Wednesday, February 09, 2005

தத்துவம்


"உன்னைக் கொடு
என்னைத் தருவேன்"
காதலிக்கையில்

"உன்னைக் கட்ட
என்ன தருவாய்"
கல்யாணத்தில்

"உன்னைக் கட்டி
என்ன கண்டேன்"
தொடரும் வாழ்வில்

சந்தோசமான சம்பவம்

காதலர்தினத்துக்காக காதல் கொண்ட மனங்கள் பூக்களுடனும் கவிதைகளுடனும் காத்திருந்த வேளையில் இங்கு யேர்மனியில் ஒரு சந்தோசமான சம்பவம் நிகழ்ந்தது. காதலர்தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 2000இல் நடந்த அந்த சம்பவம் எனது நினைவில் வந்துள்ளது. அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.

Schweiz எல்லைக்கு அருகாமையில் யேர்மனியின் Badzeckingen என்ற நகரிலே வாழ்ந்து கொண்டிருந்த இலங்கையரான சுதந்திரராஜா என்பவருக்கு ஒரு சந்தோச அதிர்ச்சி கிடைத்தது.

சுதந்திரரராஜா 5 வருடங்களாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து தனியே Badzeckingen இல் வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் தனது சகவேலையாட்களுடன் மிகவும் நட்பாகப் பழகுவது மட்டுமல்லாது, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு எந்த வித பிரதியுபகாரத்தையும் எதிர்பாராது எப்போதும் உதவி செய்து கொண்டும் இருப்பாராம். அவரது இந்த நல்ல குணத்தினால் அவர் மேல் பிரியம் வைத்திருந்த அவரது சகவேலையாட்கள், அவரது மனதில் உள்ள கவைலையத் தீர்க்க விரும்பினார்கள்.

அவரது கவலை - குடும்பத்தைப் பிரிந்த எல்லா இலங்கையர் போலவும் தன் மனைவி குழந்தைகளை தன்னிடம் அழைக்க வேண்டுமென்பதே. அதற்கு அவருக்கு தடையாக இருந்தவை வீடும், பணமுமே. அதாவது இங்கு யேர்மனியில் ஒருவர் தனது மனைவி குழந்தைகளை தன்னிடம் அழைக்க வேண்டுமென்றால், அவரிடம் அவர்கள் வாழ்வதற்குப் போதுமான அளவைக் கொண்ட (வாடகை வீடே போதும்) வீடும், அவர்கள் வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான அளவு உழைப்பும் இருக்க வேண்டும். அவை அவரிடம் இருக்கவில்லை.

அவரது இந்த இக்கட்டையும், மனத்துயரையும் கண்டு அவர் துயர் நீக்க விரும்பிய அவரது சகவேலையாட்கள்(யேர்மனியர்), அவருக்குத் தெரியாமலே யேர்மனியின் தொலைக்காட்சிச் Channel களில் ஒன்றான SAT-1 நடத்தும் Nur die liebe zaehlt என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு இவரைப் பற்றி எழுதிப் போட்டார்கள்.

கிடைத்ததே அதிர்ஸ்டம் சுதந்திரராஜாவுக்கு.

நிகழ்ச்சித்தயாரிப்பாளர்களின் ஏற்பாட்டின் படி காதலர்தினத்துக்கு முதல்நாள் சக வேலையாட்களால் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு இவர் அழைத்து வரப் பட்டார்.
வெறும் பார்வையாளராக வந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த சுதந்திரராஜாவை அவர்கள் திடீரென முன்னுக்கு அழைத்து, அவருடன் சிறிது உரையாடிவிட்டு சகலவிதமான புதிய தளபாடங்களும் போட்ட வீடு ஒன்றைக் கொடுத்தார்கள். சில நிமிடங்கள் கழித்து அவரது மனைவி குழந்தைகளை அழைத்து அவர் முன் நிறுத்தினார்கள். ஏதிர்பாராது அந்த சந்தோச அதிர்ச்சியில் நெக்குருகிப் போனவர்கள் சுதந்திரராஜாவின் குடும்பத்தவர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும்தான்.

அது மட்டுமா!
காதலர்தினத்திலிருந்து இரு வாரங்களுக்கு வேலையிலிருந்து விடுப்பும் எடுத்துக் கொடுத்திருந்தார்கள்.

சுதந்திரராஜா அந்நிய நாட்டில் அன்பானவராயும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவராயும் வாழ்ந்ததற்கான பயனை உடனேயே பெற்றுக் கொண்டார்.

இப்போது எப்படி இருக்கிறார் என்று அறிவதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது.
அவராக வந்து சொன்னால்தான்.....

ஒரு சின்ன அதிசயம்

எங்கள் வீட்டுக்குள் ஒரு சின்ன அதிசயம் நடந்தது.
உங்களுக்கு எப்படியோ...? எனக்கு இது அதிசயம் போலத்தான்.

அதாவது
எனது அண்ணன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
அண்ணி பிறந்தநாள் டிசம்பர் 10ந் திகதி.

7வருடங்கள் கழித்து தம்பியின் திருமணம்.
அம்மா அப்பா பெண் பார்த்து (பேச்சுத் திருமணம்) திருமணம் நடந்தது.
தம்பியின் மனைவி பிறந்தநாளும் டிசம்பர் 10ந் திகதியே.

அது மட்டுமா..!!!
இருவரின் பெயரும் மஞ்சுளா.

பெயரும் பிறந்தநாளும் ஒன்றாக மருமகள்கள் எங்கள் வீட்டில்.

Tuesday, February 08, 2005

இது சுயநலமா?


அண்ணி தொலைபேசியில் அழைத்து "பரதன் இயக்கத்துக்குப் போய் விட்டான்" என்ற போது சுயநலமாக மனசு அழுதது. அவன் எனது அண்ணனின் மூன்றாவது மகன்.

"பன்னிரண்டே வயசுதானே! ஏன் போனான்? நன்றாகப் படிப்பானே! அண்ணி அனுப்பி வைக்கும் படங்களிலிலெல்லாம் துருதுருவென்ற விழிகளுடன் என்னைப் பார்ப்பானே! எனக்கு அழுகையாக வந்தது. இப்ப என்ன அவசரம் வந்து போனான்..?" மனசு கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டது.

அண்ணியை நினைக்கத்தான் பாவமாக இருந்தது. என் வயதுதான். அதற்கிடையில் அண்ணனையையும் இழந்து பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் தனியாக நிற்கிறா. அவவின் தழுதழுத்த குரல் அடிக்கடி மனசில் மோதியது.

இரண்டு கிழமைகளாக இதே நினைவுகள் என்னுள் அலைமோதி மனசை அலைக்கழித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் அண்ணியின் தொலைபேசி "அவன் திரும்பி வந்திட்டான்." சந்தோசம் கலந்த அழுகை பீறிட்டது.

"எப்பிடி வந்தவன்? போய்க் கூட்டிக் கொண்டு வந்தனிங்களோ...? "

"இல்லை அவையள்தான் திருப்பி அனுப்பீட்டினம். 12வயசிலை சேரேலாது..." எண்டு சொல்லி.

எனக்கு போன நிம்மதி திரும்பி வந்தது.

இதையும் விட கடுமையாக...

அன்று 26ந் திகதி. சுனாமி அலைகளோடு வந்த செய்திகளில் வற்றாப்பளை தேவாலயத்துக்குச் சென்ற அத்தனை பேரையும் கடல் கொண்டு சென்று விட்டது என்ற செய்தி மனதை இடித்தது. அண்ணி ஒவ்வொரு ஞாயிறு காலையும் தனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு அந்தத் தேவாலயத்துக்குப் போவது நாமறிந்த விடயம். அன்றும் அவ போயிருப்பா என்ற எண்ணம்தான் என்னையும் எனது குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரையும் நிலைகுலைய வைத்தது.

தொலைபேசியோடு போராடினோம். தொடர்புகள் கிடைக்கவேயில்லை. அம்மா செய்வதறியாது மலைத்துப் போய் இருந்தா.

இரண்டுநாள் கழித்துத்தான் தொடர்பு கிடைத்தது.
அன்று(26ந் திகதி) மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அண்ணி தேவாலயத்துக்குப் போகாமல் மருத்துவரிடம் சென்றிருந்தா.

அத்தனை அனர்த்தங்களின் மத்தியிலும் ஒரு அசாதாரண நிம்மதியில் மனது குதூகலித்தது.

சமையல்

சமையல் என்பது ஒரு கலை என்ற எண்ணத்திலிருந்து வழுவி அது பெண்களின் தலையில் திணிக்கப் பட்டு சமையலும் அட்டில்கூடமும் பெண்களுக்குச் சொந்தமான விடயங்கள் போன்ற பிரமை ஏற்படுத்தப் பட்டு பலபெண்கள் தமது திறமைகளை காலங்காலமாய் அட்டில்கூடத்துக்குள்ளேயே முடக்கி விட்டார்கள்.

இன்றைய காலகட்டத்தில் இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆண்களும் சமையலில் மனதோடு ஈடுபடுகிறார்கள். ஆனாலும் அது பெண்களின் வேலையாகவே கருதப் படுகிறது.

உண்மையில் சமையல் என்பது ஒரு கலை. முந்தைய காலங்களில் ஆண்கள்தான் இக்கலையில் சிறந்து விளங்கியதாகப் பலர் கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில் நளபாகம் என்பது ஆண்களின் சமையல் திறனுக்குச் சாட்சியாக இருக்கிறது.

சமையல் என்பது, "இது உனது வேலை" என்று சொல்லாமலே சொல்லி, ஒரு பெண்ணிடம் திணிக்கப் படும் போதுதான் அதன் சுவை குறைகிறது. கைக்குக் கை ருசி வேறுபட்டாலும் மனஈடுபாட்டுடன் செய்யும் போதுதான் சமையல் சமையலாகிறது.

எனக்கு சமைப்பதை விட ருசிப்பதில்தான் ஆர்வம் அதிகம். ஆனாலும் சில உணவுகளை வலைப்பதிவுகளிலிருந்து எடுத்து செய்து பார்த்துச் சுவைத்திருக்கிறேன். (குறிப்பாக இனிப்பு வகைகளை)

எத்தனை விதமான Chocolatesதான் இங்கு ஐரோப்யியாவில் இருந்தாலும் எங்கள் ஊர் சர்க்கரை போட்டுச் செய்யும் இனிப்பு வகைகளின் சுவைக்கு இந்தச் Chocolates ஈடாக மாட்டா.

அந்த வகையில் நான் வலைப்பதிவிலிருந்து கண்டெடுத்து சுவைத்தவற்றில்
இந்துராணி கருணாகரனின் வட்டிலப்பம் மிகவும் தித்திப்பானது.

இன்று காசி முட்டையில்லாத வாழைப்பழகேக் செய்யும் முறையைத் தந்துள்ளார். செலவு அதிகமில்லாத கைவசமுள்ள பொருட்களோடு செய்யக் கூடிய உணவு என்பதால் செய்து பார்க்கும் (பார்ப்பதல்ல சுவைப்பது.)எண்ணமும் உடனேயே வந்துள்ளது.

இளவரசி டயானா


(diana)தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறித்தான் சாதனைகளை அளவிட முடியுமா?

இளவரசி டயானா இளவரசியாக மட்டும் இராது ஒரு சமூகசேவகியாகவும் இருந்தார். அவரை சாதனைப்பெண்கள் பட்டியலில் ... நான் சேர்த்தேன். அது தவறு என எல்லாளன் தனது கருத்தைப் பதித்துள்ளார்.

எல்லாளனின் கருத்து
டயனா குறித்து எனக்குத் தவறான அபிப்பிராயம் எதுவும் கிடையாது. ஆனால் அவர் நீங்கள் காண்பிக்கும் அளவிற்கு இரக்கப்படவேண்டியவர் அல்ல என்பது என் கருத்து! 'சார்ள்ஸ்" தாழ்வு மனப்பான்மை உடையவர் (இதுவும் என் கருத்து). அதனால்த்தான் டயனா மக்களுக்குள் அழகு தேவதையானதை அவரால் சகிக்க முடியவில்லை. இந்த நேரத்தினை கமிலா சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டார். இருப்பினும் டயானா விவாகரத்துப் ""பெற முன்னரே"" பலருடன் 'மன்னிக்கவும்" சிலருடன் 'நெருக்கமாக" இருந்தவர் (சார்ள்ஸ் நல்லவரோ என்பது இங்கே தேவை இல்லாத பேச்சு.) அதனால்த்தான் மகன் Harryயின் தலைமுடியினை இரண்டு வருடங்களுக்கு முன் D.N.A பரிசோதனைக்கு அனுப்பினது 'ராணிமாளிகை" (உள்ளுர்ப் பத்திரிகையில்ப் படித்தேன்). ஆக மறுபடியும் சொல்லுகிறேன். எனக்கு டயானா மீது தவறான அபிப்பிராயம் இல்லை, வெள்ளைப் பெண்மணி என்ற வரையறைக்குள் பார்க்கிறபோது மட்டும் (குறிப்பிட நினைப்பது 'நெருக்கமான உறவுகளை"). ஆனால் எங்களுக்கு (தமிழர்) அவரை சாதனை படைத்தவர் என்று உதாரணத் தாரகை ஆக்குவதில்த்தான் உடன்பாடு இல்லை.
எனது கேள்வி
சாதனை படைத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறிப் பார்த்துத்தான் அவர்களின் சாதனைகளை அளவிட முடியுமா?
(டயானாவின் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவைதானா அல்லது பொய்யானவையா என்பது ஒரு புறமிருக்க... அவை உண்மையாயினும் அவை குற்றந்தானா, இல்லையா என்பதும் அதற்கான தீர்வுகளும் எனக்கு அப்பாற் பட்டவை. குற்றமேயாயினும், அக்குற்றங்களுக்கான காரணிகளும் கவனத்தில் எடுக்கப் பட வேண்டியவை.)

எனது பதிலை நான் எல்லாளனுக்குக் கொடுப்பதற்கு முன் உங்கள் பதில்களை எதிர் பார்க்கிறேன்.

ஏற்கெனவே இருமுறை பதிந்து காணாமற் போனதை மீண்டும் பதிந்துள்ளேன்..

இன்று நான்காவது தரம்

நாடகப்போட்டி முடிவுகள்

ஐ.பி.சி தமிழின் - சமுத்திரா - நிகழ்ச்சியினூடாக நடாத்தப்பட்ட நாடகப்பிரதிகள் போட்டி-2004 பற்றிய முடிவுகள்

1ம் பரிசாக தங்கப்பதக்கம் பரிசு பெறும் நாடகப்பிரதி- "அம்மாவே எல்லாமாய்"
பிரதியை யார்த்தவர்:- திலகன், ஜேர்மனி.

2ம் பரிசாக லண்டன், வெம்பிளி -சரஸ்வதிபவன்- உணவகத்தினர் வழங்கும் 20 பவுண்கள் பெறுமதியான வவுச்சரையும் கலையக விருதினையும் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "எங்கடை பிள்ளைகள்"
பிரதியை யார்த்தவர்:- என்.கிருஸ்ணசிங்கம், நோர்வே.

3ம் பரிசாக ஈழத்து இலக்கிய நூல் ஒன்றினையும் மற்றும் கலையக விருதினையும் பெற்றுக்கொள்ளும் நாடகப் பிரதி- "தமிழ்ச்செல்வி"
பிரதியை யார்த்தவர்:- எஸ்.பாலச்சந்திரன், ஜேர்மனி.

4ம் பரிசாக கலையக விருதினைப் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "நினைவுகளின் ஊர்வலங்கள்"
பிரதியை யார்த்தவர்:- அரியாலையூர் மாலினி வசந்த், ஜேர்மனி.

5ம் பரிசாக கலையக விருதினைப் பெற்றுக்கொள்ளும் நாடகப்பிரதி- "வேர்கள்"
பிரதியை யார்த்தவர்:- கே.எஸ்.அதுல்யகுமாரன், சுவிஸ்

தகவல்:- ஐ.பி.சி யின் ~சமுத்திரா- நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.


Monday, February 07, 2005

இதமான பொழுதுகளில் ஒன்று.

சனி நீராடு என்று சொல்லி ஊரில் சனிக்கிழமைகளில் நீராடுவதும் அதற்கு முன் எண்ணெய் தேய்த்து உடலை மசாஜ் செய்விப்பதுவும் ஆண்களுக்குரிய விடயங்களாகவே இருந்தன.

மசாஜ் செய்விப்பதற்கென்று ஆண்கள்தான் உரிய இடத்துக்குப் போய்வருவதை நான் கண்டிருக்கிறேன். வீடுகளில் கூட காலை அமுக்கி விடுவதும் கையைப் பிடித்து விடுவதும் ஆண்களுக்கே செய்யப் பட்டன.

பெண்களுக்கு இந்த சுகங்கள் தேவையில்லை என்று கருதி விட்டார்களோ என்னவோ..?

தப்பித்தவறி ஒரு ஆண் அதாவது ஒரு கணவன் தனது மனைவிக்கு கால் கை பிடித்து, அதையும் யாராவது பார்த்து விட்டால் போதுமே. ஊர் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரித்தான். மென்று தள்ளி விடுவார்கள்.

ஆனால் வெளிநாடுகளில் அப்படியல்ல. பெண்களுக்கு மசாஜ் அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்து. ஆண்களுக்கும் கிடைக்கும்தான். ஆனால் பெண்களைத்தான் அடிக்கடி மசாஜ் செய்விக்க அனுப்புவார்கள்.

கணினிக்கு முன் அதிகமாக இருப்பவர்கள், நிறைய எழுதுபவர்கள்... என்பதில் தொடங்கி மனஅழுத்தத்துக்கு ஆளானவர்கள் வரை என்று பலரும் தோள்மூட்டுகளிலும், கழுத்துப் பகுதியிலும் ஏற்படும் இறுக்கத் தன்மையால் பாதிக்கப் படுகிறார்கள். இந்தப் பாதிப்புகள் பெண்களைத் தாக்குவதற்கான காரணிகள்தான் அதிகம் என்பது மருத்துவர்களின் கருத்து. இதற்கு மருத்துவரீதியான உடற்பயிற்சியோடு மசாஜ்யும் அவசியம் என்பதுவும் அவர்களின் கருத்து.

இந்த மசாஜ் செய்விப்பது இருக்கிறதே மிகமிக இதமான ஒரு விடயம். இதற்கென்றே படித்த பெண்கள் (ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள்தான் இதில் வல்லுனர்கள்) கைவிரல்களினால் மெதுமெதுவாக எமது தோள்களிலும், முதுகிலும் லாவகமாக அழுத்தி குறிப்பிட்ட நரம்புகளையும் மசில்ஸ்களையும் கண்டு பிடித்து.... அது மிக மிக இதமான விடயம்.

இந்தச் சலுகையை நான் தவற விடுவதே இல்லை. அடிக்கடி வைத்தியரிடம் சென்று எனது தோள்மூட்டு இறுகி விட்டதைச் சொல்லி மசாஜ் செய்விப்பதற்கான அனுமதியை எடுத்து விடுவேன். மருத்துவரின் அனுமதியுடன் செய்விக்கும் போது மருத்துவக் காப்புறுதி நிறுவனமே இதற்கான செலவை ஏற்றுக் கொள்ளும். ஒரு சிறுதொகையை மட்டுமே நான் கட்ட வேண்டி இருக்கும். (ஒரு தடவை மருத்துவர் எழுதித் தந்தால் ஆறு தடவைகள் மசாஜ் கிடைக்கும். ஆறு தடவைக்குமாக நான் கொடுக்கும் பணம் ஒரு தடவைக்கான பணத்தை விடக் குறைவாகவே இருக்கும்.) ஆனால் இந்த சலுகைகளை எங்கள் தேசத்துப் பெண்கள் அவ்வளவாகப் பயன் படுத்துவதில்லை. நானோ அந்தப் பொழுதுகளை மிகுந்த ஆத்மார்த்தமான உணர்வுடன் அனுபவிப்பேன்.

இந்த மசாஜ்யை கணவன்மார்கள் கூட மனைவியருக்குச் செய்யலாம். கற்றவர்கள் போலச் செய்ய முடியாவிட்டாலும் களைத்துப் போயிருக்கும் மனைவியின் தோள்களை இதமாக அழுத்தி விடுவது மனைவியின் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் மிகவும் இதமாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு மருத்துவர் சொன்னார் இந்தத் தொடுகைகளே உடலின் முக்கால்வாசி வருத்தங்களைத் துரத்தி விடும் என்று.

இதற்கென்று கற்றவர்கள் அன்றி வேறுயாரும் இப்படியான மாசஜ்களை செய்யக் கூடாது என்று சொல்வார்கள். உண்மைதான். கற்றவர்கள் போல நரம்புகளைத் தேடி அழுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் எலும்புகள் அழுத்தப் பட்டு விடும்.

மௌனமாக..

மனஓசை இன்று முழுக்க மௌனமாகவே இருந்து விட்டது.
ஒரு முக்கிய வேலை இருந்ததால், சில தடவைகள் முயன்றும், மனதை ஒரு நிலைப்படுத்தி இங்கு எதுவும் எழுத முடியாது போய் விட்டது.

அது மட்டுமா இந்த டயானாவின் பதிவு மீண்டும் மீண்டுமாய் என்னுடன் சவால் விட்டுக் கொண்டே இருக்கிறது. அப்பதிவுக்கு பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. சரியென்று மனஓசையைப் பதிந்து உள் நுழைந்தால் அப்பதிவையே காணவில்லை. இந்த இலட்சணத்தில் இனி நான் பதியப் போகின்றவை என்ன ஆகுமோ..?

Monday, January 31, 2005

காணாமற் போய்விட்டது.


எனது பதிவொன்று பதிந்த உடனேயே காணாமற் போய்விட்டது.
ஏன்..?
தொடரும் இப்பிரச்சனைக்கான நிவர்த்தியை யாராவது கண்டு பிடித்தீர்களா?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite