Monday, June 13, 2005

புத்தகங்களோடு...2


ரா.சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் கல்கியில் தொடராக வந்தது. அம்மா சேர்த்து புத்தகமாகக் கட்டி வைத்திருந்தா. அக்கதையை நான் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்.. கதைகள் போல இருதடவைகள் வாசித்தேன்.

இந்தப் பெரிய பெரிய அரச கதைகளை நான் வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னமே 60வதுகளின் இறுதிப் பகுதியிலோ, அல்லது 70வதுகளின் ஆரம்பத்திலோ தெரியவில்லை. எங்கள் வீட்டில் தமிழ்வாணனின் கல்கண்டு அறிமுகமாகியது. அப்போதுதான் அது வெளிவரத் தொடங்கியதோ அல்லது அம்மாவுக்கு அப்படியொரு சஞ்சிகை வெளிவருவது அப்போதுதான் தெரிய வந்ததோ என்பது எனக்குத் தெரியாத விடயம்.

கல்கண்டு எங்கள் வீட்டில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதில் வரும் தொடர்கதைகளை வாசித்து விட்டு, அடுத்த கிழமைக்காகக் காத்திருப்பது சிறுவர்களான எங்களுக்கு யுகங்களைக் கடப்பது போலிருந்தது. அண்ணன், நான், பெரியதம்பி மூவருமே போட்டி போட்டு வாசித்தோம். யார் முதலில் என்று சண்டை பிடித்தோம். விலக்குத் தீர்ப்பதே அம்மாவுக்குப் பெரும் பாடாய் இருந்தது. துப்பறியும் சங்கர்லால், நம்பூதிரி.. போன்ற கல்கண்டுக் கதைகளின் நாயகர்கள், வில்லர்கள் எல்லோருமே எங்களுடன் மிகவும் ஐக்கியமாகி விட்டார்கள். குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் அவர்கள் பற்றிப் பேசினோம். கதைகளை அலசினோம். வில்லன் வெளிக்கேற்றில் வரும் போதே, உள்ளிருக்கும் அறையிலிருந்து சங்கர்லால் அவர் வருகையைக் கண்டு பிடிப்பதைப் பற்றி நிறையக் கதைத்தோம். வியந்தோம். அப்போது தமிழ்வாணன் எங்கள் வீட்டில் பிரியமாகப் பேசப்படும் ஒருவராக இருந்தார். கல்கண்டில் வரும் துணுக்குச் செய்திகளைக் கூட நாங்கள் விட்டு வைப்பதில்லை. நாங்கள் மட்டுமென்ன அம்மாவும் கல்கண்டுக்காய் காத்திருப்பா.

அப்பாச்சி வீட்டுக்குப் போனால், அங்கே எனது சித்தப்பாமாரின் கேத்திரகணிதம், தூயகணிதப் புத்தகங்களுக்கிடையே பொம்மை அம்புலிமாமா.. போன்ற புத்தகங்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். எனக்கு அம்புலிமாமாக் கதைகளில் அவ்வளவான ஈடுபாடு இல்லாவிட்டாலும் "தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான்" என்ற சித்தப்பாவின் வாய்ப்பாட்டைக் கேட்டுக் கொண்டு அவைகளை வாசித்து முடித்து விடுவேன். குட்டிச்சித்தப்பா ஒரு எம்.ஜி.ஆர் பைத்தியம். வீடு முழுக்க அது முத்திரை குத்தப் பட்டிருக்கும். ஆனாலும் சினிமாப் படங்களைப் பார்த்த அளவுக்கு சினிமாச்செய்திகளை வாசிப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. பொம்மையில் உள்ள படங்களைப் பார்த்து விட்டு, ஏதாவது சினிமாப்பாடல்கள் இருந்தால் அவைகளையும் மனப்பாடம் செய்து விடுவேன். மேற்கொண்டு சினிமா சம்பந்தமாக நான் வாசிப்பதில்லை.

இதை விட எங்கள் வீட்டிலும் சரி, அப்பாச்சி வீட்டிலும் சரி ரொபின்சன் குரூசோ சிந்துபாத்.. போன்ற ஆங்கிலக் கதைப்புத்தகங்கள் நிறைய இருக்கும்.

சுந்தரியும் ஏழு சித்திரக்குள்ளர்களும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மாயவிளக்கு, சிந்திரில்லா... போன்ற கதைப்புத்தகங்கள் முதலில் ஆங்கிலத்திலேயே கிடைத்தன. பின்னர் அவை பாடசாலையிலும் தமிழில் சொல்லப் பட்டன.

பஞ்சதந்திரக்கதைகள் பெரிய புத்தகமாக வீட்டில் இருந்தது. அக்கதைகளை நான் வாசிக்க முன்னரே அப்பா ஒரு புறமும், அம்மா இன்னொரு புறமுமாகச் சொல்லி விட்டார்கள். ஆனாலும் மீண்டும் அவைகளை வாசித்தேன்.

ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் திருக்குறள் மனனப்போட்டி, எழுத்துப் போட்டி இரணடிலுமே பரிசில்களைப் பெற்றுக் கொள்ளுமளவுக்கு திருக்குறளை முழுமையாக மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.

மகாபாரதம், இராமாயணம் இரண்டையுமே எனது அப்பாவிடம்தான் வாசித்தேன். அவ்வப்போது துண்டுதுண்டுகளாக எங்காவது தட்டுப் பட்டவைகளை புத்தகம் வழியே வாசித்திருந்தாலும், முழுமையாக அக்கதைகளை அப்பாதான் கொஞ்சங் கொஞ்சமாகச் சொல்லி முடித்தார். கூடவே ஊரில் நடைபெறும் சப்பறத் திருவிழாவிலோ, அல்லது சிவராத்திரி இரவுகளிலோ நடைபெறும் கதாகலாட்சேபம், வில்லுப்பாட்டு போன்றவைகளுக்கு என்னையும் எனது சகோதரர்களையும் அழைத்துச் சென்று மகாபாரத, இராமாயணக் கதைகளை மனதில் பதிய வைத்தார். அப்பா எப்போதுமே இராவணன் பக்கம்தான்.

இது ஒரு புறம் தன்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறத்தில் பாடசாலை வாழ்க்கையோடு கதைப்புத்தகங்களும் உலாவின. பாடசாலையில் கதைப் புத்தகங்கள் வாசிப்பதற்கு ஆசிரியர்களின் அனுமதி என்பது இருந்ததில்லை. அளவுக்கதிகமான எந்தக் கட்டுப்பாடுகளும் யாரையும் கட்டிப் போடுவதில்லைத்தானே! எல்லா மாணவர்களையும் போலவே நானும் களவாகக் கதைப்புத்தகங்களைத் தாராளமாக வாசித்தேன்.

பண்டமாற்றுப் போல மாணவிகள் மாற்றி மாற்றிப் படித்த புத்தகங்களில் அதிகப் படியான எண்ணிக்கைக்குரியவை இந்தியாவிலிருந்து வரும் இந்திய எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட ராணிமுத்து வெளியீடுகளும் எமது தாய்மண்ணில் வெளியாகும் தாயக எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட வீரகேசரி மித்ரன், வெளியீடுகளுமே. இந்த வெளியீடுகளினூடு நான் வாசித்துத் தள்ளி விட்டவை ஏராளம். இப்படி ஒரு பிரசுரமாகத்தான் செங்கைஆழியானின் வாடைக்காற்றும் என் கைக்கு வந்தது.

- தொடரும் -

சந்திரவதனா
13.6.2005

Friday, June 10, 2005

புத்தகங்களோடு பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன்


புத்தகங்கள், வாசிப்பு... என்னும் போது என் முன்னே முதலில் வந்து நிற்பது எனது அப்பாதான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து புத்தகங்கள் இல்லாமல் எனது அப்பா பயணத்தால் வந்ததில்லை. சொக்கிளேட்ஸ்... தேங்காய்ப்பூரான்... என்பதிலிருந்து அவர் கடமையிலிருக்கும் நகரத்தில் என்னென்ன பழங்கள் மலிவோ அத்தனையையும் கட்டிக் காவிக்கொண்டு வரும் அப்பாவின் சூட்கேசுக்குள் கண்டிப்பாக சில புத்தகங்களும் இருக்கும். அவைகளில் எமது வயதுக்கேற்ப சிறிய, பெரிய புத்தகங்களும் அம்மாவுக்கேற்ப புத்தகங்களும் இருக்கும்.

கடனே என்று வேண்டிக் கொண்டு வருவதோடு நின்று விடாமல் மடியில் இருத்தி வைத்து அப்புத்தகங்களில் உள்ளவைகளை வாசித்து கூடவே அபிநயித்து அவர் சொல்லும் அழகே தனி. சின்னவயதில் அப்படி நான் கேட்ட ஒவ்வொரு கதையும் இன்னும் என்னுள் பதிந்து போயிருக்கின்றன.

நளன்தமயந்தி கதையை அப்பா வாசித்துச் சொல்லும் போது நளனின் சமையற்பாகத்தையும், தமயந்தியின் அழகையும் மிகவும் வர்ணித்துச் சொன்னார். அதை நான் ரசித்து எனக்குள் பதித்து வைத்திருந்தேன். பின்னர் ஒரு முறை ரவிவர்மா தமயந்தியையும், நளனையும் ஓவியமாக வரைந்திருந்ததைப் பார்த்த போது எனக்குள் பதிந்திருந்த அந்த அழகு, அவர் வரைந்த தமயந்தியில் இல்லாததால் ரவிவர்மாவுக்கு ஓவியம் வரையத் தெரியாதோ என்று யோசித்தேன்.

இதே போல இரணியன், பரதன்... போன்ற சரித்திரக்கதைகள் எல்லாமே எனது சின்ன வயதிலேயே எனது அப்பாவால் வாசித்துக் காட்டப்பட்டு என்னுள் பதிந்து போயிருப்பவை.

அப்பா வரும் போது மட்டுந்தான் எமக்கு புத்தகங்களும் பத்திரிகைகளும் கொண்டு வருவாரென்றில்லை. அவர் இலங்கையின் எந்த மூலையில் இருந்தாலும் கிழமையில் ஒரு நாளைக்கு அஞ்சலில் ஒரு கட்டுப் பத்திரிகையை எமக்கு அனுப்பி வைப்பார். அவைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பிரத்தியேகமாக வெளிவருகின்ற சிந்தாமணி, ராதா.. வில் தொடங்கி Sunday Observer வரை இருக்கும்.

அப்பாவுக்கு மட்டுந்தான் வாசிப்பு ஆர்வம் என்றிருந்திருந்தால் எப்படியிருந்திருக்குமோ தெரியாது. எனது அம்மாவும் அதேதான். அம்மாவுக்கு வீட்டில் நிறைய வேலையிருக்கும். ஆனாலும் அப்பா அனுப்பும்.., கொண்டு வரும் எல்லாப் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் வாசித்து முடித்து விடுவா. அதை விட ஆனந்தவிகடன், குமுதம், கல்கி.. போன்ற எல்லா சஞ்சிகைகளையும் வாரம் தவறாமல் வாங்கி வாசிப்பா. அவவின் பெயர் போட்ட படியே ரவுண் கடையொன்றில்(பெயர் ஞாபகமில்லை) இந்தப் புத்தகங்கள் காத்திருக்கும். சித்தப்பா யாராவது போய் வாங்கிக் கொண்டு வருவார்கள். வாசித்தவைகளை எறிந்து விடாமல் கவனமாக வைத்து... கதைகளை, கட்டுரைகளை என்று கிழித்து, சேர்த்து, கட்டி.. புத்தகங்களாக்கி விடுவா.

எங்கள் ஊரில் எங்கள் வீடும் வாசிகசாலை போலத்தான். பலர் வந்து இரவல் வாங்கிப் போய் வாசித்து விட்டுக் கொணர்ந்து தருவார்கள். அம்மாவுக்குத் தாராள மனசு. யார் கேட்டாலும் மறுப்பதில்லை. இரவல் கொடுத்து விடுவா.

இப்படியே நான் புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகளுக்கு நடுவிலேயே பிறந்தேன். வளர்ந்தேன். வாழ்ந்தேன்.

ஊரில் எனது வீட்டில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.
அவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நான் வாசித்த புத்தகங்கள்

கல்கியின்
அலையோசை
பார்த்திபன் கனவு
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
கள்வனின் காதலி
மகுடபதி
தியாகபூமி

சாண்டில்யனின்
மலைவாசல்
ஜவனராணி
கடற்புறா
ஜீவபூமி
ஜலதீபம்
ராஜமுத்திரை

அகிலனின்
சித்திரப்பாவை
பாவைவிளக்கு
வேங்கையின் மைந்தன்

தி.ஜானகிராமனின்
மோகமுள்

டாக்டர்.மு.வரதராஜனின்
அகல் விளக்கு

லக்சுமியின்
மிதுலா விலாஸ்
காஞ்சனையின் கனவு
பெண்மனம்
அடுத்த வீடு
அரக்கு மாளிகை
இலட்சியவாதி
சூரியகாந்தம்

சிவசங்கரியின்
பாலங்கள்
47நாட்கள்

பாரதியாரின் கவிதைகள்
பாரதிதாசனின் கவிதைகள்


இன்னும்
முள்ளும் மலரும்(கதை தந்த பாதிப்பு படமாக வந்த போது இருக்கவில்லை.)
குறிஞ்சி மலர்
கயல்விழி

- தொடரும் -

எனக்குப் பிடித்த பல கதைகள் இன்னும் என் மனசுக்குள் உள்ளன. ஆனால் கதையின் தலைப்பு மட்டும் ஞாபகத்தில் இல்லை. சுரேஸ்கண்ணன் இது தம்பட்டம் அடிக்கும் வேலை என்பது போலச் சொன்னார். என்னை பாலாவும் ஜெயந்தியும் அழைத்த போது நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக சந்தோசப் பட்டேன். இவைகளையெல்லாம் பட்டியலிட வேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஆசை. சில ஆசைகள், இப்படியே மனசோடு நின்று விடுகின்றன. செயற்படுத்தப் படுவதில்லை. இந்தப் புத்தகச் சங்கிலி விளையாட்டு எனது ஆசையை செயலாக்க எனக்கு ஒரு உந்துதலாகவே அமைந்துள்ளது. அதனால் மீண்டும் ஒரு முறை ஜெயந்திக்கும் பாலாவுக்கும் நன்றி கூறிக் கொண்டு தொடர்கிறேன்.

ஊரிலே புத்தககங்களோடே வாழ்ந்த நான் ஜேர்மனிக்கு வந்த பின் பத்து வருடங்களாக புத்தகம் என்பதே கிடைக்காது பெரிதும் தவித்தேன். அப்போது எரிமலை, ஈழநாடு பத்திரிகைகள் மட்டுமே இங்கு புலத்தில் கிடைத்தன. இந்தியாவிலிருந்து ஆனந்தவிகடனையும், பிள்ளைகளுக்காக அம்புலிமாமா, chandamama மூன்றையும் சந்தா கட்டி எடுத்துப் படித்தோம். தற்போது என்னிடமுள்ள புத்தகங்கள் 300க்குள்தான் இருக்கும். அவைகளிலும் தமிழ்புத்தகங்கள் மிகச் சொற்பமே. மற்றவை ஜேர்மனிய, ஆங்கிலப் புத்தகங்களே.

தொடரும்.

Thursday, June 09, 2005

புத்தக விளையாட்டு


ஜெயந்தியும் பாலாவும் என்னையும் புத்தக விளையாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். நன்றி ஜெயந்தி. நன்றி பாலா.

இன்று எழுத முடியும் போலத் தெரியவில்லை. நேரம் பிரச்சனையாயிருக்கிறது. தங்கமணி போல அழகாக எழுத முடியாவிட்டாலும் எனக்குப் பிடித்த புத்தகங்களையாவது நாளை வந்து எழுதுகிறேன்.

அது வரைக்கும் சிறிதாய்...

ஏமாற்றம்
ஒவ்வொரு பக்கமாகத்தானே
புரட்டிப் புரட்டி உன்னைப் படித்தேன்
எப்படி மறைத்தாய்
உனது அந்தப் பக்கங்களை...?

Monday, June 06, 2005

காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததா - 2


அப்பா மட்டும் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக விறாந்தையில் நடந்த படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் புறுபுறுப்பில் நியாயமிருந்தது. எனது எதிர்பர்ர்ப்பு மாமாவின் பிள்ளைகளுடனான சந்திப்பும் அதன் பின் தொடரப் போகும் பம்பலைப் பற்றியுமென்றால், அப்பாவின் கோபமோ தான் சொல்லச் சொல்லக் கேளாமல், தன் தங்கையைக் கொழும்புக்குக் கூட்டிப் போன மாமாவின் மேல் இருந்தது.

"எத்தினை தரம் சொன்னனான். கொழும்பு வாழ்க்கை வேண்டாம். நீ போய் வேலையைச் செய்திட்டு லீவுக்கு வா. தங்கச்சியும் பிள்ளையளும் இங்கை இருக்கட்டும் எண்டு. கேட்டவனே?! 58 இலை வேண்டின அடி அவனுக்குக் காணாது. இப்ப என்ரை தங்கச்சியையும் அவதிப்பட வைச்சிட்டான்." இன்று முழுக்க அப்பாவின் புறுபுறுப்பு இப்படித்தான் தொடர்கிறது.

அம்மாவுக்குக் கூட ஆத்தியடிச் சனம் எல்லாம் கொழும்பில் ஒரு வீடு, இங்கை ஆத்தியடியில் ஒரு வீடு என்று வைத்துக் கொண்டு, கொழும்பில் போய் இருந்து பிள்ளைகளை கொழும்புப் பாடசாலைகளில் படிக்க வைப்பதைப் பார்த்து நாங்களும் அப்பிடிச் செய்தாலென்ன என்ற நப்பாசை இடைக்கிடை வரும். அப்பாவோ "இஞ்சை பாரும் உந்த ஆசையை மட்டும் விட்டுத் தள்ளும். எங்கடை இடம் இதுதான். கொழும்பிலை இருக்கிற ஆக்கள் பாரும், ஒரு நாளைக்கு நல்லா வேண்டிக் கட்டிக் கொண்டு ஓடி வருவினம்." என்று ஒரேயடியாச் சொல்லிவிடுவார். தான் கொழும்பில் வேலையாய் இருக்கும் காலங்களிலும் பாடசாலை விடுமுறைக்கு மட்டும் எங்களை அங்கு கூட்டிப் போவாரே தவிர எந்தக் கட்டத்திலும் எங்களை அங்கு நிரந்தரமாக இருக்க விடமாட்டார்.

இப்படியிருக்கையில் தான் யாழ்ப்பாண அரச மருத்துவமனையில் கடமையிலிருந்த மாமாவுக்கு 1971 இல் தெகிவளை மருத்துவமனைக்கு மாற்றலாகியது. மாமா தனியப் போக விரும்பாது மாமி பிள்ளைகளையும் தன்னோடு அழைத்துப் போய் விடத் தீர்மானித்த போதுதான் அப்பா எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார். மாமா கேட்க வில்லை. வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு தெகிவளைக்கு மாமி பிள்ளைகளுடன் போய் விட்டார்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அல்லும் பகலும் பழகி வளர்ந்த மச்சாள் சுகி, மச்சான் பாபு எல்லோரும் போய் விட்டதில் எனக்கும் கவலைதான். அவர்கள் இன்று வரப்போகிறார்கள். சும்மா இல்லை. அடி வேண்டிக் கொண்டு வருகிறார்கள். சிங்களக் காடையர்கள், இவர்களை அடித்தது மட்டுமில்லாமல் வீட்டிலும் எல்லாவற்றையும் உடைத்துத் தள்ளிப் போட்டார்களாம். எழுபத்தி ஏழுக் கலவரம் தெரியும்தானே! அவதிப் பட்டு, அவலப் பட்டு எங்கேயோ ஒழித்து இருந்து தப்பிப் பிழைத்து வருகிறார்கள்.

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. பல தடவைகள் மதிலால் எட்டிப் பார்த்து விட்டேன். ஆத்தியடிச் சந்தியில் யாராவது பயணத்தால் வருவது தெரிகிறதா என்று.

கடைசியாக அவர்கள் ஒரு பாடசாலை லீவுக்கு வந்து போய் ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. அவர்கள் நின்ற அந்த ஒரு மாதமும் நல்ல பம்பல். விளையாட்டு, சிரிப்பு, கேலி, பந்தயம் என்று ஒரே கும்மாளம். அவர்கள் போறதுக்கு முதல் நாள் அவர்களுக்குக் கொடுத்து விட என்று அம்மா குசினிக்குள் பலகாரங்கள் செய்து கொண்டிருந்தா. அம்மம்மாவும் மாமியும், அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்க அப்பாவும், மாமாவும் கூட இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

பெரியவர்கள் குசினிக்குள் கலகலக்க, நாங்கள் பிள்ளைகள் வீட்டின் முன் பக்கம் மல்லிகைப் பந்தலின் கீழிருந்து விளையாடிக் கொண்டிருந்தோம். எங்கள் விளையாட்டுக்கள் லூடோ, கரம் என்று துவங்கி அது அலுக்க கெந்திப் பிடித்து விளையாடி, அதுவும் களைக்க ஆளாளாக படிகளிலும் விறாந்தை நுனிகளிலுமாகக் குந்தி விட்டோம். வேர்த்து ஊத்தி சட்டைகள் தெப்பமாக நனைந்திருக்க ஆளாளுக்கு ஏதேதோவெல்லாம் கதைத்தோம். எங்கள் கதைகள் எங்கெல்லாமோ சுற்றி கடைசியில் கடவுள் நம்பிக்கை பற்றிய கதையில் வந்து நின்றது. கடவுள் இருக்கிறார் என்றும், இல்லை என்றும் பல விதமாக வாதம் பண்ணினோம்.

மாமாவின் மகன் பாபு அடிச்சு வைச்சுச் சொல்லி விட்டான். "கடவுளும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நான் உதுகளை ஒரு நாளும் நம்பவே மாட்டன்." என்று.

என்னுடைய தம்பி பாலுவால் அவனுடைய நாஸ்திகத் தனத்தை ஆமோதிக்க முடியவில்லை. "என்ன நீ இப்பிடிச் சொல்லுறாய். எங்கடை ஆத்தியடிப் பிள்ளையாரிலை கூட உனக்கு நம்பிக்கையில்லையோ?!" ஆச்சரியமாகக் கேட்டான்.

பாபு "இல்லை" என்று திடமாகப் பதிலளித்தான்.

"உனக்கு உள்ளுக்கை நம்பிக்கை இருக்கு . வெளீலை சும்மா லெவலுக்கு கடவுள் இல்லை எண்டுறாய்." என்று மறுதலித்தான் பாலு.

"எனக்கு நம்பிக்கை இல்லையெண்டுறன். கடவுளே இல்லாத போது ஏன் நான் நம்போணும்?." பாபு அறுத்துறுத்துச் சொன்னான்.

இப்படியே பாலுவுக்கும், பாபுவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டு பந்தயம் வரை வந்து விட்டது. பாபு தனக்கு கடவுளில் நம்பிக்கை இல்லை என்பதை நிரூபிக்க, ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலுக்குப் போய் பிள்ளையாரின் மேல் துப்பிவிட்டு வருவதாகத் தீர்மானிக்கப் பட்டு, எங்கள் சம்பாஷணை இடை நிறுத்தப்பட்டுது.

அவர்கள் பிள்ளையார் கோவில் வரை போக ஆயத்தமானார்கள். எனக்கும் போக ஆசைதான். நான் வளர்ந்த பெண் பிள்ளை என்பதால் பாடசாலை தவிர்ந்த நேரத்தில் அம்மாவைக் கேளாது வெளியில் போகத் துணிவு வரவில்லை. எனது சின்னத் தம்பிமாரும், தங்கைமாரும் மட்டும் அவர்களுடன் சேர்ந்து போனார்கள். நான் கேற் வாசலில் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

எனது அரை மணி நேரக் காத்திருப்பின் பின் அவர்கள் திரும்பி வந்தார்கள். என்னுடைய முழு நம்பிக்கையும் பாபு சும்மா சொல்லியிருப்பான். ஆனால் கடைசி மட்டும் பிள்ளையாரின் மேல் துப்பியிருக்க மாட்டான் என்பதே.

அந்த நம்பிக்கையுடன் சிரித்த படி "என்ன பாலு...! பந்தயத்திலை பாபுப்பிள்ளை தோத்திட்டாரே?" கேட்டேன்.

"இல்லை நான் தான் தோத்திட்டன்." பாலுவின் குரலில் பந்தயக் காசு கொடுக்க வேண்டுமே என்ற கவலை தெரிந்தது.

"உண்மையா பிள்ளையாருக்கு மேலை துப்பினவனே?" நம்ப முடியாததால் சந்தேகத்துடன் மீண்டும் நான் கேட்டேன்.

"ம்..கும்.. கதவு பூட்டியிருந்தது. அதாலை பிள்ளையாருக்கு நேரே இருக்கிற தலை வாசல் கதவை காலாலை உதைஞ்சு போட்டு, பிறகு கதவிலை துப்பியும் போட்டு வந்தவன்." பாலு கொஞ்சம் அசாதாரணமாகத்தான் சொன்னான்.

"நான் நம்பமாட்டன். எந்தக் காலாலை உதைஞ்சவன்?" என்னிடம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற தீர்க்கமான எந்த முடிவும் இல்லையென்றாலும், கடவுள் இல்லையென்று சொல்லி எங்கள் ஊர் பிள்ளையாரை அவமதிக்க ஒரு போதும் சம்மதமில்லை. அதனால்தானோ என்னவோ என் குரலும் அசாதாராணமாகவே ஒலித்தது.

பாபு வலது காலைத்தூக்கி எங்கள் மதிலை உதைந்து காட்டி, "இப்பிடித்தான் இந்தக் காலாலைதான் உதைஞ்சனான் மச்சாள்." என்றான்.

எனக்கு நம்ப முடியவில்லை. தம்பி பாலு பந்தயக்காசு கொடுக்க வேண்டுமென்று அம்மாவிடம் ஒரு ரூபாவுக்குக் கெஞ்சிய போது கூட இரண்டு பேரும் நடிக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன்.

"உண்மையா உதைஞ்சவன் அக்கா." தம்பி என்ரை கையில் அடித்து சத்தியம் பண்ணிய போது தான் நம்பினேன். அதற்குப் பிறகு அன்றைய பொழுது எனக்கு என்னவோ போலவே இருந்தது.

அடுத்த நாள் மாமா குடும்பம் பயணமாகி விட்டது. வழமை போல் அவர்கள் பயணமான அன்றைய நாள், எங்கள் வீடு வெறிச்சோடிப் போனது போல் அமைதியாக இருந்தது. அடுத்த நாள் மீண்டும் நானும் தம்பியும் தனியாக கரம், அது, இது... என்று விளையாடத் தொடங்கி விட்டோம். ஆனால் பாபு செய்த வேலையை மட்டும் மறக்காமல் அடிக்கடி நினைத்தோம் அவன் அப்பிடிச் செய்திருக்கக் கூடாது என்று பலமுறை கதைத்தோம்.

இன்றும் அந்த நினைவு என் மனத்திரையில் பல முறை முகம் காட்டி விட்டது. பாபுவின் பிடிவாதமான முகத்தை நினைத்த படியே மீண்டும் மதிலால் எட்டிப் பார்த்தேன்.

"வாவ்...!" மக்கள் வெள்ளம். எனக்குள் சந்தோஷம் மின்னலிட்டது. அப்பாவின் முகத்திலும் சந்தோஷம். ஆனால் அது ஒரு இனம்புரியாத கோபமும் சோகமும் கலந்த சந்தோஷம்.

நான் ஓடிப்போய் கேற்றைத் திறந்து, மனித வெள்ளத்தை முழுமையாகப் பார்த்தேன். எல்லோர் முகங்களிலும் களைப்பு. நடைகளில் தளர்வு. எல்லோரும் எமது ஊர்க்காரர்கள்தான். அப்பா விழுந்து விழுந்து எல்லோரையும் விசாரித்தார்.

"அநுராதபுரம் மாதிரி கொழும்பிலை அடி விழேல்லைத் தம்பி. சில சில இடங்களிலைதான் சிங்களக் காடையங்கள் இருக்கிறாங்களே. அவங்கள் தங்கடை வேலையைக் காட்டிப் போட்டாங்கள். எனக்குத்தான் காங்கேசன் துறையிலை வந்து இறங்கு மட்டும் ஒரே சத்தி. எனக்கு இந்தக் கப்பல் பயணம் ஒத்து வராது தம்பி." சுந்தரிப்பாட்டி இழுத்து இழுத்து சொல்லிக் கொண்டு போனா.

"அப்ப தங்கச்சியவையளும் உங்கடை கப்பலிலேயே வந்தவை?"
அப்பா அவசரமாய் கேட்டார்.

"ஓமடா தம்பி. அங்கை பின்னுக்குப் பார். வந்து கொண்டிருப்பினம்."
சுந்தரிப்பாட்டி சொல்லி வாய் மூடவில்லை. தூரத்தில் வரும் மாமா என் கண்களுக்குள் அகப்பட்டு விட்டார். பக்கத்தில் கொஞ்சம் பின்னால் மாமி மிக மெதுவாக நடந்து கொண்டு வந்தா.

அது யார் நொண்டியபடி, காலை இழுத்து இழுத்து...? வடிவாகப் பார்த்தேன்.
அட அது பாபு. ஏன் இவன் நொண்டுறான்? ஏதும் விழுந்து கிழுந்து போட்டானோ? நான் யோசித்துக் கொண்டிருக்க, அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.

அப்பா நிம்மதிப் பெருமூச்சோடு அவர்களை உள்ளே அழைத்தபடி "இவன் பாபு ஏன் கிழவங்கள் மாதிரி காலை இழுத்திழுத்து நடக்கிறான். என்ன நடந்தது இவனுக்கு?" மாமியைக் கேட்டார்.

"அதையேன் அண்ணை கேக்கிறிங்கள்? பள்ளிக்கூடத்திலை புற்போல்(Football) விளையாடக்கை முழங்காலுக்கை முறிஞ்சு போட்டுதாம். உடனையே பிரின்சிப்பல்(Principle) ரெலிபோன் பண்ணிக் கூப்பிட்டவர். இவர் போய் ரக்ஸி(Taxi) பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவர். எல்லாம் உடனையே கவனிச்சு ஒப்பிரேசன் எல்லாம் செய்தும் போட்டாங்கள். பிறகுதான் கண்டு பிடிச்சாங்கள். எலும்பு சரியாப் பொருந்தேல்லையெண்டு. திருப்ப ஒப்பிரேசன் செய்யிறதுக்கெண்டு நாளெல்லாம் குறிச்சிருக்கக்கைதான் இந்தப் பிரச்சனையெல்லாம் வந்திட்டுது. டொக்டேர்ஸ்(Doctors) எல்லாரும் ஸ்றைக்(strike) பண்ணீட்டினம். ஒண்டும் செய்யேலாமல் போட்டுது. எல்லாரும் இவற்றை ப்ரெண்ட்ஸ்(Friends) தான். இவருக்காண்டியாவது வந்து செய்யிறம் எண்டு சிலர் சொன்னவைதான். ஆனால் ஸ்றைக்(Strike) எண்ட படியால் ஆஸ்பத்திரியிலை ஒப்பரேசன் செய்யக் கூடிய நிலைமையளும் இருக்கேல்லை. இதைப் பாத்துக் கொண்டு நிண்டு உயிரையே குடுக்க வேண்டி வந்திடும் எண்டு வெளிக்கிட்டிட்டம். அவனுக்குத்தான் எங்களிலை கோவம். நிண்டு ஒப்பிரேசனை முடிச்சிட்டு வெளிக்கிட்டிருக்கலாம் எண்டு வழியெல்லாம் ஒரே புறுபுறுப்பு."

மாமி சொல்லி முடித்ததும், "அப்ப இனி என்ன நடக்கும்?" அப்பா அக்கறையுடன் வினவினார்.

"என்ன... எலும்பை பொருத்திறதெண்டு சொல்லி ஒரு எலும்புக்கு மேலை ஒரு எலும்பை வைச்சு தங்கடை வேலையை முடிச்சிட்டாங்கள். இப்ப எனக்கு இந்த வலது கால் இடது காலை விட நீளத்திலை ஒரு இஞ்சி குறைஞ்சிட்டுது. ஒப்பரேசன் செய்யிறதெண்டால் உடனையே செய்யோணுமாம். நாள் போனால் ஒண்டுமே செய்யேலாதாம். அம்மாக்கும் அப்பாக்கும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தன். கேட்கேல்லை. என்னை இங்கை இழுத்துக் கொண்டு வந்திட்டினம். இனி என்ன? இப்பிடியே வாழ்நாள் பூரா கிழவன்கள் மாதிரி நான் காலை இழுத்து இழுத்து நடக்க வேண்டியதுதான்.
கப்பலுக்குள்ளை கூட சாப்பாடு குடுத்த ஆக்கள் என்னைப் பின் பக்கமாப் பார்த்திட்டு, ஒரு சின்னப் பெடியனைக் கூப்பிட்டு, "அந்தக் கிழவனுக்கு இந்தப் பாணைக்குடு" எண்டு சொன்னாங்கள். "நானொண்டும் கிழவனில்லை. எனக்கு இப்பதான் பதின்னாலு வயசு எண்டு கத்தோணும் போலை இருந்திச்சு." பாபு மிகவும் சலிப்பும் வேதனையும் இழைந்தோடச் சொன்னான். எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

பாலு என்ன நினைத்தானோ, விரைந்து பாபுவின் அருகில் சென்று "நீ பிள்ளையாருக்கு உதைஞ்சதுக்குப் பாத்தியோ கிடைச்சிட்டு." என்றான்.

"காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை சொல்லாதை." பாபு, அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்பதை வலியுறுத்தினான்.

நான் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் பாபு இன்று வரை வலது காலை விட ஒரு இஞ்சி நீண்ட இடது காலை மெதுவாக இழுத்து இழுத்துத்தான் நடக்கிறான்?

அது எதனால்? எனக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.

சந்திரவதனா
யேர்மனி


பிரசுரம் - பூவரசு (செப்டெம்பர்-ஒக்டோபர்-2002)

Thursday, June 02, 2005

அடித்து நொருக்கப் படும் பெண்களின் வாழ்க்கை.


கலாசாரம் பண்பாடு சம்பிரதாயம் சாமிக்குற்றம் என்ற போர்வைக்குள்தான் எத்தனை வக்கிரங்கள் ஒழிந்து கிடக்கின்றன. தற்போது ஓரிரு நாட்களுக்கு முன்புதான் பத்மா அர்விந்தின் பதிவில் இறந்து போன கணவனை சொர்க்கத்துக்கு அனுப்ப ஆபிரிக்காவில் நடக்கும் ஒரு சீரழிவை வாசித்தேன். அதை வாசித்த போது இப்படியும் நடக்குமா என்றிருந்தது.

இன்று குமுதத்தை வாசித்தேன். அங்கு இன்னொரு கொடுமை. நம்ப முடியவில்லை. இப்படியும் மூடத்தனம் தலைவிரித்தாடுமா? அந்தத் தாத்தாவுக்கு மனசாட்சியே இல்லையா?


பெண்ணின் கண்களுக்குள் உள்ள சோகத்தைப் பாருங்கள்

மம்மானியூர் _ திண்டுக்கல்லிருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அடியில் ஒளிந்து கிடக்கிற ஊர். வடமதுரையில் இறங்கி ஆட்டோவுக்குக் கெஞ்சினால் சொத்தையே விற்றுக் கொடுக்கிற தொகை கேட்கிறார்கள். நமக்கு அங்கே போகவேண்டிய தேவையிருக்கிறது. நிறைய மரங்கள். அங்கங்கே செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டு சிறுமியர்கள். ஏதாவது உடம்புக்குக் கேடு என்றால் நெருங்க முடியாத மருத்துவ வசதி. அங்கொன்றும், இங்கொன்றுமாக தலைக்கட்டு வீடுகள். நெருஞ்சி முள்ளால் நிரம்பிக் கிடக்கிறது வழி. மண் ரோடு வெறிச்சோடி கிடக்கிறது. கொஞ்சம் நில்லுங்கள்.... இந்தக் கிராமத்தை இத்தனை விளக்கமாக வர்ணித்துப் போவது எதற்கு என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. கண்ணீர்க் கதைகள் நிறையவே இருக்கிறது.

மம்மானியூர் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிரம்பியிருக்கிறது. பெண்டுபிள்ளைகளும், ஆண்களும் இவ்வளவு தூரம் நடந்து திண்டுக்கல்லுக்கு வந்தால் ஒரு வாய்த் தண்ணீரை வாயில் வைக்காமல் ஊருக்குத் திரும்புகிறார்கள். கம்பு, சோளம், இரும்புசோளம், திணை, கேப்பை பயிரிடுவது மட்டும்தான் வாழ்க்கை. இப்போது தான் ஒரு வருஷத்துக்கு முன்னால் மின்சாரம் எட்டிப்பார்த்திருக்கிறது. ஊருக்கு ஒளியூட்டப்பட்டாலும், அங்கேயிருக்கிற பெண்களின் வாழ்க்கை இருண்டு கிடக்கிறது.
கல்யாணத்திற்குப் பரிசம் போட்டால் 7ரு ரூபாய். மணவாழ்க்கை முறிவுக்கு 7ரு ரூபாய் என்று பெண்களின் வாழ்க்கை அடித்து நொறுக்கப்பட்டு இருக்கிறது. மம்மானியூரில் ஆண்களுக்கு சர்வசாதாரணமாக நாலைந்து மனைவிகள். அறுபது, எழுபது வயது ஆண்களை இருபது வயதுப்பெண்கள் திருமணம் செய்து கொள்வது சுலபம். ஐந்து கிலோ மீட்டர் தாண்டி டீ குடிக்கப் போயிருக்கிற எண்பது வயது புருஷனுக்காகக் காத்திருக்கிறாள் பழனியம்மாள். அவருக்கு இருபது வயதிற்கு மேலிருக்காது. ஏன் இந்த வாழ்க்கை? என்று கேட்டால், கண்ணீர் உடனே ‘குபுக்’கென்று எட்டிப்பார்க்கிறது. சம்மணம் போட்டு உட்கார்ந்து வெறித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார்.

‘‘எங்க தாய்மாமனுக்குத்தான் என்னைக் கல்யாணம் கட்டிக்கொடுத்தாங்க. ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. ரெண்டு வருஷம் போச்சு இது மாதிரி. அப்பத்தான் இந்தப் பையன் பிறந்தான். பிறக்கும் போதே ஒரு காலு வளைஞ்சுயிருந்துச்சு. ஆனால் இதிலேயே நடந்தான். ஓடினான். கவலைப்படலை. ஆனால், என் மாமன்தான் தலைவலின்னு சொல்லி படுத்தாங்க. ரெண்டு நாள் அப்படியரு காய்ச்சல். மூணாம்நாள் ‘பொட்டு’னு போயிட்டாங்க. அடக்கம் பண்ணிட்டு பத்துநாள்தான் ஆச்சு. அப்படியே மாமன் நினைவு மனசுக்குள்ளே இருந்த நேரம். ஒரு மாதம் கழிச்சு, உங்க தாத்தாவுக்கு ஆரு ஆதரவு இருக்குன்னு என்னையே அவருக்குக் கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க. அவருக்கு எண்பது வயது ஆகுது. என் பிள்ளையை நல்லா கவனிச்சுக்கும் தாத்தா. என்னைய கல்யாணம் பண்ணிக்க நான் நீன்னு போட்டி போட்டு வந்தாங்க. ஆனால் என் தாத்தாதான் அதில ஜெயிச்சு வம்படியாக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு’ சுத்துப்பட்டு கிராமத்துல முழுக்க இது நடக்குது. நான்தான் வெளியே பேசுறேன். இதுமாதிரி கஷ்டங்களை முழுங்கிக்கிட்டுத்தான் இங்கே கிடக்கிறோம். வேறே என்ன இருக்கு. இந்தக் குழந்தை முகத்தைப் பாத்திட்டு உட்கார்ந்து இருக்கிறேன். இது முளைச்சு வந்து எத்தனை கல்யாணம் பண்ணிக்கப் போகுதோ’’ என்று மகனை காட்டிப் பேசுகிறார் பழனியம்மாள்.

பழனியம்மாளின் கணவர் ஆண்டியை கேட்டால், சிரிக்கிறார். ‘‘இவ என் பேத்திதான். மகனுக்குத்தான் கட்டி வைச்சேன். ஆனால் அவன் வாழ்க்கையும் சட்டுனு முடிஞ்சுப்போச்சு. எனக்கும் யாரும் இல்லை. அவளுக்குத்தான் குழந்தை இருக்கே. அந்தப்புள்ளையை வேறு எங்கேயும் கட்டிக்கொடுத்தால், என் பேரனை அவன் நல்லா வளர்ப்பானா? கடைசிகாலத்தில் நான் விழுந்து கிடந்தால் என்னைப் பார்த்துக்கறது யாரு?’’ என்று புது நியாயம் பேசுகிறார் ஆண்டி. மொரட்டு தாத்தாவை கண்கள் பனிக்கப் பார்க்கிறார் பழனியம்மாள். அவரின் மன ஆழங்களை அறியமுடியாமல் நம் மனது பாடுபடுகிறது.
‘இதை விடுங்க, அங்கே பாருங்க இன்னொரு ஜோடி’ என்று நம்மை கூட்டிப்போனவர் கைகாட்டிய திசையில் இருக்கிறார்கள் பிச்சையும், ஆண்டியம்மாவும். பிச்சைக்கு 70 வயது, ஆண்டியம்மா முப்பதைத் தொடுகிறார்.
‘‘இவர் ஏற்கெனவே ரெண்டு பொண்டாட்டி கட்டி பஞ்சாயத்தில் தீத்துவிட்டுவிட்டாரு. இப்ப நான்தான் அவருக்கு பொஞ்சாதி. நல்லாத்தான் வச்சுக்கிறாரு. என் பிள்ளைகளை நல்லா பார்த்துக்கிறாரு. அது போதும்னு தோணுது. பிள்ளைக முகத்தை பாத்திட்டு மீதிக்காலத்தை பொரட்டிப் போட வேண்டியதுதான்’’ என்கிறார் ஆண்டியம்மா.

‘வேறு ஆட்கள் இங்கே வந்து சம்பந்தம் பண்ண முடியாதுங்க. சாமி குத்தம் ஆயிடும். இந்த ஊருக்கு வசதி எதுவும் இல்லை. பொண்ணு கொடுக்க பக்கத்து ஊர்க்காரனே அஞ்சி நடுங்குவான். எங்க ஊர் பரவாயில்லை. பக்கத்திலே முத்தாரு இருக்கே, அங்கே போக தைரியம் இருந்தால் போய்ப்பாருங்க. ஏழெட்டு வயசுப்பொண்ணுங்க கழுத்தில கூட மஞ்சக்கயிறு கிடக்கும். வேண்டிய வசதிகளை பண்ணிக் கொடுத்திட்டுதான் இந்தப் பிரச்னையை கவனிக்கணும்’ என்கிறார் வனக்குழுத் தலைவி பொன்னம்மா.
இந்தக் கிராமத்து பெண்களின் துயரங்களை மீட்டெடுக்க நாம் நிறைய உழைப்பும், விலையும் கொடுக்க வேண்டியிருக்கும். கொடுப்போம். அந்தக் கண்ணீருக்கு விடை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.


_நா. கதிர்வேலன்
படங்கள்: சித்ராமணி
nantri-Kumutham

காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததா?


அவர் ஒரு பெரிய நாட்டாண்மை போலத்தான் நடந்து கொள்வார். பேச்சும் செயலும் தன்னை விட்ட ஆட்கள் இல்லையென்பது போலத் தொனிக்கும். வார்த்தைகளில் அதிகாரம் உதிர்க்கும். பணம் அவரிடம் கொட்டிக் கிடப்பதால் திமிர் அவர் நடையில் துள்ளும்.

அவர் வீட்டுக்குள் ஆடுகள் வந்து பூங்கன்றுகளில் வாய் வைத்து விட்டால் போதும். தனது உயிரைக் கிள்ள யாரோ வந்து விட்டது போலக் கோபப் படுவார். தகாத வார்த்தைகளால் அந்த வாய் பேசாப்பிராணிகளைத் திட்டிக் கொட்டுவார். எட்டிப் பிடிக்க முடிந்தால் பிடித்து அந்த ஆட்டுக் குட்டிகளின் ஒற்றைக்காலை முறித்து விடுவார். பெரிய ஆடுகள் என்றால் அதற்கென ஒரு கொட்டன் வைத்திருந்து, அதனால் அடித்து காலை முறித்து விடுவார்.

அவர் வீட்டுக் கேற் சரியாகப் பூட்டப் படாமல் இருக்கும் சமயங்களில் அவர் வீட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு ஆட்டின் காலும் முறிக்கப் படும் போது அந்த ஆடுகளும் குட்டிகளும் எழுப்பும் அவலக்குரல்கள் இன்னும் கூட என் ஞாபகத்துள் உறைந்து கிடக்கின்றன.

எங்கள் வீதியில் ஒரு சமயத்தில் நொண்டி நொண்டிச் செல்லும் ஆடுகளே அதிகமாகியிருந்தன. வசதி குறைந்தவர்கள் ஆடுகளை ஊர்களில் மேயவிட்டுத்தான் வளர்த்தார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை. இவர் கால்களை முறிக்கிறார் என்பதற்காக ஆடுகளை வீட்டில் வைத்துச் சாப்பாடு போட அவர்களால் முடியவில்லை. ஆனாலும் மனம் நொந்து சாபமிட்டார்கள். திட்டிக் கொட்டினார்கள். எல்லாம் தமக்குள்ளேயும் அவருக்குப் பின்னேயும்தான். நேரே நின்று "நீ செய்வது சரியா?" எனக் கேட்க யாருக்கும் துணிவு வரவில்லை.

கால ஓட்டத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்குக் கால் முறிந்து விட்டது. எந்த வைத்தியத்திலும் காலைப் பொருத்த முடியாமல் போய் விட்டது. பணம் எவ்வளவு செலவழித்தும் பலனளிக்கவில்லை. அவர் எழுந்து நடப்பதாயினும் மனைவியின் துணை தேவைப்பட்டது. திமிர்த்த நடை ஊன்றுகோலுக்குள் பதுங்கிப் போனது.

கால் இனிப் பொருந்தும் என்ற நம்பிக்கையும் விடுபட்ட போது அவர் முழுவதுமாகத் தொய்ந்து போய் விட்டார். நொண்டிய படி ஆடுகள் வந்து பயிர்களைத் தின்று தின்று போயின. கத்திக் கத்திக் கூப்பிட்டுத்தான் மனைவியிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டார். ஊன்று கோல் மட்டும் போதாமல் மனைவியிடம் அடிக்கடி மண்டியிட்டார். அதிகாரமும் ஆணவமும் அவரது நித்திய படுக்கையான மரக்கட்டிலுக்குள் முடங்கிப் போயின.

இப்போதும் எனக்குள்ளே எழும் கேள்வி. காகம் இருக்கப் பனம்பழம் வீழ்ந்ததா?
சந்திரவதனா
2.6.2005

Tuesday, May 31, 2005

ஜேர்மனியில் தேர்தல்


Chancellor Gerhard Schroeder & CDU Cheffin Angela Merkel


Wurth, Chancellor Gerhard Schroeder & CDU Cheffin Angela Merkel

Photos - Thumilan

அடுத்த வருடம் நடக்கப் போகும் ஜேர்மனிய Chancellorக்கான தேர்தல் இவ் வருடம் செப்டெம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.

Nordrhein westfalen இல் ஏற்பட்ட தோல்வியை அடுத்தே, ஜேர்மனிய Chancellor Gerhard Schroeder அவர்கள் அடுத்த தேர்தலுக்கான விருப்பைத் தெரிவித்துள்ளார்.

Sunday, May 29, 2005

திசைகள் மாலன் Bhasaவில்


திசைகள் மாலன் அவர்களின் நேர்காணல் ஒன்று Bhasaவில் வந்துள்ளது. ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள். முடிந்தவர்கள் யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் நன்றாயிருக்கும்.

Development of Indic Language Computing, through his association with INFITT and as Validator of MicroSoft Office-Tamil

Mr. Maalan V Narayanan is a journalist and writer of repute. The person behind Thisaigal – the first Unicode based Tamil e-zine, he has been actively involved in the development of Indic Language Computing, through his association with INFITT and as Validator of MS Office-Tamil. Currently, Editor–Sun News Channel, he shares his experiences and thoughts in a freewheeling interview on the development and future of Indic Language Computing... more

ஓரு பேப்பர் - 23


இந்தப் பேப்பரைப் பார்த்ததும் ஒருவர், "என்ன! நல்ல பேப்பராக் கிடக்கு. ஓசியோ? எனக்கும் ஒரு ஒருபேப்பர் அனுப்பச் சொல்லி அவையளுக்கு ஒருக்கால் சொல்லி விடுங்கோ என்றார். `எனக்கே ஓசி. பிறகு இதிலை சிபாரிசு வேறையோ?` என்ற கேள்வியை நானே என்னைப் பார்த்துக் கேட்டு விட்டு, "இஞ்சை வரக்கை வாசியுங்கோவன். அவைக்கு எல்லா இடமும் அனுப்ப போஸ்ட் செலவு கட்டு படியாகாது" என்று சொல்லி ஒரு மாதிரி ஆளைச் சமாளித்து அனுப்பி விட்டேன்.

பேப்பரை வாசித்து முடித்தாலும் அதைப் பத்திரமாச் சேர்த்து வைப்பேன். அதுக்கும் உலை வைப்பார் போலையிருக்கு.

ஓரு பேப்பர் - 21
ஒரு பேப்பர் - 20
ஒரு பேப்பர் - 19
ஒரு பேப்பர் - 8
ஒரு பேப்பர்

ஒரு பேப்பர் - 22


ஒரு பேப்பர் 23ம் வந்து விட்டது.

22ம் பேப்பரைப் பார்த்து எழுத நினைத்தும் எழுதாமல் விட்டவைகளில் முக்கியமானது -
ஒருபேப்பர், செல்வநாயகியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்துள்ள செய்தி. எது ஆன்மீகம்? என்ற செல்வநாயகியின் தொடர் கட்டுரை மரத்தடி.கொம்மில் இருந்து எடுக்கப் படுவது தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

நிற்க, வாசகர் பகுதியில் செல்வநாயகியின் கட்டுரையைப் பாராட்டி யாராவது ஒருவராவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.

மற்றும்,

புலத்தில் புகைப்படம் மட்டும் பார்த்து நடக்கும் திருமணங்களால் விலை போகும் பலரின் வாழ்க்கையைப் பார்த்து குழம்பியிருக்கிறார் எல்லாளன். இது குறித்து உங்களையும் யோசிக்கச் சொல்லியுள்ளார். `ஆயிரம் காலத்துப் பயிர்` என்று அந்த நாட்களில் சொன்னார்கள். இப்போ பயிரின் தரத்தையோ நிலத்தின் தன்மையையோ ஆராயாமல் நட்டால் போதுமென்றுதான் திருமணங்கள் நடக்கின்றன. யோசிக்க வேண்டிய விடயந்தான்.

கைவிசேசத்தையும் பக்கற்றிலே கொடுக்கீனமாம். அருணன் பெருமூச்சு விடுகிறார். செவ்வாய்கிரகத்துக்கு விடுமுறையைக் களிக்கச் சென்று வரும் காலம் வந்தாலும், இலங்கை இனப்பிரச்சனை தீராது, பேச்சுவார்த்தை என்று பேய்க்காட்டப் படும் என்பதை இவர் சொல்லும் விதம் நன்றாயிருக்கிறது.

ந.ஹேமராஜின் பெறுபேறுகள் சிறுகதையும் நல்ல கருவைக் கொண்டுள்ளது.

அறுவைப்பக்கத்தில் வழமை போல அல்வாசிட்டியின் றியாலிட்டி இடம் பிடித்திருக்கிறது. கூடவே சயந்தனின் பின்னப் பெயிலாகாம என்ன செய்ய! , வானம்பாடியின் புலம் பெயர் தமிழர் வாழ்க்கை, தமிழோசையின் அரசியல் ஒரு விளக்கம் என்பன இடம் பிடித்துள்ளன.

சினிமாப் பகுதியில் அருண் வைத்தியநாதனின் நுனிப்புல் மேய்தலும் தமிழ் சினிமா ரசனையும், மீனாவின், மும்பை எக்ஸ்பிரஸ் விமர்சனம் என்பன இடம் பிடித்துள்ளன.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite