாதைகளைத் தடுக்கிறது.
8. காலினை இலகுவாக மடித்து நீட்டக்கூடியதாக இருக்கும்.
9. இலகுவாகக் கழற்றி வைக்கக்கூடியது.

இதுவரை காலமும் செய்யப் பட்ட தகரத்தாலான செயற்கைக் கால்களையும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும், யேர்மனியில் செயற்கை உறுப்புகளை உருவாக்கும் தொழில் நுட்பத்துடன் ஒப்பீடு செய்தே நவீன முறையிலான ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செயற்கை கால்கள் செய்வதில் உள்ள இந்த நன்மைகள் அறியப் பட்டன.

அறியப் பட்டதுடன் மட்டும் நின்று விடாமல் அதைச் செயற்படுத்தும் திட்டம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யேர்மனியக் கிளையினால் கிளிநொச்சியில் அமர்ந்திருக்கும் வெண்புறா நிறுவனத்தின் செயற்கை உறுப்புச் செய்யும் பட்டறைக்குள் வெற்றிகரமாக செயலாக்கம் பெறத் தொடங்கியது.

எடுத்ததைச் செவ்வனே செய்து முடிக்கும் திறமையானவர்கள் அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த போதும் மின்சாரத்தினதும், நவீன தொழில் நுட்பத்துக்கான கருவிகளினதும், பற்றாக்குறைகள் வேலை நேரத்தை நீட்டிக் கொண்டிருந்தன.

அஸ்பெஸ்டோஸ் கூரையைப் பிய்த்துக் கொண்டு வெயிலின் வெப்பம் எம்மை வதக்கியது. பொறுப்பாளர் அன்ரனியின் கட்டளைகளுக்கமைய அடிக்கடி Fanta, Spreit என்று சுகுணனும், கண்ணனும் கொண்டு வந்து தந்து கொண்டிருந்தாலும் அவைகளில் எதையும் நான் தொட்டும் பார்ப்பதில்லை. தாகத்தைத் தீர்த்து, வரண்டு போன தொண்டைக்கு இதம் தந்தது அவர்கள் அன்போடு வெட்டித் தந்த இளநீரும், பின் காணிகளுக்குள் எழுந்து நின்ற பனைகளில் ஏறி மயூரன் பிடுங்கித் தந்த நுங்கும்தான்.

மதியம் ஒரு மணித்தியாலம் இடைவேளை. அன்றே கிளிநொச்சிச் சந்தையில் வாங்கப் பட்ட கரவலையால் இறக்கப்பட்ட புதிய இறாலில் பொரியலும், மீனில் குளம்பும்... என்று நாக்குச் சப்புக் கொட்டியது. மனசு சமையல் பணியில் இருக்கும் படையப்பா எனச் செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படும் தேவசுந்தரத்துக்கும், அங்கிள் என அழைக்கப் படும் நசாருக்கும், பாரைக்குட்டி என அழைக்கப்படும் சந்திரன் தம்பிக்கும் மானசீகமாக நன்றி சொன்னது. சாப்பாட்டுக்கு மேல் பலாப்பழமும், மாம்பழமும் தித்தித்தன.

ஆனாலும் என்னால் இன்று அவை எல்லாவற்றையும் முற்றாகச் சுகிக்க முடியவில்லை. கால் வேலைகளை முடித்து விட்டு பருத்தித்துறையில் இருக்கும் அழகிய சிறிய கிராமமான ஆத்தியடியில் இருக்கும் நான் தவழ்ந்த எனது வீட்டுக்குப் போய் ஒரு கிழமையாவது நின்று வருவதாக நாம் போட்ட திட்டம் நிறைவேறாது போலத் தெரிந்தது. வேலை முடியாமல் எனது கணவரையோ, ஹொல்கெரையோ அங்கிருந்து கூட்டிப் போக முடியாது. அதுதான் மனசு சங்கடப் பட்டது.

ஆத்தியடியையும் எனது வீட்டையும் நினைக்கும் போதெல்லாம் மனசு தழுதழுத்தது. போகவேண்டும் என்று பரிதவித்தது. இருக்கும் ஒரே ஒரு வழி நான் தனியப் போய் வருவதுதான். தனியான பயணம் எந்தளவு சிக்கலாக இருக்கும் என்பது தெரியவில்லை. புலிகளின் கட்டுப்பாடற்ற பகுதிக்குள் குன்றும் குழியுமான வீதிகளில் சில மணித்தியாலங்களுக்குப் பேரூந்தில் பயணிக்க வேண்டும். வன்னியிலிருந்து புறப்படும் அல்லது வன்னிக்கு வந்து கொண்டிருக்கும் வாகனங்களைப் பார்த்திருக்கிறேன். சனங்களைப் பட்டியில் அடைப்பது போலத் திணித்துக் கொண்டு..., நினைக்கவே பயமாக இருந்தது. ஆனாலும் நான் தவழ்ந்த, தத்தி நடை பயின்ற... என் பிரிய உறவுகளுடன் கைகோர்த்துத் திரிந்த... நான் வாழ்ந்த எனது வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஆசை பயத்தைத் துரத்தியடித்தது.

திடீரென, உடனேயே எனது கிராமத்துக்குப் போய் விடவேண்டுமென்ற ஒரு வேகம் எனக்குள் எழுந்தது. எனது கணவருக்கு எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அடுத்தநாள் காலையே புறப்பட்டு விடத் தீர்மானித்துக் கொண்டேன்.

மற்றவர்களிடம் விசாரித்த போது, "அப்படி நினைக்கிற போலை நாளைக்கே போகேலாது. பாஸ் எடுக்கோணும். பஸ் புக் பண்ணோணும். இப்படிக் கனக்கச் சிக்கல்கள் இருக்குது அக்கா....! அதோடை பஸ்சுக்கை நீங்கள் இருக்க மாட்டிங்கள் அக்கா. நெரிச்சுத் தள்ளிப் போடுவாங்கள். சிலநேரம் நிண்டு கொண்டுதான் போகவேண்டி வரும்" என்றார்கள்.

எனக்குத் தாமதிக்க இஸ்டமில்லை. எல்லாவற்றையும் தாங்கி நான் பயணிக்கத் தயார். அதனால் "எப்படியாவது நான் போகோணும்" என்று வெண்புறா உறவுகளிடம் சொன்னேன். அவர்கள் நல்லவர்கள். என்னைத் தனியே அனுப்ப அவர்களுக்கு மனம் இல்லாவிட்டாலும் என் விருப்பத்தை நிறைவேற்ற உடனேயே எனக்கு உதவ முன்வந்தார்கள். நாளை காலை அவர்களில் ஒருவருடன் நந்தவனத்துக்குப் போய் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான பாஸ் எடுக்க ஏற்பாடாகியது.

வெண்புறாவின் பொறுப்பாளர் அன்ரனி மோட்டார்சைக்கிள் சாரதி நிச்சுதனிடம் "நாளைக்கு அக்கா பாஸ் எடுத்த உடனை அக்காவை முகமாலை வரை கொண்டு போய் விட்டு விடு. இங்கை இருந்து பஸ்சிலை அக்கா போகமாட்டா" என்றார். எனக்கு மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பழக்கமில்லை.

பின்னேரம் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென செஞ்சோலை ஐனனி வந்தாள். விடயத்தைச் சொன்ன போது "நான் பழக்கிறன்" என்று சொல்லி போரின் அனர்த்தங்களில் குழி விழுந்து போயிருந்த ஏ-ஒன்பது வீதியில் என்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு திரிந்தாள். மெதுவாக ஓடி, நிறையக் கதைத்து... அவள் வேகமாக ஓடத் தொடங்கிய போது பயம் குறைந்திருந்தது.

அன்றைய இரவு ஐனனியுடன் கதைத்து, சாப்பிட்டு, படுக்க வெகுநேரமாகி விட்டது. ஊர் செல்லும் நினைவுகளில் தூக்கம் வரமறுத்தது. கூடவே ஏதோ விதமாக நுளம்பு வலைக்குள் புகுந்து கொண்ட நுளம்பு ஒன்று என்னைத் தூங்க விடாமல் மிகுந்த தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது.

சந்திரவதனா
யேர்மனி
2002

- தொடரும் -

தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4

Sunday, August 13, 2006

ஆவணி மாத வடலி


ஆவணி மாத வடலி வெளி வந்து விட்டது.
பல கட்டுரைகளுடன் - வடலி

Friday, August 11, 2006

நினைவுப் பதிவு

தன்னோடு கைகோர்த்து வந்த ஒரு குழந்தை தன் முன்னாலேயே குருதி வடிய
சுருண்டு வீழ்ந்ததைப் பார்க்கும் ஒரு ஆறு வயதுக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்?
அது ஷெல், குண்டு, சூடு என்று அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் 1985ம் ஆண்டுக் காலம். நான் ஜேர்மனிக்குப் புறப்படுவதற்கான ஆயத்தங்களில் இருந்தேன். பாஸ்போர்ட் எடுப்பதற்கு சில ஆவணங்களைப் போட்டோக் கொப்பி எடுக்க வேண்டி இருந்தது. மூத்த இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு கடைசி மகனை அம்மாவுடன் விட்டு விட்டு ஒழுங்கைகள் கடந்து மருதடியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அங்குதான் எங்கோ ஒரு இடத்தில் போட்டோ கொப்பி மெசின் இருக்கிறது என்ற தகவல் எனக்குக் கிடைத்திருந்தது. தம்பிமாரை அனுப்பக் கூடிய இடமல்ல அது. அதனால்தான் நானே சென்றேன்.

ஐயனார் கலட்டி ஒழுங்கைகளைக் கடந்து கொண்டிருக்கும் போது பருத்தித்துறைக் கடலில் இருந்து வந்து கொண்டிருந்த ஷெல்களின் ஆக்ரோசம் கூடியிருந்தது. கூடவே சீனவெடிப் பாணியில் சூட்டுச் சத்தமும் கூடிக் கொண்டே போனது.

"வெளிக்கிட்டனான். வேலையை முடிச்சிடோணும்" என்ற வைராக்கியத்தோடு நான் நடந்து கொண்டிருந்தேன். பிரதான வீதியில் ஏறுவதற்கு இன்னும் 100மீற்றர்தான் இருக்கும் போது சனங்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடத் தொடங்கியிருந்தார்கள். என்ன ஏது என்று யோசிக்க முன்னம் சைக்கிள்கள் சுழன்று அடித்துக் கொண்டு திரும்பின. இளம்பெடியள் பாய்ந்து விழுந்து ஓடினார்கள்.

"பள்ளிக்கூடப் பிள்ளையளுக்குச் சூடு விழுந்திட்டுதாம். வடமாராட்சிப் பள்ளிக்கூடப் பிள்ளையள்." ஓடுபவர்களின் வாய்களில் இருந்து உதிர்ந்தன வார்த்தைகள். எனக்குள் பதட்டம். எனது இரண்டு பிள்ளைகளும் வடமாராட்சிப் பாடசாலையில்தானே.

தொடர்ந்து போவோரின் வாய்களிலிருந்து தீபா, சாந்தி என்ற வார்த்தைகளும் வந்து விழுந்தன. எனக்குப் பகீரென்றது. ஓரிருவரை இடை மறித்து "என்ன நடந்தது? யாருக்குச் சூடு விழுந்தது?" கேட்டேன். "தீபாவுக்கும் சாந்திக்கும் சூடு" என்றார்கள். அந்தக் கணத்தில் நான் என்னை மறந்து விட்டேன். ஒரு பைத்தியக்காரி போல வடமராட்சிப் பாடசாலையை நோக்கி பிரதான வீதியில் ஓடத் தொடங்கினேன்.

"அக்கா, அங்கை போகாதைங்கோ, நில்லுங்கோ, இஞ்சை பாற்றா, மொறிசின்ரை அக்கா..." என்று பல குரல்கள் கனவில் போல என் காதுகளில் வீழ்ந்தன. தடக்கும் சேலையின் கொசுவத்தை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு நான் ஓடிக் கொண்டிருந்தேன். சிலர் என்னை வந்து தடுத்தார்கள். போக வேண்டாம் என்று மன்றாடினார்கள். ஒரு கட்டத்தில் என்னை மேற் கொண்டு நகர விடாமல் முழுவதுமாக மறித்து விட்டார்கள்.

"நீங்கள் திரும்பி வீட்டை போங்கோ அக்கா." சூடு விழுந்த பிள்ளையளை உடனையே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டினம். ஒண்டும் நடக்காது. நீங்கள் போங்கோ. வடிவா விசாரிச்சுப் போட்டு, வீட்டை வந்து எல்லா விபரத்தையும் சொல்லுறம்" என்றார்கள்.

வேறுவழியின்றி நான் வீட்டுக்குத் திரும்பி நடக்கத் தொடங்கினேன். உலகம் இருண்டு விட்டது போலிருந்தது. மனசு "ஆண்டவா என்ரை பிள்ளையை என்னிடம் உயிரோடு தந்து விடு" என்று மன்றாடியது.

வழியெல்லாம் பதட்டத்துடன் மக்கள். நான் வீட்டடிக்குப் போனபோது அப்பாச்சி, அம்மா இருவருமே வீட்டு வாசலில் திகைத்துப் போய் நின்றார்கள். நான் உள்ளே போக மனமின்றி கேற்வாசலில் அப்படியே இருந்து விட்டேன்.

பிரமை பிடித்தவள் போல எவ்வளவு நேரம் அதிலேயே இருந்திருப்பேனோ எனக்குத் தெரியாது. ஒரு சைக்கிள் வருகிறது. ஒரு போராளிதான் ஓட்டி வந்தான். யார் முன்னுக்கு என்று பார்த்தேன். என் கண்களையே நம்ப முடியவில்லை. தீபாவேதான் வருகிறாள். முகத்தில் ஒரு மருட்சி. சிரிக்க மறந்த தன்மை. ஆனாலும் உயிரோடு என் மகள். அப்போதுதான் நான் அடக்க முடியாமல் அழத் தொடங்கினேன்.

---------------------------------

சிங்கள இராணுவத்தின் அட்டகாசம் அன்று அதிகமாயிருந்ததால் வடமராட்சிப் பாடசாலைப் பிள்ளைகளை, ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். பிள்ளைகள் கும்பலாகப் போய்க் கொண்டிருந்தார்கள். இராணுவம் பருத்தித்துறைக் கடலோடு சேர்ந்த முகாம்களிலிருந்து சுட்டுக் கொண்டு இருந்திருக்கிறது. தீபாவும் சாந்தியும் கைகோர்த்த படி பாடசாலை வீதியில் விநாயகமுதலியார் வீதியடியைக் கடக்கும் போது ஒரு ரவை சாந்தியின் கழுத்தில் பாய்ந்து விட்டது.

தன்னோடு கைகோர்த்து வந்த ஒரு குழந்தை தன் முன்னாலேயே குருதி வடிய சுருண்டு வீழ்ந்ததைப் பார்க்கும் ஒரு ஆறு வயதுக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? சாந்தி உடனேயே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டு விட்டாள். தீபா என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப் பட்டாள்.

சாந்தி நான் ஜேர்மனிக்கு வரும் வரை பேசும் சக்தியை இழந்த நிலையிலேயே இருந்தாள். தீபா பல நாட்கள் ஒரு அதிர்ச்சி அடைந்த நிலையிலேயே இருந்தாள். அதிகம் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். நித்திரையில் சாந்தி.. சாந்தி.. என்று ஏதேதோ புலம்பினாள். ஷெல் சத்தம் கேட்டால் உடனேயே ஒரு பதட்டத்துடன் ஓடிச் சென்று பக்கத்தில் நிற்கும் யாரையாவது இறுகக் கட்டிப் பிடிப்பாள். யாரும் பக்கத்தில் இல்லை என்றால் அறைக்குள் ஓடிப்போய் கட்டிலுக்குக் கீழ் புகுந்து கொள்வாள். ஜேர்மனிக்கு வந்த பின்னும் சில வருடங்களாக இடி இடிக்கும் சத்தம் கேட்டால் ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிப்பாள்.

சந்திரவதனா
11.7.2006

மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று


குண்டுச் சத்தங்களில் ஊரே குழம்பிப்போய், அன்று 85 இல் என் வீட்டுக் கோடியில் ஓர் அரவம். எண்ணிலாப் பயத்துடன் என்னென்று பார்த்தேன். அவன் நின்றான்.

தொண்டை வரண்ட நிலையில், மூச்சு வாங்கிய அவனைப் பார்த்து, "குடிக்க ஏதும் தரவா?” எனக் கேட்டேன். "வேண்டாம்" என்றது அவன் வாய், "வேணும்" என்றது அவன் முகத்தின் பாவம்.

நெல்லிரசம் கலந்து நான் கொடுத்த கிளாசை வாங்கி மூச்சைப் பிடித்த படி குடிக்கும் போது ஓரக் கண்ணால் ஓராயிரம் நன்றி சொன்னான்

அவன் பெயர் தெரியாது எனக்கு. அவன் முகம் தெரியும். அவன் இலட்சியம் தெரியும். மறக்காத அவன் முகத்தை மறக்காது தேடுகிறேன். கிடைக்கவில்லை இன்னும்.

என் வீட்டுக் கோடியும், வேர்வை வடிந்த அவன் முகமும், குடித்து விட்டுத் திருப்பித் தந்த கிளாசில் விரல்கள் படித்த குருதிக் கறையும், "திக்கத்துக்குள்ளை நாலு பேரை முடிச்சிட்டனக்கா" சொன்ன படியே இராணுவ நகர்வுகளை உணர்த்தும் சத்தங்கள் கேட்டு, தோளில் தொங்கிய கிரனைட் பையுடன் நொண்டியபடி அவன் ஓடிய போது அவன் பின்னங்கால்களில் வழிந்த குருதியும் இன்னும் மறக்கவில்லை.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite