சின்ன வயதில் வானொலி.. பத்திரிகை.. இரண்டையும் தாண்டி எனக்குச் செய்திகளைக் கொண்டு வருவது எனது அண்ணன்தான்.
எங்காவது விறாந்தை நுனியிலோ, அல்லது யாராவது ஒருவரின் கட்டிலில் சுவரோடு சாய்ந்து அமர்ந்தோ, அல்லது பின் வளவுக்குள் பனங்கொட்டில் அமர்ந்தோ... நாங்கள் கதையளப்போம். அப்போதெல்லாம் அண்ணன், தான் அறிந்தவைகளையும் அதனால் தன்னுள் எழுந்த வியப்புக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்வான்.
"உனக்கு ஆச்சரியமாயில்லையோ...? சும்மா ஒரு என்வெலப்பிலை ஒரு ஆளின்ரை பெயரை எழுதி, தெருவின்ரை பெயரையும் எழுதி, நகரத்தின்ரை பெயரோடை நாட்டின்ரை பெயரையும் எழுதி தபாற்பெட்டிக்குள்ளை போட, ஒரு கடிதம் அமெரிக்காவிலை உள்ள அந்த ஆளட்டையே சரியாப் போய்ச் சேருது." என்பான்.
இன்னொரு தரம் வயர் வழியே வரும் மின்சாரம் பற்றியும், இன்னுமொருதரம் அலை பற்றியும்... என்று ஏதாவது சொல்லி என்னைச் சிந்திக்கவும், சில சமயங்களில் சிரிக்கவும், பல சமயங்களில் வியக்கவும் வைப்பான்.
இப்படித்தான் ஒருநாள் சொன்னான்.
"உனக்குத் தெரியுமோ அமெரிக்காவிலை கார் இல்லாத வீடுகளே இல்லை. சில வீடுகளிலை இரண்டு காரும் இருக்குதாம்" என்று.
எனக்கு ஆச்சரியம்தான். அப்போது எங்கள் ஊரில் ஓரிருவர் வீட்டில் மட்டுமே கார்கள் இருந்தன. அவர்களும் இனியில்லையென்ற பணக்காரர். எங்களுக்கு கார் தேவையென்றால், யாராவது சைக்கிளில் ரவுணுக்குப் போய் ரக்சிக்குச் சொல்லி விட்டு வருவார்கள்.
அண்ணனுக்கு அவனது றலி சைக்கிள் ஒரு விமானத்தை விடப் பெறுமதியானது. சின்னத் தூசி பட்டாலே தேங்காய் எண்ணெய் பூசி துடைத்துத் துடைத்து அத்தனை பத்திரமாக வைத்திருப்பான். அப்பா கொடிகாமம் புகையிரதநிலையத்தில் வேலை செய்கிற போது பஸ்சைப் பிடிக்கத் தவறி விட்டார் என்றால், தனது ஏதோ ஒரு (பெயர் மறந்து விட்டது) சைக்கிளில்தான் பத்துக்கிலோ மீற்றர் தூரத்தையும் கடப்பார்.
இப்படியெல்லாம் எமது வீட்டு.. நகரத்து.. நாட்டு நிலைமைகள் இருக்க `அமெரிக்காவில் ஒரு வீட்டில் இரண்டு காரோ...!` மனசு அதைப் பற்றிக் கனக்க யோசித்துக் கொண்டே இருக்கும். `அமெரிக்கா எப்படி இருக்கும்? அங்கு மனிதர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள்?` என்று அறிய அங்கலாய்க்கும்.
இந்த அங்கலாய்ப்புகளுக்கோ, அல்லது பனங்கொட்டின் மேல் இருந்து கதைக்கும் காலத்துக்கோ முற்றுப்புள்ளி வைக்கும் காலம், நாம் நினைக்காத ஒரு நேரத்தில் வந்து சேரும் என்று யார் கண்டது.
வந்து விட்டது. இந்த நேரத்தில் நான் இன்னும் ஊரில் அதே சின்னவளாய் இருக்க, எனது அண்ணன் எனக்குப் புதினம் சொல்வதானால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தேன்.
"உனக்குத் தெரியுமே...?
நோர்வேயிலை கைத்தொலைபேசி வைச்சிருக்காத ஆக்களே இல்லையாம். சில ஆக்கள் ஒன்றுக்கு இரண்டு கைத்தொலைபேசியும் வைச்சிருக்கினமாம். சரியான சின்னனாய் இருக்குமாம். பொக்கற்றுக்குள்ளையோ போட்டுக் கொண்டு போவினமாம். "
நான் தபாற்கந்தோரிலை இருக்கிற, சுழற்றி நம்பர் அடிக்கிற தொலைபேசியை நினைத்துப் பார்த்துக் குழம்பிக் கொண்டு, அவன் சொல்லுறதை நம்ப முடியாமல் தடுமாறிக் கொண்டு நிற்பன்.
அவனுக்கு விளங்கீடும். அவன் தொடர்ந்து சொல்லுவான்.
"எனக்குத் தெரியும். உனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் உண்மை.
2004 கடைசியிலை கணக்கெடுப்புச் செய்தவையாம். நோர்வேயிலை 4.6மில்லியன் மக்கள்தான் இருக்கினமாம். ஆனால் 4.71மில்லியன் கைத்தொலைபேசி பாவனையில் இருக்காம்."இப்ப எனக்கு கைத்தொலைபேசி எப்படி இருக்கும் அதைப் பார்க்கோணும் என்ற ஆசை கட்டாயம் வந்திருக்கும்.
சந்திரவதனா
12.5.2005