Wednesday, November 22, 2006

அவல்

சன்னமாக மிதந்த மாமியின் குரல் ஓலமாக எழுந்த போதுதான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தேன். மாமி அப்படி அழுது நான் பார்த்ததில்லை. தூரத்துச் சொந்தமாக இருந்தாலும் மாமாவைத் திருமணம் செய்து கொண்டதால் மாமியாக எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டவள்.

மாமியின் சீதன வீட்டின் ஒரு பகுதியில் அவளது தாய் தந்தையருக்கும் உரிமை இருந்தது. மாமியுடனான நெருக்கத்தில் நாங்கள் அடிக்கடி அந்த வீட்டுக்குப் போய் வருவோம். மாமியின் தாயார் செல்லம்மாப் பாட்டி இன்முகத்துடன் எங்களை வரவேற்பாள்.

நாற்சார முற்றத்தில் பெரியவர்கள் இருந்து கதைக்க, நாங்கள் பிள்ளைகள் எங்காவது ஒரு மூலையில் இருந்து சிப்பியோ, சோகியோ வீசிச் சம்பா விளையாடுவோம். மாமிக்கு நான்கு தம்பிமார். கடைசி இரண்டு தம்பிமாரும் எங்கள் சோடிகள்தான். எல்லோருக்கும் ஏழில் இருந்து பத்து வயதுக்குள்தான். ஆனாலும் கடைசித் தம்பி எழிலன் ஒருநாளும் எங்களோடு இருந்து விளையாட மாட்டான். எப்போதும் தாயின் சேலையை எடுத்து அரையும் குறையுமாக உடுத்திக் கொண்டு, சேலைத்தலைப்பால் போர்த்திக் கொண்டு நெளிவான். நாணிக் கோணி நிற்கும் அவனது பாவனை ஒரு பெண் போலவே இருப்பதாகச் சொல்லி எல்லோரும் சிரிப்பார்கள். ரசிப்பார்கள்.

"எழிலன்...! வாடா, விளையாடுவம்" என்றால் அழகாகச் சிரிப்பானே தவிர எங்களோடு சம்பா போடவோ, ஒளித்துப் பிடித்து விளையாடவோ வரமாட்டான்.

“பொம்பிளைப் பிள்ளையாப் பிறந்திருக்க வேண்டியவன்….“ செல்லம்மாப் பாட்டியும், பாட்டாவும் பெருமையோடு சொல்வார்கள்.

நடனம் ஆடிக் காட்டுவான். சரோஜாதேவி போலக் கண்களைச் சுழற்றி, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி மந்தகாசப் புன்னகையுடன் தலை குனிவான்.

அவன்தான் இறந்து விட்டானாம். இப்போது அவனுக்குப் பதினாறு வயதிருக்கும். ஓலங்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் நடுவில் அரசல் புரசலாய் ஏதேதோ கதைகள்.

கடிதம் எழுதி, கிணற்றுக்கட்டில் வைத்து விட்டு, கடிதத்தின் மேல் ஒரு கல்லையும் வைத்து விட்டு தன்னை முடித்துக் கொண்டு விட்டானாம். மாரிக்கிணறு. அதுவும் ஆழக் கிணறு. காலையில் செல்லம்மாப் பாட்டி தண்ணீர் எடுக்க கிணற்றடிக்குப் போன போதுதான் கிணற்றுக்குள் அவன் மிதப்பதைக் கண்டாவாம்.

கடிதத்தில் தனது சாவுக்கு நான்கு பேர் காரணம் என்றும் தனது விருப்பத்துக்கு மாறாக அவர்கள் நடக்கும் போதும் தன்னால் மறுக்க முடியவில்லை என்றும், அந்த உபாதையை தன்னால் தாங்க முடியாததாலேயே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், அந்த நான்கு பேர்களின் பெயர்களையும் எழுதியிருந்தானாம். நான்கு ஆண்கள் இவனோடு பாலுறவு வைத்திருந்தார்களாம். எனக்கு எதுவும் சரியாகப் புரியவில்லை.

அவனுக்கு வந்தது உடல் உபாதையா, உள உபாதையா என்ற சிந்தனை ஏதுமின்றி „இவனைப் பார்த்தால் பொம்பிளை மாதிரித்தானே, அதாலைதான்…“ என்று ஒரு சாராரும், „இவன் விரும்பாமல் நடந்ததோ?“ என்று இன்னொரு சாராரும்… அவல் கிடைத்த திருப்தியில் மென்று கொண்டிருந்தார்கள்.

செல்லம்மாப்பாட்டியும் மாமியும் இன்னும் ஓலமிட்டு அழுது கொண்டிருந்தார்கள்.

சந்திரவதனா
ஜேர்மனி
22.11.2006

Wednesday, November 15, 2006

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்?

இவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. என் ஊரவன்தான். எனது வீதியில்தான் இவன் வீடும். என் அண்ணனின் நண்பனுக்கு இவன் அண்ணன் என்பதாலோ என்னவோ இவன் மீது எனக்கு ஒரு மதிப்பும் இருந்தது.

சின்னவயதில் அம்மா எதையாவது கொடுத்து விட்டு வரச் சொன்னால் கொண்டு போய் இவனது அம்மாவிடம் கொடுத்து விட்டு வருவேன். என் தோதுக்கு அங்கு யாரும் இல்லை. அவனது அக்கா என்னை விடப் பல வருடங்கள் மூத்தவள். மற்றதெல்லாம் பெடியன்கள். அதனால் அங்கு போவதில் எனக்கு ஆர்வமும் இருந்ததில்லை.

எனது அம்மாவும் அவனது அம்மாவும் மாலை வேளைகளில் எங்கள் வீட்டு விறாந்தை நுனியில் இருந்து ஏதோ குசுகுசுப்பார்கள். சில வேளைகளில் எங்கள் வீட்டு மல்லிகைப் பந்தலின் கீழ் இருந்தும் கதைப்பார்கள். இவனது அப்பாவும் இடையிடையே எனது அப்பாவுடன் கதைப்பார். எப்போதாவது அழகாக வெளிக்கிட்டுக் கொண்டு அம்மாவும் அப்பாவும் அவர்கள் வீட்டுக்குச் சோடியாகப் போய் வருவார்கள். நானும் கூடப் போக வேண்டிய கட்டங்களும் வந்திருக்கின்றன. அந்தப் பொழுதுகளை எப்படிக் கழிப்பது என்று தெரியாமல் நான் அவர்களது வீட்டுப் பூந்தோட்டத்துக்குள் சுற்றுவேன். தென்னைமரத்தோடு சாய்ந்திருப்பேன். என்னை விட நான்கு வயது அதிகமானாலும் அப்போது இவனும் சின்னப் பெடியன்தான். ஆனாலும் கிரிக்கெட் மட்டையோடு வெளியே போய் விடுவான். இவனது அக்கா மட்டும் என்னைக் கூப்பிட்டு வைத்துக் கொஞ்சம் கதைப்பா. இந்தளவு உறவு எமது இரு குடும்பங்களுக்கும் இடையே இருந்தது.

இந்த நித்தியங்களில் பெரிதான மாற்றங்கள் எதுவும் ஏற்படாமலே, காலங்கள் ஓடின. நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் காலை நான் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கையில் வடமராட்சி வீதிச் சந்தியில் வைத்து இவன் ஏதோ ஒரு நோட்டீஸை விநியோகித்துக் கொண்டிருந்தான். நானும் தங்கையும் இவனைத் தாண்டும் போது எனக்கும் நீட்டினான். ஆண்கள் என்றாலே ஒதுங்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் அன்றைய பெண்களுக்கான எழுதப்படாத சட்டமாக இருந்தாலும், அதுவே எனது பழக்கமாகவும் இருந்தாலும் தந்தது இவன் என்பதால் தயங்காமல் வாங்கிச் சென்றேன். அது ஏதோ ஒரு பகிஸ்கரிப்பை ஒட்டிய நோட்டீஸ்தான்.

ஆனால் மதிய இடைவேளையில் வீடு திரும்பிய போது அண்ணன் கொஞ்சம் மூட்அவுட்டாக நின்றான். மதிய உணவில் கூடக் கை வைக்காமல் என்னையே காத்திருப்பது போல நின்றான். கண்களில் அவமானம் கலந்த கவலை தெரிந்தது. என்னைக் கண்டதும் "ஏன் அவன்(####) லெற்றர் தர வாங்கினனீ?" என்றான். எனக்கு அழுகையே வந்து விட்டது.

"ஆர் சொன்னது?" என்றேன்.

"அவன்தான்(####) சொன்னவன், உன்ரை தங்கைச்சி நான் லெற்றர் குடுக்க வேண்டினவள், என்று"

நல்லவேளையாக நான் அந்த நோட்டீஸை எனது பாடசாலைப் புத்தகங்களுடனேயே வைத்திருந்ததால் அதை அண்ணனிடம் காட்டி சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டேன். ஆனாலும் அவனின் அந்தச் செயல் என்னை மிகவும் உறுத்திக் கொண்டே இருந்தது. கவலையாகக் கூட இருந்தது.

அதன் பின் அவனை தெருவில் எங்காவது காண நேர்ந்தாலும், காணாத மாதிரியே பாவனை பண்ணினேன். „ஏன் அப்படி என் மேல் பழி சுமத்தினாய்?“ என்று கேட்பதற்கெல்லாம் அப்போது எனக்குத் துணிவு வரவில்லை. காலங்கள் வருடக்கணக்கில் ஓடிய போதும் எனக்கு அந்த சம்பவம் மறக்கவில்லை.

எனக்குத் திருமணமாகிய பின் எனது கணவர் கூட ஒருநாள் "அவன் லெற்றர் தர வாங்கினாயாமே!" என்று, சிறிய சந்தேகத்துடன் கேட்டார். அப்போது அவன் வெளிநாடு சென்று விட்டான்.

இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 10-12 வருடங்களின் பின் அவனுக்குத் திருமணப் பேச்சுக்கள் நடந்து அவனும் வெளிநாட்டிலிருந்து வந்து எங்கள் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.

அதன் பின்னர் எங்கள் ஊர் வழக்கப்படி ஒவ்வொரு உறவினர் வீட்டுக்கும் கால்மாறிச் செல்கையில் எமது வீட்டுக்கும் வந்தான். எமது வீட்டில் எல்லோருமாக அவனையும், மணப்பெண்ணையும் வரவேற்று வரவேற்பறையில் இருத்தி வைத்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அரைமணி நேரமாக நான் அந்தப் பக்கமே போகாமல் இருந்தேன். எனது தங்கைமார்தான் வந்து "அக்கா வாங்கோ. புதுமணத்தம்பதிகள் எப்பிடி வடிவாய் இருக்கினம் எண்டு பாருங்கோ" என்று வருந்தி அழைத்தார்கள். எனது அண்ணன் அப்போது ஊரில் இல்லை. இருந்திருந்தால் வந்து கதைக்கும் படி என்னை அழைத்திருக்க மாட்டான்.

மனமில்லாமல் வரவேற்பறைக்குச் சென்றேன். புதுமணக் களையோடு அவன் இருந்தான். எதுவுமே நடக்காதது போல என்னோடு கதைத்தான். என்னால் அதிகம் கதைக்க முடியவில்லை. „என் மீது ஏன் களங்கம் சுமத்த முயன்றாய்?“ என்று கேட்கவும் முடியவில்லை.

ஆனால் எப்போதோ ஒரு நாள் என் வீட்டுக்கு நான் இல்லாத வேளையில் வந்த போது எனது ஓட்டோகிராபை(autograph) எடுத்து „இது நீரோடு செல்கின்ற ஓடம். இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்.“ என்று அவன் எழுதி வைத்த பாடல் வரிகள் சட்டென்று நினைவில் வந்து போயின. அதைக் கூட ஏன் எழுதினான் என்று எனக்கு இன்றுவரை தெரியாது.

இத்தனைக்கும் அவன் ஒரு விளையாட்டுத்தனமான பொறுப்பற்ற பெடியன் அல்ல. படிப்பு, வேலை, குடும்பம்… என்று வாழ்க்கையின் படிகளில் சரியாகவே ஏறிக் கொண்டிருந்தவன்.

இன்றைக்கு, அவன் முகம் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லை. ஆனாலும் இற்றைக்கு 32வருடங்களுக்கு முந்திய அன்றைய பொழுதில், ஒரு பெண்ணை மிகப்பெரிய குற்றவாளியாக நிறுத்தக் கூடிய... குடும்ப வாழ்க்கையையே குலைக்கக் கூடிய... விதமான அந்தப் பழியை என் மேல் சுமத்த முனைந்த அவனது செயலுடன் கூடிய அந்த சம்பவம் என் நினைவில் இருந்து அகலவே இல்லை.

சுந்திரவதனா
15.11.2006

Monday, November 13, 2006

பேத்திகள் வந்திருந்தார்கள்

சிந்து, நிலா

சிந்து, நதி

நதி, நிலா

பேத்திகள் வந்திருந்தார்கள்.என்னைச் சுற்றியுள்ள மற்றைய எல்லாவற்றையும் மறந்திருந்தேன்.அஞ்சல்கள், பின்னூட்டங்கள் எல்லாம் வாசிக்கப் படாமல் அப்படியே இருந்து விட்டன. இனித்தான் அவைகளைக் கவனிக்க வேண்டும்.

Saturday, October 28, 2006

Thursday, October 26, 2006

குட்டைப் பாவாடைப் பெண்

பலத்த காற்றும், சிணுங்கும் மழையும், மரங்கள் சொரிந்த இலைகளை தெரு முழுவதும் இழுத்துக் கொண்டு திரிந்த அந்தக் குளிர்ந்த இரவில் அவள் அந்தத் தரிப்பிடத்தில் காத்திருந்தாள். பேருந்து நிற்க முன்னரே குட்டைப் பாவாடையுடன் பளிச்சென்று தெரிந்த அவளைக் கண்டு சில கண்கள் அகல விரிந்தன. பேருந்தினுள் அவள் ஏறியதும் ஒட்டு மொத்தப் பேரூந்துப் பயணிகளின் பார்வைகளும் அவள் பக்கம் ஒருதரம் திரும்பின. அவள் என்னைத் தாண்டும் போது "ஹலோ" என்ற படி அழகாகச் சிரித்துக் கொண்டாள். தாண்டிய பின்னும் தாண்டாமல் நின்ற, அவள் விட்டுச் சென்ற கமகமக்கும் உயர்தர வாசனைத் திரவியம் என்னுள் ஒருவித சந்தோச உணர்வைத் தோற்றுவித்தது.

ஆண்களில் சிலர் ஒரு தரம் அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு, எட்டாத கனி என்ற பாவனையுடன் அமைதியானார்கள். பெண்களில் கூடச் சிலர் திரும்பிப் பார்த்தார்கள். ஆடையின்றிய ஒரு பெண்ணின் முன் 100 வீதமான ஆண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டன என்று எங்கோ, எப்போதோ வாசித்த ஞாபகம். அதே புத்தகத்தில் இருந்த இன்னொரு செய்திதான் என்னுள் அதிகப்படி வியப்பை ஏற்படுத்தியது. ஆடையின்றிய பெண்ணின் முன் 80வீதமான பெண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டனவாம். குறிப்பாக பெண்களின் மார்பகங்கள் பெண்களையே வியக்க வைக்கின்றனவாம். இந்த செய்தி எந்தளவுக்கு உண்மையானது என்பதில் எனக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆனால் இப்போது குட்டைப் பாவாடையின் கீழ் பளிச்சென்று தெரிந்த இவளது தொடைகள்தான் அந்த ஆண்களைத் திரும்ப வைத்தன என்றால், பெண்களை எது திரும்ப வைத்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

நானே ஒரு மனிதஜென்மமாக இருக்கும் போது, சில சமயங்களில் நான் தள்ளி நின்று மற்றைய மனிதர்களைப் பார்த்து எனக்குள்ளே நகைத்துக் கொள்வேன். இன்றும் அப்படியொரு நகைப்பு எனக்குள். இந்த மனிதர்கள்தான் எவ்வளவு பலவீனமானவர்கள். நான் மட்டும் இதற்கொன்றும் விதிவிலக்கல்ல. ஆனாலும் இன்று கொஞ்சம் அதிகமான நகைப்பும், மனிதர்கள் பற்றிய ஆய்வும் எனக்குள்.

அந்தக் குட்டைப் பாவாடைப் பெண் பன்னிரண்டு வயதுகள்வரை எனது கடைசி மகனுடன்தான் படித்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் எனக்குள் எப்படித் தொடர்வது, என்ற குழப்பமான சிந்தனை குறுக்கிடுகிறது.

அப்போது பல தடவைகள் எங்கள் வீட்டுக்கும் வந்திருக்கிறான். சில தடவைகள் எனது சமையலைச் சுவைத்தும் இருக்கிறான். கடைசியாக வந்த போது நான் ஸ்பக்கற்றியும் (spaghetti), தக்காளி சோஸ் ம் செய்து கொடுக்க, சீஸ் துருவலை அதற்கு மேலே தூவி தனக்கு மிகவும் பிடித்த உணவு என்று சொல்லிச் சந்தோசமாகச் சாப்பிட்டு விட்டுச் சென்றான்.

அதற்குப் பின் இருவருடங்களாக அவ்வப்போது வீதிகளில் மட்டுந்தான் நான் அவனைச் சந்தித்தேன். படிப்பில் சற்று பின் தங்கி வகுப்பேற்றப் படாமல் எனது மகனை விட ஒரு வகுப்பு கீழே நின்று விட்டான். பின்னொரு சமயத்தில் மகன் சொன்ன அந்தச் செய்தி என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. வெறுமே புத்தகங்களிலும், பத்திரிகைச் செய்திகளினூடுந்தான் பிறப்பிலே ஆணான ஒருவன் சத்திர சிகிச்சைகள் மூலம் பெண்ணாவது பற்றி அறிந்து வைத்திருந்தேன். இவனுக்கும் ஆணாக இருப்பதில் இஸ்டமில்லையாம். பெண்ணாகப் போகிறானாம்.

இதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்ற சிந்தனை என்னுள் ஒருவித நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆகும் என்பதற்கு அறிகுறியாக, முதற்படியாக, முதல் முதலாக அவனை மேக்அப்புடன் பெண்ணுடையுடன் கண்டேன். அப்போதும் கூட முழுவதுமான நம்பிக்கை எனக்கு வரவில்லை.

இப்போது அவன் பெண். கண்டவர்களைச் சுண்டி இழுக்கும் படியாகக் கவர்ச்சியாக உடையணிந்து, கண்ணுக்கு மை தீட்டி, உதட்டுக்கு சாயம் பூசி... இந்தக் குளிருக்குள்ளும் கால்கள் பளபளக்கும் படியான காலுறை அணிந்து... இனி இவன் என்றோ, அவன் என்றோ நான் விழிக்க முடியாத படி இவளாகி விட்டவன்.

அவனுக்கு 18வயதான போது சத்திரசிகிச்சை செய்து முழுவதும் பெண்ணாக மாறிக் கொண்டான். அவன் உணர்வுகள் அப்படி இருப்பதால் அவன் மாறியே ஆக வேண்டும் என்று அவனது மருத்துவரே சிபாரிசு செய்ய, மருத்துவத்திற்கான சலுகைகளை முழுவதுமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணானான்.

இப்போது 24வயதுகள் ஆகி விட்ட இவளது முன் சரித்திரம் பலருக்கும் தெரியாது. இவள் வேலை செய்யும் சுப்பர் மார்க்கட்டில் இவளைத் தாண்டிச் செல்லும் ஆண்களில் பலர் இவளது புன்சிரிப்பில் தடுமாறுவதும் அடிக்கடி நடப்பதுண்டு.

இருந்தும் ஸ்ரெபான் ஆக இருந்து தற்போது ஸ்ரெபானி ஆகி விட்ட இவளது குடும்ப வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பது, எப்போதும் போல என்னிடம் கேள்விக் குறியே!

சந்திரவதனா
25.10.2006

Saturday, October 21, 2006

உங்கள் நினைவுத் திருநாள்தான் எமது தீபாவளி

மாவீரரே!
உங்கள் நினைவுத் திருநாள் தான்
ஈழவர் எமது
தீபாவளியென்று கொண்டாடுகின்றோம்,
தீபங்கள் ஏற்றி மன்றாடுகின்றோம்,
நரனுக்கெதிரான நரகாசுரப் போரென்றும்,
அவனே அவர்களது ஆற்றொணா விரோதியென்றும்,
ஆரியர்கள் நடத்தி விட்ட அட்டகாசமே
போரியற் துறையில் புதினமாய் வடிவெடுத்து
பார்- இயல் ரீதியில் பிரச்சாரமானது...
பதிவுகளும் பெற்றது...
புரிந்து கொண்டீரோ...!

கதையின் வேர் அதுவல்ல!
எமக்கேயான எல்லையைக் காக்க
தமக்கேயான வலுவுடன் போரிட்டு
தரையில் புதைந்த நம்மவர் தினத்தை
தீபமேற்றி நற்திருநாளென
தூய நினைவுடன் மலர்கள் தூவி
தூபியின் முன்னால் மண்டியிட்டு
ஆண்டாண்டான தமிழர் தினமாய்
வரித்துக் கொண்டோம் வணங்கி நிற்போம்.

வரலாறு என்றால் என்னப்பா?- வெறுமனே
வந்தவையும் போனவையும் கூறும்
புரையேறிப்போன வாசக வடிவங்களா?
இல்லையப்பா!

புதிதாக நாமமைக்கும் புனிதப் பாதையதன்
போக்கும் வீச்சும் நேர்த்தியும் உறுதியும்
வளைவும் நெளிவும் சுழிவும் மிதப்பும்
நீக்கமற நேர்மையாய்க் காட்டி விடும்
போற்றலுக்குரிய பெரும் பாதையல்லவோ!?

நாமமைக்கும் பாதையது- அதாவது,
நீர் சிதைந்து உருவான விடுதலைப் பாதையது
மாவீரர் நீரெல்லாம் மண்ணுள் மண்ணாகி - எம்
கண்ணுள் ஊற்றுடைத்து கட்டிய பாதையது

இது வெறும் கல்லாலும் மண்ணாலும் கரியநிறத் தாராலும்
கனவேக வாகனங்கள் வந்து சறுக்கி நிற்கும்,
பொல்லாத பரல் மணலும் ஊரியும் சிறு கல்லும்
உருவாக்கி வைக்குமொரு சடத்துவப் பாதையா!?

அல்லவே அல்ல ஐயா!
விடலைப் பருவமதில் வீரமுடன் களமிறங்கி
சுடலைப் பயமோ சுகபோக நினைவோ
சொட்டும் மனதிருத்தா சுடர் ஒளித் திருவுருவாய்
கடலையும் காட்டையும் களமாடிக் கரைந்துறையும்
குடலைக் கொழுந்துகள் நீர் காட்டி நின்ற பாதையன்றோ!

மறப்போமா நாமும்மை மாவீர நாயகரே,
கிடப்போமா கண்தூங்கி நினைவலைகள் மீட்டாமல்,
இரப்பான்கள் சென்றாங்கே இரந்து கிடக்கட்டும்,
பறப்பான்கள் ஊர்பறந்து பிரச்சாரம் செய்யட்டும்,
கரப்பான்கள் அவர்களென கழித்தெறிந்து கடாசிவிட்டு
சுரப்பான்கள் எம்முளத்தில் சுதந்திர-நெய் ஊறலிட
வரப்பால் வழிநடந்தும் உரைப்பால் உளங்கவர்ந்தும்
நெருப்பாய் நிலையுணர்த்தி நித்திலத்தின் புரவலராய்
பரப்புரையும் செய்வோம் படைநடப்பும் செய்வோம்.
கரப்பால் மூடிய குஞ்சுகளாய் நாம் இருப்பதினி நடவாது-வான்
வரப்பிலும் பலவீரம் காட்டும் வகை வளர்ந்து விட்டோம்.

நினைப்பால்...
உம் நினைப்பால்...
நீர் வளர்த்த பெரு நெருப்பால்...
நாம் மூண்டு விட்டோம்- இனி
ஒருக்காலும் ஓயோம், உம் கனா
நிஜத்தால் உயிர்வுறும்-ஆம்
உருப்பெறும், இது உறுதி. (கவிதையை முழுமையாகப் படிக்க...)

தீட்சண்யன்
8.12.97

ஒலிபரப்பு - 29.12.97 புலிகளின்குரல்வானொலி.

Thursday, October 19, 2006

நியம் பேசியதால் நினைவாகியவன்

நிமலராஜனே!
செய்தி தந்த நின் மரணம்
இன்றெமக்குச் செய்தியானதோ!

உண்மைக்கு அங்கு
இதுதான் விதியோ
நேர்மைக்கு உந்தன்
உயிர்தான் பலியோ!

வரையறையற்ற
வஞ்சகச் செயல்களால்
தமிழர்களை வதைக்கின்ற
நிலையற்ற மனம் கொண்ட
பச்சோந்திகளின்
முறையற்ற செயலால்
தொடர்கின்ற சதியால்
உனக்கிந்தக் கதியோ!

நீ
சிதை பட்டுப் போன செய்தியில்
ஒரு கணம் நாம்
பதை பதைத்தோம்
மனம் துடித்தோம்

நேர்மையை மையாக்கி
எழுதுகோலை துணிவாய் தூக்கி
புலத்துக்கெல்லாம்
நியத்தை வடித்தவனே
நீ இன்று
எமக்கு எழுத்தானாயோ!

ஓங்கி ஒலித்த உன் குரல்
ஓய்ந்து போனதோ!

நியம் பேசியதால்
நீ இன்று
நினைவாகிப் போனாயோ!

19.10.2000

Tuesday, October 17, 2006

சாமத்தியச் சடங்கு அவசியமா?

அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது?

வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பீர்களா?
சாமத்தியச் சடங்கு செய்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாம். இம்மாத ஒரு பேப்பரில் சுந்தரி எழுதியுள்ளார்.

அப்படியானால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகன் எப்படி இருப்பான் என்று எப்படித்தான் நடைமுறையில் தெரிந்து கொள்வது? அவனுக்கும் சாமத்திய வீடு செய்ய வேண்டுமா? இந்த இயந்திர உலகில் அவனை மட்டும் வேலை மினக்கெட்டு ஒரு குடும்பப் படமா எடுத்து...?

55வது ஒரு பேப்பரில் சாமத்தியச் சடங்கு அவசியமா என்ற எனது கட்டுரையின் ஒரு பகுதி இது தேவையா என்ற தலைப்பில் பிரசுரமாகி இருந்தது. அதற்கு எதிர்வினையாக 56வது ஒர பேப்பரில் வந்த சுந்தரியின் கட்டுரை கீழே

சாமத்தியச் சடங்கு தேவைதான்

கடந்த வார பெண்கள் பக்கத்தில், இது தேவையா? என்ற தலைப்பின் கீழ், பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்தியசடங்கும் ஒன்று எனவும், அனாவசியமான எந்தவிதமான தர்க்கரீதியான காரணங்களும் அற்ற இந்தச்சடங்கைக் களைவதற்கு முன்வருவோமா? என்ற கேள்வியுடன் சந்திரவதனா தனது வாதத்தை முன் வைத்திருந்தா.

இந்த விஞ்ஞானயுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சூழலில் இந்த சாமத்திய சடங்கு இன்னும் அவசியமாகுகிறது. பெண்கள் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இந்த நேரத்தில் அவளைத் தனித்து விடாது. அது பற்றிய பயத்தை போக்கி, வயதில் அனுபவம் உள்ள உறவுப்பெண்கள் ஒன்று கூடி கேள்விகள் கேட்டு கதைத்து அப்பெண்ணிற்கு தன்னப்பிக்கை ஊட்டி, இனிச் சிறுமி அல்ல இளம் பெண்ணென புடவை கட்டி, பெருமை கூட்டி அவளை ஒரு பெண்ணாக்குகிறார்கள்.

எமது கலாச்சாரத்தின் பெருமையை பலர் புரிந்து கொள்வதில்லை. எம் மத்தியில் செத்த வீடு நடத்தால் கூட நாம் Counselling போகாமல் இருப்பதற்கு எங்கள் சமூக சடங்குகள் (கட்டி பிடித்து, வாய்விட்டளுது, ஒப்பாரி வைத்து, சாப்பாடு சமைத்து கொடுத்து, அத்திரட்டி, ஆட்டதிவசம், திவசம் என) பாதிக்ப்பட்டவரை தனித்திருக்க விடாது சடங்குகள் சமூகத்தின் நிழலில் துயர் ஆற வைக்கின்றன.

இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள் தான் அவளைக்காக்க வேண்டும் என்று ஊர் மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பது என ஒரு பெரியவர் விளக்கம் சொன்னது நகைப்புக்கு இடமாக கலாச்சாரத்தை அவமான படுதுவதாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தா... இதில் நகைப்பதற்கு ஒன்றுமே இல்லை. சாமத்திய சடங்கின் மூலம் இன்னாருக்கு இத்தனை பிள்ளைகள், அதில் இந்த பிள்ளை வயதிற்கு வந்த பிள்ளை என அவளை வாழ்த்தும்போது அவள் உருவமும் மனதில் படிகிறது. ஊர் மக்கள் அவளை நமது ஊரின் பெண்ணாக வரித்தெடுத்து ஏதும் சிக்கலில் அப்பெண் மாட்டு படப்போகிறாள் என்று தெரியும் இடத்து அதை குடும்பத்திற்கு தெரியப்படுத்தியோ அல்லது அவளைக்கு புத்தி சொல்லியோ அவளைப் பேரிளம்பெண் பருவத்திற்கு வழி நடத்துகிறார்கள்.

இங்கு வெளிநாட்டில் நாம் இன்னும் ஆளை ஆள் சொந்த பந்தங்களைத் தெரிந்து கொள்வதே இப்படியான சடங்குகளின் மூலம்தான். முன்பு பிள்ளை பிறந்தல், 11ம்நாள் , 31ம் நாள் தொட்டிலில் இடுதல், காது குத்துதல், பெயர் சூட்டுதல், ஏடு தொடக்குதல், சாமத்தியம், கொழுக்கட்டை கொடுத்தல் (நிச்சயதார்த்தம்), கல்யாணம், செத்தவீடு, என பலப் சடங்குகள் எம்மத்தியில் இருந்தன. இப்போ அவை எல்லாம் எதற்கும் பெண்ணியம் பேசி தாங்களும் குழம்பி எங்களையும் குழப்பும் மேதாவித் தனத்தாலோ, நேரம் இன்மையாலோ சுருங்கி ஏதோ ஓன்று இரண்டு மட்டும் நடைமுறையில் உள்ளன.

அத்தோடு வெளிநாட்டு முறையிலான (கேக் வெட்டி சம்பெயின் உடைத்து) பேத்டே பார்ட்டிகள், முதலாவது, 18வது, 21வது, அதைவிட முப்பது, நாற்பது என எண்பது, தொண்ணூறு வரையும், அத்தோடு கல்யாண நாளுகளும் அதுவிட பாபக்கியூ பார்ட்டி, கிறிஸ்மஸ் பார்ட்டி வெடிங் ரிசப்சன் என எல்லா புலம் பெயர் மக்களும் வயது, பால், சாதி, மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு கொண்டாடுவது பற்றி சந்திரவதனா ஒன்றுமே சொல்லாது. சாமத்திய சடங்கை மட்டும் பொய்யான திணிப்புகளின் போலிக்கலாச்சாரத்தில் பொசுங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறா.

சாமத்திய வீடு ஏன் செய்கிறார்கள் என சந்திரவதனா சொன்ன அதே காரணத்தையே நானும் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்கிறேன். வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பீர்களா?

ஒரு சபையில் அந்த பெரிய குடும்பத்தின் முழு வாரிசுகளையுமே காணவும், வேறு வேறு நாடுகளில் வசிப்பவர்கள் கூட இச்சந்தர்பத்தில் ஒன்று கூடவும் வாய்பாகிறது. சடங்குகளின் வீடியோ பார்த்து இரண்டு மூன்று கல்யாணங்கள் கூட சரிவந்திருக்கிறது என்றால் பாருங்களேன். எனது அனுபவத்தில் நடைபெற்ற எல்லாச் சாமத்தியங்களிலும் அப்பெணும் விரும்பி பங்கு பற்றுவதை காணக் கூடியதாகவுள்ளது.

என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டைவிடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்காக?

இது சாமத்திய வீட்டிற்கு மட்டும்தான் பொருந்துமா? மனித இயல்பே மற்றவனிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உயர்த்திவைக்க முயல்வதுதான்.

சாமத்திய சடங்கு நான் முதலே கூறியது போல, உளவியல் காரணங்களோடு, குடும்பத்தின் ஒற்றுமையை அதிகரிக்கவும் சமூக நெருக்கத்தை கூட்டவும் வழிமுறை யாகுகின்றது. ஆனால் அதில் உள்ள சில இடையிட்டு நுழைந்தவைகள் தவிர்க்கப்பட வேண்டியவையே.

உதாரணமாக சாமத்தியத்தில் முதலில் தமிழ் முறைப்படி புடவை அணிந்து விட்டு பிறகு வடஇந்திய முறைப்படி முன்னால் தொங்கலை விட்டு இன்னுமொரு புடவை அணிவது. (இரண்டாவது புடவையை வடஇந்திய முறைப்படி கட்டுவது இப்போ எழுதாத சட்டமாகி விட்டது.

சாமத்திய சடங்கில் கேக் வெட்டுவது, ஆள் உயரத்தில் ஆண்டாள் மாலை போடுவது ( வீடியோகாரரும் கமராகாரரும் மேக்கப் லேடியும் சேர்ந்து சடங்கை சில இடங்களில் சடம்பமாக்கி விடுகிறார்கள்.)

இதை விட இதை ஆங்கில அகராதிக்குள் புகுந்து அப்பிடியே மொழி பெயர்க்க தேவையில்லை. Puberty ceremony என்பதை Age attainment ceremony என்றோ அல்லது Saree ceremony என்றோ அழைக்கலாம். (இடியப்பத்தை வெள்ளைக்காரன் தற்செயலாக அவித்தாலும் என்று String hopper என்று அழைப்பவர்கள் அல்லவா நாம்!)

விரலுக்கு தகுந்த வீக்கம் இருப்பது எல்லாச் சடங்குக்குமே நல்லது. வீட்டை மீள் அடகு வைத்தோ, தகுதிக்கு மீறி கடன் எடுத்தோ, கடினப்பட்டு உழைத்த சேமிப்பு எல்லாவற்றையும் செலவழித்து ஆடம்பரமாக செய்வதை தவிர்த்து கொள்வது எல்லாச் சடங்குக்குமே நல்லது. உண்மையான சடங்கை மாற்றாது, திரிக்காது சிக்கனமாகவும் சிறப்பாகவும் குடும்ப சமூக ஒற்றுமை பேணும் வகையில் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.

- சுந்தரி

இது தேவையா?

அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது?

வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பீர்களா?
சாமத்தியச் சடங்கு செய்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாம். இம்மாத ஒரு பேப்பரில் சுந்தரி எழுதியுள்ளார்.

அப்படியானால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகன் எப்படி இருப்பான் என்று எப்படித்தான் நடைமுறையில் தெரிந்து கொள்வது? அவனுக்கும் சாமத்திய வீடு செய்ய வேண்டுமா? இந்த இயந்திர உலகில் அவனை மட்டும் வேலை மினக்கெட்டு ஒரு குடும்பப் படமா எடுத்து...?

55வது ஒரு பேப்பரில் சாமத்தியச் சடங்கு அவசியமா என்ற எனது கட்டுரையின் ஒரு பகுதி இது தேவையா என்ற தலைப்பில் பிரசுரமாகி இருந்தது.

அதற்கு எதிர்வினை கூறுவது போல சாமத்தியச் சடங்கு தேவைதான் என 56வது ஒரு பேப்பரில் சுந்தரி ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அவரிடம் நான் கேட்பது, "அப்படியானால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகன் எப்படி இருப்பான் என்று எப்படித்தான் நடைமுறையில் தெரிந்து கொள்வது? அவனுக்கும் சாமத்திய வீடு செய்ய வேண்டுமா?

56வது ஒர பேப்ரில் வந்த சுந்தரியின் கட்டுரை

சாமத்தியச் சடங்கு தேவைதான்

கடந்த வார பெண்கள் பக்கத்தில், இது தேவையா? என்ற தலைப்பின் கீழ், பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்தியசடங்கும் ஒன்று எனவும், அனாவசியமான எந்தவிதமான தர்க்கரீதியான காரணங்களும் அற்ற இந்தச்சடங்கைக் களைவதற்கு முன்வருவோமா? என்ற கேள்வியுடன் சந்திரவதனா தனது வாதத்தை முன் வைத்திருந்தா.

இந்த விஞ்ஞானயுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சூழலில் இந்த சாமத்திய சடங்கு இன்னும் அவசியமாகுகிறது. பெண்கள் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இந்த நேரத்தில் அவளைத் தனித்து விடாது. அது பற்றிய பயத்தை போக்கி, வயதில் அனுபவம் உள்ள உறவுப்பெண்கள் ஒன்று கூடி கேள்விகள் கேட்டு கதைத்து அப்பெண்ணிற்கு தன்னப்பிக்கை ஊட்டி, இனிச் சிறுமி அல்ல இளம் பெண்ணென புடவை கட்டி, பெருமை கூட்டி அவளை ஒரு பெண்ணாக்குகிறார்கள்.

எமது கலாச்சாரத்தின் பெருமையை பலர் புரிந்து கொள்வதில்லை. எம் மத்தியில் செத்த வீடு நடத்தால் கூட நாம் Counselling போகாமல் இருப்பதற்கு எங்கள் சமூக சடங்குகள் (கட்டி பிடித்து, வாய்விட்டளுது, ஒப்பாரி வைத்து, சாப்பாடு சமைத்து கொடுத்து, அத்திரட்டி, ஆட்டதிவசம், திவசம் என) பாதிக்ப்பட்டவரை தனித்திருக்க விடாது சடங்குகள் சமூகத்தின் நிழலில் துயர் ஆற வைக்கின்றன.

இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள் தான் அவளைக்காக்க வேண்டும் என்று ஊர் மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பது என ஒரு பெரியவர் விளக்கம் சொன்னது நகைப்புக்கு இடமாக கலாச்சாரத்தை அவமான படுதுவதாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தா... இதில் நகைப்பதற்கு ஒன்றுமே இல்லை. சாமத்திய சடங்கின் மூலம் இன்னாருக்கு இத்தனை பிள்ளைகள், அதில் இந்த பிள்ளை வயதிற்கு வந்த பிள்ளை என அவளை வாழ்த்தும்போது அவள் உருவமும் மனதில் படிகிறது. ஊர் மக்கள் அவளை நமது ஊரின் பெண்ணாக வரித்தெடுத்து ஏதும் சிக்கலில் அப்பெண் மாட்டு படப்போகிறாள் என்று தெரியும் இடத்து அதை குடும்பத்திற்கு தெரியப்படுத்தியோ அல்லது அவளைக்கு புத்தி சொல்லியோ அவளைப் பேரிளம்பெண் பருவத்திற்கு வழி நடத்துகிறார்கள்.

இங்கு வெளிநாட்டில் நாம் இன்னும் ஆளை ஆள் சொந்த பந்தங்களைத் தெரிந்து கொள்வதே இப்படியான சடங்குகளின் மூலம்தான். முன்பு பிள்ளை பிறந்தல், 11ம்நாள் , 31ம் நாள் தொட்டிலில் இடுதல், காது குத்துதல், பெயர் சூட்டுதல், ஏடு தொடக்குதல், சாமத்தியம், கொழுக்கட்டை கொடுத்தல் (நிச்சயதார்த்தம்), கல்யாணம், செத்தவீடு, என பலப் சடங்குகள் எம்மத்தியில் இருந்தன. இப்போ அவை எல்லாம் எதற்கும் பெண்ணியம் பேசி தாங்களும் குழம்பி எங்களையும் குழப்பும் மேதாவித் தனத்தாலோ, நேரம் இன்மையாலோ சுருங்கி ஏதோ ஓன்று இரண்டு மட்டும் நடைமுறையில் உள்ளன.

அத்தோடு வெளிநாட்டு முறையிலான (கேக் வெட்டி சம்பெயின் உடைத்து) பேத்டே பார்ட்டிகள், முதலாவது, 18வது, 21வது, அதைவிட முப்பது, நாற்பது என எண்பது, தொண்ணூறு வரையும், அத்தோடு கல்யாண நாளுகளும் அதுவிட பாபக்கியூ பார்ட்டி, கிறிஸ்மஸ் பார்ட்டி வெடிங் ரிசப்சன் என எல்லா புலம் பெயர் மக்களும் வயது, பால், சாதி, மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு கொண்டாடுவது பற்றி சந்திரவதனா ஒன்றுமே சொல்லாது. சாமத்திய சடங்கை மட்டும் பொய்யான திணிப்புகளின் போலிக்கலாச்சாரத்தில் பொசுங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறா.

சாமத்திய வீடு ஏன் செய்கிறார்கள் என சந்திரவதனா சொன்ன அதே காரணத்தையே நானும் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்கிறேன். வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பீர்களா?

ஒரு சபையில் அந்த பெரிய குடும்பத்தின் முழு வாரிசுகளையுமே காணவும், வேறு வேறு நாடுகளில் வசிப்பவர்கள் கூட இச்சந்தர்பத்தில் ஒன்று கூடவும் வாய்பாகிறது. சடங்குகளின் வீடியோ பார்த்து இரண்டு மூன்று கல்யாணங்கள் கூட சரிவந்திருக்கிறது என்றால் பாருங்களேன். எனது அனுபவத்தில் நடைபெற்ற எல்லாச் சாமத்தியங்களிலும் அப்பெணும் விரும்பி பங்கு பற்றுவதை காணக் கூடியதாகவுள்ளது.

என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டைவிடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்காக?

இது சாமத்திய வீட்டிற்கு மட்டும்தான் பொருந்துமா? மனித இயல்பே மற்றவனிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உயர்த்திவைக்க முயல்வதுதான்.

சாமத்திய சடங்கு நான் முதலே கூறியது போல, உளவியல் காரணங்களோடு, குடும்பத்தின் ஒற்றுமையை அதிகரிக்கவும் சமூக நெருக்கத்தை கூட்டவும் வழிமுறை யாகுகின்றது. ஆனால் அதில் உள்ள சில இடையிட்டு நுழைந்தவைகள் தவிர்க்கப்பட வேண்டியவையே.

உதாரணமாக சாமத்தியத்தில் முதலில் தமிழ் முறைப்படி புடவை அணிந்து விட்டு பிறகு வடஇந்திய முறைப்படி முன்னால் தொங்கலை விட்டு இன்னுமொரு புடவை அணிவது. (இரண்டாவது புடவையை வடஇந்திய முறைப்படி கட்டுவது இப்போ எழுதாத சட்டமாகி விட்டது.

சாமத்திய சடங்கில் கேக் வெட்டுவது, ஆள் உயரத்தில் ஆண்டாள் மாலை போடுவது ( வீடியோகாரரும் கமராகாரரும் மேக்கப் லேடியும் சேர்ந்து சடங்கை சில இடங்களில் சடம்பமாக்கி விடுகிறார்கள்.)

இதை விட இதை ஆங்கில அகராதிக்குள் புகுந்து அப்பிடியே மொழி பெயர்க்க தேவையில்லை. Puberty ceremony என்பதை Age attainment ceremony என்றோ அல்லது Saree ceremony என்றோ அழைக்கலாம். (இடியப்பத்தை வெள்ளைக்காரன் தற்செயலாக அவித்தாலும் என்று String hopper என்று அழைப்பவர்கள் அல்லவா நாம்!)

விரலுக்கு தகுந்த வீக்கம் இருப்பது எல்லாச் சடங்குக்குமே நல்லது. வீட்டை மீள் அடகு வைத்தோ, தகுதிக்கு மீறி கடன் எடுத்தோ, கடினப்பட்டு உழைத்த சேமிப்பு எல்லாவற்றையும் செலவழித்து ஆடம்பரமாக செய்வதை தவிர்த்து கொள்வது எல்லாச் சடங்குக்குமே நல்லது. உண்மையான சடங்கை மாற்றாது, திரிக்காது சிக்கனமாகவும் சிறப்பாகவும் குடும்ப சமூக ஒற்றுமை பேணும் வகையில் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.

- சுந்தரி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite